கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

This entry is part 17 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

 

ஆறாம் வகுப்பில்

களவாடப்பட்டது

என் முதல் பேனா

சந்தேகித்தேன்

கிச்சா என்கிற

கிருஷ்ண மூர்த்தியை

ஆசிரியரிடம் சொன்னேன்

 

என் அப்பா முதலாளி

அவன் அப்பா கூலி

நம்பினார் ஆசிரியர்

 

ஆசிரியர் கிச்சாவைக்

குடைந்தார்

‘நீ இல்லையென்றால்

கூட்டிப் பெருக்கும்

ருக்குப் பாட்டிதான்

ஒளிக்காமல் சொல்’

 

எடுத்தேன் என்றோ

இல்லை யென்றோ சொல்லாமல்

ஊமையாய் நின்றான் கிச்சா

அது திமிரின் அடையாளமாம்

முட்டியில் அடித்தார்

மண்டி போட வைத்தார்

 

அடுத்த நாள்

சிவந்த கண்களுடனும்

வீங்கிய கன்னங்களுடனும்

வந்தான் கிச்சா

அப்பாவிடமும் ஊமை வேடம்

அடி வாங்கியிருக்கிறான்

இறுக்கமாய்

என்னைப் பார்த்தான்

அந்தக் கண்களுக்குள்

காடு எரிந்தது

ஆறு ஆண்டுகள் ஓடின

என்னிடம் பேச மறுத்தான் கிச்சா

 

அன்றுதான் நாங்கள்

பள்ளியைவிட்டு

பறந்து செல்லும் நாள்

கைகளைப் பிடித்து

கிச்சாவைக் கெஞ்சிக் கேட்டேன்

 

‘எடுக்கவில்லை என்று

ஏன் சொல்லவில்லை கிச்சா?’

 

கிச்சா சொன்னான்

‘பேரன் பேனா கேட்டானாம்

வாங்க வசதியில்லை

ருக்குப் பாட்டிதான் எடுத்தார்

எடுத்தேனென்றால்

கொடுக்க வேண்டும்

இல்லையென்றால்

பாட்டியைக் குடைவார் ஆசிரியர்

ஒரு கூலியின் உணர்வுகள்

கூலிக்குத்தானே தெரியும்’

 

கட்டி அழுதேன்

‘அய்யோ மன்னித்துவிடு கிச்சா’

 

நாற்பது ஆண்டுகளாய்

சந்திக்கவே இல்லை கிச்சாவை

என் மகள் திருமணத்திற்கு

கிச்சா வந்தான்

அன்பளிப்பாக ஒரு பேனா தந்தான்

பொறிகள் தெறிக்கும்

கிச்சாவின் கண்களால்

அந்தப் பேனா என்னை எரித்தது

 

எனக்குப் பேரன் பிறந்து இன்று

பத்து ஆண்டுகள்

 

‘கதை சொல்லு தாத்தா’ என்றான்

கிச்சாவின் கதையைச் சொன்னேன்

கிச்சா பாவம் என்றான்

உன்னால்தா னென்று

நச்சென்று அறைந்தான்

அந்தப் பிஞ்சுக் கரங்களால்

மாறி மாறி அறைந்து கொண்டேன்

 

சந்தேகம்

நாகத்தினும் கொடியது

 

அமீதாம்மாள்

Series Navigationகலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்குநீங்காத நினைவுகள் 16
author

அமீதாம்மாள்

Similar Posts

9 Comments

  1. Avatar
    ameethaammaal says:

    நன்றி திரு செல்லப்பா
    நான் எழுதிய உணர்வுகளை நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள்

  2. Avatar
    ameethaammaal says:

    நன்றி வசந்த்
    உங்களின் பாராட்டுக்கள்
    மிகவும் ஆறுதலாக இருக்கிறது

  3. Avatar
    எஸ். சிவகுமார் says:

    அருமையான உணர்வுகளைச் சிக்கனமான வார்த்தைகளால் நெய்து படைத்திருக்கும் அமீதா அம்மாள் அவர்களே ! வாழ்த்துக்கள் !

  4. Avatar
    ameethaammaal says:

    நன்றி திரு சிவகுமார்
    உங்களுடைய பாராட்டுக்கள் எனக்கு ஊக்கமளிக்கிறது

  5. Avatar
    அமீதாம்மாள் says:

    நன்றி திரு மகாகவி அக்னிக் குஞ்சு நல்ல உவமை
    தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் நன்றி. உங்களின் பாராட்டுக்கள் எனக்கு துபாய் வெயிலில் கிடைத்த நிழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *