
அழகியசிங்கர்
எனக்குக் கிடைக்கும் கவிதைப் புத்தகங்களைப் படித்து எனக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். சமீபத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் பெயர் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள் என்ற மனோஹரி கவிதைப் புத்தகம். இப் புத்தகத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்.
இந்தப் புத்தகத் தயாரிப்பு பற்றி ஒரு வரி சொல்ல வேண்டும். கற்பனைக்கே எட்டாத வகையில் அற்புதமாகக் கவிதைப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார்.
நான் கடந்த 34 ஆண்டுகளாகப் பத்திரிகையும் புத்தகமும் கொண்டு வருகிறேன். என்னால் ஒரு புத்தகம் கூட அதுவும் கவிதைப் புத்தகம் இது மாதிரி கொண்டு வந்திருக்க முடியாது. அவ்வளவு அற்புதமாகத் தயாரித்திருக்கிறார். கவிஞரே தன் கவிதைப் புத்தகத்தைத் தயாரிக்க முடிந்ததால்தான் அப்படித் தயாரித்திருக்க முடியும். ஒவ்வொரு கவிதைக்கும் அவர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கும் ஓவியங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.
நான் இதுவரை மனோஹரி என்ற பெயரையே கேள்விப்பட்டதில்லை. இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் கவிதை எழுதுபவராக இருக்கக் கூடும். என்னைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டிருக்க முடியாது.
34 வருடங்களாக விருட்சம் என்ற பத்திரிகை நடத்திக்கொண்டு கவிதைப் புத்தகங்களை ஏராளமாகக் கொண்டு வந்திருக்கிறேன். அடிப்படையில் நானும் ஒரு கவிஞன். என் கவிதைகள் மொத்தமாகச் சேர்த்து 400 கவிதைகள் கொண்ட புத்தகம் அழகியசிங்கர் கவிதைகள் என்ற பெயரில் கொண்டு வர உள்ளேன்.
மனோஹரி எழுதியதெல்லாம் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ காதல் வசப்பட்ட கவிதைகள். நான் இதுமாதிரி கவிதைகளை இதுவரையில் படித்ததில்லை. உண்மையில் இதுமாதிரி கவிதைகள் என் கண்ணில் பட்டால் இதற்கு நான் லாயக்கில்லாதவன் என்று தூரப் போய்விடுவேன்.
திரைப்படத்தில்தான் காதல் சினிமாப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன் தவிர, காதல் கவிதைகளை ஒரு போதும் படித்ததில்லை.
மனோஹரி எழுதியதெல்லாம் முழுக்க முழுக்க காதல் கவிதைகள். இதெல்லாம் ஆண் மையக் காதல் கவிதைகளா அல்லது பெண் மையக் காதல் கவிதைகளா?
ஆனால் இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகள் பெண் மையக் காதல் கவிதைகளாகத் தோன்றுகிறது. அதாவது ஒரு பெண் ஆணின் நட்புக்குக் காதலுக்கு ஏங்குவதுபோல் படுகிறது
.
காதல் கவிதைகள் என்றாலும் இதெல்லாம் புனைவுகள்தான் அதுவும் அதீத புனைவுகள்தான்.
கவிஞர் ஒரு பெண் என்பதால் அவருடைய சொந்த அனுபவமா என்று அபத்தமாக நினைக்கக் கூடாது.
மனோஹரி எழுதிய கவிதைகளிலும் சொந்த அனுபவம் இல்லை. நாம் அப்படித்தான் நம்ப வேண்டும். சரி, பெண் மைய கவிதைகள் இவை. ஒரு பெண் ஆணின் நட்புக்காக ஏங்குகிறாள்.
நீ என்னைத் தவிர்க்கும் வேளைகளில்
சிறகிருந்தும் பறத்தலை மறந்த
பறவையைப் போலல்லவா
முடங்கிப்போகிறேன்..
இந்தக் கவிதையை உற்றுக் கவனித்தால் இது ஒரு பெண்ணின் கூற்று. ஒரு ஆணை நினைத்து ஏங்கி இப்படிக் கூறுவதாகத் தோன்றுகிறது.
இக் கவிதையில் ஒரு ஏக்கம் இருக்கிறது. அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் ஏக்கம். இக் கவிதைகள் முழுவதும் துண்டுத் துண்டாக தனித்தனிக் கவிதைகளாக இருக்கின்றன.
இக் கவிதைகள் முழுவதும் இணைக்கப்படும் புள்ளிகள் என்னன்ன? அபாரமான வார்த்தைச் செறிவோடும் கவிதைகள் அள்ளி வீசப்படுகின்றன. இது எதுமாதிரியான கவிதைகள். இதன் தேவை என்ன? முழுவதையும் எல்லா நேரமும் ஒருவர் படித்து விட முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
நிழல் இருக்கிறதென்றால் அருகில்”
வெளிச்சம் இருக்கிறதென அர்த்தம்…
கொக்கிருக்கிறதென்றால் குளத்தில்
மீன் இருக்கிறதென அர்த்தம்
அணில் இருக்கிறதென்றால் மரத்தில்
கனியிருக்கிறதென அர்த்தம்
உறவிருக்கிறதென்றால்
பணம் இருக்கிறதென அர்த்தம்..
கனவிருக்கிறதென்றால்
சுகமான தூக்கம் இருக்கிறதென அர்த்தம்
சுகமான தூக்கம் இருக்கிறதென அர்த்தம்
இதுவரை ஒரு கவிதையை அழகாகக் கொண்டு போகிறார். கடைசியில் இப்படிச் சொல்கிறார்.
கனவில் நீ வருகிறாய் என்றால்
நெஞ்சில் காதல் இருக்கிறனெ
அர்த்தம்….அர்த்தம்.
இப்படிச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் காதல் என்பதே ஒரு அபத்தமாகப் படுகிறது. ஆண் துணையில்லாமல் பெண்ணும், பெண் துணையில்லாமல் ஆணும் வாழத் தொடங்கி விட்டார்கள்.
இது மாதிரி எல்லாக் கவிதைகளையும் படிப்பதற்குச் சங்கட மாக இருக்கிறது. கவிஞர் மனோஹரிக்கு வார்த்தை வளம் நன்றாக வருகிறது. ஆனால் அவர் எடுத்துக்கொண்டு தீம் குறைவான மதிப்பு கொண்டது.
இன்னொரு கவிதையைப் பார்ப்போம்.
ரொம்ப அற்புதமாக ஆரம்பமாகிறது கவிதை.
மழை வந்தால் குடை விரிக்க
கற்றுக் கொடுத்தது ஒரு காளான்…
இருள் வந்தால் ஒளியேற்ற
கற்றுக் கொடுத்தது ஒரு மின்மினி..
பொழுதோடு கூடடைய கற்றுக்
கொடுத்தது ஒரு பறவை….
சாதனையெல்லாம் அமைதியாய்
நிகழ்வது எனக் கற்றுத் தந்தது முளைக்கும் விதை…
அழிவென்பதே ஆரவாரமானது என்று
சத்தத்துடன் வீழ்ந்தது வெட்டுண்ட மரம்.
அன்றாடம் கற்றுக்கொள்ளப் பிரபஞ்சமே
ஒரு கல்விக்கூடமாய் இருக்க
கற்றுக் கொள்வதால்
முழுமை அடையாவிட்டாலும்
வாழ்வின் இயல்பு இதுவென்றே
சமாதானம் கொள்ளட்டும் சஞ்சலப்படும் மனமே
இந்தக் கவிதையில் கடைசி பாராவில் முதல் வரி மட்டும் எடுத்த கொள்ள வேண்டும். அவ் வரியைத் தொடர்ந்து வரும் மற்ற வரிகள் தேவையில்லை. மற்ற வரிகள் கருத்துத் திணிப்பை உருவாக்குகின்றன. ஒரு கவிதையில் கருத்துத் திணிப்பு ஆபத்தானது.
இத் தொகுப்பில் சில அற்புதமான கவிதை வரிகள் கண்ணில் படாமல் இல்லை.
மீனைக் கொத்திய
பறவையின்
சிறகைப் பற்றி
கொண்டது
துளி கடல்
இதுமாதிரி கவிதையெல்லாம் பளிச்சென்று மின்னல் மாதிரி தட்டுப்படுகிறது.
கவிதையின் உள்முகம் இந்தக் கவிதை. இதைத் தன்னை மறந்து எழுதியிருப்பார் கவிஞர். நான் இப்போதெல்லாம் கவிதையின் உள் முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
உதாரணமாக நான் ஒரு கவிதை கூற விரும்புகிறேன். அது தேவதச்சன் எழுதிய கவிதை. அது உள்முகக் கவிதை.
மணல் வீடு
எனது
மணல் வீடு
சரிந்து சரிந்து
விழுகிறது
எழுந்து
விடைபெறுகிறேன்.
இனி
மணல்தான்
என்
சுவடுகள் போலும்.
மனோஹரி தொடர்ந்து உள்முகத் தேடல் கவிதைகளை எழுத வேண்டும். அவருடைய மொழி அறிவு அபாரம். காதல் குறித்து 200 பக்கங்கள் கவிதைப் புத்தகம் கொண்டு வருவது நிûத்துப் பார்க்க முடியாத ஒன்று. இதெற்கென வாசகர்கள் ஆயிரம் பேர்கள் இருப்பார்கள் இதைக் கொண்டாடுவார்கள். ஆனால் கவிஞர் உள்முகத் தேடல் கவிதைகளைக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

I have read this book, it’s is a haven of beautiful poems. A must read!
The review above seems quite inappropriate considering how it is biased against the romance/love genre and the idea of a lady poet behind this genre. Every genre has a beauty of its own, such bias by the reviewer is ignorance.
சிறப்பான கட்டுரை. இன்னும்கூட கவிதைகளை இணைத்திருக்கலாம்
It’s better to have loved and lost than never to have loved at all !