கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

 

அழகியசிங்கர்

 

          இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.

 

          கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கவிதை எழுதுவதில் அலாதியான பிரியம். 

 

          நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வெண்பா எப்படி எழுதுவது என்று கற்றுக்கொண்டு இரண்டே இரண்டு வெண்பாக்களை எழுதினேன்.

 

          இதெல்லாம் 1975 ஆம் ஆண்டு நடந்தது.  என் நண்பர்  ஒருவர், ‘காரைத் தொழுவீர் களித்து’ என்ற ஈற்றடியில் பத்து வெண்பாக்களை எழுதிக் குவித்தவர்.  

 

          என் கல்லூரி நண்பர் சுரேஷ் ராஜகோபால்  அவர்களும் வெண்பாக்கள் எழுதி இருக்கிறார்.  

 

          என் சகோதரர் ஆரம்பித்த ‘ மலர்த்தும்பி என்ற சிறு பத்திரிகையில் நான் புதுக்கவிதைதான் எழுத ஆரம்பித்தேன். அதன்பின் நான் வெண்பா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை.  புதுக்கவிதையின் கவர்ச்சி என்னை வேறுபக்கமாக இழுத்துக்கொண்டு விட்டது.

 

          சமீபத்தில் அழகியசிங்கர் கவிதைகள் என்ற பெயரில் 400 கவிதைகள் எழுதித் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  1976 ஆண்டிலிருந்து இன்று வரை, எல்லாம் இலக்கணத்தை மீறி புதுக்கவிதைகளாக எழுதப்பட்டது.

 

          இது மாதிரி கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் வெண்பாவிற்குப் பதிலாக அதை ஒரு மாதிரியா வைத்து புதுக்கவிதை முயற்சி செய்யலாமென்று தோன்றியது.

 

          அதுதான் என்பா.  இதை ஆரம்பித்தபோது மிகக் குறைவான நண்பர்களே எனக்கு ஆதரவு தந்தார்கள்.  அவர்களில் சசுரேஷ் ராஜகோபால்  முக்கியமானவர்.

 

          மரபில் கவிதைகள் எழுதுபவரான கு.மா.ப திருநாவுக்கரசும், தஞ்சை ஹரணியும் முக்கியமானவர்கள். 

 

          கவிதை என்றால் புதுவிதமான கவிதைகள் என்ற நிலை உருவாகிவிட்டது.  இந்தத் தருணத்தில் என்பாவைப் புரிந்துகொண்டு எழுதுபவர்களில் சுரேஷ் ராஜகோபாலனும் ஒருவர். ஏற்கனவே மரபும் தெரிந்தவர்.

 

          தொடக்கக்காலத்தில் என்பா எழுத ஆரம்பித்தபோது சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தேன்.  பின் எல்லாவற்றையும் தளர்த்தி விட்டேன்.

 

          நான்கு வரிகளில் ஒரே ஒரு வரி வைர வரியாக இருக்க வேண்டுமென்றுதான் நான் குறிப்பிட்டிருப்பேன்.  நான்கு வரிகளும் ஒன்றே ஒன்று தொடர்பு இல்லாமலும் தொடர்புடனும் இருக்கலாம். எதுகை மோனை இருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம். 

 

           சுரேஷ் ராஜகோபால்  அதைப் புரிந்துகொண்டு மடமடவென்று முதலில் 100 கவிதைகளுக்கு மேல் எழுதி விட்டார்.   அவரைத் தொடர்ந்து தஞ்சைஹரணி, வசந்த தீபன போன்ற கவிஞர்களும் எழுதி விட்டார்கள்.

 

          குழவி

 

மனதிலே மலர்ச்சி வந்ததும் தெரிந்திடும் 

சிரிக்கின்ற உதடுகள் உள்ளத்தைக் காட்டிடும் 

விடியலில் கதிரவன் மெல்லவே உதிப்பான் 

மடிதனில் உறங்கும் குழவி.   1           இந்த முதல் என்பா கவிதை 4.09.2021 அன்று எழுத ஆரம்பித்து 26.09.2021 தேதிக்குள் 151 கவிதைகள் எழுதிக் குவித்து விட்டார்.எங்கக் குழுவில் இவர்தான் 150 கவிதைகள் முதலில் எழுதி முடித்தார்.  இவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் எழுதி முடித்திருக்கிறார்கள். ஒரு அற்புதமான விஷயம் என்பா எழுதுவது.  கவிதை என்ன எழுதுவது என்று யோசிக்காமல் கவிதை எழுத ஆரம்பிக்கலாம்.

 

          முதலில் ஒரு சிறப்பான வரியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத ஆரம்பித்தால் எளிதாக என்பா எழுத முடியும்.  இப்படி யோசனை செய்யாமலேயே எழுதுவதுதான் என்பாவின் சிறப்பு.  

 

          பல நண்பர்கள் இந்த விதியைப் புரிந்துகொண்டு சிறப்பாகவே கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  கவிதை எழுதத் தெரியாதவர்கள் கூட இதில் முயன்று கவிதைகள் எழுதிக் குவித்துள்ளார்கள்.  தஞ்சாவூர் ஹரணி என்ற ஒரு கவிஞர்.  அவர் மரபுக் கவிதைகள் எழுதுவதில் திறமை வாய்ந்தவர்.  அவர் என்பா ஆரம்பித்து 100 கவிதைகள் எழுதி உள்ளார்.

 

          இந்த கவிதை வகைமையை உருவாக்கிய நான், இதுவரை 60 கவிதைகள் எழுதி உள்ளேன்.

 

          சுரேஷ் ராஜகோபால்  எழுதிய முதல் கவிதையைப் பார்ப்போம்.

 

          ‘மனதிலே மலர்ச்சி வந்ததும் தெரிந்திடும்’ என்ற முதல் வரியை எழுதுகிறார்.  பின் அடுக்கடுக்காக வரிகளைக் கொண்டு போகிறார். சிரிக்கின்ற உதடுகள் உள்ளத்தைக் காட்டிடும் என்று முதல் வரியைத் தொடர்ந்து இரண்டாவது வரி வருகிறது.  

 

          மனதிலே உதிக்கின்ற மலர்ச்சி சிரிக்கின்ற உதடுகள் வெளிப்படுத்துகின்றன. மூன்றாவது வரி விடியலில் கதிரவன் மெல்லவே உதிப்பான் என்று குறிப்பிடுகிறார்.  இன்னும் விடியல் வரவில்லை என்கிறார்.  இதையெல்லாவற்றையும் தொடர்பு பண்ணுகிற மாதிரி கடைசி வரி மடிதனில் உறங்கும் குழவி என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்த என்பா ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கிற என்பா.  ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என்பா எழுதலாம்.

 

           சுரேஷ் ராஜகோபாலனின்   151வது என்பாவைப் பார்க்கலாம்.  ஒரு மாதத்திற்குள்ளேயே 151 கவிதைகள் எழுதிக் குவித்துவிட்டார். இதோ 151வது கவிதையைப் பார்க்கலாம்.

 

          முயன்றால் முடியாது. தெரிந்ததும் கைவிட்டான்

          தயங்கி நின்றவன் ஒதுங்கிக் கொண்டான்

          சிஙூர்த்து முயன்றவன் வெற்றியே பெற்றான்

          முயன்றால் முடியாதது எது.

 

          ஒன்றை ஒன்று தொடர்புடையதாக 151 கவிதைகளையும் எழுதி முடித்துவிட்டார்.  இவர் என்பா எழுதினாலும் கவிதை வரிகள் ஒன்றை ஒன்று தொடர்பு உடையதாக அமைந்திருக்கிறது.

 

          வாசிக்க எளிதாக மேலே குறிப்பிட்ட கவிதை. பொதுவாக வெண்பாவில் காணப்படுவது அறிவுரை.  இது வெண்பாவின் தொடர்ச்சி என்பதால் அந்தத் தன்மை என்பா கவிதைகளிலும் அமைந்து விடுகின்றன. 

 

          சுரேஷ் ராஜகோபால் முதல் என்பா கவிதைத் தொகுதியைக் கொண்டு வருகிறார்.  அவருடைய கவிதைத் தொகுதியின் தலைப்பின் பெயர் ‘உலகமே தெரியாத கிணற்று மீன்.’   கவிதையின் இரண்டாவது வரி.

 

“         ஆற்றின் சீராக மிதந்தது ஓடம்

          உலகமே தெரியாத கிணற்று மீன்

          உள்ளத்தில் கல்மிஷம் உறவு நசிந்திடும்

          உதய வானில் நிலவு. 

 

          முதல் இரண்டு வரிகளில் ஒன்றோடு ஒன்று தொடர்பு உண்டு.  மூன்றாவது நான்காது வரி எந்தத் தொடர்பு இல்லாமல் வெளிப்பட்டிருக்கின்றன.  இதுதான் என்பாவின் தனித்தன்மை. 

  ———————–

navina.virutcham@gmail.com

 

 

Series Navigationநேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடுபுறம் கூறும் அறம்