கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்

கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்
This entry is part 1 of 15 in the series 13 மார்ச் 2022

 

 
 
அழகியசிங்கர் 
 
 
45வது  சென்னைப் புத்தகக் காட்சியில் நான் ஒன்று கவனித்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான்.
என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள்.  ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.
 
புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக 17 எண்ணுள்ள சிங்கிள் ஸ்டால் எடுத்திருந்தேன்.
 
ஒவ்வொரு முறையும் புத்தகக்காட்சி எனக்குப் பழகிப் போய்விட்டது.  பெரிய அளவில் என்னால் எந்தப் புத்தகத்தையும் விற்க முடியாது.  
அதுவும் கவிதைப் புத்தகங்களை விற்கவே முடியாது.  இந்த முறை தமிழினி பதிப்பகம் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைத் தொகுதி முழுவதும் இலவசமாகத் தருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
 
அதைக் கேட்டு பலர் தமிழினி பதிப்பகக் கடைக்குப் படையெடுத்தார்கள்.  ஆனால் கவிதைப் புத்தகத்தை விருப்பமானவர்களுக்குத்தான் வினியோகம் செய்தார்கள்.
 
நான் என் கடையிலும் கானப்ரியன் கவிதைத் தொகுதியான ‘வேதியியல் மாற்றங்கள்’  என்ற புத்தகத்தை வினியோகம் செய்தேன். ஆனால் என் கடையில் வேற புத்தகங்கள் வாங்குபவருக்குத்தான் இலவசமாக வினியோகம் செய்தேன்.
 
கானப்ரியன் 1000 பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு விற்பதற்கு வழியில்லாமல் வைத்திருந்தார். .   அவர் நடத்திய வெளியீட்டு விழாவில்   17 பிரதிகள்தான் விற்றார்.  ஆனால் அந்த வெளியிட்டு விழாவிற்கு  அவர் செய்த செலவு ரூ.50000.  இப்படித்தான் எல்லோரும் மாட்டிக் கொள்கிறார்கள். 
 
.  இப்படித்தான் எல்லோரும் மாட்டிக் கொள்கிறார்கள். 
 
இந்தப் புத்தகக் காட்சியில் கவிதைப் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்து விடலாமென்று கொடுத்து விட்டார். இந்தப் புத்தகத்தை 2014ல் அச்சிட்டுள்ளார்.
 
ஒரு சிலரைத் தவிர பெரும்பாலும் கவிதை நூல்கள் எல்லாம் கவிதை எழுதுபவர்கள்தான் அச்சிடுகிறார்கள்.  எவ்வளவு எண்ணிக்கை என்பது அவர்களுக்குத்  தெரிவதில்லை.
 
கானப்ரியன் கவிதைத் தொகுதி எத்தனைப் பிரதிகள் அச்சடிக்க வேண்டுமென்று தெரியாமல் செய்த பிழை இது. 
இதுமாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.  எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் கவிதைத் தொகுதியை மட்டும் 1000 பிரதிகள் அச்சிட மாட்டேன்.  ஆனால் 500 பிரதிகள் அச்சிட்டு மாட்டிக்கொண்டு விடுவேன்.,
 
இப்போது 300 பிரதிகள் போதும் நாம் மாட்டிக்கொள்ள.  
 
ஆனால் இப்போது உள்ள சுழலில் ஒருவர் ஒரு கவிதைத் தொகுதி கொண்டு வர வேண்டுமென்றால் 25 பிரதிகள் அச்சிட்டால் போதும்.
இன்றைய சூழலில் இது மாதிரித்தான்  செய்ய முடியும்.  
 
கானப்ரியன் கவிதைப் புத்தகம் மட்டுமல்லாமல்  இன்னும் சில கவிதைப் புத்தகங்களையும், நாவல்களையும் இலவசமாகக் கொடுத்தோம் புத்தகக் காட்சியில். .
 
101 பக்கங்கள் கொண்ட ‘வேதியியல் மாற்றங்கள்’ என்ற புத்தகத்தின்  விலை ரூ.80 தான்.
 
கானப்ரியன் கவிதைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
 
‘பிரச்சாரம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.  
 
கவனப்பிழையால் 
எப்படியோ
தங்கிவிட்டது
என் சட்டை..
 
எத்தனை சொல்லியும்
கேட்கவில்லையாம்
      அவளின் தம்பி
அதனை 
அணிந்து கொள்ள வேண்டாமென்று.
 
என்னிடம் திரும்பியபின்
துவைத்ததில்
தொலைந்திருக்கலாம்
அவனால் நேர்ந்த “
          அழுக்கு.
 
ஆனால் இன்னமும்
உராய்ந்து கொண்டிருக்கின்றன
என் மேனியில்
அவன் தற்பெருமையின்
இழைப் பிசிறுகள்
 
இந்தக் கவிதை எளிமையாகவும் கடைசி வரிகளில் தென்படும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றன. 
இவருடைய கவிதைகளில் பொதுவான தன்மை எளிமை. பெரும்பாலும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் எழுதி உள்ளார்.  
கருத்து வேகம் அதிகரிக்கும்போது கவிதை விடைபெற்றுப் போய் விடுகிறது.  எல்லாக் கவிதைகளையும் சிறப்பாக எழுதி உள்ளார்.  
 
சேவலின் குறுக்கு வெட்டுத் தோற்றம்’  என்ற தொகுப்பும் 500 பிரதிகள் வரை அச்சடித்துள்ளார்.  இத்தொகுப்பையும் புத்தகக் காட்சியில் இலவசமாகக் கொடுத்தோம்.
 
இத்தொகுப்பில் உள்ள ஒரு கவிதையை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.
 
விடியல்
 
மேலே
எங்கோ மிதக்கும்
விடியலைத் திறக்க
மெல்ல
ஏறிக்கொண்டிருக்கின்றன
நேரத்தின் துகள்கள்
இரவின் 
படிக்கட்டுகளில்…
 
ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு யோசனை செய்கிற கவிதைகள். ஆனால் அதையே சிறப்பாக சொல்லியிருக்கிறார்
இலவசமாக இக் கவிதைத் தொகுதிகளை வழங்கினாலும் திறமையாக எழுதப்பட்ட கவிதைத் தொகுதிகள் என்பதில் சந்தேகமில்லை.
 
 
 
Series Navigationகாற்றில்லாத கடற்கரை

2 Comments

  1. Avatar V. Sridharan

    திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி. வேறு எவரேனும் இதைப் பார்த்து பொருளாதார இழப்பு தனக்கு வராமல் காத்துக் கொண்டால் அது நல்லது. விரல்கள் பொசுங்கிய தழும்புகள் இன்னும் இருக்கிறன. எச்சரிக்கையுடன் இருக்கிறேன் இப்போதெல்லாம். அடுத்த 4 நூல்களையும் 100 பிரதிகள் அச்சிட்டேன். நஷ்டம் பரவாயில்லை.

  2. Avatar V. Sridharan

    திரு அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி. விரல்கள் பொசுங்கிய தழும்புகள் இன்னும் இருக்கிறன. பொருளாதார நஷ்டம் வராமல் மற்றவர்கள் விழித்துக்கொள்ளட்டும்.அடுத்த நான்கு நூல்கள் 100 பிரதிகள் அச்சிட்டேன். இன்னும் இரண்டு நூல்கள் வர இருக்கின்றன இந்த ஆண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *