காப்பியக் காட்சிகள் ​15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் க​லைகள்

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

 

நாடகக்கலை பற்றிய குறிப்புகள் 17 இடங்களில் சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன.அக்காலத்தில் நாடக நெறி உணர்ந்த புலவர்கள் பலர் இருந்தனர்(672). நாடக நூல்களும் பல இருந்தன(673). நாடக நூல்களில் குறிப்பிடப்படும் நெறிப்படி பெண்கள் ஆடுவதற்கு வந்தனர். தாளத்திற்கு ஏற்பவும் தண்ணுமை, முழவு, குழல் முதலிய இசைக்கருவிகளின் இசைக்கு ஏற்பவும் பெண்கள் நடனமாடினர்(1253). அக்காலத்தில் இசையோடு இணைந்த கூத்தாகவே பெரும்பான்மையான நாடகங்கள்  விளங்கின. ஆண்களின் உள்ளம் உருக நடனமாடும் பெண்கள் பலர் இருந்தனர் என்பதைச் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(1255).

நாடக மகளிர்

நாடகத்தில் நடிக்கும் மகளிர் தலைக்கோலம் முதலிய அணிகலன்களை அணிந்து கூந்தலை எடுத்துக் கட்டி, பொன்பட்டம், குண்டலம், ஆரம், மணிகள் நிறைந்த சிலம்பு, அல்குலின் மீது மணிகள் முதலியவற்றை அணிந்து கொண்டு ஆடவந்தனர்(1256). சில தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறானது நாடகமாக்கப்பட்டதையும் சிந்தாமணி குறிப்பிடுகின்றது.(2573,2595,3085).

சுதஞ்சணன் தனக்கு நாய் பிறவியிலிருந்து வீடுபேற்றை நல்கிய சீவகனின் வரலாற்றை நாடகமாக்கி அதைப்பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்((1155) இதைப்போன்று சீவகனும் தனக்குப் பல உதவிகளைச் செய்த சுதஞ்சணன் வரலாற்றை நாடகமாக நடிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தாக சிந்தாமணி குறிப்பிடுகின்றது(2573).

நாடகத்தின் தன்மை

நாடகத்தில் ஒருவரே பல வேடங்களை ஏற்று நடிக்கும் முறையும் அப்போதிருந்தது. நாடகங்கள் சோலைகளில் நடத்தப்பட்டன. திரைச்சீலை முதலிய அரங்கப் பொருள்கள் அக்கால நாடகத்தில் பயன்படுத்தப்பட்டன(948,1253,1254). நாட்டியமாகவும் கூத்தாகவும், மேடை நாடகமாகவும் நாடகங்கள் காட்சியளித்தன. அக்காலத்தில் நாடகக் கலையானது நாட்டியம், நாடகம், இசை, கூத்து ஆகியவற்றின் கலவையாக விளங்கியது என்பது நோக்கத்தக்கது.

சிற்பக்கலை

சிந்தாமணியில் 3 இடங்களில் சிற்பக்கலை குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. சுரமஞ்சரியின் கன்னி மாடத்திலிருந்த ஆண் பதுமைகள், பெண் பதுமைகளாக மாற்றப்படுகின்றன(907). சீவகன் தன்னோடு வாழ்ந்த சுதஞ்சணனின் உருவத்தைப் பொன்னால் வார்த்து உருவத்தைச் செய்தான்(1156, 2573). இறைவனான அருகக் கடவுளின் உருவம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது(820).

சுரமஞ்சரியின் பதுமைகள் கற்பனைத் திறத்தால் வடிக்கப்பட்டவையாகும். சுதஞ்சணனின் சிற்பம் உள்ளது உள்ளபடி பார்த்து வடிக்கப்பட்டதாகும். அருகக் கடவுளின் சிற்பம் ஞான நோக்கால் வடிக்கப்பட்டது என்பது நோக்கத்தக்கது. சிற்ப அமைதிகளை விளக்கும் சிற்ப நூல் அக்காலத்தில் இருந்தமை(1999) இதிலிருந்து புலப்படுகின்றது.

ஒப்பனைக்கலை

ஒப்பனைக்கலை குறித்த செய்திகள் சிந்தாமணியில் 12 இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒப்பனைக்கலையில் ஆண் பெண் இருவரும் சிறந்தவர்களாக அக்காலத்தில் விளங்கியுள்ளனர். ஆண்களுக்குப் பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் ஒப்பனை செய்தனர் என்பதை மன்னனின் ஆணைப்படி அணங்கமாலைக்குச் சீவகன் ஒப்பனை செய்ததைக் கொண்டும் சீவகன் திருமணத்தின்போது பெண்கள் சீவகனுக்கு ஒப்பனை செய்ததைக் கொண்டும் தெளியலாம்(671-672, 1476,2422).

ஒப்பனையும் ஒப்பனைப் பொருள்களும்

ஒப்பனையானது தலையிலிருந்து பாதம் வரை படிப்படியாகச் செய்யப்பட்டது. வெண்சாந்து, நீலமணி, குங்குமம், சந்தனம், செந்தூரப்பொடி, பொற்சுண்ணம், பன்னீர், நறுநெய், புணுகு முதலிய பொருள்கள் ஒப்பனைக் கலைக்குரிய பொருள்களாக விளங்கின(896,2413,1147,1373). ஒப்பனை செய்வதில் பலர் வல்லவர்களாகத் திகழ்ந்தனர்(627). ஒப்பனைக் கலையை ஒப்பனைக் கூடங்களில் செய்தனர்(627).

பெண்களை ஆடவர்களைப் போன்று உருவத்தை மாற்றி ஒப்பனை செய்த செய்தியானது சிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது(2655). சீவகனின் மனைவியர் சீவகனைத் துறவு வாழ்க்கையிலிருந்து மீட்டு மீண்டும் இல்லற வாழ்க்கையில் செலுத்தும் நோக்கத்தோடு நீர் விளையாட்டை ஏற்பாடு செய்கின்றனர். அதில் சீவகனின் மனைவியர் தங்களைக் கட்டியங்காரனாக ஒப்பனை செய்து கொண்டு விளையாடுகின்றனர் என்பதிலிருந்து இதனை நன்கு உணரலாம்.

ஒப்பனைக் கலையானது மன மகிழ்ச்சிக்காகச் செய்யப்படுகுின்ற ஓர் உன்னதமான கலையாக அக்காலத்தில் விளங்கியதை சிந்தாமணிக் காப்பியத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.  இசை, ஓவியம், நாடகம், சிற்பம், ஒப்பனை ஆகிய கலைகள் உள்ளத்துணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தும் உயர்ந்த கலைகளாக விளங்கின. இக்கலைகளை குல, ஆண், பெண் என்று வேறுபாடு கருதாமல் அனைவரும் விரும்பிச் செய்யும் கலையாக அக்காலத்தில் விளங்கியமை சிந்தாமணிக் காப்பியத்தின் வாயிலாக தெள்ளிதின் புலப்படுகின்றது. இக்கலைகளால் மக்களின் வாழ்க்கை மேன்மை பெற்றது.(தொடரும்…………16)

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6