காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3

This entry is part 8 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

( 3 )
என்னா நாகு…என்னாச்சு விஷயம்…? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன்.
கடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? – நினைத்தவாறே பட்டென்று எழுந்து வந்தார் வெளியே. உள்ளே நுழைய எத்தனித்த ஆளை அப்படியே இடதுபுறமாகத் தள்ளிக்கொண்டு போனார். ஆமை நுழைந்தது போல் இவன் நுழைந்து வைத்தானானால் பிறகு இருக்கும் வியாபாரமும் படுத்துவிடும். வியாபாரம் வேறு. அரசியல் வேறு. இவனை வேறு வழியில்தான் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தானே இந்தப் பேச்சு வார்த்தையே…இல்லையெனில் இவனடிக்கும் கொள்ளைக்கு இவனிடம் யார் நெருங்குவார்கள். அப்படிச் சேர்த்த காசை இப்படி வாங்கி நம் ஜவுளிக்குள் முடக்கிவிட வேண்டியதுதான். நினைத்தவாறே படியிறங்கிய நாகநாதன் –
வாங்க…ஒரு காபி சாப்டுட்டே பேசுவோம்…என்று கூறிக் கொண்டு பக்கத்து ஓட்டலுக்குள் நுழைந்தார்.
வண்டி நிக்கிதுங்க வெளில…நா போயாகணும்..இதென்ன சாப்பாட்டு நேரத்துல காபி சாப்பிடக் கூப்டிட்டு இருக்கீங்க…?
சரி, வாங்க…சாப்பிட்டிட்டே பேசுவோம்….
அதுக்கெல்லாம் நேரமில்லீங்க…வீட்டுல ஆக்கி வச்சிருப்பாங்க….அப்புறம் அவ வேறே சத்தம் போடவா…? வெறும் காபியே சொல்லுங்க…
காபி வந்தது. ஆனால் இருவருக்குமே அது ருசிக்கவில்லை. இருவர் மனதிலுமே ஒருவர் சார்ந்து ஒருவர் எப்படிக் காரியத்தை முடித்துக் கொள்வது என்றல்லவா சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காரியார்த்தமாகத்தானே சந்தித்தது!
நா கௌம்பறேன்…..மருதூர் பள்ளிக்கூடம் வேலை நடந்திட்டிருக்கு…அதப்போயிப் பார்க்கோணும்….இன்னும் ஒரு வாரம்தான் டயம் இருக்கு அதுக்கு. அதுக்குள்ள முடிச்சிக்கொடுத்தாகணும்…மினிஸ்டர் தேதி கொடுத்திட்டாரு…
இவனிடம் பள்ளிக்கூடம் கட்டக்கொடுத்த புண்ணியவாளன் எவனோ? அவன் தலைவிதி எப்படியோ? – நினைத்துக் கொண்டார் நாகநாதன். வெளிக்காட்டிக்கொள்ள முடியுமா?
அப்டியா….? உங்களுக்கு ஏதாச்சும் வேல இருந்திட்டேயிருக்கும்….போயிட்டேயிருப்பீங்க…அப்ப அதப் பாருங்க….
அதப்பாருங்கன்னா? இது முடிஞ்சிச்சா இல்லையா? முடியலைன்னா சொல்லுங்க…நா வேற ரூட்ல பார்த்துக்கிறேன்…
அய்யய்ய….அதெல்லாம் எதுக்கு? நா முடிச்சித் தரேன்…..அந்த ஆபீசுல இந்த வருஷம் நீங்க வேல பார்க்குறீங்க…போதுமா…?
அங்க நம்ம செக்யூரிட்டிப் பத்திரமெல்லாம் நெறையக் கெடக்குங்க….அதல்லாம் வேறே வாங்கணும்….இந்தத் தடவக் கான்ட்ராக்டைப் போட்டுட்டேன்னா, அதல்லாம் பைசல் பண்ணிப்புடுவேன்….
அதெல்லாம் எப்டிப் பைசல் பண்ணுவீங்க…இந்த வேலைக்கு புதுசாத்தான வாங்கிக் கொடுத்தாகணும்…?
அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது….அது தொழில் ரகசியம்….எதுக்கு அது? நா அங்க போக முடியாது. அதான் நம்ம ஆள் ஒருத்தர டம்மியாப் போட வேலை செய்திருக்கேன்…..நாந்தான்னு எப்டியோ புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு…சரி கெடக்கட்டும் நேரடியாவே மோதிப் பார்த்துருவமேன்னு இறங்கிட்டேன்….இப்ப என்ன சொல்றான் உங்க பையன்…முடியும்ங்கிறானா முடியாதுங்கிறானா?
என்னா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்க… என் பையன் இப்பத்தான டிரான்ஸ்பர்ல வந்திருக்கான்…அவனப் போயி நெருக்க முடியுமா? செய்யி…செய்யின்னு…
அப்போ உங்களால கதையாகாதுன்னு தெரியுது… சரி, நாளைக்கு வரைக்கும் உங்களுக்கு டைம் தர்றேன்….ஏன்னா நா மருதூர்லருந்து நாளக்கழிச்சிதான் வருவேன்…அதுக்குள்ள முடிச்சி வையுங்க…இல்லன்னா நா என் ரூட்ல பார்த்துக்கிறேன்… – சொல்லிவிட்டு அந்த ஓட்டலை விட்டு வெளியேறிய பிச்சாண்டி நேரே தன் காரை நோக்கி நடந்தான்.
அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகநாதன். காரில் பவனி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான். அவன் சைக்கிளில் சென்றதையும், பஸ்ஸில் போனதையும் பார்த்திருக்கிறார் இவர். பிறகு புல்லட்டில் ஒரு கட்டத்தில் பறந்தான். இன்று அவன் கையில் ஒரு கார். அதற்கு எவன் தலையில் மிளகாய் அரைத்தானோ? எல்லாம் காலக் கொடுமை. இன்று இவன் நம்மை மிரட்டுகிறான். நான் உருவாக்கிய ஆள். இன்று என்னிடமே வார்த்தைகளை அளக்காமல் பேசுகிறான். போகட்டும். மனதைச் சமாதானம் ஆக்கிக் கொண்டார் நாகநாதன்.
அந்தக் கான்ட்ராக்டை முடித்துக் கொடுத்தால் அதைச் சாக்கு வைத்து பிச்சாண்டியையும் ஒரு பாகஸ்தராகப் போட்டு தன் ஜவுளித் தொழிலை விரிவு படுத்தலாம் என்கிற ஐடியாவில் இருந்தார் அவர். ஊருக்கே பெரிய கடையாகத் தன் கடையை பிரம்மாண்டப்படுத்தத் தான் போட்டிருந்த திட்டம் எங்கே நடக்காமல் போகுமோ என்று அவர் மனதுக்குள் அவநம்பிக்கை லேசாகத் துளிர் விட்டது.
இந்த விஷயத்தில் பையனைத் தொந்தரவு செய்வது சற்று சங்கடமாகத்தான் இருந்தது அவருக்கு. அவன் அம்மா கூடவே இருந்து வளர்ந்து விட்டான். நல்ல விஷயங்கள் நிறையப் படிந்து போனவன். அத்தனை எளிதாக மாற்றி விட முடியுமா? அப்படி ஏதும் ஏடா கூடமாகச் செய்து அவன் வேலைக்கு ஏதாவது ஆபத்து என்று வந்து விட்டால்? அதுவும் பயமாக இருந்தது அவருக்கு.
இதற்கு முன் ஒரு மினிஸ்டரின் பையனுக்கு அவரது தோட்டத்தில் ஆழ்குழாய்த் துளை போட வேண்டும் என்று முயன்ற போதே அதற்கு பதிவு வரிசை உள்ளது, சட்டென்று அப்படி இயந்திரத்தைக் கொண்டு நிறுத்த முடியாது என்று சொன்னவன் அவன். வரிசைப்படி அவர் இருபத்தியெட்டாவது இடத்தில் இருக்கிறார், அவர் முறை வரும்போதுதான் நடக்கும் என்று சொல்லி இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று பதில் அனுப்பியவன் அவன். அப்பொழுதே அவனை அலுவலகம் மாற்ற முடிவு செய்தார்கள். அன்று அங்கிருந்த அலுவலரின் கடுமையான சிபாரிசின்பேரில் பாலன் தனக்கே வேண்டும் என்று சொல்லி நிறுத்தி வைத்துக் கொண்டார் அவர். தனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்று நேர்மை தவறாத தன் பையனை உரிய அந்தஸ்தோடு நெருக்கமாக வைத்துக் கொண்டவர் முன்பிருந்த அதிகாரி. . இப்படி படு ஸ்ட்ராங்காக உட்கார்ந்திருக்கும் தன் பையனிடம் போய் வில்லங்கமான விஷயங்களை வைத்தால் எப்படி நடக்கும்? நல்ல விஷயங்களையே அது நூறு சதவிகிதம் சரிதானா என்று உறுதி செய்து அலுவலரின் நம்பகத்தன்மைக்கு உகந்தவனாக இருப்பவன் அவன். அவனைக் கரைப்பது என்பது என்ன அத்தனை சாதாரணமா?
யோசித்துக் கொண்டே கடைக்குள் நுழைந்தார் நாகநாதன்.
அய்யா…நாகர்கோயிலுக்கு நாம அனுப்பிச்சிருந்த பண்டல் லாரி கவுந்திடுச்சாம்…டீசல் லீக்காகி வண்டி ஃபயர் ஆயிடுச்சு போலிருக்கு. மொத்த ஜவுளி பண்டல்களுமே கருகிப் போச்சுன்னு தகவலுங்க….இப்பத்தான் நம்ப திருநெல்வேலி ராசுப்பிள்ளை போன் பண்ணினாருங்கய்யா…அவர்தான் ஸ்பாட்டுக்குப் போயி எல்லாமும் பார்த்து செய்திருக்காரு…டிரைவர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காராம்.
நாகநாதனுக்குத் தலை மூர்ச்சைக்கு வந்தது. தனக்கு நேரம் சரியில்லையோ என்று நினைக்க ஆரம்பித்தார் அவர். சரக்கு போய்ச் சேர்ந்தால்தான் பழைய பாக்கியை முழுதுமாக வாங்க முடியும். இப்பொழுதுதான் சூரத்தில் மொத்த ஆர்டர் பண்ணி கொண்டு வந்து இறக்கியது. இன்னும் கோடவுனில் நிறைய சரக்குகள் இருக்கின்றன. அவைகளும் அனுப்பப்பட வேண்டியது உள்ளது. ஆனாலும் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புக் கொண்ட சரக்குகள் நாசம் என்றால்? என்னதான் இன்ஷ்யூர் என்றாலும், அதிகாரிகளின் முழு ஆய்வுக்குப் பின் வந்து சேரும் காசு பாதி கூடத் தேறாதே? அது என்ன உடனேவா வந்து விடப் போகிறது? கேஸ் முடியவே பல மாதங்கள் ஆகிவிடக்கூடும். முருகா…! தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் நாகநாதன்.
சற்று நேரத்தில் கிளம்பினார். சாயங்காலமா வாறேன்…என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து வண்டியை எடுத்தார். இவர் மனோ வேகத்துக்கு அது ஸ்டார்ட் ஆனால்தானே….சனியன்…இது கூட நம்மள மதிக்க மாட்டேங்குது….என்றவாறே ஓங்கி ஒரு உதை கொடுத்தார். சீறிக்கொண்டு பாய்ந்தது வண்டி.
அது சரி…யார் மேல் கோபத்தை வைத்துக் கொண்டு இது கூட நம்மளை மதிக்கமாட்டேங்குது என்று சொன்னார் அவர்? யோசித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தவர் அவரை அறியாமல் அவன் பையன் வேலை பார்க்கும் ஆபீஸ் அருகில் அவர் வண்டி நின்றபோது எதற்கும் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விடுவோமா என்று நினைத்தார். அவன் ஆபீசில் பலரையும் அவர் நன்கறிவார். இதுவரை எத்தனையோ காரியங்களுக்கு என்று சென்று நிறைவேற்றிக் கொண்டவர்தான். ஆனால் தான் பார்த்து, பேசிப் பழகிய அலுவலகத்தில் இன்று தன் காரியத்திற்கு என்று தன் மகனிடமே போய் நிற்க வேண்டுமே என்பதை நினைத்த போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது அவருக்கு. அவர் மனதில் தோன்றிய அவநம்பிக்கை தன்னைப் பலர் முன் அவமானகரமான இடத்தில் நிறுத்தி விடுமோ என்பதாக அவர் அவரை அச்சப்பட வைத்தது என்பதுதான் உண்மை.
நிறுத்தியது வேறு ஒரு காரியத்திற்காக என்பதுபோல் பக்கத்துக் கடைக்குச் சென்று என்னவோ விசாரிப்பது போல் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றார். தற்செயலாகத் திரும்பியபோது பக்கத்து டீக்கடையில் இருந்து பாலனும், இன்னொருவரும், வருவதைக் கண்ணுற்ற அவர், யார் என்று கூர்ந்து நோக்கிய போது அவரை அறியாமல் உடம்பில் மெல்லிய நடுக்கம் பரவுவதை உணர்ந்து அருகிலுள்ள கதவினைப் பிடித்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் நாகநாதன்.

Series Navigationமிதிலாவிலாஸ்-29 (நிறைவு)உதவிடலாம் !
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *