காலண்டரும் நானும்

எஸ்.அற்புதராஜ்

என் வீட்டின் கதவுகளை நானே திறந்து வைக்கிறேன்,
பூட்டுவதும் நானே.
என் வாழ்க்கையின் கதவுகளை நித்தமும் நானே
திறந்துவைக்கிறேன் .
கடந்த நாற்பது ஆண்டுகளாக காலையில் எழுந்ததும்
தினசரித் தேதித் தாளைக் கிழிப்பதும் நானே.
நேற்றைய தாளைக் கிழித்துவிட்டால் புதியநாள்
தொடங்கிவிட்டதாக அர்த்தம் கொண்டுவிடும்.
காலண்டரும் நானும் ஒன்றாகவே நாட்களைக்
கழித்து வந்திருக்கிறோம்.
என் பேத்திகள் கூட நீங்கள்தான் தினந்தோறும்
‘காலண்டரில் தாளைக் கிழிப்பீர்களா? என்று
ஆச்சர்யமாய்க் கேட்பதுண்டு.
இதிலென்ன ஆச்சர்யம்?
ஆச்சர்யம்தான்.
கடவுளைத் தியானிப்பதை விடவும் எழுந்ததும்
காலண்டர் தாளைக் கிழிப்பதில்தான்
கவனம்கொண்டு இருந்திருக்கிறேன்.
நவீனமயமான வீடுகளில் காலண்டர்மாட்டுவதற்கு
இடம் விடுவதில்லை.
எத்தனையோ வண்ண வண்ண காலண்டர்கள்
கைக்குக் கிடைத்திருகின்றன.
கிடைத்தவற்றை மாட்டிவைக்க இடமில்லாமல்
சுருட்டி மூலையில் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.
ஆனால் நாளடைவில் அழுக்குப் படிந்து குப்பையாகிப்
போனபின் என்ன செய்வதென்று தெரியாமல்
மனம்வலிக்க கிழித்துப் போட்டிருக்கிறேன், அல்லது
வீதியில் எறிந்திருக்கிறேன் மனசில்லாமல்.

இப்பொழுது ஒரே ஒரு தினசரிக் காலண்டர் இருந்தால்
போதுமென்று தோன்றுகிறது. எங்காவது சுவரில் ஸ்டிக்கர்
ஹாங்கர் ஓட்டியாவது அல்லது கொடிக்கம்பியிலாவது
காலண்டர் தொங்கவேண்டும்.
காலண்டர் இல்லாமல் இருப்பது வாழ்வே இல்லையென்று
ஆகிவிட்ட மாதிரி தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளில்
ஒருநாள்கூட காலண்டர் இருந்ததில்லை.
காலண்டர் என் வாழ்வோடு இணைந்தது.
காலண்டரை வைத்தே என் வாழ்க்கையைப் பற்றி
சிந்திக்கிறேன் .

Series Navigationமாரீசன் குரல் கேட்ட வைதேகி·மனப்பிறழ்வு