காலத்தின் விதி

முன் பின் தெரியாத

ஒரு அனாதைச்

சாவிலிருந்து

திரும்பும் ’அவனை’

வழி மறைப்பான்

முன்வாசலில்

முதியவன் ஒருவன்.

 

முதியவன் கால்கள்

மண்ணில்

வேர் கொள்ளவில்லையா?

 

சதா அழுக்கு சேரும்

கோணிப்பை போன்ற

கிழிந்த சட்டையில்

கிழட்டு வெளவாலாய்

அவன்

தொங்கிக் கொண்டிருப்பது

போலத் தோன்றும்.

 

முதியவன்

வாழ்ந்தும்

செத்தும் கொண்டிருப்பதை

விழிகள் திறந்தும்

மூடியும்

சொல்வான்.

 

அப்போது

பெய்து முடிந்த

அந்தி மழைக்குப் பின்னால் தான்

அவன் வந்திருக்க  வேண்டும்.

 

விட்ட மழையின் ஈரத்தை

விடாது சுட்டெரித்து

அவன்

விழிநாய்கள் மேலும்

உக்கிரம் கொண்டிருக்கும்.

 

அழிந்து கொண்டிருக்கும்

முதியவன் கதையின்

நனைந்த காகிதங்கள்

அப்போது

நெருப்பு பற்றிக்கொள்ளும்.

 

”முதியவனிடம் சொல்;

அவன் சாவு அடுத்த சாவு.

அவன் சாவுக்கு வருவேன்” என்று

’அவன்’ சொன்னதும்

முதியவனின்

விழிநாய்கள்

வழி விட்டிருக்கும்.

 

’அடுத்த சாவுக்கு’

’அவனின்’

சுவடுகளைத் தின்னும்

சுவடுகள்

வழி தப்பியிருக்கும்.

 

’காலத்தின்’

விதி

காலனும்

முன்சொல்லி நடப்பதல்ல.

 

கு.அழகர்சாமி

Series Navigationஉயர்வென்ன கண்டீர்?சாகித்திய அகாதெமி விருது குறிஞ்சிச்செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம்