குடை

 

மரணம் ஒன்றே விடுதலை

கைதிகளில் ஏது ஏற்றத்தாழ்வு

ஓவியனுக்குத் தெரியாத

சூட்சும உருவங்கள்

பார்வையாளனுக்குப் புலப்படும்

கரையை முத்தமிட்டு முத்தமிட்டுச்

செல்லும் கடலுக்கு

கொஞ்சம் கூட

வெட்கமே இல்லை

மேனி கறுப்பாகாமல்

மேகமாய் வந்து மறைக்கிறேனென

தேவதைக்கு தெரிய வருமா

மூக்குத்தியின் ஜ்வலிப்பைக் கண்டு

நட்சத்திரங்கள் வயிறெரியும்

அவள் உள் வரை

செல்லும் காற்று

அவளின் முடிவை

விசாரித்துச் சொல்லுமா

பெருமழையின் சாரலில்

அவள் நனைந்துவிடக்கூடாதென

நான் குடை பிடிப்பேன்

நான் நனைவதைப் பார்த்து

குடை சிரிக்கும்.

புதுவிசை

 

விசைப்பலகையில்

மின்னல் வேகத்தில்

செயல்புரிந்து கொண்டிருந்தன

அவனது கைகள்

காகிதத்தில் எழுதுவதைவிட

கணினியில் எழுதுவது

கைவந்த கலையாகிவிட்டது

அவனுக்கு

மென்பொருளிலும்,வன்பொருளிலும்

ஏற்படும் பழுதை நீக்குவதில்

நிபுணத்துவம் பெற்றுவிட்டான்

மடிக்கணினி மற்றவர்களுக்கு எப்படியோ

இவன் அறிவுக்கு

தீனி போடும் அமுதசுரபி

இவனைப் பொறுத்தவரை

வரம் வாங்கி வந்தவர்கள் தான்

வலைத்தளங்களில் சிக்கிக் கொள்கிறார்கள்

மின்னஞ்சலும்,மின்புத்தகமும்

காகிதத்தை சுண்டல்

சுமக்க வைத்துவிட்டன.

சத்தியம்

 

இன்றைக்கு ஏன் இப்படி,

காலையில் தாமதமாய்

எழுந்ததில் தொடங்கி

காலணியை பறிகொடுத்து

தேமேயென்று நிற்கும் வரை

எதிர்பார்த்தது நடக்காத போது

தெய்வம் வெறும் கற்சிலையாகத்

தோன்றுகிறது

எண்ணச் சுமை அழுத்த

சிந்தனையே குற்றமெனில்

பாவத்தின் சம்பளமாக

எதனை அளித்தாலும்

தலை வணங்கி ஏற்கத் தயார்

இதிகாச, புராணங்களெல்லாம்

தர்மமென்று

எதைச் சொல்கிறது

புனித நூலின் மீது

சத்தியம் செய்துவிட்டு

பொய் சொல்ல

எப்படி உனக்கு மனம் வருகிறது

ஓலைச் சுவடிகளில்

கடவுளைத் தேடிய போது

அகப்பட்டாரா உன் கடவுள்

கவண்கல்லால் அடிபட்ட

பறவையைக் கண்டு

பதறும் போது

கருணையே கடவுளாகிறது.

mathi2134@gmail.com

Series Navigationசந்திராஷ்டமம்!பொய்மை