குருட்ஷேத்திரம் 23 (சக்கரவியூகத்தில் அகப்பட்டு மாண்ட வீரஅபிமன்யூ)

 

 

 

ஊழ்வினை அவதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பாரதம் பல பேரரசுகளைக் கண்டது. பாரதத்தின் வரலாற்றில் சூழ்ச்சிக்காரர்களும், துரோகிகளுமே வெற்றி கண்டுள்ளனர். நான்கு பேர்களுக்கு மத்தியில் தர்மம் என்று காலாட்சேபம் பண்ணுபவர்கள், நான்கு சுவர்களுக்கு மத்தியில் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்கின்றனர். வாழ்க்கை சிலருக்கு வரமாகவும் சிலருக்கு சாபமாகவும் தான் இருக்கின்றது. வேதங்கள், உபநிடதங்கள் அன்பையே போதிக்கின்றன. சத்தியத்தைக் காக்கவே மதம் ஸ்தாபிக்கப்பட்டது. சத்தியம் மனிதர்களை கருவியாக்கி தன்னை இந்த உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறது. கடவுள் என்பவர் சத்தியப்போரொளியாகத்தான் இருக்க வேண்டும் எனவே பல சமயங்களில் கடவுளை உருவமற்றவராக வழிபடுகின்றனர். இறையச்சம் கொண்டவர்கள் நசுக்கப்படுவதும் எதற்கும் அஞ்சாதவர்கள் கோலேச்சுவதும் நம் கண்முன் நடக்கிறது. சமணத்தில் வலியுறுத்தப்படும் வினைக் கொள்கையை படித்தால் நமக்கு விடை கிடைக்கும்.

 

விராட தேசத்தில் பாண்டவர்கள் வெற்றிகரமாக அஞ்ஞானவாசத்தை முடித்தார்கள். அடுத்த நாள் விராட தேசத்தின்மீது படையெடுத்து வந்த துரியோதனனை விராடன் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அதன் பிறகுதான் விராடனுக்கு தெரிய வந்தது தன்னுடன் பகடையாடிவர் தருமர் என்பதும் சமையல் வேலை செய்தவன் பீமன் என்பதும் திருநங்கையாக அந்தப்புரத்தில் உலா வந்தவள் அர்ச்சுனன் என்பதும் பசு மந்தை காத்தவன் நகுலன் என்பதும் குதிரைகளுக்கு பயிற்சி அளித்தவன் சகாதேவன் என்பதும். இந்திரப்ரஸ்தத்தின் மாமன்னர்களை தான் மரியாதைக் குறைவாக நடத்திவிட்டதாக விராடன் வருந்தினான். தனது விராட தேசத்தை தருமருக்கு அளிக்க முன்வந்தான். தன் மகள் உத்தரையை அர்ச்சுனனுக்கு கன்னிகாதானம் அளிக்க விரும்பினான். அர்ச்சுனனோ அரண்மனையில் இருந்த ஒரு வருடமும் உத்தரையை என் மகளாகத்தான் கருதி வந்தேன் உத்தரையும் என்னிடம் அப்படித்தான் பழகினாள். உத்தரையை மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் மருமகளாக என் ஆருயிர்ப்புதல்வன் அபிமன்யூவுக்கு மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன் என்றான்.

 

விராட தேசத்து பட்டணமான உபப்லாவ்யம் பட்டணத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. அபிமன்யூவும், தாய் சுமத்ராவும் கிருஷ்ணர் பாதுகாப்பில் துவாரகையில் இருந்தார்கள். பலராமர் முதலியோர்க்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டது. தருமரை முன்நிறுத்தி பாண்டவர்கள் வருபவர்களை வரவேற்று உபசரித்தார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிகண்டியும், திருஷ்டத்துய்மனும் அதன் பின்பு காசிராஜனும் படைகள் புடைசூழ வந்து சேர்ந்தார்கள். உத்தரை அபிமன்யூவை கைத்தளம் பற்றினாள். திருமண வைபவம் இனிதே முடிந்தது. திருமணத்திற்கு வந்த மாமன்னர்கள் ஒன்றுகூடி யுத்தம் பற்றி விவாதித்தார்கள். சமாதானம் பேசுவோம் பாதி தேசம் என்றால் ஒத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் யுத்தம் என முடிவானது. அந்த கூட்டத்தில் அபிமன்யூ உற்சாகமாக கலந்து கொண்டான்.

 

அபிமன்யூ பற்றி முன்ஜென்மக்கதை ஒன்று சொல்லப்படுகிறது. பூமிபாரம் தீர்க்க தேவர்கள் மகாவிஷ்ணுவோடு பூமியில் விஜயம் செய்ய முடிவெடுக்கிறார்கள். சந்திரனிடம் அவர் மகன் வர்கசனை தங்களோடு பூலோகம் அனுப்பும்படி வேண்டுகிறார்கள். தன் உயிருக்கு உயிரான மகனை பிரிய மனமின்றி சந்திரன் வாய்மூடி இருந்தான். தேவர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே வேறு வழியின்றி என் மகன் பூமியில் பதினாறு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வான் அப்புறம் என்னை வந்தடைவான் என்ற நிபந்தனையோடு வர்கசனை அனுப்ப சம்மதித்தார். அந்த சந்திரனின் மகன் வேறுயாருமல்ல அபிமன்யூதான்.பாண்டவர்களின் வனவாசத்தின் போது அபிமன்யூ கிருஷ்ணர் அரவணைப்பில் தாய் சுமத்ராவோடு துவாரகையில் வளர்கிறான். கிருஷ்ணர் தன் மகன் பிரத்யும்னனோடு சேர்த்து அபிமன்யூவுக்கும் ஆயுதபயிற்சி அளிக்கிறார். துவாரகை மக்கள் அபிமன்யூவையும், பிரத்யும்னனையும் தங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கின்றார்கள்.

 

கிருஷ்ணரின் தூது தோல்வியில் முடிந்தது. அர்ச்சுனனுக்கு பக்க பலமாக ஆயுதங்களுடன் ரதத்தில் அவனைப் பின்தொடர்ந்தான் அபிமன்யூ. யுத்தத்தின் இரண்டாவது நாளில் துரியோதனனின் ஆசை மகன் இலக்குவனை அம்பெய்து கொன்றான் அபிமன்யூ. இலக்குவன் இறந்த செய்தி கேட்டு மதம் பிடித்த யானை போலானான் துரியோதனன். கோபத்தை துரோணரிடம் காட்டினான். உங்கள் பூதவுடல் தான் எங்களுடன் இருக்கிறது உங்கள் உள்ளமோ பாண்டவர்கள் பக்கம்தான் என்று சீறினான். நீங்கள் முயன்றிருந்தால் நேற்றே தருமனை சிறைப்பிடித்து என் முன்னே நிறுத்தியிருக்கலாம் வாய்ப்பு வந்தும் கூட வாளாய் இருந்துவிட்டீர்கள் என கர்ஜித்தான். குரோதத்தால் எரிந்து கொண்டிருந்த துரோணரின் மனதில் ஒரு திட்டம உதித்தது. நாளைய போர்க்களத்தில் அர்ச்சுனனை வெகுதொலைவு அழைத்துச் சென்றுவிடுங்கள் சக்ரவியூகத்தில் சிக்கப்போவது யாரென்று பார் துரியோதனா என்று கண்கள் சிவக்க கோபாவேசத்துடன் சொன்னார் துரோணர்.

 

அடுத்த நாள் போர்க்களத்தில் துரோணர் சக்ரவியூகம் அமைத்தார். தருமர் அபிமன்யூவை வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும்படி பணிக்க உத்தரவை ஏற்று அபிமன்யூ வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்தான். அவனுக்கு அரணாக தருமரும், பீமனும் வியூகத்துக்கு வெளியே நின்றார்கள். அபிமன்யூவின் வீராவேசத்தைக் கண்டு கர்ணனும், துச்சாதனனும் செய்வதறியாது திகைத்து நின்றனர். துரியோதனனின் தங்கையை மணந்த ஜயந்ரதன் பீமனும், தருமனும் வியூகத்தின் உள்ளே நுழையாதபடி திறம்பட யுத்தம் செய்தான். அபிமன்யூ வில்லை அவன் அறுக்க, துரோணர் தேர்க்குதிரைகளைக் கொன்றார், கிருபர் தேரோட்டிகளைக் கொல்ல, கர்ணன் அபிமன்யூவின் கவசத்தை அம்புகளால் அறுத்தான் மற்றவர்கள் சூழ்ந்துகொண்டு அபிமன்யூவின் உடலை அம்புகளால் துளைத்தார்கள். அபிமன்யூ கையிலுள்ள கத்தியையும் பறிகொடுத்து தேர்ச்சக்கரத்தை எடுத்துப் போரிட்டான். ஒரு கையை இழந்த அபிமன்யூவின் தலையில் கதாயுதத்தால் அடித்துக் கொன்றான் துச்சாதனன் மகன்.

 

கதிரவன் மேற்கில் மறைய சேனைகள் பாசறைக்குத் திரும்பின. பலரை எதிர்கொண்டு வென்ற அர்ச்சுனன் மனம் ஏனோ அன்று கலக்கத்தில் இருந்தது. எதிர்ப்பட்ட கிருஷ்ணரிடம் தருமரின் நலன் பற்றி விசாரிக்க, தருமரை தர்மம் காத்து நிற்கிறது எனவே கலக்கமடைய வேண்டாம் என கிருஷ்ணர் ஆறுதல் கூறினார். மாளிகைக்குத் திரும்பிய பின்தான் அபிமன்யூ மரணத்தைப் பற்றி அர்ச்சுனன் அறிந்தான். கர்ப்பவதியான உத்தரை வயிற்றில் அறைந்து கொண்டாள். தலையில் இடிவிழுந்தது போலானான் அர்ச்சுனன். தருமரும், பீமனும் அருகில் இருந்து கூடவா அபிமன்யூவை காக்க முடியவில்லை எனப் புலம்பினான். பாண்டவர்கள் எல்லோருடைய முகத்திலும் சோகம் அப்பிக் கொண்டது. கிருஷ்ணர் அர்ச்சுனனைத் தேற்றும்விதமாக அர்ச்சுனா எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. விதியின் கைகள் நம்மை பொம்மைகளாக்கி விளையாடுகிறது. நடக்கப்போவதை தலைகீழாக நின்றாலும் நிறுத்த முடியாது எனும் போது இழப்பை நாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டே ஆகவேண்டும். அபிமன்யூ வீரசுவர்க்கம் புகுந்தான் என்பதை மட்டும் நான் உனக்குச் சொல்லிக் கொள்கிறேன் என்றான். அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தை மீறி கிருஷ்ணரின் தயவால் அபிமன்யூ வம்சம் வளர்க்க பாண்டவர்களின் குலம் வேர்விட்டுவளர உத்தரை பரீட்சித்தைப் பெற்றெடுத்தாள்.

 

 

Series Navigationகாணாத கனவுகள்குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)