குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)

 

 

 

வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. கத்திக் கத்தி முட்டி மோதிப் பார்த்தாலும் எந்தக் கதவும் திறப்பதில்லை. ஆயிரம் கடவுளர்களில் ஒரு கடவுள் கூட அவனுக்கு ஆறுதல் தந்து நம்பிக்கை ஊட்டவில்லை. துயர வெள்ளம் அவனை வேரோடு சாய்த்துவிடுகிறது. அவனுக்கு மட்டும் வாழ்வில் கவிந்திருக்கும் காரிருள் அகல்வதே இல்லை. பிரபஞ்சத்தைப் பொருத்தவரை பூமி சிறுதூசுதான். அந்தப் பேரியக்கம் பூமியில் மட்டும் ஏன் உயிர்களை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. என்னதான் கர்மவினை என்று இட்டுக்கட்டினாலும் ஆண்டான் அடிமை முறையை நம்மால் ஏற்க முடிகிறதா? பணம் எல்லாவற்றையும் கொண்டு வந்து காலடியில் கொட்டுகிறது. குபேரனைப் போல் பொற்காசுகளை குவித்து வைத்திருப்பவனுக்கு ஒரு நாணயம் காணவில்லையென்றாலும் அன்றிரவு தூக்கம் வராது. அழகற்றவனாக இருந்தால் என்ன பணம் அதை ஈடுகட்டிவிடுகிறது. கல்வியில் சிறந்த புலவர் பெருமக்களும் அவன் காலடியில் அல்லவா வீழ்ந்து கிடக்கிறார்கள்.

 

எது ஒருவனுக்கு அதிகாரத்தைத் தருகிறது. பிறப்பும், பதவியும் அதைத் தந்தால் நீ கடவுளாகிவிடுவாயா? இங்கு என்ன நடக்கிறது என வானோர் உனக்கு படம் போட்டுக் காட்டுவார்களா? நீயும் பொம்மை நானும் பொம்மை உடையத்தான் போகிறோம் எத்தனை நாட்கள் கோபுரத்தில் இருப்பாய் ஒரு மழை ஒரு காற்று உன்னை குப்பைமேட்டில் உருட்டித் தள்ளிவிட்டுப் போய்விடாதா? ஆடவிட்டுப் பார்க்கிறான் என்று சுதாரித்துக் கொள்ளாமல் பேயாட்டம் போட்டால் என்றால் தன்னந்தனியாக மயானத்தில் எலும்புகளைத் தான் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். வெள்ளைத்தோலா, கருங்கூந்தலா, மான்விழியா, பொற்பாதங்களா எல்லாம் மண்தான். எங்கிருந்து வந்ததோ அதற்கே எருவாகிறது. இதில் நான் உயரம் நீ குட்டை நான் சிவப்பு நீ கறுப்பு என்றால் யாரை எரித்தாலும் சாம்பல் வெள்ளையாகத்தானே இருக்கிறது. மாலை போட்டு மரியாதை செய்கிறார்கள் என்று மிதப்பாக வருகிற ஆட்டுக்கு அருவாள எடுத்தவுடன் தான் தெரிகிறது தான் பலியாகப் போகிறோம் என்று.

 

அக்கிரமக்காரர்களுக்கு ஒரு கடவுள், அப்பாவி ஜனங்களுக்கு ஒரு கடவுளா? உனக்கும் அவன் சிவன் தான், எனக்கும் அவன் சிவன் தான், என்ன நீயும் நானும் எரிகிற சுடுகாடு வெவ்வேறா இருக்கலாம். நீ எங்கிருந்து வந்து உலகைப் பார்த்தாயோ நானும் அங்கிருந்து வந்துதான் உலகத்தைப் பார்த்தேன். வானத்திலிருந்து குதித்தவனே மயானத்தில் வெட்டியானுடன் தானே உறங்குகிறான் உனக்கென்ன என்கிறேன். நல்லவனாக வாழ்ந்தவன் ஒரு கொள்ளியோடு போய்ச் சேருவான் ஆட்டம் போட்டவனெல்லாம் மீண்டும் பிறந்து பல கொள்ளி வாங்கிக் கொள்வான். ரதியா இருக்கலாம் தேனிலும் பாலிலும் குளிக்கலாம் கடைசியா தீதானே தின்னப்போகிறது. தோற்றவர்கள் போய்ச் சேர்ந்த இடத்துக்குத்தான் வென்றவனும் போவான். பூமியே சுடுகாடுதான் இந்த சுடுகாட்டைத் தான் நாம் சொந்தம் கொண்டாடுகிறோம். வாழ்க்கையே ஒரு கனவு என்கிறார்களே நீ இந்த கனவுலகத்தைத் தான் கட்டி அழுது கொண்டு இருக்கிறாய். சூன்யத்திலிருந்து தோன்றி சூன்யத்துக்குள் மறையும் மாய பிம்பத்தைதான் அழகு என்று காலில் விழுந்து தொழுது கொண்டிருக்கிறாய்.

 

ரோமப் பேரரசும், பாரசீகப் போரரசும் சீட்டுக் கட்டுபோல சரியவில்லை. உலகை வென்றவர்கள் உயிர்த்தெழுந்து வந்ததாக சரித்திரம் இருக்கிறதா? கோயில்களிலெல்லாம் கடவுளைத் தேடும் நீங்கள் முதலில் மனிதராய் இருக்கின்றீர்களா? கடவுள் தானே பிறந்துவராமல் எதற்காக தூதரை அனுப்புகிறான் என்று எண்ணியதுண்டா? பாறையில் போட்ட விதைமாதிரி இறைத்தூதர்கள் வறியவர்கள் வீட்டில் தானே பிறந்துவருகிறார்கள். அக்கிரமக்காரர்கள் கடைசி வரை தன் பக்கம் தான் நியாயமிருப்பதாக வாதிடுவார்கள். சிறிது அதிகாரம் இருந்தால் சித்து வேலை தெரிந்திருந்தால் தன்னைக் கடவுள் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள். சாத்தானின் பிரநிதிகள் உலவும் உலகத்தில் கடவுள் இறங்கி வருவானா? கடவுள் உட்பட யாரும் இங்கு சிரஞ்சீவி இல்லை செய்த செயலுக்காக இங்கு எல்லோரும் சாட்சிக் கூண்டில் ஏறி தன்னிலை விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும். ராஜாவானாலும் பரதேசியானாலும் நெருப்பு எரிக்கத்தான் செய்யும். விதி உனக்கு மட்டும் விலக்கு அளிக்கும் என்று நினைக்கின்றாயா? இந்த உலக இயந்திரம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்போது தெரிந்துவிடும் யார் கடவுளென்று?

 

இந்தப்பூமி ஒரு துயரப்படகு. மரண ஓலங்கள் மங்கல இசையாகத்தான் கடவுளுக்கு ஒலிக்கிறது. மண்புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனைவிடவும் நாம் ஒன்றும் மேலானவர்கள் அல்ல. நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் தான் நம்மால் பார்க்க முடிகிறது. மறுபக்கம் பன்னெடுங்காலமாக அறியப்படாமலேயே உள்ளது. எந்தப் இயற்கைப் பேரழிவும் முன்னறிவிப்பு செய்துவிட்டு வருவதில்லை. நாம் வெறும் பார்வையாளர்கள் தான் ஆட்டுவிப்பவனுக்கும், ஆடுபவனுக்கும் நமக்கும் சம்பந்தமேயில்லை. சிற்றலைகளை வேடிக்கைப் பார்க்கிறோம் பேரலை எழுந்தால் வாரி சுருட்டிக் கொண்டு ஓட்டமெடுக்கிறோம். கடந்தகாலம் போனது போனதுதான் மாற்றியமைக்க முடியாது. எதிர்காலத்தில் எங்கு கொண்டுபோய் விடப்படுவோம் எத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கணிக்க முடியாது. காலஇயந்திரம் என்பது அறிவியலின் கற்பனாவாதமே. நாஸ்டர்டாம் போன்ற அசாதாரணமானவர்கள் பிரபஞ்ச பயணிகளாகத்தான் கருதப்படுகின்றனர்.

 

ஏற்கனவே விதைத்தது இப்போது பலன் தந்துகொண்டிருக்கிறது. இப்போது விதைப்பது எதிர்காலத்தில் பலன் தரும். கம்பராமாயணத்தில் இராவணன் புஷ்பகவிமானத்தில் சீதையைக் கவர்ந்து சென்றதாக கூறப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்திலேயே ஸ்தூல உடலை சுமந்து பறக்கும் விமானங்கள் இருந்துள்ளன. இதை வெறும் கற்பனை என்ற ஒதுக்கிவிட முடியாது. கங்கையில் முங்கினால் பாபங்கள் தொலையும் என்று சொல்லக் கேட்டிருக்கலாம். பாபம் செய்தாவன் கங்கையை நோக்கி ஓடுவானா? மனசாட்சிக்கு பயந்து காரியங்களை நிறைவேற்றுபவனுக்கு மட்டுமே கங்கை புனித நதி. பாவ மூட்டைகளை கங்கையில் கரைத்துவிட்டு சுவர்க்கம் புகலாம் என்பவன் மறுபிறவியில் மனிதப்பிறப்பென்பதே அரிதாகலாம். யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல. பிறப்பினால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல. யாருக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டுமோ வாழ்க்கையே அதைக் கற்றுக் கொடுக்கும் நீங்கள் கடவுளல்ல அவனுக்கு புரியவைப்பதற்கு. நீங்கள் உங்களை கரைத்தேற்றும் வழியைப் பாருங்கள். கடவுள் காரியங்களை கடவுளே பார்த்துக் கொள்வார்.

 

இலைகள், காய், கனி என மரங்கள் தழைத்திருக்க வேர்கள் அஞ்ஞானவாசம் செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா? காடுகள் அனைத்தும் எச்சத்தினால் வளர்ந்தவைதான் அதற்காக காகங்கள் அவற்றின் கடவுளாகிவிடுமா? இறை பலகீனங்களுக்கு உட்பட்டிருக்கலாம் ஆனால் இயற்கை அப்படிப்பட்டதல்ல அது யாருடைய சிபாரிசையும் ஏற்காது. ஐம்பூதங்களால் ஆனதுதான் உடலே நீ சிறு துரும்பை கைகளால் அசைத்தால் கூட அதற்குத் தெரிந்துவிடும். சக்கரவர்த்தியானாலும் சுவாசிக்க காற்று வேண்டும் இல்லையென்றால் சவப்பெட்டியில் கிடத்தி மலர்வளையம் வைத்துவிடுவார்கள். எத்தனை முறை கேட்டுவிட்டோம், எத்தனை முறை தட்டிவிட்டோம் திறந்ததா கதவு? அகம்பிரம்மாஸ்மி ஒவ்வொருவரும் கடவுளென்றால் உலகில் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு. துன்பம் என்பது மனதிற்கு விழும் அடி. அது ஞானப்பாதையை நாட வைக்கும் ஆனால் உறுதிசெய்யப்படாத மறுமைக்காக இகவாழ்வை அடகு வைக்க முடியுமா? அந்தப் சத்தியப் போரொளி இதை சீர்தூக்கிப் பார்க்கும் என நம்புவோம்.

 

கடவுளிடம் நம்மை கொண்டு போய்ச் சேர்க்கும் செயல் நல்ல செயல். கடவுளுக்கும் நமக்குமான இடைவெளியை அதிகரிக்கும் செயல் தீயசெயல். தகுதிக்கு ஏற்ப தனக்கு வரும் கடமைகளை செய்து கொண்டு வருபவன் இறுதியில் மோட்சத்தை அடைந்துவிடுகிறான். கடமையில் உயர்ந்தது தாழ்ந்தது என்ற ஒன்றே கிடையாது. பாபம் செய்தாவனுக்கு காவிரியும் கங்கை தான். பக்தியோகம் சரணடைந்தவரை இறைவனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஞானநெறியை எல்லோராலும் கைகொள்ள முடியாது. எந்தவொரு உயிரும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. சிந்திப்பது கூட கர்மம் தான். உலகை ஆள நினைப்பவன் அந்த எண்ணத்தை கைவிட்டு செயலில் கவனம் செலுத்த வேண்டும். ஐம்புலன்களையும் அதனதன் போக்கில் விட்டோமானால் நாம் நாற்சந்தியில் நிற்க வேண்டியது தான். மனித பிறவியென்பது தப்பிக்க ஒரு வாய்ப்பு. இதனைத் தவறவிடுகின்றவர்கள் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். உலகில் செயல்படும் விதி கடவுளைத் தோற்கடித்துவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

 

அம்புப்படுக்கையில் பீஷ்மர், தர்மனுக்கு தர்ம உபதேசங்களை செய்து கொண்டிருந்தார். தன்னிடம் சரணடைந்தவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஒரு கதை மூலம் விளக்கினார். வேடன் ஒருவன் வேட்டையாட கானகததிற்குச் சென்றான். அந்நேரம் பார்த்து காட்டில் சூறாவளி வீசியது. அவன் தடுமாறிக் கொண்டிருந்தபோது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த புறாவைக் கண்டான். அதன் மீது கருணை கொள்ளாதவனாய் அதன் துன்பம் போக்க மனமின்றி புறாவை தனது கூண்டில் சிறைபிடித்தான். சூறாவளி அடங்கட்டும் என்ற களைப்பு நீங்க ஓர் மரத்தடியில் படுத்தான். மரத்தில் ஒரு கிளையில் அமர்ந்திருந்த ஆண்புறா தனது இணையான பெண்புறா சூறாவளியில் எங்கு மாட்டிக் கொண்டுள்ளதோ என கலங்கியது. அவள்  இல்லையென்றால் என் உயிர் இந்த உடலில் தங்காது என வேதனையில் புலம்பியது. அந்த வார்த்தைகளைக் கேட்டு கலக்கமடைந்த பெண்புறா நான் திசைதவறி சென்றுவிட்டதாக கலங்காதீர் வேடன் கூண்டுக்குள் தான் அகப்பட்டு இருக்கின்றேன். என்னை மீட்பதல்ல அவ்வளவு முக்கியம் நம்மையே நாடி வந்திருக்கும் விருந்தினரான வேடனுக்கு உதவவும் என ஆண்புறாவிடம் மன்றாடியது.

 

ஆண்புறா பெண்புறாவின் சொல்லுக்கு செவிசாய்த்து வேடனிடம் அதிதியே உனக்கு என்ன வேண்டும் என்றது. வேடன் நடுநடுங்கியபடி குளிர்கிறது என்க, ஆண்புறா பறந்து சென்று நெருப்பினைக் கொணர்ந்தது. வேடன் குளிரைப் போக்கிக்கொண்டான்.  மேலும் என்ன வேண்டும் அதிதியே என்று ஆண்புறா கேட்டு நிற்க. வேடன் தன் வயிற்றை கையால் தொட்டுக் காட்டவே. வேடனுக்கு பசியெடுக்கிறது என்று புரிந்து கொண்ட ஆண்புறா தீயில் பாய்ந்தது. என் இறைச்சியைத் தின்று பசியாருங்கள் என்று சொல்லியபடி. வேடன் தன்னை உணர்ந்தான். புறாவின் தியாகத்தை்ப் போற்றினான். கூண்டுப்புறாவைத் திறந்து விட்டதும் தன்இணையைப் பிரிந்து வாழ விரும்பாத பெண்புறா அதை தீயில் பாய்ந்து உயிர்விட்டது. வேடன் தன் குலத்தொழிலைக் கைவிட்டு கானகத்தில் கடுந்தவம் புரிந்து புலனடக்கம் பெற்றான். தனக்கு ஞானம் தந்த ஆண்புறாவை தன் குருவாகக் வரித்து குருதட்சணையாக தன் உயிரைத் தரும் பொருட்டு காட்டுத்தீயில் பாய்ந்து உயிர் துறந்தான்.

 

வாழ்க்கையில் நாம் படும் இன்னல்களும், துயரங்களும் தான் நம்மை ஞாத்தை நோக்கி உயர வைக்கிறது. உயிர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கே இப்பூவுலகில் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு கதைதான். அது உன் அகத்தில் ஞான விளக்கின் சுடரைத் தூண்டிவிடும் என்பதனாலேயே வியாசர் கதை வடிவில் அறத்தை வெளிப்படுத்துகிறார்.

 

ப.மதியழகன்

115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952

Whatsapp: 9384251845

 

Series Navigation“தையல்” இயந்திரம்என்னை நிலைநிறுத்த …