கே. ஜி. அமரதாஸ நினைவுகள்

 

இலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி

                                               முருகபூபதி – அவுஸ்திரேலியா

 

 

ஒரு     தமிழ்ப் பெண்ணை    ஒரு    சிங்களவர்    மணம்    முடித்தால், அல்லது     ஒரு   சிங்களப் பெண்ணை    ஒரு   தமிழர்    மணம்   முடித்தால் தேசிய    ஒருமைப்பாடு   பிறந்துவிடும்   என்பார்கள் சிலர்.  ஆனால், நான் அவ்வாறு    சொல்ல    மாட்டேன்.       வேறு    வேறு    இனங்களைச் சேர்ந்தோர்   திருமணம்    செய்து கொண்டால்  பிள்ளைகள்தான்    பிறக்கும். ஒருமைப்பாடு பிறக்காது.”   இவ்வாறு    மிகுந்த    நகைச்சுவையுணர்வுடன் எமக்குச்  சொன்னவர்  – தமிழ் அபிமானியும் தமிழ் எழுத்தாளர்களின் அன்புக்குப் பாத்திரமானவருமான   பௌத்தபிக்கு   பண்டிதர்    வண.எம்.ரத்னவன்ஸ தேரோ.

இவரைப்   போன்றே  தேசிய    ஒருமைப்பாடு     ஒரு வழிப் பாதையல்ல எனக்கருதி   தமிழையும்  தமிழ்    இலக்கியங்களையும்   ஆர்வமுடன் கற்றதுடன்  நில்லாமல்  மகாகவி  பாரதியையும்  சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில்  முன்னின்றவர் கே.ஜி.அமரதாஸ.

சிங்களம்   மட்டும்   மசோதா,  அரசு   ஊழியர்கள்    சிங்களம்   கற்று  தேர்ச்சி பெற வேண்டும்,  தமிழ்ப்பாடசாலைகளில்   சிங்களமும்  ஒரு பாடம் – என்ற நிலைமைகளினால்   பெரும்பாலான   தமிழர்கள்    சிங்களத்தையும் பயின்றார்கள்.     தமிழ்    எழுத்தாளர்கள்    சிங்கள  –   கலை    இலக்கியங்களை பயின்று     அவற்றைத் தமிழுக்குத் தந்தனர்.  திரைப்பட   நாடக முயற்சிகளை    விமர்சித்து     தமிழில்     எழுதினர்.   இந்த   உன்னதமான   பண்பு   சிங்கள    மக்களிடமோ    இலக்கியக்காரர்களிடமோ   இருக்கவில்லை.         இது    மிகவும்    வருந்தத்தக்கது.     இந்நிலைமை மாற வேண்டும்  அல்லது   மாற்றவேண்டும் என்றவர்  ( 1970 களில்) கே.ஜி. அமரதாஸ.

இந்தப் போதனையுடன்    நின்றுவிடாமல்    தானும்   மாறியவர். செயல்பட்டவர்.    பழகுவதற்கு      அற்புதமான     மனிதர்.     அவர்    தமிழில் கதைத்தால்     எங்கள்    குழந்தைகளின்    மழலைத்   தமிழை   உணர்வோம்.    தமிழ்    பேச்சில்     சொற்பிழையுண்டா    எனக் கேட்டுத்   தெரிந்து திருத்திக் கொள்ளும்    பண்பும்    மிக்கவர்.    நேசிக்கத்    தகுந்த  நட்புள்ளம் கொண்டவர்.

1957   இல்    இலக்கிய   உலகிற்கு    பிரவேசித்த   அவர்    தேசிய இனப்பிரச்சினையின்    கூர்மையைப்    படிப்படியாகவே    புரிந்து கொண்டார். ஆயிரம்    ஆயிரமாண்டு     கால    தமிழ் – சிங்கள     உறவு     அரசியல் காரணங்களினால் சிதைந்து விடக்கூடாது.  நாம்தான்     ஒருமைப்பாட்டை பேணமுடியும்  இதனை  ஒவ்வொரு இலக்கியவாதியும் உணரவேண்டும்  என்றும்  சொல்வார்.

பல    தமிழ்     இலக்கியப் படைப்புகளை   மொழி    பெயர்த்து     சிங்களப் பத்திரிகைகளின்     மூலம்    சிங்கள     வாசகர்களுக்கு    அறிமுகப்படுத்திய அமரதாஸ,   கலாச்சார திணைக்களத்தில்     பணிபுரியத் தொடங்கியதும்    பல தமிழ்   கலை  –  இலக்கியவாதிகள்  அவருக்கு நண்பரானார்கள்.  நண்பர்கள்    பிறப்பதில்லை.     உருவாக்கப்படுகிறார்கள்    என்பதற்கு அமரதாஸவுக்கு   கிட்டிய  நண்பர்கள்  சான்று.

பேராசிரியர்  கைலாசபதியின்    திடீர் மறைவு   அமரதாஸவையும்   கலங்க   வைத்தது.     கைலாசபதிக்கு     விடை கொடுக்குமாற்    போன்று தமிழில்    ஒரு கவிதை    எழுதினார்.     அதற்கு அவர்   இட்ட தலைப்பு.

ஆயுபோவன் சகோதரரே

இமயமலைச்    சாரலிலே      கைலாசம் எனப்படும்

சிகரமொன்று     இருக்கிறது    என்று    நான் நூல்களிலே

வாசித்திருக்கிறேன்.

அழகுடனே     கம்பீரம்    தோற்றும்    அந்த    சிகரம்

எல்லாம்     வல்ல    ஈசுவரனின்     வாசமென்று அறிந்தேன்

ஆனால்    இவ்வாழ்விலே     என் கண்ணால்    அப்புதுமையை

இன்னும் காணவேயில்லை

குமரிமுனைக்கு    அப்பால்   எமது    புனித   நாட்டிலே

தமிழிலக்கிய   இமயத்தில்   நாற்பத்தொன்பது    ஆண்டுகளாக

ஒரு    கைலாசம்    இருந்தது    யாவருமறிந்த உண்மையே.

தமிழிலக்கியத்திற்கு  மட்டுமன்றி    நாட்டிலெல்லாம்  கலைத்துறைகளிலும்

இருளகற்றிய  மணிவிளக்குப் போன்று    நாடு    முழுவதையும்

ஒளி  வீசிக் கொண்டு   நின்ற  எமதன்புக்   கைலாசம்

திடீரெனத்   தாக்கிய   கடும்  மின்னலாலே  சாய்ந்து  விழுந்ததை  நினைத்து

பெரும்    துயரமடைகின்றேன்.

பூவுலகத்துக்கிரண்டு  கைலாசங்கள் எதற்கு

கைலாசத்துப்  பதியாய்   என்போன்ற மானிடர்

என் பெயரை    தோற்கடித்து   வாழ்கிறது    பொருத்தமல்ல.

எல்லாம் வல்ல    ஈசுவரனுக்கு   திடீரென்று    இக் கற்பனை

வந்ததனால்   இச்செயலோ?

நேசமிக்க     கைலாசா !    எதிர்பாரா    நேரத்தில்  எங்களை விட்டேன்    போனாய்?

ஆனால்    ஒன்று  கூறுகின்றேன்.

எங்கு    நீ   சென்றாலும்   கைலாச (அதி)பதிக்கண்மையில்

போகவேண்டாம் – நீ

எமதருமை   நாடான   சிறிலங்கா   தீவினிலே

கலை    இலக்கியம்    பிரகாசிக்க   ஆயிரம் பிறவிகள் எடுத்து

பணியாற்றும் – நண்பரே    அடுத்த   முறை    சந்திக்கும் வரை

என்    மனமார்ந்த    வணக்கம்     ஆயுபோவன் சகோதரரே!

வீரசேகரி   மூலம் – கைலாசபதிக்கு   1982    இல்   இவ்விதம்   தனது   அஞ்சலிக்   கவிதையால்   விடை கொடுத்த   அமரதாஸவும்    எம்மிடமிருந்து விடைபெற்றார் .

தமிழ் – சிங்கள    மொழிகளை    பரஸ்பரம்     இரண்டு     இனங்களும்    கற்பதில் தவறுமில்லை.  சிரமமும்  இல்லை.  இம் மொழிகளை   கற்கமுடியாது, கற்கமாட்டோம்  என  பிடிவாதமாக வாழ்ந்தவர்கள் கூட  இன்று அந்நிய    நாடுகளில்   தமது   தேவை   கருதி   பிரெஞ்சு  – இத்தாலி, நோர்வேஜியன் – டொச் – டேனீஷ்    மொழிகளை பயில்கின்றனர்.

அறிஞர்   கார்ல்மார்க்ஸ் 7 மொழிகள்   தெரிந்தவர்.  பயின்றவர்    என்பார்கள். எனவே மொழிகள் இனங்களுக்கு     எந்தத் தீங்கையும்     இழைக்கவில்லை. மொழியைத்    திணித்து    அரசியல்    ஆதாயம்    தேடியவர்களே இனங்களுக்குத் தீமை  செய்தனர்.

இனவாத    அரசியல்தான்     தமிழ்மக்களை     தனிநாடு கோரும்     நிலைக்கு    ஆளாக்கியது     என்பதையும்     அவர்     ஏற்றுக் கொண்டிருந்தார்.     எனினும்     இதனை    தமது     எழுத்துக்களாலும் செயல்களினாலும்     பகிரங்கமாக     கண்டித்து     போராடும்   Activist ஆக அவர்    மாறவில்லை.

தன்னை    இலக்கியவாதியாகப்    பிரகடனப்படுத்தி    வாழ்ந்த    அமரதாஸ, இலக்கிய    ரீதியில்தான்    இனங்களின்    அபிலாஷைகளுக்கு    குரல் கொடுக்க முடியும்    என   எல்லை    வகுத்துக் கொண்டவர்.

கொழும்பில்   அவரைச் சந்திக்கும்    போதெல்லாம்    கருத்துப்  பரிமாறினோம். அவரது     மொழிபெயர்ப்புக்     கட்டுரைகளை    ஒப்பு நோக்கும்     சிரமங்களையும்    மகிழ்ச்சியுடன்     சுமந்தேன்.    எனக்குப் பல     சிங்கள    கலை-  இலக்கியவாதிகளையும்      பத்திரிகையாளர்களையும் அறிமுகப்படுத்தியவரும்     இவர்தான்.

அரசாங்கம்     பொருட்களின்    விலையை     உயர்த்தும்     பொழுது    நாட்டில்     வாழும்     அனைத்து     மக்களுக்கும்     பொதுவாக செயல்படுகின்றது.      குறிப்பாக    கோதுமை  மாவு  –   பாண்  –  அரிசி –  சீனி – எரிபொருள்  –  சிகரெட்  –   மதுபானம்    முதலானவற்றின்     விலைகள் அடிக்கடி    உயரும்.     இதுவிடயமாக     இனரீதியாகச்     சிந்திக்காத    அரசாங்கம்   –    கல்வி  –  வேலைவாய்ப்பு  –   அரசு   உத்தியோக  பதவியுயர்வு என்று     வரும் பொழுது    மாத்திரம்    பாரபட்சம்    காட்டி   தமிழ்    மக்களை துன்பப் படுத்துகின்றதே    என்ற   அங்கலாய்ப்பும்    அமரதாஸவுக்கு    இருந்தது.

யாழ்ப்பாணத்தில்    அவரது    எழுத்தாள     நண்பர்     ஒருவரின்    மகன்  ஷெல் தாக்குதலினால்    காயமடைந்து விட்டார்.     எனக்கு     கிட்டாத     செய்தி    இது.     அமரதாஸவுக்குத்    தெரிந்திருக்கிறது.     அவர்    ஊண்  –   உறக்கமின்றி தவித்ததாக    அவரின்     குடும்பத்தினர்    கூறினர்.    அவர்களுக்கும்    யார் அந்த    எழுத்தாளர்    என்பது    தெரியாது.    தெஹிவளையில்     அமரதாஸவின் மரணச்சடங்கின்போதுதான்     அவரின்    புதல்வர்   அபய அமரதாஸ  இந்தத்தகவலைச்சொன்னார்.

அமரதாஸவுக்கு     அஞ்சலிக்குறிப்பு   வீரகேசரியில்     எழுதியசமயம்   அந்திமகாலத்தில்    அமரதாஸவின்    இந்தத்துயரம்   பற்றியும் குறிப்பிட்டேன்.     அப்பொழுதும்     யார்     அந்த     எழுத்தாளர்   என்பது தெரியாது.

ஓரிருவாரங்களில்    எழுத்தாள     நண்பர்  என்.கே.  ரகுநாதன்   என்னைத் தேடி வந்து அமரதாஸவின்    வீட்டு   முகவரி    கேட்டு   கலங்கினார்.     அப்பொழுதுதான் ஷெல்   தாக்குதலினால்    காயமுற்றது    ரகுநாதனின்   மகன்   என்பதை அறிந்து கொண்டேன்.

ரகுநாதன் அமரதாஸவின்    வீடு தேடிச் சென்று    தனது    ஆழ்ந்த அனுதாபங்களைத்     தெரிவித்துக் கொண்டார்.

ரகுநாதனின்    படைப்புக்களையும்    அமரதாஸ   மொழிபெயர்த்தவர். இப்படியாக    தனது    பணிகளின்   மூலம்    பல    நண்பர்களை    சம்பாதித்தவர்    அமரதாஸ.

அன்று –  மறக்கமுடியாத நாள்.

அமரதாஸவின்   பூ தவுடல்    அவரது    இல்லத்தில்   வைக்கப்பட்டிருக்கிறது.     மக்கள்    சாரிசாரியாக    வந்து    அஞ்சலி செலுத்துகின்றனர்.      நானும்     நண்பர்கள்     பிரேம்ஜி ஞானசுந்தரன் –   மாணிக்கவாசகர் – தெளிவத்தை ஜோசப்  –  ரங்கநாதன்  –   ராஜஸ்ரீகாந்தன்   முதலானோர்    அஞ்சலி    செலுத்திவிட்டு     வெளியே    வருகின்றோம்.

கதிரைகள்     வரிசையாகக்    காத்திருக்கின்றன.    அமர்கின்றோம்.   ஒரு மூலையில்     சிறிய     மேசை.    மரண    வீட்டிற்கு    வந்தவர்கள்    பொழுதைக் கழிப்பதற்காக    அதில்   பல    பத்திரிகைகள்.    ஆங்கில    சிங்கள தினசரிகளுடன்    வீரகேசரி –  தினகரன்  –   தினபதி.   வியப்பால்    என்  கண்கள் விரிந்திருக்கலாம்.     அமரதாஸவின்    புதல்வரிடம்    வியப்பைப் பகிர்ந்தேன்.

“அப்பா   சகல    பத்திரிகைகளும்    வாங்குவார்.    ஒழுங்காக     படிப்பார்.    நல்ல விஷயங்களை     எமக்குச்    சொல்வார்.    அப்பா    எம்மையும்    தமிழ் படிக்குமாறு    வற்புறுத்துவார்.”

மும்மொழி  வாசகன்  அமரதாஸ  போன்று  எம்மில்  எத்தனை பேர்?

சிங்களத்    தீவினுக்கோர்    பாலம்    அமைப்போம்   என்று   பாரதி பாடியிருக்கக் கூடாது  .   பாரதிக்கு    இலங்கையைப் பற்றித்    தெரியாது.  இது விடயத்தில்    பாரதி   தீர்க்க தரிசனமற்றவன்.    என்றெல்லாம்    வாதம் புரிபவர்கள்,  இக்காலத்தில்   பாரதியை   தேசியவெறியன்  என்றும் பட்டிமன்றம்    வைத்து நிரூபிக்க     முயலுகின்றனர்.  பாரதி    தமிழர்க்கு    மாத்திரம்     சொந்தமான   சிந்தனையாளர்  அல்ல. பாரதியின்    கருத்துக்கள்    அனைத்து     இன    மக்களுக்கும்    பொதுவானது. அதனால்தான்     அவன்    சர்வதேசியவாதியாக    மிளிர்கின்றான்.

பாரதி   சிங்கள    மக்களையும்     சிந்திக்கத்    தூண்டியவர்.     எனவே    சிங்கள மக்களுக்கும்     பாரதியை     அறிமுகப்படுத்த வேண்டும்    என்று    அமரதாஸ அவாவுற்றார்.     அவரின்    விருப்பம்    பாரதி    நூற்றாண்டில் நிறைவெய்தியது.

நண்பர்   எஸ்.எம்.ஹனிபா   எழுதிய    மகாகவி   பாரதி நூலை சிங்களத்தில்     மொழி பெயர்த்தவர்   அமரதாஸ.    கண்டி  கல்ஹின்னை தமிழ்    மன்றம்     இதனை    வெளியிட்டது.

மற்றுமொரு நூல்   பாரதி  பத்ய.   இந்நூலில்    பாரத மாதா   திருப்பள்ளி எழுச்சி,எங்கள் நாடு ,சுதந்திர  தேவியின்  துதி , சுதந்திர தாகம் , பாரத சமுதாயம் ,  சுதந்திரப்பள்ளு,  போகின்ற பாரதமும்  வருகின்ற பாரதமும் ,புதிய ருஷ்யா, விடுதலை   முதலான     பாடல்களை  அமரதாஸ சிங்களத்தில்     மொழி    பெயர்த்தார்.  பாரதி    நூற்றாண்டை    முன்னிட்டு     இலங்கை     முற்போக்கு    எழுத்தாளர் சங்கம்     வெளியிட்ட    இந்த   அரிய   நூலில் – திரைப்படக் கூட்டுத்தாபனத்தில்     பணியாற்றிய    நண்பர்    ரத்னநாணயக்காரவும்    மேலும்    சில    பாரதி    பாடல்களை     மொழி   பெயர்த்திருந்தார்.

மல்லிகை   ஆசிரியர்    டொமினிக் ஜீவா   சிங்கள    வாசகர்களுக்கு அறிமுகமாவதற்கும்     அமரதாஸவே     காரணம்.     ஏற்கனவே    ஜீவாவின்   சில    சிறுகதைகள்    வேறு    சில  சிங்கள   எழுத்தாளர்களின் முயற்சியினால்   (குணசேன விதான  உட்பட)    சிங்களத்தில்    மொழி பெயர்க்கப்பட்ட    போதிலும் – சிங்கள   பிரபல    தினசரி   திவயின    மூலம் ஜீவாவின்    பரபரப்பான    பேட்டி     ஒன்று    வெளியாக    வழி வகுத்தவர் அமரதாஸ.

1980 ஆம்    ஆண்டு    காலப்பகுதியில்    அமரதாஸ   என்னுடன் தொலைபேசியில்     தொடர்புகொண்டு    மல்லிகை ஜீவா    கொழும்பு வரும் திகதியை   உறுதிசெய்துகொண்டு     திவயின    பத்திரிகையின்    நிருபரையும் அழைத்து     ஒரு    சந்திப்பை    கொழும்பு    கலாபவனத்தில்   ஒழுங்குசெய்தார். குறிப்பிட்ட   சிங்கள   நாளேட்டின்   நிருபர் கேட்ட    கேள்விகளையும்   ஜீவா அதற்கு    அளித்த     பதில்களையும்    நானும்    அமரதாஸவும் இரண்டுபேருக்கும்    மொழிபெயர்த்தோம்.     அந்த    நேர்காணல்    சிறப்பாக செம்மைப்படுத்தப்பட்டு     திவயின    இதழில்    வெளியானது.

” சிங்கள   கலை  –   இலக்கியங்களை    தமிழ்     வாசகர்கள்    தெரிந்து கொண்டளவுக்கு    தமிழ்    கலை    இலக்கியங்களை     சிங்கள   வாசகர்கள் அறியவில்லை .    அல்லது    அறிந்து    கொள்வதற்கான    ஆர்வம் அவர்களுக்கு    இல்லை.     அவர்களுக்கு     நன்கு    தெரிந்த     தமிழ்ப் பெயர்கள் அமிர்தலிங்கம் –  குட்டிமணி     மாத்திரம்தான்.” என்று     மல்லிகை ஜீவா சொன்ன    கருத்துக்கு     முக்கியத்துவம்     அளித்து     குறிப்பிட்ட நேர்காணல்    வெளியானது.  அதனை   படித்த    பல    சிங்கள    எழுத்தாளர்களும்     சிங்கள அரசியல்வாதிகளும்      ஜீவாவையும்     அவரது    மல்லிகையையும் கவனத்தில்     எடுத்துக்கொண்டனர்.

அவர்களில்    பிரபல    சிங்கள    இலக்கிய    மேதை   மார்ட்டின் விக்கிரமசிங்காவின்     மூத்த    மகளும் –     இலங்கையில்    அமைச்சராகவும் அதற்கு    முன்னர்    இராஜாங்க     அமைச்சின்    செயலாளராகவும் பதவியிலிருந்த     சரத்    அமுனுகமவும்    குறிப்பிடத்தகுந்தவர்கள். மல்லிகைக்காக    இவர்களையும்    வேறு     சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றேன்.

எனக்கு    இவர்களை      அமரதாஸ    அறிமுகப்படுத்தியிருந்தார்.    அவர் காலாசாரத்திணைக்களத்தின்    செயலாளராக    பதவியிலிருந்த காலப்பகுதியில்     (1976 இல்)     அத்தனைகல்லை     தேர்தல்     தொகுதியில் பத்தலகெதர      ஆசிரியப்பயிற்சிக்    கலாசாலையில்    அந்த    ஆண்டிற்கான தேசிய     சாகித்திய    விழாவும்    விருது    வழங்கும்    நிகழ்வும்   நடைபெற்றது.    அதில்    அன்றைய     இலங்கையின்    முதலாவது ஜனாதிபதி     வில்லியம்    கொப்பல்லாவ   பிரதம    அதிதியாக கலந்துகொண்டு     தமிழ் – சிங்கள    படைப்பாளிகளுக்கு     சாகித்திய விருதுகளை    வழங்கினார்.

அன்றையதினம்    தமிழில்    எனக்கும்     மற்றும்      எழுத்தாளர்கள்    சாந்தன் –  செங்கை ஆழியான்  –   ஆத்மஜோதி    முத்தையா,  –  தமிழருவி   சண்முகசுந்தரம்    ( முன்னாள்    மகாஜனா   கல்லூரி   அதிபர்) ஆகியோருக்கும்    பரிசுப்பணமும்     சான்றிதழ்களும்    வழங்கப்படவிருந்தது.  செங்கை ஆழியான்   அன்றைய   நிகழ்வில்   கலந்துகொள்ளவில்லை. அவர்    தவிர்ந்த    ஏனைய    நால்வரும்    கலந்துகொண்டோம்.    அன்று எமக்கு    பரிசுப்பணத்திற்கான    காசோலையே    வழங்கப்பட்டது.  திணைக்களத்தின்    செயலாளர்    அமரதாஸ    எம்மை    தனியே அழைத்து    சான்றிதழ்கள்    தமிழில்    அச்சாகவில்லை.    அதற்காக வருந்துவதாகச்சொன்னார்.    தமிழில்    அச்சிடாத     சான்றிதழ்களை உங்களுக்கு     தருவதற்கு     எனது    மனம்     இடம்    தரவில்லை.    அதற்காக வருந்துகின்றேன் –   என்றார்.

பின்னர்     பல    மாதங்கள்     கழித்து    எனது    சான்றிதழை    அவரிடமிருந்து அவரது    அலுவலகத்தில்    பெற்றுக்கொண்டேன்.     குறிப்பிட்ட    சிங்கள மொழிச்சான்றிதழின்    கீழே    அவரே   தமிழில்    தமது    கையெழுத்தில் எழுதிய    சான்றிதழை    வைத்திருக்கின்றேன்.  மொழிபெயர்ப்பாளர்கள் –    தமிழ்தட்டச்சு எழுத்தர்கள்    கலாசார திணைக்களத்தில்    இல்லாத     காலப்பகுதியில்    அமரதாஸவே அந்தப்பணிகளையும்    மேற்கொண்டார்.

இன்றைய     காலப்பகுதியில்    இலங்கையில்     இரண்டு   மொழிக்கொள்கை    பற்றி    பரவலாகப்பேசப்படுகிறது.  ஆனால், 1970 -77    காலப்பகுதியில்      தனிமனிதனாக    இயங்கி  தன்னால் முடிந்தவரையில்     இனநல்லிணக்கத்திற்காக     பாடுபட்டவர் .    அமரதாஸ    அமைதியான    மனிதர் –    நிதானமாகச்     செயல்பட்டவர். ஆரவாரங்களின்றி      ஆழமாகக்    கற்றார்.     அன்பால்     அரவணைத்தார். எம்மால்     நேசிக்கப்பட்டார்.   இந்தப்பத்திக்காக  அவரது ஒளிப்படத்தை     தேடினேன்.     கிடைக்கவில்லை.     தமிழ்     விக்கிபீடியாவிலும்     பார்த்தேன்.    அதில்  அவர் பற்றி     குறிப்புகள்    மாத்திரமே     இருந்தன.

தற்பொழுது, கைலாசபதி முன்னர் ஆசிரியராக பணியாற்றிய தினகரன் பத்திரிகையை வெளியிடும் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் அமரர் அமரதாஸாவின் புதல்வர் அமர அமரதாஸ பொதுமுகாமையாளராக பணியாற்றுகிறார்.

அங்கு தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் எனது நீண்டகால நண்பருமான எம். ஏ.எம். நிலாம் எனக்கு அமரதாஸவின் ஒளிப்படத்தை பெற்றேன்.

எனது இந்த நினைவுப்பதிகையை அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சட்டத்தரணி ( திருமதி) நிவேதனா அச்சுதன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

letchumananm@gmail.com

—00—

 

Series Navigationமருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்உள்ளொளி விளக்கு !