கை கூட வேண்டும் அன்பு நடமாடும் கலைக் கூடம்

     

     எஸ். ஜெயஸ்ரீ

        சமீபத்தில் பாவண்ணனின் ஒரு சிறுகதை படித்தேன். கிணறு என்ற தலைப்பிட்டு எழுதப்பட்டது.  ஒரு தெருக்கூத்தில் பாடப்பட்ட வரி “ பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில் நிறைகுட நீர் எடுத்துத் திரும்பும் பெண்டிரை….” இந்த வரிகளை மனதில் ஏற்றிக் கொண்டு கதை சொல்லி அந்த வரிகளின் உள்ளே ஊடாடியிருக்கும் மாரப்பன் கதையை தெரிந்து கொள்ளக் கிளம்புகிறான். அந்தக் கதையைத் தெரிந்து கொள்கிறான்.

சின்ன ஊரான அந்த வளவனூரில் பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த கதை இது. ஒரு கீழ்ச்சாதிக்காரன் அவன் சோழ நிலங்களைக் காவல் காப்பவன். ராஜா வீட்டுப் பெண்ணைக் கண்டு ஆசைப்படுகிறான். அவளைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்தான். அதைத் தெரிந்து கொண்ட ராஜா படைகள் சூழ வந்து தங்கள் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிரித்து அழைத்துச் செல்கிறான். மாரப்பனையும், அவனுக்குச் சாதகமாகப் பேசுபவர்களையும் அடிக்கிறான். அதன் பிறகு, மாரப்பனுக்குத் தண்டனை அறிவிக்கப்படுகிறது. அவனுக்கு ஓர் இடம் சுட்டிக்காட்டப்பட்டு அந்த இடத்தில் தனியொருவனாக ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்றும், யாரும் அவனுக்குப் பச்சைத் திணீர் கூடக் கொடுக்கக் கூடாது என்றும் ஆணையிடுகிறான். மாரப்பன், கிணறு தோண்டத் தோண்ட, சோர்ந்து, தண்ணீர் கூட இல்லாமல், தன் ரத்தத்தையே குடித்து, ஒரு கட்டத்தில் சோர்ந்து போகிறான். கிணறு தோண்டுவதற்காகத் தான் வைத்திருக்கும் கடப்பாறையை வானை நோக்கி எறிந்து. அதைத் தன் மார்பில் தாங்கி உயிர் விடுகிறான்.

          சமீபத்தில் படித்த ஒரு நாவல், இமையத்தின் “ செல்லாத பணம் “.

இதில் ரேவதி சாதியில் உயர்ந்தவள். அவளைப் பார்த்ததிலிருந்து என்னவோ பித்துப் பிடித்தவன் போல் அவளையே சுற்றிச் சுற்றி வருகிறான் ஆட்டோ ஓட்டும்.ரவி. அவளுக்கு அவன் மேல் இரக்கம் பிறக்கிறது. அவனத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். இல்லாவிட்டால் தான் உயிரை விட்டு விடுவதாகப் பயமுறுத்துகிறாள். எனவே, அவள் பெற்றோர் அவர்களே அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். தங்கள் மகள் இறந்து விடக் கூடாதே என்னும் ஒரே காரணத்துக்காகவே அந்தத் திருமணத்தை செய்து வைக்கிறார்கள். அதன் பிறகு, அந்தப் பெண்ணிடம் அவளுடைய அப்பாவோ, அண்ணனோ பேசுவதேயில்லை. அம்மா மட்டும் அவளோடு தொடர்பு வைத்திருக்கிறாள். ஆனால், அவளும் உள்ளார்ந்த அன்போடு நடந்து கொள்வதில்லை. ஆட்டோக் காரன் பொண்டாட்டி என்றே அவளை வார்த்தைக்கு வார்த்தை விளிக்கப்படுகிறாள். அவள் வாழ்க்கை இரண்டு குழந்தைகளோடு நரகமாகிறது. ஏதோ ஒரு நாள், கணவன் மனைவி  வாய்ச் சண்டையில், அவன் செத்தா சாவேன் என்று சொல்லி விடுகிறான். அவளும் தன் மேல் தீ வைத்துக் கொள்கிறாள். நெருப்புக் காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறாள். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறாள்.

இந்த நாவலில், அவளிடம் அது வரை பேசாத அண்ணனும், அப்பாவும் மருத்துவமனிக்கு அலைகிறார்கள். அப்பா, கட்டுக் கட்டாக பணம் வைத்துக் கொண்டு மருத்துவமனைஅயில் தன் மகளைக் காப்பாற்றும்படி மன்றாடுகிறார். ஆனால் அதை யாரும் தொடக் கூட இல்லை. இவர்கள் இப்படி அல்லாடும்போது, ரேவதியின் கணவன் ரவி சொல்கிறான். ”இப்போ இந்தப் பணத்த வெச்சுட்டு அலயறீங்களே…அப்பவே குடுத்திருந்தா நானும் கடன அடச்சிட்டு உங்க பொண்ண நிம்மதியா வச்சிருந்திருப்பேன்…நீங்க அவள திரும்பிக்கூடப் பாக்காம, ஆட்டோக்காரன் பொண்டாட்டினு வாய்க்கு வாய் சொல்லிட்டு, என்னயும் மதிக்காம இருந்தீங்க..அவ..இப்பத்தானா செத்தா…..நீங்க பண்ண அலட்சியத்துல அவ எப்பயோ செத்துட்டா” என்று சொல்வான்.

இந்த நாவலில் ரேவதியின் உயிரிழப்பும், கிணறு கதையில் சொன்ன மாரப்பனின் உயிரிழப்பும் தானாக நிகழவில்லை. இரண்டிலுமே கொல்லப்படுகிறார்கள். நேரடியாகக் கொல்லப்படவில்லை. மேல் சாதி, கீழ் சாதி என்ற பிரிவினைகள் ஒரு மனித உயிரையே எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வனமத்தை ஊட்டுகின்றன.

கிராமங்களில் இன்றும் கிராமத்துத் தேவதைகளாகவும், கிராமத்துக் காவல் தெய்வங்கள் என்று போற்றப்படும் வழிபடப்படும் ஈனமுத்து, தாண்டவராயன்,

தூண்டிமுத்து போன்ற ஆண் தெய்வங்களும் இது போன்று வஞ்சகமாகக் கொலையுண்டவர்களாகவோ, சாதிப் பிரிவினையால் நிறைவேறாக் காதலில் தன்னை மாய்த்துக் கொண்டவர்களாகவோ இருக்கும். சமூகவியல் ஆய்வாளரன ஆ.சிவசுப்பிரமணியன், தன்னுடைய பூச்சியம்மன் வில்லுப்பாட்டு என்ற சிறிய நூலில், ஆரிச்சன், சப்பாணி வீரன், ஈனமுத்து, தாண்டவராயன், காத்தவராயன், தூண்டிமுத்து என பல கதைகளைச் சொல்கிறார். இந்தக் கதைகள் நூற்றாண்டு கடந்தவை.

காலங்கள் மாற மாற நம்மிடையே அறிவியல் வளர்ந்திருக்கிறது; நாகரீகம் வளர்ந்திருக்கிறது. வசதிகள், வாய்ப்புகள் எல்லாம் மாறியிருக்கின்றன. ஆனால், காலம் காலமாக மாறாமல் இருப்பது இந்த சாதி, மதப் பிரிவினைகளும்தான். சமூகத்தின் ஒரு பகுதியினர் இதில் கூட மாறியிருக்கின்றனர். கலப்புச் சாதித் திருமணம் மட்டுமன்றி, கலப்பு மதத் திருமணங்கள் கூட நடந்திருக்கின்றன. என் நண்பரொருவர் இந்து மதத்தில் உயர் சாதி என்று போற்றப்படும் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது கிறிஸ்தவ மததைச் சேர்ந்த பெண் ஒருவரை. இருவரும் அவரவருக்குப் பிடித்த தெய்வங்களை வணங்குவார்கள். இருவரும்  மற்றவர் வழிஆட்டுத் தலங்களூக்குச் செல்வார்கள். வருடம் முழுக்க எல்லாப் பண்டிகைகளும் அவர்கள் வீட்டில் கொண்டாடப்படும். மகனைப் பற்றிக் கேட்டால், அவன் வளர்ந்த பிறகு அவனுக்கு எது பிடிக்கிறதோ அதைப் பின்பற்றுவான் எனத் தெளிவாகச் சொல்வார்கள். அவர்கள் வாழ்க்கை சாதாரணமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட கலப்பு மணம் செய்து கொண்டவர்களை, வீட்டார்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவர்கள் பேசாமல் இருப்பது, பார்க்காமல் இருப்பது என்று இருப்பார்கள். பேரக் குழந்தை பிறந்தவுடன் அதுவும் சரியாகி விடும். பாசத்தோடு மீண்டும் அந்தக் குடும்பங்கள் இணையும்.

இந்த கௌரவக் கொலைகள், சாதி ஆணவப் படுகொலைகள் என்ற சொல்லாடல்களெல்லாம் மீண்டும் தலைதூக்கி வருவது நாம் இவ்வளவு முன்னேறி விட்டோம் என்பதன் மீது விழும் அடியோ என வேதனைப்படுத்துகிறது. சாதிகள் இல்லையடி பாப்பா’ குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் என்று பாடிய பாரதியின் வரிகள் சுதந்திரம் கிடைத்து முக்கால் நூற்றாண்டு ஆன பிறகும் கூட அர்த்தமற்றதாகி விட்டதா? உயர்வான கருத்துகளைக் கற்றுக் கொடுத்த பெரியோர்களின் வார்த்தைகளும், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டியாக இருக்கும் நம் இதிகாச புராணங்களும் நமக்கு எதுவுமே கற்றுத் தரவில்லையா? நம் பண்பாட்டுக்கூறுகளின் வளர்ச்சி பின்நோக்கிச் செல்கிறதா? என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.

தங்களை விடக் கீழ்ச் சாதியைச் சேர்ந்தவனைத் திருமணம் செய்து கொண்டால், நடுத்தெருவில் கொல்வது, நம்ப வைத்து வரவழைத்துக் கொல்வது என கடந்த பத்தாண்டுகளில் எத்தனை எத்தனை நடந்து விட்டன. தன் உயிரை மாய்த்துக் கொள்ளவே ஒருவருக்கு உரிமை இல்லாதபோது, அடுத்த உயிரை, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் கொல்லச் செய்வது எது என்ற உணர்வு தோன்றும்போது மனம் கொள்ளும் வேதனை கொஞ்சமன்று.

மேலே சொன்ன கதைகளின் மாந்தர்கள் போலவே உடுமலை சங்கர் கௌச்லயாவின் பெற்றோர் அனுப்பிய கைக்கூலிகளாலேயே கொல்லப்பட்டிருக்கிறார். கௌசல்யாவும் கொல்லப் பட்டிருப்பாள். ஏதோ, மயிரிழையில் தப்பித்திருக்கிறாள். தாங்கள் சீராட்டிப் பாராட்டி வளர்த்த குழந்தையைக் கொல்ல எப்படித் துணியும் மனம்? எப்படிக் குற்றவுணர்வு கொள்ளாமல் இருக்க முடியும்? நீதிமன்றம் விடுதலை கொடுத்தவுடன் எப்படி அதைக் கொண்டாட முடியும்? மனதின் ஈரம் வற்றி விட்டதா மனிதனுக்கு? அன்பு, காதல் எல்லாம் வெறும் வார்த்தைகளாகி, சாதியும், சாதிப்பற்றும் மட்டும்தான் ஓங்கி நிற்க முடியுமா? காலச் சக்கரம் மீண்டும் திரும்புகிறதா? மாரப்பன், தாண்டவராயன், தூண்டிமுத்து வரிசையில் இப்போது உடுமலை சங்கரும் வைக்கப்படும்.

ஆனால், பெண்கள் பூச்சியம்மாளும், பூரணவல்லியும், பூச்சியம்மனாகவும், பாப்பாத்தி அம்மனாகவும் ஆனார்கள் முன் நூற்றாண்டுப் பெண்கள்.தெய்வமாய் தொழ வைத்தார்கள். பாரதத்துப் பாஞ்சாலியாகவும், சிலப்பதிகாரக் கண்ணகியாகவும் தங்கள் கணவர்களுக்காக நியாயம் கேட்டார்கள் இதிகாச, புராணங்கள். இப்போதோ , தங்கள் பெற்றோரின் சாதி ஆணவச் செயலை எதிர்த்து நீதி மன்றங்களில் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர ஒரு போராட்டத்தில் இறங்கத் தயாராகும் கௌசல்யாக்கள்!!

ஆண்களும், பெண்களும் இப்படித்தான் சாதி வெறியில் முகிழ்த்த தெய்வங்களாக வேண்டுமா? அன்பும், காதலும் சாதி வெறியை மாய்த்து அன்பு நடமாடும் கலைக் கூடமாகாதா இந்த பூமி?

                             —————–

  .       சமீபத்தில் வெளிவந்தது உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு. கொலை செய்யத் தூண்டியவர்களுக்கு விடுதலையும், கொலை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Series Navigationபவர் பாயிண்ட் தொடர்பான தமிழ்ச்சொற்கள்