கொத்துக்கொத்தாய்….

வெடிக்க வெடிக்க
வீழ்ந்தார்கள்

வீழுந்து
துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க
ஓடினார்கள்

கேட்பாரற்றவர்களை
காப்பாற்ற வருபவர்களென்று
காத்திருந்து காத்திருந்து
வெடிக்கிறது வெடிக்கிறது

வெடித்ததே வெடிக்கிறது

குருதியில் சதசதக்க
சதை சகதியில்
கொத்தணிக்குண்டு விதை

விதைக்கயிலேயே அறுவடை
உயிர் உயிராய்
அறுவடைக்குப் பின்னும்
அறுவடை

அந்த கொத்துக்குண்டின் மிச்சம்

தன் கூட்டத்தை இழந்த
ஒரு குழ்ந்தையை
கொன்றுப்போட்டிருகிறது
இன்று.

இருந்தவரை கொன்று
இடம் பிடிக்க

நாளை
விதைத்தவனுக்கா அறுவடை?

எவரும்
வெடிக்க வெடிக்க
விழ வேண்டம்.

போருக்கு பின்
அமைதியில்
சத்தமாய் வெடிக்கும்

இந்தக்
கொத்துக்குண்டின்
கூட்டல் பெருக்கல் கணக்கில்

குழந்தைகள்கூட
சுழியனாய் சுழிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு.

காலில் பாய்ந்த குண்டு
வெடிப்பதற்குள்
காலை
வெட்டி வீசும் மருத்துவர்கள்

கண்ணெதிரே
காலை இழந்து
காப்பாற்றிக் கொண்டதாய்
கதறும் நெஞ்சம்

கொத்து கொத்தாய்
குண்டடிபடும் குழந்தைகளை
அள்ள
கையிருந்தும்
ஓட
காலில்லாமல்
கதறும் நெஞ்சம்

எல்லாம்
இக்காலதில்தான்

எமக்கு
கையிருந்தும்
காலிருந்தும்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்பங்கு