”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”

 

சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த கருத்துக்களை விளக்கும் பதினான்கு நூல்களைப் இவர்கள் போற்றி வருகின்றனர்.  அவை:

 1. திருவுந்தியார்

 2. திருக்களிற்றுப்படியார்

 3. சிவஞானபோதம்

 4. சிவஞான சித்தியார்

 5. இருபாவிருபஃது

 6. உண்மை விளக்கம்

 7. சிவப்பிரகாசம்

 8. திருவருட்பயன்

 9. வினாவெண்பா

போற்றிப்பஃறொடை

 1. கொடிக்கவி

 2. நெஞ்சுவிடுதூது

 3. உண்மை நெறி விளக்கம்

 4. சங்கற்ப நிராகரணம்

 

என்பனவாம்.

 

திருவெண்ணைநல்லூர் மெய்கண்ட தேவர், சிவஞான போதத்தையும்; அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார், மற்றும் இருபாவிருபஃதையும், திருவதிகை மணவாசங்கடந்தார், உண்மை விளக்கத்தையும், கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார், 1. சிவப்பிரகாசம், 2. திருவருட்பயன், 3. வினாவெண்பா,  4. போற்றிப்பஃறொடை, 5. கொடிக்கவி, 6. நெஞ்சுவிடுதூது, 7. உண்மை நெறி விளக்கம், மற்றும் 8 சங்கற்ப நிராகரணம் ஆகிய எட்டு நூல்களையும் எழுதியவர்கள்.

 

கொற்றவன்குடி உமாபதி சிவத்தைப்பற்றியதே இக்கட்டுரை. கொற்றவன்குடி சிதம்பரம் புகைவண்டி  நிலையத்திற்கு அணித்தாகக் கிழக்கேயுள்ள கொற்றவன்குடித் தோப்பில் குளத்தின் வடகரையில் உள்ளது. எனவே இவர் பெயரில் கொற்றவன்குடி அடை கொடுக்கப்படுகிறது போலும்.  இவரும், அருணந்தி சிவாச்சாரியாரும் தில்லைவாழ் அந்தணர்கள் குடும்பத்திலிருந்த வந்தவர்கள்.  இவர் மெய்கண்ட தேவரது மரபில் நான்காம் ஞானகுரவராவார்.  அம்மரபு வரிசை:

 

மெய்கண்டதேவர்

அருணந்தி சிவம்

மறைஞான சம்பந்தர்

உமாபதி சிவம்.

 

இவர்கள் சந்தாணக்குரவர்கள் எனவழைக்கப்படுகிறார்கள். இவர்களெல்லாரும் சமகாலத்தவரில்லையெனவும் தெரியவரும். முதற்குரவருக்கும் இவருக்கும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு இடைவெளி.  தாம் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தில் பாயிர வரிகள் 26-29ல் தான் இன்னூலை இயற்றிய காலம் சகம் ஆண்டு 1235 என்று குறித்துள்ளார்.  எனவே கி.பி 1313ல் இன்னூல் இயற்றப்பட்டிருக்கிறது எனலாம்.  ஆகவே, ”உமாபதி சிவத்திற்கு எண்பத்தோராண்டுகட்கு முன் கி.பி 1232-ல் மெய்கண்ட தேவர் இருந்தனர் என்பது எவ்வாற்றானும் ஏற்புடைத்தேயாம்”  என்கிறார் பேராசிரியர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார்.

 

உமாபதி சிவம், ‘புரட்சிக்கருத்து’ம் உடையவர்.  பழமையானவை என்று சொல்லப்படும் எல்லா நூல்களும் முற்றிலும் நன்மையானவையல்ல; இன்று தோன்றிய நூல்கள் என்று சொல்லப்படும் எவையும் தீயவையாதலும் இல்லை என்ற கருத்தினை:

 

‘தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று

தோன்றிய நூல் எனும் எவையும் தீதாக’

 

என்று தம் சிவப்பிரகாசத்தில் (பாயிரம் 12ல்) எழுதியுள்ளார்.

 

எட்டு சைவசித்தாந்த நூல்கள் போக, கோயிற்புராணம், திருத்தொண்டர் புராணசாகரம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் ஆகிய நூல்களையும் இயற்றினர் இவர்.  கோயில் புராணம் தில்லைத்தல புராணம் ஆகும். திருத்தொண்ட புராணசாகரம் என்பது சிவனடியார் அறுபத்து மூவர் தொகையடியார் ஒன்பதின்மர் ஆகியோர் வரலாறுகளைச் சுருக்கிப் பறைவது; திருமுறைகண்ட புராணம் என்பது சோழமன்னன் ஒருவன் சமயகுரவர் மூவரும் பாடிய திருப்பதிகங்களைத் திருநாரையூர்ப்பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் துணைகொண்டு தில்லையில் தேடிக்கண்ட வரலாற்றைக்கூறுவது. சேக்கிழார் புராணம் என்பது குலோத்துங்க சோழன் வேண்டிக்கொண்டவாறு பெரிய புராணம் எனவழங்கும் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் அரங்கேற்றிய வரலாற்றை எடுத்துரைப்பது.

 

இவர் தன் ‘நெஞ்சுவிடுதூது’ நூலில் தூதை தன் குருவுக்கு அனுப்புவதாக அமைத்திருக்கிறார். அக்குரு சந்தாணக்குரவர்களில் மூன்றாவது வரும் மறைஞான சம்பந்தர். இவர் சைவ சமயக்குரவர்கள் நால்வரின் ஒருவரான திருஞான சம்பந்தரில்லையெனத்தெரியும். திருஞான சம்பந்தரின் காலம் முற்பட்டது என்பது நம்பியாண்டார் நம்பியின் வரலாற்றை கொற்றவன்குடி சிவம் திருமுறைகண்டபுராணத்தில் எழுதியிருப்பதைப்பார்க்கும்போது தெரியவரும்.  பதினான்கு சைவச்சித்தாந்த நூல்களில் முதலிரண்டின் (திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார்) ஆசிரியர்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

….

 

இக்கட்டுரை என் அடுத்த கட்டுரைக்குத் தோற்றுவாய் என்றெடுக்கப்படவேண்டும். அடுத்த கட்டுரையே மிக அவசியமானது. இக்கட்டுரை திண்ணையில் போடப்பட்டாலே அடுத்தகட்டுரையை அனுப்புவேன். இல்லாவிட்டால் பயனில்லை.

 

(இக்கட்டுரைக்கு ஆதாரம் பேராசிரியரும் போற்றுதலுக்குறிய தமிழறிஞர்களுள் ஒருவருமான உயர்திரு டி.வி.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் 1955ல் வெளியிடப்பட்ட ’தமிழ் இலக்கிய வரலாறு; 13, 14, 15ம் நூற்றாண்டுகள்” என்ற நூலாகும்.  அப்பலகலைக்கழகம் இலக்கிய வரலாற்றுக்காலங்களைப் பிரித்து சில அறிஞர்களிடம் கொடுத்தெழுதச் சொன்னதாகவும், அதில் தனக்கு 13-15 நூற்றாண்டுகள் கொடுக்கப்பட்டனவாகவும் பண்டாரத்தார் முகவுரையில் சொல்கிறார்.)

 

******

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்