கொ பி

கரிசல் நாடன்

வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது 

ட்டுடுக் ட்டுடுக்  என  

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும் 

    முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல 

தரைக்கு முத்தமிட்டு 

விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கும் 

வெற்றிலை குதறிய வாய்களை போல கரிவாயுவை உமிழ்ந்தவாறே 

கனரக வாகனங்கள் இரையத் தொடங்கும் 

   கதைகளில் 

கவிதைகளில் 

திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் 

திண்ணைகள் என 

கொரோனா பேசுபொருளாகி 

கடந்துவந்ததை அசை போட்டு பார்க்க வைக்கும் 

ஆறுகளின் கர்ப்பத்தை அழித்து 

மணல் குருதிகள் அள்ளும்  வேலைகள் மீண்டும் தொடங்கும் 

   திருமண வீடுகளிலும் ,இன்னபிற நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளோடு, மாஸ்க்கும் தரப்படலாம் 

ரெய்ன் கோட்டுகளைப் போல 

கொரோனா கோட்டும் 

கடையின் வாசல்களில் தொங்கலாம் 

   அடுத்தவரின் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவனுக்கு 

“கொரோனா ” எனவும் பட்டப்பெயர் சூட்டலாம் 

கொரானா காலத்துல கூட 

இம்புட்டு வெலை விக்கில 

“இப்போ இம்புட்டு வெலையா ?

என ,ஏதோ ஒரு சந்தையில் 

கிராமியப் பெண்ணின் குரலை  கேட்க நேரிடலாம் 

    ” ஊரு ஒலகத்துல கொரானாவா வந்திருக்கு” 

பொழுதுக்கும் ஊட்டுலியே அடைஞ்சி கிடக்குற 

என , எந்தவொரு வேலைக்கும் செல்லாதவர்களை பார்த்து 

வீட்டுப் பெண்கள் அடுப்படியிலிருந்தவாறே புலம்புவதையும் கேட்கலாம் 

ஆள் நடமாட்டமில்லாத சாலைகளை ,தெருக்களை 

“கொரோனா காலத்து ……களை போல ” 

என உவமைகள் புதியனவாகவும் மாறலாம் 

   சினிமாப் பாடல்களில் “கொரோனா  ” பல்லவியிலோ, சரணத்திலோ கண்டிப்பாக வந்து போகலாம் 

ஊரை அடித்து தன் உலையில் போடுபவனை ,

“கொரோனா வந்து பாடையில போக ” 

என வசை மொழிகள் மாறலாம்

   ” நான் சின்ன வயசா இருக்குறப்போ 

கொரோனா ன்னு ஒரு நோய் வந்து ” 

என இன்றிலிருப்பவர் யாரோ 

தன் பேரக்குழந்தைக்கு கதையாகவும் சொல்லிக் கொண்டிருக்கலாம். 

        இப்படியாக 

கொரோனாக் காலம் என்பது     வலிகளையும் ,சுகங்களையும் தாங்கி               கடந்த காலமாகும்.

                   சுரேஷ்மணியன். M ,A

Series Navigationமறு பிறப்புப.தனஞ்ஜெயன் கவிதைகள்