கோடைமழை

மீனா தேவராஜன்
காத்திருக்கோம் காத்திருக்கோம் உன் வரவுக்கு
பார்த்திருக்கோம் பார்த்திருக்கோம் வானவெளியை
கோடைஇடி முழங்குமா? முழங்குமா? கோடி(புது) மேக
ஆடைகட்டி மழைக்கொழுசொலி கேட்குமா? கேட்குமா?
அடை மழையாய் நீ கொட்டும்போது ஓடை
ஒடப்பெல்லாம் உன்னை அடக்கி வைக்கவில்லையே
கார்கால வெள்ளத்தைக் கருதாமே வீணாக்கிட்டோமே
ஊரெல்லாம் சுத்தி வந்தாலும் உழக்கு தண்ணில்லை
தரையெல்லாம் காய்ந்து புழுதி பூத்துப்போச்சுனு
புழுதி அடங்க பூப்பூவாய்ப் பூந்த கோடைமழையே!

தகிக்கும் வெப்பத்தால் நாங்க வெந்து புழுங்கையிலே
வேக்காடு தணிய வைச்ச குளிர் வான்மழையே
பொட்டுத் தண்ணீர் குடிக்க இல்லாமே தொண்டை காய்ந்திருக்க
பொட்டுப் பொட்டாய் விழுந்து கொட்டிய கோடை மழையே

புலன்கள் கெட்டுப் புவியைச் சூடாக்கி நீரில்லமே
கலங்கித் தவித்து நிற்கையிலே கோடை மழை நீ
எங்க உச்சிகுளிர உள்ளம் குளிரப் பெய்தாய்
வங்கக்கடல் நீரெடுத்து தங்கமழை தந்தாய்!

ஆயிரங்காலாய் நீ மண்ணில் விழுகையில்
ஆயிரங்குதிரை அதிர ஓடிவரும் ஒலி கேட்கும்
அலைஅலையாய் நீர் வழிந்தோடும் சாலையெங்கும்
சலசலக்கும் உன் சலங்கையொலி எங்கும் கேட்கும்
இறக்கை விரிக்கும் பறவைக்குஞ்சுகள்
குதூகுலமாய்க் குட்டிக்குளத்தில் குளித்தெழும்
புத்தம் புது மழை பட்டு, புளகிதம் கொண்ட
மண் புதுமணம் எங்கும் வீசும்!

Series Navigationதண்டிக்க ஒரு கரம் தாலாட்ட மறு கரம்தொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …