சந்திராஷ்டமம்!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 31 in the series 4 நவம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

இன்று அவருக்கு சந்திராஷ்டமம். காலையில் டிவியில் இன்றைய ராசி பலன் நிகழ்ச்சியில் சொன்னதைக் கேட்டார். பூபாலனுக்கு எப்போதிருந்து ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்தது என்பது அவருக்கு ஞாபகமில்லை. ஆனால் அதன்படிதான் அவருடைய வாழ்க்கையில் எல்லாமே நடக்கிறது என்பதில் அவருக்கு ஆழமான நம்பிக்கை வந்து.விட்டது அதிலும் சந்திராஷ்டமம் என்றால் அவ்வளவுதான். அன்று வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சந்திராஷ்டமம் வந்து விடும். என்னதான் கவனமாக இருந்தாலும் மன வருத்தம் தரக்கூடிய நிகழ்ச்சிகள் ஏதாவது நடந்து விடுவதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தார். ஒரு தடவை வண்டி பஞ்சராகி, ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு போக வேண்டி வந்தது. இன்னொரு சமயம் காலில் அசிங்கத்தை மிதித்து விட்டு அவஸ்தை பட்டார். ஒரு முறை தவணை கட்ட வேண்டிய கடைசி நாளன்று அதை மறந்து விட்டு, பிறகு கடைசி நிமிடத்தில் அலையோ அலையென்று அலைந்தார்.

ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமம் என்பது தனக்கு அவஸ்தையைக் கொடுப்பதற்காகவே வருகிறதோ என்று அவருக்குத் தோன்றும். அந்த நாட்களில் புதிதாக எந்த வேலையையும் தொடங்க மாட்டார். ஏன், பேங்கில் பணம் எடுக்கக்கூட போக மாட்டார். அந்த நாட்களில் வீட்டில் ஏதும் பிரச்சினை என்றால்கூட வாயைத் திறக்க மாட்டார். அவருடைய மனைவிக்கே சில சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும், என்ன சொன்னாலும் வாயே திறக்க மாட்டேங்கறாரே? என்று.

இன்று காலையில் ஆபீசுக்கு கிளம்பும் போதே மனைவியிடம் சொல்லி விட்டார், மதியம் சாப்பிட வர மாட்டேன் என்று. வீடும் ஆபீசும் நான்கு கிலோமீட்டருக்குள்தான் என்றாலும், மதியம் சாப்பிட போனால் வழியில் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பயம்தான் காரணம். ஆபீஸ் பக்கத்திலேயே ஹோட்டலும் இருப்பதால் மதிய சாப்பாடு வெளியே சாப்பிடுவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.

ஆபீஸ் லஞ்ச் டைமில் ஒரு மணிக்கு சாப்பிடக் கிளம்பினார். ஹோட்டலில் இன்று சாப்பாடு கூட சுவையாக இல்லாதது போல் இருந்தது. பாயாசத்தில் ஒரு முருங்கைக்காய் துண்டு விழுந்திருந்தது. மற்ற நாளாயிருந்தால் எகிறி குதித்திருப்பார். ஆனால் இன்று எதற்கு வம்பு என்று கொஞ்சம் அடக்கியே வாசித்தார். வேறு பாயாசம் எடுத்து வரச்சொல்லி சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்ததும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். அந்த ஹோட்டலுக்கு எதிரே ரோட்டின் அந்தப் பக்கத்தில் ஒரு கடை இருக்கிறது. அங்குதான் வாழைப்பழம் இருக்கும். ரோட்டைக் கடந்து போய் சாப்பிட வேண்டும். அருகே இன்னொரு கடை ஒயின் ஷாப் பக்கத்தில் இருக்கிறது. ஆனால் வாழைப்பழம் வாங்கக்கூட அந்த கடைக்கு அவர் போவதில்லை. ஒயின் ஷாப்புக்கு போவதாக, தெரிந்தவர்கள் யாராவது நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஒரு காரணம். அதனால் ரோட்டைக் கடந்து எதிர்த்த கடையில்தான் வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம்.

ரோட்டைக் கடக்க சிக்னலுக்காக காத்திருந்தார். அது ஒரு நாற்சந்தி. ஒரே ஒரு ரோட்டைத் தவிர மீதி மூன்றும் இரு வழிச்சாலைகள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் அண்ணா சாலை என்பதால் ரோட்டைக் கடப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும் இப்போது மெட்ரோ ரெயில் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் ரோட்டில் தடுப்பு அமைத்து ஒரு வழிப்பாதையாக மாற்றி, சில சமயம் அனுமதித்து, ஒரே குளறுபடியாக இருப்பதால், வண்டியோட்டிகள் அவ்வளவாக சிக்னலை மதிப்பதில்லை.

போக்குவரத்து காவலர்கள் அங்கே இருந்தாலும், அவர்களுக்கு போக்குவரத்தை ஒழுங்கு பண்ணவே நேரம் சரியாக இருக்கும். அதிலும் விதியை மீறும் வாகனங்கள் அதிகமாக இருப்பதால் எதுவும் செய்ய முடிவதில்லை. சிலர்தான் தனியாளாக வந்து எப்போதாவது மாட்டிக்கொள்வார்கள். இத்தகைய சூழலில் அந்த ரோட்டை கடப்பது கொஞ்சம் அபாயகரமானதுதான். மூன்று நான்கு பேர்களாக கையை காட்டிக் கொண்டே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டியிருக்கும்.

ஒரு வழியாக கூட்டமாக சிலர் வந்ததால் எளிதாக ரோட்டைக் கடந்து கடைக்கு அருகே வந்து விட்டார். சிக்னலின் அருகில்தான் அந்த கடை இருக்கிறது. அவர் கடையை நெருங்கிய போது ஒரு தொழு நோயாளி கடையின் முன்னால் நின்றிருந்தார். அதனால் அவர் அங்கிருந்து நகரும் வரை பூபாலன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றார். ஏனோ அவர்களைப் பார்த்தாலே அவருக்கு ஒரு அருவருப்பு.

அன்று வாழைப்பழமும் சுமாராகவே இருந்தது. இன்று சந்திராஷ்டமம் என்பதால் எல்லாமே இப்படித்தான் நடக்கும் என்று எண்ணிக் கொண்டார். ஐந்து ரூபாய் கொடுத்து வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு விட்டு ரோட்டின் இருபுறமும் பார்த்தார். மறுபடியும் ரோட்டை கடந்து செல்வதற்காக, சிக்னலுக்காக காத்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த அந்த தொழு நோயாளியை கவனிக்கவில்லை.

லஞ்ச் டைம் ஆதலால், ஒரே ஒரு காவலர் மட்டுமே கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். ரோட்டைக் கடக்க சிக்னல் விழுந்து விட்டது. ஆனால் வண்டிகள் எதுவும் நின்றபாடில்லை. சரியான தருணத்திற்காக காத்திருந்தார். அதோ அந்த பஸ் போய்விட்டால், உடனே வேகமாக ஓடி விடலாம். பஸ் போய்விட்டது. வேகமாக காலை எடுத்து வைத்தார். யாரோ அவரைப் பிடித்து இழுத்தார்கள்.

யாரென்று திரும்பிப் பார்த்தால், அந்த தொழு நோயாளிதான் அவருடைய கையை பிடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவருக்கு உயிரே போய்விட்டது. அருவருப்புடன் என்ன என்பது போல் அந்த நோயாளியைப் பார்த்தார். “பயமாக இருக்கிறது. என்னை உங்களோடு கூட்டிக் கொண்டு போங்கள்” என்றார் அவர். மனதிற்குள் சந்திராஷ்டமம் தன் வேலையைக் காட்டி விட்டது என்று பூபாலன் நினைத்தார்.

கையை உதறி விட்டார். “பொறுங்கள். அவசரப்படாதீர்கள்” என்றார் அவரை பார்க்காமலே. “எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது” என்றார் அந்த நோயாளி மீண்டும். சீக்கிரம் போய் முதலில் கையை கழுவ வேண்டும். இப்படியாகி விட்டதே! ரோட்டின் குறுக்கே வேகமாக நடக்க ஆரம்பித்தார். பின்னாலேயே அந்த நோயாளியும் வந்தார். பாதி ரோடு வந்தாகி விட்டது. ஆனால் அதற்குள் சிக்னல் மாறி விட்டது.

இப்போது நடுவில் மாட்டிக் கொண்டு விட்டார். இரண்டு திசையிலும் வேகமாக வரும் வாகனங்களைப் பார்த்தால் அவருக்கே பயமாக இருந்தது. இப்போது பின்னால் போகவும் முடியாது. ரோட்டை க்ராஸ் பண்ணவும் முடியாது. அந்த ஆள் வேறு அவரை ரொம்பவும் ஒட்டியபடியே நின்று கொண்டிருக்கிறார். அந்த நிமிடம் நரக வேதனையை அனுபவித்தார்.

அடுத்த சிக்னல் சீக்கிரம் மாற வேண்டுமே. காத்திருப்பது ரொம்பவே அவஸ்தையாய் இருந்தது. கடவுளே! இதோ சிக்னல் மாறி விட்டது. போக வேண்டியதுதான். ஆனால் காரும் பஸ்ஸும் வந்து கொண்டே இருக்கிறதே! கொஞ்சம் காத்திருந்தார். இதோ ஒரு வழியாக வாகனங்கள் நின்று விட்டன. ஆனால் ரோட்டைக் கடக்கும் பாதையில் வரிசையாக வாகனங்கள் குறுக்கே வழி மறித்து நின்றன.

போவதா, வேண்டாமா? போக முயன்றால் வாகனங்கள் மெதுவாக நகருகின்றன. இரண்டு அடி தூரம் நகரும்; பின் நின்று விடும். சரி இடையில் புகுந்து போய் விட வேண்டியது தான். பூபாலன் மெதுவாக நகர்ந்து நில் என்பது போல கையை காட்டிக் கொண்டே வாகனங்களுக்கு இடையில் புகுந்தார். பின்னாடியே அந்த நோயாளியும் வந்து கொண்டிருந்தார். ஆனால் பத்தடி தூரத்தில் இருந்து அதோ அந்த வேன் நிற்காமலேயே வருகிறதே! என்ன செய்வது?

நில்லுங்கள்! என்று வேக வேகமாக கையை ஆட்டினார். ஆனால் அந்த வேன் நிற்கவில்லை. இப்போது பூபாலன் ஒரு பஸ்ஸின் பின்னால் அதை ஒட்டியபடி நின்று கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் அந்த வேன் வருகிறது. எங்கும் தப்ப முடியாது. இன்னும் சில நொடிகள்தான். வேன் வந்து தன்னை பஸ்ஸோடு சேர்த்து அழுத்தி விடும். அவ்வளவுதான்! நம் கதை முடியப் போகிறது.

ஆனால் அப்போது அந்த தொழு நோயாளி ஒரு காரியம் செய்தார். பூபாலனையும் பிடித்து இழுத்து பஸ்ஸின் பின் பக்கத்தில் கீழே நுழைந்து கொண்டார். ‘டமார்’ என்று ஒரு சத்தம். வேன் வந்து பஸ்ஸின் பின்னால் மோதியது. வேகம் அதிகமில்லாததால், சேதமும் அதிகமில்லை. ஆனால் பஸ்ஸை நிறுத்தி விட்டு, டிரைவர் ஓடி வந்தார். வேன் டிரைவரைப் பார்த்து கத்தினார்.

வேன் டிரைவர் பரிதாபமாக ‘பிரேக் பிடிக்கவில்லை’ என்றார். கூட்டம் கூடி விட்டது. போக்குவரத்து காவலர் வந்து என்ன நடந்தது என்று விசாரிக்கத் தொடங்கினார். பூபாலனும் அந்த நோயாளியும் கீழே தவழ்ந்தபடியே ரோட்டின் ஓரத்துக்கு வந்து விட்டார்கள். அந்த நோயாளியை நன்றியோடு பார்த்தார் பூபாலன். சந்திராஷ்டமம் என்பது மனவருத்தத்தைக் கொடுக்குமா? அல்லது உயிரைக் காப்பாற்றுமா? அவருக்கு புரியவில்லை!

———————————————————————————————————————————————————————–

Series Navigationஇப்படியிருந்தா பரவாயில்லகுடை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *