சமாதானத்திற்க்கான பரிசு

 கோசின்ரா 

 

 

பார்வையாளர்களே கண்களை மூடாதீர்கள்

அவைகள் திறந்தே இருக்கட்டும்

பதற்றமான மனம் ஆறுதல் கொள்ளட்டும்

மன்னிப்புகளை

வீட்டில் விட்டு வந்திருப்பீர்கள் என நம்புகிறோம்

யாரவது தவறுதலாக கொண்டு வந்திருந்தால்

இலவசமாக மன்னிப்புகள் வைக்குமிடம் வெளியே இருக்கிறது

அங்கே வைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளுங்கள்

போகும் போது ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள்

ஏனெனில் உங்கள் மன்னிப்புகள்

நீங்கள் யாரென்பதை காட்டிக்கொடுத்து விடும்

அப்புறம் இதே இடத்தில் நீங்களும் இருக்க நேரலாம்

மேலும் யாரிடமாவது இரக்கம் கருணை அன்பு இருப்பினும்

அதையும் வெளீயே வைத்துவிட்டு வாருங்கள்

அந்தப் பொருட்கள் இந்த மைதானத்துக்குறியதல்ல

இந்தப் பெண்

அவள் செய்த கொலையின் முன்பு மண்டியிட்டிருக்கிறாள்

கவலைப்படாதீர்கள் பார்வையாளர்களே

இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் வீடு திரும்பிவிடலாம்

உங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடலாம்

இறைவன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்

அவன் பார்வையாளர்களுக்காக பேசிக்கொண்டிருந்தான்

கோடிக்கணக்கன பேர்கள் கொல்லப்படும் போது

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  எவனும்

தனக்காக வரப்போவதில்லையென புரிந்துக்கொண்டாள் அவள்

உடலில் இருக்கும் கனவுகளை வெளியேறுமாறு சொல்லுகிறாள்

அவளின் உறவுகளுக்கு போதுமான அன்பையும்

கூட்டிச் செல்ல சொல்லுகிறாள்

மீச்சமிருக்கும் வாழ் நாள் முழுவதும் பேசக்கூடிய சொற்களை

தன் பெற்றோர்கள் வாழும்வரையாவது

உடனிருக்கச் சொல்கிறாள் போக மறுத்த

எல்லாமும் அவளோடு இறக்கச் சம்மதிக்கின்றன

அந்த நகரத்தில்

பகலில் அவள் குனிந்த படியே இருக்கிறாள்

தனியே கிடந்த தலை மட்டும்

அவள் உடலை நிமிர்தெழச் சொல்கிறது

பார்வையாளர்கள் கலைந்த இரவில் கேட்கிறது

ஒரு குழந்தையின் அழுகை

நீதியின் முகம் தன் முகமூடியை

கழற்றாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது.

Series Navigationபிரதிநிதிபாசச்சுமைகள்