சயந்தனின் ‘ஆறாவடு’

This entry is part 2 of 40 in the series 6 மே 2012

‘ஆறாவடு ’

சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி.
(அநேகமான சில குறிப்புகளில் தொனிப்பதுபோல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது சரியல்ல. நாவல்கள் நம் அறிவைப் பெருக்குவதற்காகப் படிக்கப்படுவனவும் அல்ல. இது ஒரு அனுபவப்பகிர்வு. ஆசிரியனின் அனுபவத்தினதும் ஆவேசங்களினதும் கனவுகளினதும் ஒரு கலவை. போர்நடக்கும் ஒரு நாட்டில் நான்கு ஆயுதப்படைகளின் மத்தியில் வாழநேர்ந்த, ஆயுதத்தைத் தூக்க நேர்ந்த ஒரு இளைஞன் தான் அனுபவித்ததை, பார்த்த போரிடும் உலகத்தின் நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றான்.
// இனியில்லை என்ற அளவுக்கு எலும்பும்தோலுமாய் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்தான் (பக் 105.) //
// தூரவாகப்போய் நின்றுகொண்டார்கள் (பக் 15.) //
என்பதுபோன்ற பேச்சுமொழியிலான வரிகளைப்படிக்கையில் தாயகத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு போராளி நண்பன் எனக்கு எழுதியிருக்கக்கூடிய இயல்பான கடிதங்கள்போலவும் அவனே அருகிலிருந்து பேசுவதுபோலவும் விபரிப்புகள் என் நெஞ்சுக்கு அத்தனை நெருக்கமாக வந்துவிழுகின்றன. இங்கே ஆசிரியன் நாவலின் மொழிக்கோ, பாத்திரவார்ப்புகளுக்கோ, புனைவுத்திக்கோ அதிகம் வினைக்கெட்டதாகத் தெரியவில்லை. இன்னும் இயல்பான அங்கதம் தோய்ந்த நடையில் கதையாடிச்செல்வதுவும் வாசிப்பின் சுவையை அதிகரிக்கிறது.
இயைபுவாழ்வை வாழ்ந்திருந்த சாதாரண தமிழ்மக்கள் எவ்வாறு பல்வேறுமுனைத்திறனுடைய போராட்ட சக்திகளால் உள்ளிழுக்கப்பட்டார்கள், பிழியப்பட்டார்கள், அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதுவும் ; வாழ்வின் அநித்தியம், அவதி, அவலங்கள் என்பனவும் சிக்கின்றி இப்புதினத்தில் வார்த்தை வயப்படுகின்றன.
‘அண்ணைக்கு எல்லாம் தெரியும்’ என்று இருந்தவர்களைவிடவும் ‘அண்ணைக்கு ஒன்றுந்தெரியாது, பக்கச்சாவி இல்லாத வண்டியைத்தான் விரைந்து ஓட்டுகிறார்’ என்பதைத் தெரிந்திருந்தவர்களும் கையாலாகாதவர்களாக, விதையடிக்கப்பட்டவர்களாக இருக்கவே பணிக்கப்பட்டனர்.
‘அவர்கள் கேட்டார்களில்லை.’ – முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான பேட்டியொன்றில் – கா.சிவத்தம்பி.
– சந்திரிகாவுடனான சமாதனம் முறிந்தபோது
‘களநிலமை அப்பிடீடாதம்பி முறிச்சேயாக வேணும்’ – புதுவை இரத்தினதுரை.
‘ எமக்கு மாற்று வழிகள் இல்லை ’ – பாலகுமார்.
சந்திரிகாவுடன் நெருக்கமான, அவரின் கருத்தியல்களை அணுகக்கூடிய மாற்றுக்கருத்துக்களையும் பரிசீலனை செய்யவைக்கக்கூடிய நீலன் திருச்செல்வத்தைப் பயன்படுத்தி எமக்குச்சாதகமாக் எதையாவது பண்ணுவோமா ? ‘வேண்டாம் ஒரு பயலும். போட்டுத்தள்ளு அந்த மசிராண்டியையும்’.
தினவுமிகவெடுத்து அரசியல் அல்லாத காரணத்தைச் சாக்குவைத்து சந்திரிகாவுடனான சமாதானத்தைப் புலிகள் முறித்துகொண்டமையும், அதையுண்டான மக்களின் சினமும் நேரு அய்யாவின் வாய்மூலத்தால் பதிவுசெய்யப்படுகின்றது.
இன்னும் நாவலில் அங்கங்கே சில இடங்களில் பாய்ச்சல்களும் இடம்பெற்றுள்ளமையை ஒப்பத்தான் வேண்டும். ஒரு இளம்படைப்பாளனின் படைப்பில் இத்தனை நீர்மட்டம் பிடிக்கத்தான்வேணுமோ என ஒருகணம் தோன்றினாலும் ஒரு போராளி இளைஞனின் கதையாடல் என்கிறவகையில் இப்பாய்ச்சல்கள் என்னை உறுத்துவதால் இங்கே குறிப்பிடப்படுகின்றன. சந்திரிகாவுடனான சமாதானத்துக்கும் – ரணிலுடனான சமாதானத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான்
1. யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டார்கள். (இதைப்பற்றி டி.சே.தமிழனும் குறிப்பிடுகிறார்)
2. முல்லைத்தீவில் வல்லிபுனம் செஞ்சோலை பாசறையில் முதலுதவிப் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட்ட 62 பேர்மீது விமானங்கள் குண்டுவீசிக்கொன்ற கொடூரநிகழ்வு.
3. நவாலி சென். பீற்றர் தேவாலயத்தின் அகதிகள் மீதான குண்டுவீசி 147 பேரைக்கொன்றதும் 360 பேரைப்படுகாயப்படுத்தியதுமான நிகழ்வு (இது ஓரிடத்தில் மிக லேசாகச்சுட்டப்டப்படுகிறது).
4. மணாலாறு தாக்குதலில் 185 பெண்போராளிகளின் இழப்பு.
5. ஆனையிறவுப்படைமுகாம் மீதான முதலாவது தாக்குதலில் 800 போராளிகள்வரையில் மடிய நேர்ந்தமை போன்ற பேரழிவுகள் எதுவும் புதினத்தில் குறிப்பிடப்படாமல் இருப்பதைச்சொல்லலாம்.
இன்னும் நாவலின் இறுதிப்பகுதியில் சகபோராளி ஒருவர் இயக்கத்திலிருந்து விடுத்துக்கொண்டுபோய் தன்காதலியைத் திருமணம் செய்துகொண்டு சாதாரண இயல்புவாழ்வுக்குத் திரும்ப விழையும்போது இயக்கம் அவருக்கு சிரமதான தண்டனை வழங்குகிறது. இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களைக்கொண்டு கொத்தடிமைகள் போல வேலைவாங்கப்பட்டு யாழ் கோட்டை உடைக்கப்பட்டதை யாம் அறிவோம்.
இவனும் தான் பலகாலம் இயக்கத்தில் பணியாற்றியதால் தனக்கும் திருமணஞ்செய்தலோ, இயக்கத்திலிருந்துவிடுபடுதலோ அத்தனை சிரமமாக இருக்காது என்றும் நினைக்கிறான். ஆனால் இத்தாலியின் திசையில் கடைசியாக வள்ளம் ஏறும்வரையில் பொலீஸில் பிடிபட்டுச்சிலகாலம் சிறைக்காவலில் இருப்பதெல்லாம் நடக்கிறது. இயக்கத்தைவிட்டு அவர்கள் அனுமதியுடன்தான் வெளியேறினானா, அல்லது தானாக வெளியேறுகிறானா என்கிற விபரணம் தரப்படாத அந்த இடமும் சிறு பாய்ச்சல்தான்.
சில நாவலாசிரியர்கள் நாவலை வெளியிட முன்னர் தயங்காமல் மென்போக்குடைய இலக்கியர்களிலிருந்து கறாரான விமர்சகர்கள் வரையில் தம் பிரதியை வாசிப்புக்குத் தருவதுண்டு. ஜெயமோகன் தான் அப்படிச்செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கட்டாயம் எல்லாரும் அப்படித்தான் பண்ணவேண்டுமென்று நான் சொல்லுவதாக இதற்கு அர்த்தமில்லை. ஆனால் அப்படியொரு முன்வாசிப்புக்கு இப்பிரதியும் உட்பட்டிருந்தால் இச்சிறு குறைகளும் பாய்ச்சல்களும் தவிர்க்கப்பட்டு இன்னும் செப்பனிடப்பட்டிருந்திருக்கும்.
9000 கடல் மைல்களைக்கடந்து செல்லவேண்டிய ஒரு பயணத்தில் வள்ளத்துக்கு குறைந்தபட்ஷம் 2000 லிட்டர் டீசலாவது தேவைப்பட்டிருக்கும். நம்பகமான தொலையாடல் கருவிகள், அவசரகால/அபாய அறிவிப்புக்கருவிகள், மற்றும் 60 மனிதர்களுக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கான உணவு போன்ற முன் தயாரிப்புகள் எல்லாம் இருந்திருக்கவேண்டும். போதுமான முன் தயாரிப்பில்லாத கப்பல்களை சோதனையிடவும் வேண்டுமானால் கைப்பற்றவும் எந்த நாட்டினதும் அதிகாரிகளுக்கும் (Cost Surveyors) உரிமையுண்டு.
நான் அறிந்த வரையில் சர்வதேசப்பதிவில் இல்லாத எந்த மீன்பிடிவகையிலான படகும் இத்தனை மனிதர்களுடன் சூயெஸ்கால்வாயைக் கடந்து பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தும் அதனைச் சும்மா வேதாரணியப் பக்கமாகப்போய்த் திரும்புவதற்கான ஒரு சிறுபடகைப்போலச் சித்தரித்திருப்பதும் சரியல்ல.

சிறந்த ஒப்புநோக்குமையால் பிரதியில் இரண்டொரு எழுத்துப்பிழைகளை மட்டுமே காணமுடிந்தது. இத்தனை கவனம் எடுத்து நூலை ஆக்கியிருக்கும் தமிழினிக்கு இன்னும் அழுத்தமான உயர்ந்த தாள்களில் நூலைப்பதித்திருக்கவும் முடியும். சயந்தனிடம் ஏதாவது காரணம் இருக்குந்தான், ஆனாலும் ‘ஆறாவடு’ என்கிற இத்தலைப்பு இந்நாவலோடு எந்தவகையில் பொருந்திவருகிறது என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.
எரித்திரிய போராளிக்கு, ஈழப்போராளியின் செயற்கைக்கால் கிடைப்பதான தரிசனத்தில் அழகியலின் உயர்வோ, பிறழ்வோ, சறுக்கலோ எப்படியும் முடிப்பதற்கான ஆசிரியனின் உரிமையை மதிக்கவும் , புரிந்துகொள்ளவும் முடிகிறது.
கதையாடலை வாசகனின் நெஞ்சோடு அணுகிச் சொல்லத்தெரிந்து வைத்திருக்கும் இவ்விளையவனின் வருகை தமிழுக்கு நல்வரவு. சயந்தனுக்கு இன்னுமொரு சபாஷ் !
1 மே. 2012 பெர்லின்.

P.Karunaharamoorthy, Berlin. Tel:004930/54493337

Series Navigationஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *