சற்று நின்று சுழலும் பூமி

 

பூமி மேல்

தன்

முதலடியை

எடுத்து வைக்க முயலும்.

 

உயிர்ப் பந்தாய்

மெல்ல

எழுந்து நிற்கும்.

 

பூமிப் பந்தைப்

பிஞ்சுக் கால்களால்

உருட்டி விடப் பார்க்கும்.

 

பிஞ்சுக் கால்களின்

கிளுகிளுப்பில்

சுழலும் பூமியின் களிப்பு

கொஞ்சம்

கூடிப் போயிருக்கும்.

 

‘பொத்’தென்று

கீழே விழும்

குழந்தை கத்தும்.

 

’தரை தானே தடுக்கிச்சு’-

தரையை மிதித்துக்

குழந்தையைச் சமாதானப்படுத்துவாள்

தாய்.

 

சுழலும் பூமி

சற்று நின்று

சுழலும் மீண்டும்.

 

 

Series Navigationமலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…புலி வருது புலி வருது