சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து

jackie

 

நம் சாகச நாயகன் யார் என்று ஊகித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.  அவர் தான் ஜாக்கி சான்.

 

அவர் குழந்தை நடிகராகச் சில படங்களில் நடித்திருந்ததால் திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது.  அவர் நட்சத்திரமாக, நாயகனாக நடிக்க முதன்முதலில் கிடைத்த வாய்ப்பைப் பற்றி அறிந்து கொள்வோமா?

 

1970 ஆம் வருடம்.  சானுக்கு பதினேழு வயது.

 

சாதாரண ஸ்டண்ட் நடிகனாக தினம் தினம் ஸ்டுடியோ வாசலில் காத்திருந்து காத்திருந்து, வேலை கிடைத்தால் செய்து, வேலை கிடைக்காவிட்டால் நண்பர்களுடன் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்த சமயம் அது.

 

சாகச ஸ்டண்டுக்குப் பிறகு, சானின் வாழ்க்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. முழுமையான  ஸ்டண்ட் கலைஞனாக, தொழில் முறைக் கலைஞனாக மாறினார்.  ஏதாவது கஷ்டமான ஸ்டண்ட் வேலை என்றால் “யூன் லோவைக் கூப்பிடுங்கள்” என்று அழைக்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டது.

பள்ளிக்குச் செல்லப் பிடிக்காத சானை, அவனது தந்தை ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்காகச் செல்ல வேண்டியிருந்ததால், சீன ஒபரா கழகத்தில் பத்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சேர்த்து விட்டார்.  சான் தன் ஏழு வயது முதல் பதினேழு வயது வரை யூன் லோ என்ற பெயருடன் சீன ஒபரா கழகத்தில் குருகுல வாசம் செய்தார்.  அங்கிருந்த குருவின் கிடிக்கிப் பிடி சர்வாதிகார பயிற்சியின் காரணமாகத் தான், தான் ஸ்டண்ட் துறையில் இத்தனை தூரத்திற்கு  வர முடிந்தது எனச் சொல்வார் ஜாக்கி.

 

கழகத்தை விட்டு வந்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே, கழகத்தின் மூத்த மாணவனான யூன் லுங் என்கிற சாமோவைச் சந்திக்க நேரிட்டது.  சிறு வயதில் பயிற்சியின் போது என்ன தான் விரட்டி மிரட்டி கஷ்டம் கொடுத்திருந்தாலும், வெளியே சந்தித்த போது அந்தக் கழக உறவை விட்டுக்கொடுக்க இயலவில்லை.  நல்ல நண்பர்களானார்கள்.  சாமோ தன் கடின உழைப்பால் ஸ்டண்ட் கலைஞனாய் நுழைந்து ஒருங்கிணைப்பாளர் நிலைக்கு உயர்ந்திருந்தார். அதே போல் சானுக்கு அடுத்ததாகக் கழகத்தைச் சேர்ந்த யூன் பியாவ், அவர்களுடன் வந்து சேர்ந்தான்.  சாமோவின் உதவியால் பியாவ் ஜூனியர் கலைஞனாகச் சேர்ந்தான்.

 

மூவரும் சில வருடங்களிலேயே ஸ்டண்ட் துறையில் நல்ல நிலைக்கு வந்தனர்.

 

அப்போது ஒரு நாள் சானுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

 

“யூன் லோவா?”

 

அந்தக் குரலை வைத்தே கழகத்தின் பெண் மாணவியரில் மூத்த “பெரியக்கா” என்பது தெரிந்தது.

 

“அட பெரியக்கா..” என்று மகிழ்ச்சியுடன் கத்தினான் சான்.

 

அந்தப் பெண்ணும் திரைத்துறையில் சேர்ந்து ஒரு பெரிய தயாரிப்பாளரின் உதவியாளராக மாறி விட்டிருந்தாள்.

 

“யூன் லோ.. உன்னைப் பற்றி  நிறைய பேர் நிறைய சொல்லிக் கேட்டிருக்கிறேன். நல்ல பேர் வாங்கிட்டியே” என்றாள்.

தன்னைப் பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள விரும்பாவிட்டாலும், நீண்ட நாட்களுக்குப் பின் பேசும் பெரியக்காவிடம் தன் விருப்பத்தைச் சொல்ல வேண்டி, “மற்ற எல்லாரையும் விட என்னால் உயரமாக குதிக்க முடியும். வேகமாக உதைக்க முடியும். பலமாக அடிக்க முடியும். எனக்கு எதற்கும் பயம் கிடையாது.  என்னால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்றான் சான்.

 

மறுபுறம் “சின்ன தம்பி.. அந்த வாய்ப்பை பெற்றுத் தர நான் உதவ முடியும் என்று எண்ணுகிறேன்” என்றாள் பெரியக்கா.

 

சானுக்கோ பெருத்த மகிழ்ச்சி.

 

“ஒரு தயாரிப்பாளர் இப்போது தான் தன் புது படத்துக்கு ஒரு நல்லா சண்டை போடறவன தேடிக்கிட்டு இருக்காரு.  பணம் அவ்வளவா தேறாது.  பரவாயில்லையா?” என்று கேட்டாள்.

 

சானின் கையிலிருந்த தொலைபேசி அப்படியே தவறி விழுந்தது.  “நானா.. வர்மக் கலை நட்சத்திரமா? ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லோரும் பேசியிருக்கிறோம்.  கனவு கண்டு இருக்கிறோம்.  அது உண்மையாக நடக்கப் போகிறதா?” என்ற எண்ணம் கரைபுரண்டு ஓடியது.

 

பிறகு நிதானித்துக் கொண்டு தொலைபேசியை எடுத்து, “நான் செய்கிறேன்” என்றான்.

 

“நான் சொன்னது போல் பணம் அதிகமாகத் தேறாது” என்றாள் மறுபடியும்.

 

“அதப் பத்திக் கவலையில்லை.  நானே பணம் தர வேண்டியிருந்தாலும் கொடுக்கத் தயார்” என்றான்.

 

இதைக் கேட்டு சிரித்தாள் பெரியக்கா.

 

பிறகு சானுக்கு அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பெரியக்கா தன்னைக் கண்டுபிடித்து வாய்ப்பு பெற்றுத் தந்தது, தான் வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் தான் என்று சான் நம்பினான்.  படத்தில் நடித்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.

 

முதல் நாள் படப்படிப்பின் போதே, அந்தப் படம் ஒரு மலிவான படம் என்று புரிந்துவிட்டது.  மிகச் சாதாரண குங்பூ கதை.  அதற்கு “தி லிட்டில் டைகர் ஆப் கேன்டன்” என்று பெயரிட்டிருந்தனர்.

 

படத்தில் சான் தான் லிட்டில் டைகர்.. சிறிய புலியாக நடிக்க வேண்டியிருந்தது.  ஆனால் அவர்களின் பட்ஜெட்டைப் பார்த்தால், செலவு செய்வதைப் பார்த்தால், புலியைப் பிடிக்கப் போவதற்கு பதிலாக பூனையைப் பிடிக்க முயன்று அதையும் பிடிக்க மாட்டார்கள் போல் தோன்றியது. சரியாக  எதுவும்  நடப்பதாகத் தெரியவில்லை.

 

நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே, படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனம், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சண்டை, மிகச் சாதாரண இயக்கம் என்று இருந்தது. ஒரு படத்திற்குத் தேவையான விஷயங்கள் அனைத்துமே சரியாகச் செய்யப்படவில்லை என்பது புரிந்தது.  படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது பெரும் தவறு என்று எண்ணும் அளவிற்கு மோசமாக இருந்தது. படம் முடியும் முன்பே இயக்குநரும் தயாரிப்பாளரும் காணாமல் போயினர்.  நடித்தவர்களுக்கு கூலியும் தரப்படவில்லை.

 

இந்தத் தோல்வியால் சான் பெரிதும் துவண்டு போனான்.  தோல்வியாக தோன்றினாலும், இதன் மூலம் சான் நிறைய கற்றுக் கொண்டான்.  இது திரைப்படத் துறையில் செய்யும் பல தவறுகளைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.

 

இந்த அனுபவத்திற்குப் பிறகு, சான், சாமோ, யூன் பியாவ் மூவரும் அடிக்கடி திரைப்படம் பற்றி பேச ஆரம்பித்தனர்.

 

திரைப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

 

படத்தை எப்படி எடுக்க வேண்டும்?

 

படம் ஏன் ஓடாது போகிறது?

 

பல கேள்விகளை எழுப்பி, பதில் தேடினர்.

 

“படம் ஓடாமல் போவதற்குக் காரணம், படம் இயல்பாக இருப்பதில்லை.  வர்மக் கலை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், தெரிந்தவர்கள் போல் கதாநாயகர்களாய் சண்டைகள் போடுவது இயல்பாக இல்லாமல், மிகச் செயற்கையாக இருக்கு. மனிதர்கள் கம்பிகளின் உதவியோடு பறப்பதும் இருபதடி உயரத்திலிருந்து குதிப்பதும் ஒரே குத்தில் ஆட்களை வீழ்த்துவதும் நம்ப முடியாததாக இருக்கிறது.  சண்டை என்றால் பார்க்க தத்ரூபமாக இருக்கணும்” என்று சாமோ சொல்ல,

 

“கதாநாயகர்கள் சாதாரண மனிதர்களுக்கு மேலாக உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டும்” என்று சான் சொல்ல,

 

“பொம்மையைப் போன்று நகலான கதாநாயகர்கள் இருக்கக் கூடாது” என்ற சாமோ முடித்தான்.

மூவருக்குள்ளும் திரைப்படத் துறையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வேகம் இருந்தது.

 

யார் எந்த புது முயற்சி எடுத்துக் கொண்டாலும், மற்ற இருவரை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டனர்.

 

 

இதே நேரத்தில், ஹாங்காங் திரையுலகத்தின் மற்றொரு பகுதியில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன.

 

ரெய்மண்ட் சாவ் என்பவர் ஷா பிரதர்ஸ் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தவர். 1970இல் அந்தக் கம்பெனியின் கொள்கைகள் பிடிக்காமல், வேலையை விட்டு விட்டு கோல்டன் ஹார்வெஸ்ட் என்ற கம்பெனியைத் தொடங்கினார்.  முதலில் சுயேட்சை தயாரிப்பாளர்களிடம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.  அதில் ஓரளவு சம்பாதித்ததும், 1971இல் ஒரு பெரிய வேலையில் இறங்கினார்.

 

சாவ் ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்தார். அமெரிக்காவில் பிறந்த சீனர் அவர்.  அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் எல்லோர் மனத்தையும் தொட்ட நடிகர். ஹாங்காங் திரையுலகத்திற்கு அவர் புதியவர்.

 

அந்தப் படத்தின் இயக்குநர் பிரபலமான லோ வெய்.  படம் எடுக்கப்படும் போதே, அனைவரையும் அதிகமாக பேச வைத்தது. படமும் வெளியானது.

 

அந்தப் படத்தைக் காண மூவரும் சென்றனர்.  கூட்டம் அலை மோதியது.  டிக்கெட் கிடைப்பது சமானியம் அல்ல என்பதைத் தெரிந்த கொண்டு, அன்றே படத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற வேகத்துடன், தங்கள் வித்தைக்கார புத்தியைப் பயன்படுத்தி, டிக்கெட் இல்லாமலேயே அரங்கத்திற்குள் சென்று விட்டனர்.

 

திடீரென ஒரு சீனன் எங்கிருந்தோ வந்து, ஹாங்காங் நடிகர்களைவிட பல நூறு மடங்கு சம்பளம் வாங்கி, இருப்பவர்களையெல்லாம் செல்லக்காசாய் செய்து விட்டானே என்று எண்ணிக்கொண்டு, வெறுப்புடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

ஆனால் படம் பார்க்கப் பார்க்க வெறுப்பு மாயமாய் மறைந்தது.  மற்றப் படங்களைப் போல இல்லாமல், இந்தப் படத்தின் நாயகன் சற்றே வித்தியாசமாக இருந்தான்.  வலிமையான வேகமான சுவாரசியமான சண்டைக் காட்சிகள்,  அதிரடி காட்சிகள் என்று பல்வேறு தரப்பட்ட மனிதர்களைக் கவரும் வகையில் நாயகன் நடித்திருந்தான்.

 

அன்றைய சூழலில் திரையில் செய்யப்படாத பல விஷயங்கள் அதில் இருந்தன.  படத்தைப் பார்த்து விட்டு வெளியில் வந்த போது, சாமோ, “பாருங்கள்.. நான் சொன்னது போல் படம் இருக்கிறது” என்று கத்திச் சொன்னான்.  “இயல்பான சண்டைகள்.  இயல்பான கதாநாயகன். எனக்குப் படம் ரொம்பவே பிடித்தது” என்றான்.

 

“அதெல்லாம் இல்லை.  இயல்பாக இருந்ததென்றால், அதெப்படி ஒரு கூட்டத்துடன் சண்டை போடும் போது, தன் மேல் ஒரு அடி கூட வாங்கிக் கொள்ளாமல் நாயகன் சண்டை போட, நாயகனிடம் ஒவ்வொருவராக மட்டுமே வந்த சண்டை போடுகிறார்களே..” என்று சான் சொல்ல,  “அது செயற்கையாக இல்லையா? உண்மையில் இப்படியா நடக்கிறது” என யூன் பியாவ் கூறி, தன்னுடைய தழும்புகளைக் காட்டினான்.

 

அதை மறுக்கும் வகையில் தலையை ஆட்டிய சாமோ, “நீங்க என்ன பேசறீங்கன்னு புரியாம உளறீங்க.. இது தான் ஆரம்பம்.  ரொம்பப் பெருசா ஏதோ நடக்கத்தான் போகுது.. பொறுத்துப் பாருங்க..” என்றான்.

 

அந்தப் படம் சாமோ சொன்னது போல் ஹாங்காங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.  மற்ற எந்தப் படத்திற்கும் இல்லாத அந்தஸ்து கிடைத்தது.  ஹாங்காங்கில் மட்டுமில்லாமல் ஆசியாவின் எல்லா நாடுகளிலும் ஓடிச் சாதனை படைத்தது.  உலக அரங்கிலும் அந்த நாயகன் பேசப்பட்டான். ஹாங்காங் நட்சத்திரம், கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனம் இரண்டுமே உலக அளவில் போட்டிப் போடும் அளவிற்கு உயர்ந்தன.

 

அத்தனை வெற்றிகளும் ஹாங்காங் திரையுலகத்தைப் புரட்டிப் போட்டது. அது வரையிலும் ஷா பிரதர்ஸ் நிறுவனம் தான் திரையுலகில் தனித்துவம் பெற்றிருந்தது.  பெரிய நடிகர்கள், சிறந்த இயக்குநர்கள், அதிகச் சம்பளம், அதிக பட்ஜெட் என்று எல்லா சிறப்பையும் அந்த நிறுவனம் பெற்றிருந்தது.  இப்போது அதற்குப் போட்டியாக கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனம் ஒரே படத்தில் பூதாகரமாக வளர்ந்து நின்றது.

 

அப்படி ஹாங்காங் திரையுலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட படம் எது.. அந்தக் அதிரடிக் கதாநாயகன் யார் என்று ஊகிக்க முயலுங்கள்?

 

Series Navigationநோவா’வின் படகு (Ship of Theseus)முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]