சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

cmohanஎழுத்தாளரும், கலை, இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான “விளக்கு விருது’ வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் “விளக்கு விருது’ வழங்கப்பட்டு வருகிறது. 

 “விந்தை கலைஞனின் உருவச் சித்திரம்’ (ஓவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல்), “தண்ணீர் சிற்பம்’ (கவிதை) “எனக்கு வீடு, நண்பர்களுக்கு அறை’ (கவிதை) உள்ளிட்டவை சி.மோகனின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.  ஓநாய் குலச் சின்னம் என்ற சீன நாவலையும் உலகச் சிறுகதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.
 தமிழிலக்கியப் பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக் கருத்துகள் வழியாகவும்,

பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர் சி.மோகன். 

 

https://www.youtube.com/watch?v=HSB_yCzq7Ws

சி. மோகன் கட்டுரைகள் (கெட்டி அட்டை)

விலை ரூ.380/-Order Now

கடந்த நாற்பது வருடங்களாக சி. மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இளம்வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் இவர்.

இவர் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி-யிருக்கின்ற போதிலும், தான் மிகவும் சிறந்தவை எனக் கருதும் கட்டுரைகளை மட்டுமே இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார்.

விமர்சகரான சி. மோகன், தன் விமர்சனத்தில் நட்பிற்கான சலுகையையோ, பகைமைக்கான விரோதத்-தையோ ஒருபோதும் காட்டுவதில்லை. படைப்பின் தகுதிதான் இவரது விமர்சனத்திற்கான முதலும் இறுதியுமான அளவுகோல். அவ்வகையில் இவர் தமிழின் தலைசிறந்த விமர்சகர் ஆகிறார்.

தான் கற்றுத் தேர்ந்ததில் நூறில் ஒரு பங்கையே படைத்திருக்கும் சி. மோகனின் இக்கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது வெளிப்படும் தீட்சண் யத்தையும் ஒரு மகத்தான மனம் ஓரிடத்தில்கூடத் தேங்கிவிடாமல் இலக்-கியத்தின் ஊடாக இடையறாது பயணித்துக் கொண்டிருப்பதையும் நாம் உணரலாம்.

 

சி. மோகன் கட்டுரைகள்

Feb 25th, 2014 – 13:00:00

சி. மோகன் கட்டுரைகள், நற்றிணை பதிப்பகம், .எண்123, பு.எண் 243, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 380ரூ.

தமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் சி.மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது.

ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி.மோகனின் லாவகம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப்பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் செய்தார்.

அதேபோல, புத்தகங்கள் தயாரிப்பிலும் நவீன உத்திகளைப் பயன்படுத்தியவர் மோகன். அதற்கு எத்தனையோ புத்தகங்கள் சாட்சிகள். அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படைப்பை சுவாரஸ்யமாக மட்டுமே பார்க்காமல் மனித அறமாகப் பார்ப்பவராக மோகன் அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறார்.

நவீனத் தமிழ் இலக்கிய வியாபாரம் பெருத்துவிட்டிருக்கிறது. அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்று நவீன இலக்கிய வியாபாரம் செழித்துக் கொண்டிருக்கிறது என்ற வருத்தங்களின் ஊடாக கடந்தகாலத் தமிழ் இலக்கியங்களின் இலக்கியவாதிகளின் உன்னதங்களை மோகன் விளக்குகிறார்.

தன்னுடைய படைப்புகள் அல்லது தன்னுடைய கோஷ்டியினர் படைப்புகளை மட்டுமே வியந்தோதும் இன்றைய சூழலில் புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்துக்காகவும், நாளை மற்றொரு நாளே நாகராஜனுக்காகவும், இடைவெளி சம்பத்துக்காகவும் ஒலிக்கும் குரலாக மோகனுடையது இருக்கிறது.

கடற்கரையில் நிற்கும் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலையின் வடிவமைப்பு கொச்சைப்படுத்தப்பட்டபோது, அதற்கு கம்பீரமாக எழுந்த ஒரே குரல் இவருடையது. பாரதி, புதுமைப்பித்தன் முதல் தருமு சிவராம், கோபிகிருஷ்ணன் வரை, வறுமையும் புலமையும் இணைந்து பயணித்த படைப்பாளிகளின் சொற்செழிப்பை மோகனது வார்த்தைகளில் படிக்கும்போது, தமிழ் இவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்டதா என்று பெருமிதம் ஏற்படுகிறது.

தி. ஜானகிராமனின் எழுத்துக்குள் ஊடாடிய தவிப்பு, தருமு சிவராமின் கவிதைக்குள் எழுந்த சிலிர்ப்பு, க.நா.சு.வின் இலக்கியப் பங்களிப்பு, சி.சு. செல்லப்பாவின் அர்ப்பணிப்பு, எம்.ஆர். ராதாவுக்குள் எழுந்த கலகக்குரல், சரோஜாதேவின் நடையைச் சுற்றிச்சுழன்ற கேமரா, சந்திரபாபுவின் பாடலுக்குப் பின்னால் இருந்த வறுமை, எம்.பி.சீனிவாசனின் இசை, கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் எஸ்.தனபாலின் கையில் இருந்து பிறந்த இசைச்சித்திரங்கள், எழுத்துப் பிரதிகள் எங்கு கிடைத்தாலும் தேடித்தேடிச் சேகரித்த ரோஜா முத்தையாவின் ஆர்வம் என்று தமிழகக் கலைப்பரப்பில் கால் பதித்த அனைத்து ஆளுமைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் இந்தப் புத்தகத்தை சி.மோகன் கட்டுரைகள் என்பதைவிட தமிழ் கலைகளின் ஆவணமாகச் சொல்லலாம்.

அறம், யதார்த்தம், தர்க்கம் ஆகிய மூன்றையும் மட்டும் வைத்து படைப்பையும் படைப்பாளியையும் ஒரே பார்வை கொண்டு பார்க்கிறார். மொத்தத் தமிழ்க் கலையையும் புரிந்துகொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்.

புத்தகன்.

நன்றி:ஜுனியர் விகடன், 17/10/2012.

 

 

 

புதுமைப்பித்தன் நினைவு ̀ ‘விளக்கு இலக்கிய விருதுஎழுத்தாளர் சி.மோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது

2014 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் நினைவு ̀விளக்கு இலக்கிய விருது’ வழங்கும் நிகழ்வு சென்னையில் லயோலா கல்லூரியில் கடந்த 09-01-2016 அன்று நடைபெற்றது.தமிழ் எழுத்தாளர்களின் சங்கமமாக இவ் விழா நடைப்பெற்றது

விளக்கு இலக்கிய விருது அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைபித்தன் நினைவாக கலை ,இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றுபவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.தமிழ் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும் கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இவ் விருதின் நோக்கம்.விளக்கு இலக்கிய அமைப்பு 1995 ல் ஏற்படுத்தப்பட்டது. விளக்கு இலக்கிய விருது அமைப்பாளர்களாக நா.கோபால்சாமி,கோ.ராஜாராம்,எம். சுந்தரமூர்த்தி ஆகியோரும் உறுப்பினர்களாக அமெரிக்க வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். 1996 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிற விளக்கு இலக்கிய விருதை தமிழின் சிறந்த கலை இலக்கிய ஆளுமைகள் பலர்  பெற்று இருக்கிறார்கள்.2014 ம் ஆண்டுக்கான விளக்கு இலக்கிய விருது சி .மோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது

இவ் விழாவில்   எழுத்தாளர்   சி.மோகன் அவர்கள் காலம், வாழ்கை, கலை இலக்கியம் பற்றிய அவரது பார்வையை  விளக்கு விருது ஏற்புரையில் முன்வைத்ததை வீடியோ பதிவாக உங்களுக்கு பகிர்கிறோம்: link: https://youtu.be/HSB_yCzq7Ws

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சில எண்ணப்பதிவுகள்

 

லதா ராமகிருஷ்ணன்

 

தமிழ்ச் சிற்றிதழ் வெளியில், தீவிர இலக்கிய வெளியில் சி.மோகனின் பங்கு – சிற்றிதழாளராக, பதிப்பாளராக, கட்டுரையாளராக, திறனாய்வாளராக, என பலவகையிலும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு 2014 ஆம் ஆண்டைய விளக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மனநிறைவைத் தருகிறது. (விளக்கு விருது ரூ75,000 ரொக்கப்பரிசு மற்றும் ஒரு பட்டயத்தை உள்ளடக்கியது. விளக்கு விருது 2014 பெறுபவரை கவிஞர் வைதீஸ்வரன், அம்ஷன்குமார், வெளி ரங்கராஜன் ஆகிய மூவர் நடுவர்களாக இருந்து தெரிவு செய்தனர்.). இந்த விளக்கு விருது வழங்கும் விழா 9.1.2016 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்தேறியது. லயோலாக் கல்லூரியின் அதிபரும் சி.மோகனின் நெடுநாள் நண்பருமான அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி விருது வழங்கிச் சிறப்புரையாற்றினார். சி.மோகனைத் தான் சந்தித்த சந்தர்ப்பத்தையும், தங்களுக்கிடையே ஏற்பட்ட நட்பையும் நெகிழ்ச்சியோடு எடுத்துரைத்தார். லயோலக் கல்லூரி காட்சித் தகவலியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுரேஷ் பால் வரவேற்புரை வழங்கினார். தங்கள் கல்லூரியில் நல்ல இலக்கிய, திரைப்பட ரசனை வளர்ப்பதே நோக்கமாய் இந்தத் துறை தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

விளக்கு விருதின் அமைப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளர்-நாடகவியலாளர் வெளி ரங்கராஜன் விளக்கு விருதின் தோற்றம்-வரலாறு, விளக்கு விருது பெற்றோர் போன்ற விவரங்களைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். விழாவின் ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் பொன்.வாசுதேவன் விளக்கு அமைப்பின் சார்பில் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டார். திரு.வாசுதேவன் விழாவைத் திறம்பட ஒருங்கமைத்து நடத்தினார். கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இதழ் சார்பில் சி.மோகனுக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது. காலம் இதழின் பிரதிநிதியாகப் பேசியவர் புலம்பெயர் தமிழர்களின் படைப்பாக்கங்கள் நூல்வடிவம் பெற சி.மோகன் மேற்கொண்ட முன்முயற்சிகளை நன்றியோடு நினைவுகூர்ந்தார். இன்னொரு புலம்பெயர் தமிழர் அமைப்பும் (பெயர் நினைவுக்கு வரவில்லை என்பது வருத்தம் தருகிறது) சி.மோகனுடைய இலக்கியப்பணிக்கு மரியாதை செய்யும் விதமாய் ரொக்கப்பரிசு அளித்தது.

அருட்தந்தை ஃப்ரான்சிஸ் ஜெயபதி, கவிஞர்கள் யூமா வாசுகி, யவனிகா ஸ்ரீராம், ஷங்கர ராம சுப்பிரமணியன், நான், தமிழச்சி தங்கபாண்டியன், திரைப்பட இயக்குனர் மிஷ்கின் இன்னும் சிலர் மோகனின் தமிழ்ப்பணி குறித்தும், தோழமை குறித்தும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஷங்கர ராம சுப்ரமணியனின் வாசித்த அடர்செறிவானது. அதுவும், மற்றவர்களுடைய கருத்துகளும் வரிவடிவில் ஏதேனும் இலக்கிய இதழில் வெளியாகும் என்று நம்புகிறேன். சி.மோகனின் ஏற்புரையும் அடர்செறிவானது. அதில் என்னால் ஏற்கவியலாத கருத்துகள் ஒன்றிரண்டு உள்ளன என்பது உண்மைதான் என்றாலும் தன் கருத்துகளை என்றுமே மற்றவர்கள் மேல் திணிக்கப் பார்க்காத பண்பு மோகனுடையது. வாழ்க்கை என்பதை பணத்தின் அடிப்படையிலேயே வெற்றி,தோல்வியாக அளக்கும் பார்வையின் அபத்தத்தை தெளிவாக எடுத்துக்காட்டுவதாய் அமைந்திருந்த அவருடைய ஏற்புரை கீழ்க்கண்ட இணையதள முகவரியில் காணொளியாக இடம்பெற்றுள்ளது. https://youtu.be/HSB_yCzq7Ws

 

 

விழாவில் நான் எழுதி வாசித்த கவிதை இங்கே தரப்பட்டுள்ளது:

 

அகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்!

 

ஆறிலிருந்து அறுபதுக்கு மேலான பருவங்களின் அகாலப் புள்ளிகள் மேல்

படர் அடர் பாசிகளின் மீதாய் காலாற நடைபழகிக்கொண்டிருக்கிறாய்…

பயணத்தின் சுகம் கண்டுவிட்டால் பின் கல்லென்ன, முள்ளென்ன!

 

உன் பார்வைப் பரப்பெங்கும் எல்லையற்று விரிந்துகிடக்கும்

கண்ணுக் கெட்டாத் தொலைவின் வர்ணஜாலக் குறியீடுகள்!

 

அலைபாய்வே நிறைவமைதியான மனமும் அன்பே குணமுமாய்

இன்சொல்லே எந்நாளும் உன்னிலிருந்து கிளம்பும் பாங்கில்

தளும்பும் சிநேகிதம்.

 

ஒரு அமரகாவியப் புகைப்படத்தில் உன்னோடு தோள்சேர்த்து நிற்கும்

என்னருமைக் கவி ஷங்கர ராம சுப்ரமணியனின் கண்ணின் ஒளி காண

என்ன தவம் செய்தேனோ?!

 

மாற்றிதழ்க்காரர்களுக்கெல்லாம் உன் பெயர் முத்திரை வாசகம்!

உனக்கு நீயே வழங்கியவாறிருக்கும் வாசிப்பனுபவம்

உன்னால் எங்களுக்கு வாய்க்கும் வரமாகும்!

 

மனதை மயிலிறகால் வருடித்தரும் உன் குரல்!

 

சத்தமிடாமல் எனில் ஒருபோதும் சமரசம் செய்யாமல்

இயங்கிக்கொண்டிருக்கிறது

இன்றளவும் பழுதடையா உன் எழுதுகோல்!

 

முழுமையென்பதும் பின்னமே என்றுணர்ந்தவாறு

உன் வழியேகுகிறாய்

உடன் வருபவர்களை அரவணைத்தபடி.

 

நேற்றும் இன்றும் நாளையுமாய் தன் பாட்டில்

நம்மை வாழவைத்திருக்கும் காற்றுக்கு

என்னவென்று நன்றிசொல்வது என்று புரியாமல்

எப்பொழுதும் போல்

அரைகுறையாய் தன்னை நிறைவாக்கிக்கொள்கிறது இக்கவிதை.

(சமர்ப்பணம் : சி.மோகனுக்கு)

‘ரிஷி’

 

விளக்கு விருது விழா புகைப்படங்கள் சில:

 

 

 

 

சி.மோகனுடைய படைப்பாக்கங்கள் சில:

 

 

 

 

Series Navigationமருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்திஒலியின் வடிவம்