சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 18 of 26 in the series 10 மே 2015

Mr.Ravivarma

முருகபூபதி (அவுஸ்திரேலியா)

படித்தோம் சொல்கின்றோம்

சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

பத்திரிகையாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே மாற்றமடையும்  உரைநடை

தண்ணீரும்  தமிழ் இனமும் இரண்டறக் கலந்த வரலாறும் எமக்குண்டு.

                            

தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில் பாரதி, வ.வே.சு. அய்யர் முதல்  தற்பொழுது எழுதும் இமையம் வரையிலும் – இலங்கையில்  சம்பந்தன், வயித்திலிங்கம், இலங்கையர்கோன் முதல் இன்று எழுதும்  சமரபாகு சீனா  உதயகுமார் வரையிலும் -புகலிடத்தில்  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் நடேசன் வரையிலும் தொடர்ந்து இவர்களும் இவர்களுக்கு இடைப்பட்டவர்களும்  எழுதிய – எழுதிவரும் சிறுகதைகளை படித்து வருகின்றேன்.

நானும் ஒரு சிறுகதை எழுத்தாளனாகவே இலக்கியப்பிரவேசம் (1972 இல்)  செய்திருக்கின்றேன். எழுத்தாளர்களின் வரிசையில் பத்திரிகையாளர்கள்,  கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள்,  விமர்சகர்கள், நாடகாசிரியர்கள், திரைக் கதையாசிரியர்கள் இடம்பெறுகின்றனர்.

பாரதியின் சின்னச் சங்கரன் கதையையும் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தையும் படித்தவர்களுக்கு, இன்றைய தமிழக சிறுகதைகளின்  போக்கு – உள்ளடக்கம் – உருவம் என்பன பற்றிய துல்லியமான  பார்வை  இருப்பது போன்று, இலங்கை மற்றும் புகலிட சிறுகதைகளை  தொடர்ந்து படிப்பவர்களுக்கும் இருக்கலாம்.

பத்திரிகையாளராக இருந்து படைப்பாளியானவர்களினதும் படைப்பாளியாக  இருந்து பத்திரிகையாளராக மாறியவர்களினதும் உரைநடையில்  நாம்  வித்தியாசங்களைக்காணலாம்.

நான்  அறிந்தவரையில் இலங்கையில் படைப்பாளியாக வாழ்ந்த சிலர்  முழுநேர பத்திரிகையாளராக மாறியதும் அவர்களின் சிறுகதை முயற்சிகளில் தேக்கம் வந்திருக்கிறது. சில வேளைகளில் அவர்களின்  சிறுகதைகள் நடைச்சித்திரமாகவும் கட்டுரையாகவும் மாறியிருக்கின்றன.

ஒவ்வொரு சிறுகதை எழுத்தாளருக்கும் வாழ்வின் தரிசனங்கள்தான் அவர்கள் எழுதும் சிறுகதைப் படைப்புகள். தாம் சந்தித்த  மனிதர்கள், அவர்களின் குண    இயல்புகள், காணும் காட்சிகள் , மனதை பாதித்த சம்பவங்கள், சூழல் மாற்றங்கள் என்பனவெல்லாம்  அவர்களின் கதைகளுக்கு கருவாகவும் களமாகவும் உருவாகிவிடுகின்றன.

ஆனால் – அவர்களினால் படைக்கப்பட்ட பாத்திரம், அவர்களின் கண்முன்னால்  அல்லது அவர்கள்  சொன்னதன் பின்னர் எமது கண்களின் முன்னால் நடமாடலாம். எனினும் அந்தப்பாத்திரத்திற்குரிய நபருக்கு அந்த விடயம் தெரிந்திருக்காது.

யாராவது  சொன்னால்தான் தெரியவரும்.

இந்தப்பின்னணிகளுடன் – சமீபத்தில் இலங்கை சென்றபொழுது எனக்கு கிடைத்த பத்திரிகையாளர் சூரன் ஏ. ரவிவர்மாவின் சிறுகதைத்தொகுதி  வடக்கே போகும் மெயில் குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

2012 ஆம் ஆண்டு நான்  இலங்கை சென்ற வேளையில் இந்த நூல் வெளிவருவதற்கு முன்னர் – வடமராட்சியில் என்னைச்சந்தித்த ரவிவர்மா,  தாம் ஒரு சிறுகதைத்தொகுதி வெளியிடவிருப்பதாகவும் அதற்கு  ஆசியுரை  தருமாறும் கேட்டிருந்தார்.

Ravivarma Book Cover

அவரை ஒரு பத்திரிகையாளராகவே அறிந்து வைத்திருந்த எனக்கு அவரும் சிறுகதை எழுதுகிறார் என்பது அப்பொழுதுதான் தெரியும். இலங்கையில் வீரகேசரி, ஞானம் , மல்லிகை முதலான இதழ்களில் அவர்  எழுதியிருந்தும் எனது கண்களிலிருந்து தப்பியது அவர் குற்றம் அல்ல. எனது  குற்றம்.

அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் எனது நண்பர் (அமரர்) ராஜ ஸ்ரீகாந்தன்.  இவரும் ஒரே சமயத்தில் சிறுகதை எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விமர்சகராகவும்  பயணித்தவர்.

தினகரன்  பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்புக்கு ராஜஸ்ரீகாந்தன்  வந்த பின்னர் சிறுகதைகள் எழுதவில்லை.

ஆனால் – ரவிவர்மா வீரகேசரி, மெட்ரோ நியூஸ், சுடரொளி முதலான  பத்திரிகைகளில் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்ற தகவல் தாமதமாகக்கிடைத்தது.

யார்  இந்த ரவிவர்மா…?

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட வடமராட்சி தேவரையாளி சமூகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவரும் வடமராட்சி  தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகருமான சூரன் அவர்களின் பேரன்தான் இந்த ரவிவர்மா.

இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி வடக்கே போகும் மெயில்.  தமிழ் அபிமானியும் மொழி பெயர்ப்பாளருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தின இந்நூலுக்கும் ரவிவர்மாவுக்கும் அறிமுகம்    எழுதியுள்ளார்.

எனது ஆசியுரையுடனும், கனடாவில் வதியும் திரு.க. நவம் எழுதிய முன்னுரையுடனும் நூலசிரியரின் என்னுரையுடனும் இந்நூல் வெளியாகியிருக்கிறது.  தற்காலத்தில் வெளியாகும் பெரும்பாலான நாவல்கள் – சிறுகதைத் தொகுதிகள்  போன்று அல்லாமல் மிகவும் குறைந்த பக்கங்களில் (80 பக்கங்கள்) நீண்ட  தண்டவாளத்தில் ஓடும் நீளமான  வடக்கே போகும்  மெயில் வந்துள்ளது.

எண்பது பக்கங்களுக்குள் 16 சிறுகதைகளா… ? வியப்பு மேலிடுகிறது. ஒரு சில கதைகள் இரண்டு பக்கங்களில் முடிந்துவிடுகிறது. இவ்வாறு பக்க அளவில் சிறிய கதைகளை முன்னர் இலங்கையில் ஐய்யாத்துரை சாந்தன் என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.

அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் பக்க அளவில் சிறியதுதான்.

ரவிவர்மாவுக்கும் சூழல் பாதிப்புகள் அநேகம். அவரது ஒவ்வொரு கதையிலும்  அது தெரிகிறது.

1979 இற்கும் 2012 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இலங்கை , கனடா இதழ்களில் எழுதிய கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.  1979 இலிருந்து 2000  ஆம் ஆண்டு வரையில் இவர் எழுதிய கதைகள்  நான்குதான். அதாவது சுமார் 21 வருடங்கள் சிறுகதைகள் எழுதியதாகத் தெரியவில்லை. சிலவேளை  இவரை பத்திரிகை உலகம் செய்தி எழுதவைத்தே அவரது படைப்பிலக்கியத்தை  தேக்கமுறச்செய்திருக்கலாம்    எனவும் கருதுவதற்கு  இடமுண்டு.

1979 இல் சுடர் இதழில் வெளியான வடக்கே போகும் ரயில் கொழும்பு  கோட்டையிலிருந்து 1977 காலப்பகுதியில் புறப்பட்ட இரவு  தபால்  ரயில் குறித்து பேசுகிறது.  நடுச்சாமத்தில் அநுராதபுரம் ரயில்  நிலையத்தில் தரித்ததும், அதில் ஏறியவர்களின் தாக்குதலுக்கும்  இலக்காகி தமது உடமைகளை  தமிழ்ப்பயணிகள் பறிகொடுக்கின்றனர்.    சிலர் கொல்லப்படுகின்றனர்.

ரயில்  மீண்டும் வடக்கு நோக்கி இரத்தக்கறையுடனும் அவலக்குரலுடனும் புறப்படுகிறது.

யாழ்ப்பாணம் வந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு காங்கேசன்துறைக்கு  செல்கிறது. அங்கு பெரிய வெடிச்சத்தம் கேட்கிறது.  ரயில் இயந்திரம் எரிந்துகொண்டிருக்கிறது.

மூன்று மாதங்களில் மீண்டும் மற்றும் ஒரு ரயில் கொழும்பு நோக்கி  புறப்படுகிறது. முன்னர் நிகழ்ந்த பயங்கர அனுபவங்களின் பின்னர்  இனிமேல் தெற்கே போகமாட்டோம் எனச்சொன்னவர்கள் மீண்டும்  அந்த ரயிலில் புறப்படுகிறார்கள். அவர்களை  இறுதியாக வடக்கே அழைத்துவந்த முன்னைய ரயிலின் இயந்திரம் முற்றாக சேதமடைந்த  நிலையில் காங்கேசன்துறையில் அநாதரவாக தரித்து நிற்கிறது.

மனிதர்கள்  மாறிவிடுவார்கள். ஆனால்… அந்த சடப்பொருள்….?

இச்சிறுகதை, சிறுகதைக்குரிய வடிவம் அற்று நடைச்சித்திரமாக அமைந்துவிட்டிருப்பதை  கவனிக்க முடிந்தது. பல செய்திகளை இழையோடவிட்டிருக்கும் இக்கதை வரலாற்றுச் செய்தியாக பதிவாகின்றது. பாத்திரங்களின் முழுமைத்துவம் குறைந்தும் சம்பவத்தின்  சித்திரிப்புமே  மேலோங்கிவிடுகிறது.

தண்ணீர்… தண்ணீர்… என்ற கதை , ஒரு பக்கக் கதைதான். கொழும்பிலிருந்து வருபவருக்கு அந்த லொட்ஜ் பாதுகாப்பானது என்ற  நம்பிக்கை. கதவு வெளியே  தட்டப்படும்பொழுது புலனாய்வுப்பிரிவினர்தான்  என அஞ்சிக்கொண்டு கதவைத்திறப்பவருக்கு  மற்றும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அந்த லொட்ஜின் குடிநீர் சரியில்லை.  அதனைக் குடித்தவர்கள் வாந்தி பேதிக்கு இலக்காகி மருத்துவமனை  சென்றதாக சொல்லும் ஒருவர்  குடிப்பதற்கு தண்ணீர்ப்போத்தல் தருகிறார். ஆனால், அதற்கு  முன்னரே தங்கவந்தவர் லொட்ஜ் தண்ணீரை குடித்துவிட்டார்.

இத்தகைய  அனுபவங்கள் எவருக்கும் நேர்ந்திருக்கலாம். ஆனால் சம்பவச்சித்திரிப்பாக எத்தனைபேர் எழுதுவார்கள்…? குமுதம் ஒரு பக்கக் கதைகள்தான் நினைவுக்கு வந்தன.

2007 இல் ஞானம் இதழில் வெளியான திக்குத்தெரியாத… என்ற சிறுகதை, இத்தொகுப்பில் வித்தியாசமான கவனத்திற்குரிய கதையாக  எனது வாசிப்பு அனுபவத்தில் தென்பட்டது.

மொழித்தொடர்பாடல்  பற்றிய ஆழ்ந்த செய்தியை  இக்கதை தருகிறது.  கொழும்பில் சிங்கள மொழி  மூலம் படிக்கும் மலையக இளைஞனுக்கு  தமிழ் வாசிக்கத் தெரியவில்லை.  அவனது பெயர் பிரபு.  ஆனால், அவனது அடையாள அட்டையில் அது பிரபாவாக பொலிஸாரின் கண்களுக்குத் தெரிகிறது.  கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ரயிலில் கண்டியில் வந்து இறங்கிய  அந்த இளைஞன்  துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றான்.    அவனுக்கு தமிழும் சிங்களமும் பேசத்தெரிகிறது.  ஆனால், தமிழ் வாசிக்கத் தெரியவில்லை.

இதுபோன்ற  சுவாரஸ்யமான அனுபவங்கள் புலனாய்வுப்பிரிவினருக்கும்  பொலிஸாருக்கும் வந்திருக்கலாம். செய்தி  வேட்டையில் இறங்குபவர்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

ரவிவர்மா நேர்த்தியாக இந்தக்கதையை  சொல்கிறார். இச்சிறுகதை இவரால்  2007  இல் எழுதப்பட்டிருக்கிறது.  இவர் 1979 காலப்பகுதியில்  எழுதிய கதைகளிலிருந்து சிறுகதைக்குரிய அம்சங்களிலிருந்து  அவரது வளர்ச்சியை இனம்காண்பிக்கும் கதையாகவும் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் செம்மைப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானது.

மேல்நாடுகளில் எந்தப்பெரிய எழுத்தாளரின் படைப்பையும் செம்மைப்படுத்துவதற்கென்று பதிப்பாளர்கள் சிலரை நியமித்திருப்பார்கள்.    பேராசிரியர் சிவத்தம்பி செம்மைப்படுத்தலை செவ்விதாக்கம்    எனச்சொல்வார்.

இதழ்களில் ஏற்கனவே வெளியான கதைகளை தொகுத்து நூலாக்கும்பொழுது  மீண்டும் எடுத்துப்படித்து செம்மைப்படுத்துவதில் தவறு  ஒன்றும் இல்லை.  ரவிவர்மா அவர்களும் அவ்வாறு செய்திருப்பின்  அவரது கதைகள் மேலும் சிறப்படைந்திருக்கும் என்பது  எனது வாசிப்பு அனுபவம். அதனைச்சொல்வதும் குற்றமல்ல.

இலங்கையில் நீடித்த போர்க்காலம், அந்த அவதிக்குள்ளும் சாதிமான்களின் திமிர்வாதம் என்பனவெல்லாம் இவருடைய கதைகளில்  இழையோடுகிறது.

தண்ணீருக்கும்  எம் தமிழ் இனத்திற்கும் இடையேதான்  எவ்வளவு நெருக்கம்.    குடிதண்ணீருக்காகவும் அடிநிலை  மக்கள் அவதியுற்றார்கள்.  தண்ணீரை  தடுத்து நிறுத்தியதன் விளைவாகவே நீடித்த  போர், பேரழிவுகளுடன் முடிந்தது.  குடிதண்ணீரில் விஷம் கலப்பவர்கள்  மத்தியில் எம்மவர் வாழுகின்றனர். நன்னீர் மாசடையும்  சூழலையும் கண்டு கொந்தளிக்கின்றோம்.

ரவிவர்மாவின்  கதையொன்றில் இந்தத் தண்ணீரும் தப்பவில்லை.

பத்திரிகையாளராக  பணிதொடரும் ரவிவர்மாவின் முதல் முயற்சி இக்கதைத் தொகுப்பு.  அவரால் மேலும் சிறந்த கதைகளை தரமுடியும்  என்ற நம்பிக்கையை  விதைத்திருக்கிறது. அவர் பணி தொடரட்டும்.

—0—

letchumananm@gmail.com

 

Series Navigationநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *