செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு

Spread the love

புதுக்கோட்டை பிப். 21
புதுக்கோட்டையில் செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பிப்.20 மாலை கீழ 3ஆம் வீதியில் உள்ள பாலபாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் இதற்கான அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமைவகித்தார். ‘பாரதி’ சுப்பிரமணியன் கவிஞர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். அமைப்பின் கொள்கை செயல்பாடுகளை முன்மொழிந்து முனைவர் சு.மாதவன் உரையாற்றினார் அவர் பேசியதாவது:
“உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மொழி, கலை, இலக்கியத் துறைகள் மட்டுமின்றி சமயம், தத்துவம், சமூகவியல், மானுடவியல், மருத்துவம், அறிவியல் எனப் பல துறைகளிலும் மனித சமூகத்தின் செம்மைக்காக செம்மையாக மொழிந்த சிந்தனையாளர்களின் பன்முகச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை செயல்படும். அத்தோடு இளைய தலைமுறையினருக்கு – குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் உள்ளிட்ட செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்தி வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் எல்லாப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளலாம்: வகுப்புகளை சமூக நல ஆர்வலர்கள் எடுக்கலாம்.
தமிழில் பெயர்சூட்டுவது, கையொப்பமிடுவது, தலைப்பெழுத்துப் போடுவதை இயற்கையான நடவடிக்கையாக மக்கள் ஏற்கும்வகையில் தாய்மொழி விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழில் பெயர்கூட இல்லாத மக்களை எப்படித் தமிழ் மக்கள் என்று அழைக்கமுடியும் என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியின் அவசியம் உள்ளிட்ட சமூக நலன்  சார்ந்த விழிப்புணர்வுப் பயணத்தைக் “கிராமங்களை நோக்கி…” நடத்தப்படும்.
படைப்புகள், நூல் அறிமுகம் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படும்” என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து மதிப்புறு தலைவராகப் பேரா.வீ.வைத்தியநாதன், தலைவராக முனைவர் சு.மாதவன், இணைத் தலைவர்களாக சண்முக பழனியப்பன், கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன், கவிஞர் தஞ்சை பாலசுப்பிரமணியன், செயலாளராகப் பேரா.கி.கோவிந்தன், இணைச் செயலாளர்களாக ‘பாரதி’ சுப்பிரமணியன், கவிஞர் மகா சுந்தர், வரலாற்று ஆய்வாளர் பாண்டியன், பொருளாளராகக் கவிஞர் செ.சுவாதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேரா.பா.லூக்காஸ் ஜேக்கப், முனைவர் ப.பெரியசாமி, கவிஞர்கள் க.மணிவண்ணன், புதுகைப்புதல்வன், க.சுகுமாறன், பேரா.பரணி நவசக்திவேல், மா.இளங்கோவன், முனைவர் கா.சிவகவிகாளிதாசன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறைவாக, செம்மொழிச் சிந்தனையாளர் பேரவையின் இலச்சினையைச் சண்முக பழனியப்பன் வெளியிட ‘பாரதி’ சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, பேரா.பா.லூக்காஸ் ஜேக்கப் வரவேற்றார். பேரா.கி.கோவிந்தன் நன்றி கூறினார்.
பேரவை தொடங்கப்பட்டவுடன் இன்று பிப்.21 உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு – விழிப்புணர்வு முழக்கங்கள் அடங்கிய தட்டி ஒன்று புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ளமைப் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

Series Navigationசீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்அதிர்வுப் பயணம்