செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்

 

 

“விதந்தகு கோடி இன்னல்

விளைத்தெனை அழித்திட்டாலும்

சுதந்திரதேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே…”

என்று பாடிய

விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய  பல இசைமேதைகளின்  பதிவுகளையும் கொண்ட

‘Subramanya  Bharathi and other legends of Carnatic music’ எனும்

நூல் வெளியீடு கடந்த  22.10.2016  சனிக்கிழமை அன்று  மண்டபம்  நிறைந்த ஆர்வலர்கள்  முன்னிலையில்  இடையிடையே  நூலாசிரியரின்  இன்னிசைச் சமர்ப்பணத்துடன்  மிக நேர்த்தியாக  நடந்தேறியது.

வரவேற்புரைகளும், மனமார்ந்த வாழ்த்துரைகளும், ஆர்வலர்களின் சிறப்பரைகளும், சிறுவர்களின் கண்ணுக்கினிய நடனங்களுமாக, அவசியமற்ற ஆடம்பரங்கள்  இல்லாது  தமிழ்  மரபுகளுக்கேற்ப  ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந் நிகழ்வு  மனதிற்கு  இதமாகவும்  எம்  இளைய தலைமுறைக்கு  ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது.

நூலாசிரியர்  செல்வி கார்த்திகா மகேந்திரனதும்; பைந்தமிழ்க்காவலரும் கார்த்திகாவின்; தந்தையும், நல்வழிகாட்டியுமான  திரு மகேந்திரனதும் நன்றியுரைகளுடன்  இந்நிகழ்வு  இனிதாக  நிறைவு  பெற்றது.

காலத்தின் கோலத்தால் சிதறுண்டு திசைமாறி உருமாறி அடைளாளங்களைத் தொலைத்து  விடுவோமோ என்று  கலங்கி நிற்கும் வேளையில் இதுபோன்ற ஆக்கங்களும் நிகழ்வுகளும் அகத்தியமாகின்றன.

நாம் அகதிகளாகப் பிறக்கவில்லை!.

அருமை பெருமையாக வாழ்ந்தவர்கள்!!.

 

எம் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளையும், எம்மினத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் அவற்றின் பெருமைகளையும் எம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அவர்கள் நாளை தலை நிமிர்ந்து தமிழராக வாழ நாம் வழிவகுக்க வேண்டும். ஆங்கில மொழியில்  இந்நூல் அமைந்திருந்தாலும் எளிய நடையில் அழகாக வடிவமைக்கப்பட்டு வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பல இளைய தலைமுறையினர்  இந்நூலை ஆர்வத்துடன் வாசித்துப் பலனடைவார்கள் என்று நம்புகின்றேன்.

செல்வி கார்த்திகா  இரசாயனத்துறையில்  தன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைத் தொடரும் அதேவேளையில் தன் இசைப்பணியை  Ilford பகுதியில் சனிக்கிழமைகளில்  நடைபெறும் தமிழ்க் கல்விக்கூடத்தில் ஆற்றிவருவது  எமக்கு மகிழ்ச்சியாகவும்  பெருமையாகவும்  உணர்கின்றோம். செல்வி கார்த்திகாவுக்கும் அவர் பெற்றோருக்கும்  எம் கல்விக்கூடத்தின் அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்  சார்பிலும்  மனம் நிறைந்த  வாழ்த்துகளைத்   தெரிவித்துக்கொள்கின்றேன்;.

 

வாழ்த்துவது

திருமதி சாந்திகுமாரன்.

(அதிபர்.தமிழ் கல்விக் கூடம் எசெக்ஸ்)

 

Series Navigationவளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வுபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்