சொற்களின் சண்டை

Spread the love
ரோகிணி கனகராஜ்
 
உன் மௌனமும்
என் சொற்களும்
சண்டைப்போட்டுக்
கொள்கின்றன…
என்சொற்களின்குரல்
ஓங்கிஓங்கி ஒலிப்பதும்
உன்மௌனத்தின்குரல்
அமுங்கிஅமுங்கிஒலிப்பதும்
இரவுமுழுதும் கொட்டித்
தீர்க்கும்  மழையென
நடந்துகொண்டுதான்
இருக்கிறது…
 
 
இது ஒன்றும் குருசேத்திரப்
போரில்லை…
உனக்கும் எனக்குமான
சின்ன மனப்போர்…
இந்தப்போருக்குத்
தேவையான நிலப்பரப்பென
இருப்பது ஒருசிறு
கட்டில்தான்….
 
ஒருகட்டத்தில் என்
சொற்களுக்கு அலுப்புத்
தட்டிப் போர்களத்தில்
பின்வாங்கும் போர்வீரனென
ஓய்ந்துபோக என்
சொற்களையும் உன்
மௌனத்தையும் புறந்தள்ளி
சிறுகுழந்தையென நடுவே
வந்துப்படுத்துக்கொள்கிறது
அதுவரை காத்திருந்த காதல்…
Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 13 மனசு