சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்:

இசைபட வாழ்வோம் – ரவி நடராஜன்

தமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி மாறப் போகின்றன? இசை படைப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எந்நிலையில் இருப்பார்கள்? கணினிகளையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவு இசை ஒரு சூனாமியா, மெல் வசந்தமா?

பொன்னின் பெருந்தக்க யாவுள !  – நாஞ்சில் நாடன்

தனக்கே உரிய வீச்சுடன் பொன், தங்கம், சொர்ணம் என்று பளபளப்பும், பெரும் கவர்ச்சியும், மானுடத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பீடித்த பெரும் சக்தியும் கொண்ட உலோகம் தமிழெனும் பொன்னான மொழியால் எப்படிக் கையாளப்பட்டது என்று அலசுகிறார் நாஞ்சில் நாடன்.

ஒளி  – சுசித்ரா ரா.

அயல் மண்ணின் பரிச்சயத்தில் சொந்த மண்ணின் நினைவுகளே கூட ஒளி வீசி நிற்கும். இங்கு அயல் மண்ணின் ஒளியைக் கைப்பற்ற நினைக்கும் அன்னியர் ஒருவரின் பரிச்சயத்தில் தன்னொளியை அறியும் பெண்ணின் அனுபவத்தைச் சித்திரிக்கிறார் சொற்தூரிகையால் சுசித்ரா.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி

சொற்களின் போதையில் நிரந்தரமாக வாழ்ந்த விமர்சகர் ஹரால்ட் ப்ளூம் சமீபத்தில் இறந்தார். தன்னொத்த சொல் விசுவாசியை இனம் காணும் நம்பி இங்கு ஓர் அஞ்சலியோடு, ப்ளூமின் சொந்த வார்த்தைகளிலேயே அவரைக் காண நம்மை அழைக்கிறார்.

செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி – மொழியாக்கம்: இரா. இரமணன்

யூரோப்பியக் கவிஞர்களின் பார்வையையும், அமெரிக்கக் கவிஞரின் பார்வையையும் கண்ணுறும் இரமணன், அவர்களின் கட்டத்தைத் தாண்டிய அவதானிப்புகளின் வினோதத்தை இரு சுருக்கக் கவிதைகள் மூலம் கொணர்கிறார்.  ஒரு கவிதையாவது ஞானக் கூத்தனை நினைவு படுத்துகிறது.

2084: 1984+100  – அமர்நாத்

இரண்டாவது ஆயிரமாண்டுகளில் மனிதம் தக்கி நிற்குமா என்பதே கேள்விதான். தானறியாமல் என்று கூடச் சொல்ல முடியாது, தானறிந்தே பெருநாசத்தை நோக்கித் தம்மையும், மொத்த உலகையுமே இழுத்துப் போகும் மனித ‘நாகரீகத்தை’ப் பற்பல புதிர்க் கதைகளால் எழுதி வருகிறார் அமர்நாத். அந்த வரிசையிலிது ஆறாம் கதை.

காணாமல் போனவர்கள் – பிச்சி

காலம் அடித்துப் போகும் பண்பாட்டைக் கவனித்துச் சுட்டுவோரின் வரிசையில் சேர்கிறார் பிச்சி.

காதறுந்த கதை & சுயம்வரம் – லாவண்யா

கவிதைதான் எப்படி உதயமாகிறது? தனியொரு பார்வையில் என்பது ஒரு பதில். லாவண்யாவின் தனிக் கோணங்களில் இரு கவிதைகள்.

குருதி வழி – பாலாஜி பிருத்விராஜ்

பிரசவம் பெண்களைப் பாதிக்கிறது கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் போகிற விஷயம். இங்கு பிரசவங்களின் பாதிப்பில் பெண்களும், ஆண்களும் என்னென்ன விதங்களில் அலைபாய்ந்து தமக்கான தெளிவுகளைப் பெறுகிறார்கள், பாலாஜி பிருத்விராஜ் காட்டுகிறார்.

பருவத் தொடக்கம் – கா. சிவா

பருவ காலம் என்ற சொல்லின் இரு பரிமாணங்களைப் பார்க்கிறார் சிவா

வெக்கையும் ஈரமும் – சுஜா செல்லப்பன்

அக்கரைச் சீமையிலிருந்து சொந்த மண்ணின் வாசத்தைத் தனக்கு சுவாசிக்கக் கிட்டும் பூமணியின் மண்வாசனை நிறைந்த நாவலைச் சுருக்கமாக மறுபார்வையிடுகிறார், சுஜா.

வெயில் நிழல் மணல் இலை & ஒளியுடன் பேசுதல் – இரா. கவியரசு

ஒளிதான் கவிதைகளுக்கு எப்படி எல்லாம் உதவுகிறது? இங்கு வெயிலாகவும், குழந்தையின் பாதச் சிவப்பாகவும் அது மின்னுகிறது சொற்களில்.

குளக்கரை

உலகோட்டத்தை என்னென்ன விதங்களிலோ நாம் பிரித்தாராய முடியும். பானுமதி ந. இங்கு நட்சத்திரச் சிதறல்களில் பயணித்து தீர்க்கதரிசியான ஜாஸ்லின் பெல் பர்னலையும், நினைவுச் சிதறல்களில் முக்குளித்து வாழ்வின் அற்புதங்களைக் காணும் நெடும்பயணியான டிம் ஓ ப்ரையனையும் நமக்குக் காணக் கொடுக்கிறார்.

இத்தனையையும் மாதமிரு முறை வெளிவரும் சொல்வனத்தின் வலைப் பக்கங்களில் நீங்கள் பெற உதவும் வலையுலக முகவரி: https://solvanam.com/

படித்துப் பெற்ற அனுபவங்களை பதிப்புக் குழுவுடனும், இதர உலகளாவிய வாசகர்களோடும் பகிர்ந்து கொள்ள நீங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். கடிதம் எழுத முகவரி: solvanam.editor@gmail.com

அல்லது அந்தந்த விஷயங்களின் இறுதியிலேயே வாசகக் குறிப்பை இட வசதி உண்டு. குறிப்புகள் மட்டுறுத்தப்பட்டு பிறகு வெளியாகின்றன.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationவள்ளுவர் வாய்மொழி _1