ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு.
அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு முழுதாக வாசித்து விட்டு மீண்டும ஒருமுறை வாசிக்க வேண்டும் என்ற எணணத்துடன் கட்டிலருகே வைத்தேன். பல மாதங்கள் கடந்த பின் மீண்டும் இரண்டாம் முறையாக வாசித்தேன்.
அமெரிக்க செவ்விலக்கியத்தின் முதல்நூலாக வைக்கப்படுவது பெஞ்ஞமின் பிராங்கிளினது சுயசரிதை. பிரித்தானிய கொலனியாக அமெரிக்கா இருந்தபோது அங்கு பிறந்து அமெரிக்காவிற்கான பிரான்ஸின் தூதுவராகவும் விஞ்ஞானியாகவும் படைப்பாளியாகவும் பிரசித்திபெற்ற இவரது சுயசரிதை அமெரிக்காவின் ஆரம்பகாலத்து கருத்தியல் கட்டுமானத்தை உருவாக்கியது.
அமெரிக்க குடியரசின் முதல் ஜனாதிபதியான ஜோர்ஜ் வாசிங்டனுக்கு அடுத்தபடியாக கருதப்படும் இவரது உருவப்படம்தான் இன்னமும் நூறு டொலரில் உள்ளது.
இந்தியாவில் காந்தியின் சுயசரிதையான சந்தியசோதனை முக்கியமான நூலாக கருதப்பட்டாலும் அதை ஒரு இலக்கியமாக இந்தியாவில் பேசப்படுவது கிடையாது. அதேபோல் நெல்சன் மண்டேலாவின் நீண்டபயணமும் முக்கிய நூலாக கருதப்படுகிறது. தமிழ் சமூகத்தில் தங்கள் அனுபவங்களை மட்டும் பலர் எழுதி இருக்கிறார்கள். சுயசரிதை என்று எழுதியது எஸ். பொன்னுத்துரை போன்ற ஒருசிலர் மட்டுமே.
எந்த ஒரு தமிழ் எழுத்தாளரையும் பார்க்க ஆற்றங்கரையில் சலவை செய்யும் உடையைப்போல் மிகவும் கடினமாக மற்றவர்களால் இணையத்தில் சலவை செய்யப்படுபவர் ஜெயமோகன்.
அமெரிக்க எழுத்தாளரான எட்கார் அலன்போ போன்று மதுவுக்கு அடிமையான இலக்கியவாதியாகவோ அல்லது ருஷ்ஷிய கவிஞரான புஸ்கின்போன்று பெண்களை மயக்குபவராக ஜெயமோகன் இருந்தால் தனிமனித தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளலாம்.
இந்திய சமூகத்தில் காலம் காலமாக பேசப்படும் தனிமனித விழுமியத்திற்கு மனதால்கூட தவறாமல் வாழும் எழுத்தாளர் ஜெயமோகன் என நான் நினைக்கிறேன். இலக்கியவாதியின் இலக்கியத்தை வைத்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். தனிமனித விழுமியத்தில் குறைகண்டு சொல்வதை புரிந்துகொள்ளலாம்.
எனது அசோகனின் வைத்தியசாலை நாவலுக்கு ஜெயமோகன் முன்னுரை எழுதியதால் ஒருசிலர் அந்த நூலை தொடுவதற்கும் தயங்கினர்.
இது ஏன்?
ஜெயமோகன் ஒரு மலையாளி என்ற இனத்துவேசமா?
தமிழில் இடைவிடாது அவர் எழுதிக்கொண்டிருப்பதனால் உருவான காழ்ப்புணர்வா?
தமிழில் விமர்சனப்படுத்தக் கூடாது என்று சொல்லப்படும் திராவிடக்கொள்கை மற்றும் அது சார்ந்த போலித்தனமான கட்டுமானங்களை அவர் விமர்சிப்பதனாலா?
என்னைப் பொறுத்தவரையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு செயல்களையும் தமிழுக்கு கிடைத்த கொடையாகவே பார்க்கிறேன்.
இரண்டாவதாக திராவிடக்கட்;சிகளை அவரைவிட கடுமையாக விமர்சித்த சோ ராமசாமி மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இவ்வாறு தாக்கப்படவில்லையே…?
இலக்கியரீதியில் இலக்கிய கட்டுமானங்களை வைத்து அவரது படைப்பை விமர்சித்தால் அது நியாயமானது. ஆனால் தனிமனிதரை எப்படி அவருடன் நெருங்கிப் பழகாதவர்கள் விமர்சிக்கமுடியும்? என்பதுடன் இதற்கு அடிப்படையில் என்ன காரணம் என்றும் என்னை ஆச்சரியப்படவைத்தது.
அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்தபோதும் பலர் இதையே செய்தார்கள்.
விடைதெரியாத வினாக்கள் இவை.
எனினும் அவர் அவுஸ்திரேலியாவில் கண்ட காட்சிகளை பெற்ற அனுபவங்களை தமிழில் வெகு சிறப்பாக புல்வெளிதேசம் என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவைப்பற்றிய இந்த நூல் தமிழுக்கு சிறந்த கொடை.
இப்படிப்பட்ட ஜெயமோகனிடம் என்னை நெருங்க வைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான். அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன் கேள்விப்பட்டதும் இல்லை. திண்ணை இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவரது இரண்டு கட்டுரைகள்; முக்கியமானது.
அதில் ஒன்று இஸ்லாமிய மக்கள் தமிழுக்கு செய்த சேவை பற்றியது. மற்றது பாசிசம் பற்றிய கட்டுரை.
முதல்கட்டுரை வந்தகாலத்தில் வடக்கில் இஸ்லாமியரை விடுதலைப்புலிகள் வெளியேற்றிய காலம். அப்பொழுது இஸ்லாமியத் தமிழர்களின் தமிழ் சேவையை எனக்கு இவரது கட்டுரை புரியவைத்தது.
அதேபோல் இரண்டாவது கட்டுரை எமது இலங்கை மண்ணில் புலிப்பாசிசத்தின் கரியநிழல் படர்ந்து இருந்த காலத்தில் வெளியானது.
இரண்டு கட்டுரைகளையும் நான் முன்னர் நடத்திவந்த உதயம் இதழில் பிரசுரிக்க அனுமதி கேட்பதற்காக அவருடன் தொடர்பு கொண்டபின்னர் அவருடனான எனது தொடர்பு 15 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்தத் தொடர்புகள் எனக்கு இலக்கியத்திலும் சமூகவாழ்விலும் துளியளவும் வணிகம் செய்யாத ஒருவரை இனம்காட்டியது.
அவரது இணயத்தளமானது என்போன்ற இலக்கியத்தை பள்ளியில் படிக்காதவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் போன்றது. இவ்வருட ஆரம்பத்தில் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருந்தார். அவரது நேரத்தை நான் எடுத்துக் கொள்ளாமல் வெளியேற விரும்பினேன். அத்துடன் எழுதுவதோடு உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள் என அவருக்கு ஆலோசனை கூறினேன்
இலக்கியவாதி வெறும்;; கதைசொல்லியாக மட்டும் இராது சமூகத்தில் ஒரு அங்கமாகவும் இருந்து அந்த சமூகத்தில் காணப்படும் குறைகளை இடித்துரைக்கும் போது அவனுக்கு எதிரிகள் உருவாகுவார்கள்
அப்படிப்பட்டவரை அழித்துவிட்டுத்தான் வேறு விடயங்கள் பார்ப்பார்கள். இது எல்லா சமூகத்திலும் நடக்கிறது. இப்படியான எதிர்ப்புகள் ஜெயமோகனுக்கு மேலும் உத்வேகத்தை அதிகரிக்கும் என நினைக்கிறேன்.
ஜெயமோகனது புறப்பாடு என்ற அவரது இளமைகாலத்தைப் பற்றிய நூலை படிக்கும்போது ஒரு நாவலாக அது விரிந்து சென்றதுதான் எனது வாசிப்பு அனுபவம்.
இளவயதை எழுதுபவர்கள் எல்லோரும் நேர்மையாக எழுதுவது கிடையாது. புறப்பாடு நூலில்; காணப்படும் ஜெயமோகனுக்கும் நான் பார்த்த ஜெயமோகனுக்கும் துளியும் வித்தியாசம் தெரியவில்லை.
சிறுவயதில் தந்தையுடன் கோபித்துக்கொண்டு சென்ற கதை முதலாவதாகவும் – பின்பு தலித் நண்பனை பாதுகாப்பதற்காக ஊரைவிட்டு ஓடி வடஇந்தியா செல்வதும் அங்கு அவர் கண்டவிடயங்களும் யதார்த்தமாக விபரிக்கப்படுகிறது.
முதல் வாசிப்பில் என்னைக்கவர்ந்த பகுதிகள் சென்னையில் அவர் வசித்த காலங்கள். நானும் எண்பதுகளில் சென்னையில் பார்த்த காட்சிகள் மனதில் வந்து போனது. நான் பார்த்த இடங்கள் தென் மற்றும் மத்திய சென்னை ஓரளவு மத்தியதரவர்க்கத்தினர் வசிக்கும் பிரதேசம்.
ஆங்காங்கு குடிசைகள சென்னையில் பார்த்தாலும் அதற்கு மாறுபட்டது ஜெயமோகனது விவரிப்பு. சென்னையின் விளிம்பு நிலை மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் மனக்கண்ணில் கொண்டுவந்தது.
இரண்டாவது தடவையாக இந்நூலை வாசித்தபோது வட இந்தியாவில் அவரது அனுபவங்கள் பம்பாயி;ல் சாந்தாராம் என்ற நூலில் அவுஸ்திரேலியரது அனுபவத்தை ஒத்திருந்தன. வட இந்திய நகரங்களான காசி ரிஷிகேசம் என்பன பற்றிய விவரிப்பு மிகவும் சுவையாக அதேநேரத்தில் வாசிப்பவரை அந்த வாழ்வோடு அழைத்துச்செல்வதாக அமைந்துள்ளது.
ஜெயமோகன் தனது தலித் நண்பனின் ஊருக்குச் சென்றபோது அவனது பெற்றோர்கள் ஆரம்பத்தில் ஜெயமோகனை வெறுப்புடன் ;எதிர்கொள்வது கிராமங்களில் சாதிப்பிரிவுகள் எப்படி மனிதர்களின் அடிப்படையான குணங்களாக மாறி பாதரசகழிவு சேரும் கடலில் வாழும் மீனைப்போல் நஞ்சு கலந்த கலாச்சாரமாகிவிடுகிறது என்பதை உணர்த்துகிறது.
அந்தக் கலாச்சார கூறுகள் தலைமுறையாக கடத்தப்பட்டு மனித மனங்களில் ஊறி விஷமாகியிருப்பதும் அதுவே மனச்சாட்சி என்ற படிமமாக வெளிவருகிறது.
ஒவ்வொரு சாதியினரதும் மனச்சாட்சி வேறுபடுகிறது. தேவரின் மனச்சாட்சி பிள்ளைமாரின் மனச்சாட்சியல் இருந்து வேறுபடுகிறது. ஆதேபோல் இந்துவின் மனச்சாட்சியும் ஓரு இஸ்லாமியனில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் மனச்சாட்சி அந்த சமூகத்தில் அவர்கள் வாழ உதவுகிறது என்பது மட்டுமே உண்மை. ஆனால் தோழமை காதல் என்பது ஏற்படும்போது ஏற்படும் மன உணர்வு காலம்காலமாக இருந்த மனச்சாட்சியை வெல்லுகிறது.
காதல் தோழமை அடிப்படையான உணர்வுகள். அவை மதம் சாதி என்பவற்றிற்கு முன்னானவை .. இதற்கு எனது வாழ்க்கையிலும் எடுத்துகாட்டுகள் இருக்கின்றன. இலங்கையில் சிங்களவர்கள் தமிழரை தாக்கிய காலத்தில் என்னை பாதுகாத்த எனது சிங்கள நண்பர்கள்; உன்னை மாதிரி தமிழர்கள் எல்லோரும் இருந்தால் பிரச்சினை இல்லை என்றார்கள். நான் அதற்கு என்னைமட்டும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். மற்றவர்களையும் நீங்கள் அவ்வாறு தெரிந்து கொள்ளும்போதுதான் அவர்களும் என்னைப்போன்றவர்களே என்பது புரியும் என்றேன். இதை எனது முதல் நாவலான வண்ணாத்திக்குளத்தில் பதிவு செய்துள்ளேன்.
நட்பு என்பது சாதிமதம் போன்ற சகல சமூக வேறுபாடுகளையும் ஊடுருவும் என்பதை புறப்பாடு நூலில் தலித் நண்பனுடன் ஊரைத்தாண்டி ஓடும்போது புரிந்து கொள்ளலாம். அந்தப்பகுதிகள் யதார்த்த சினிமாவாக எனது கண்ணில் விரிந்தது.
காசி மற்றும் ரிஷிகேசம் போன்றவற்றில் நடப்பதை படிக்கும்போது பின்வரும் சிந்தனை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
‘சமூகத்தில் ஆன்மீக நம்பிக்கையில் மதநம்பிக்கை உருவானது. ஆனால் அது பலமாக ஊடுருவும்போது பெரிய உலகம் முழுவதும் பரந்த கோப்பரேட் கம்பனிபோல் வளர்ந்து விடுகிறது. பலருக்கு இது கட்டுப்பாடற்ற வர்த்தக மையமாகிறது. ஏராளமான பணம் புரளும் பாரிய நியூயோர்க் பங்குச் சந்தைபோன்றது. இந்தியாவில் இந்துமதம் என்பது அமெரிக்காவின் முதலாளித்துவம் போன்றது. இதை நம்பி பலகோடி மக்களின் வயிறுகள்; காத்திருக்கின்றன. இந்தப் பொருளாதார சந்தை மட்டுமே ஓர் இரவில் ஏதாவது நடந்து மறைந்தால் பல கோடிக்கணக்கில் மனிதர்கள் வருமானமின்றி தவிக்கவேண்டும்.’
சென்னை பதிப்பாளர்கள் வேலை செய்யும் இடத்து அனுபவங்கள் தமிழ்நாட்டில் துப்பறியும் சமய சோதிட மற்றும் காம சம்பந்தமான புத்தகங்கள் வெளிவருவதன் சூட்சுமம் பற்றிய எனது அறிவை தெளிவாகியது.
மேற்கத்தைய நாடுகளில் சுயசரிதை எனும்போது நேர்மையாக எல்லாவற்றையும் நேரடியான மொழியில் எழுதுவார்கள். அதேநேரத்தில் எண்ணங்கள் (memoirs)என்றால் அதில் தெரிந்து எடுத்து வெளியே சொல்ல வேண்டியது மட்டும் இருக்கும். அங்கு தனிப்பட்ட விடயங்கள் மறைக்கப்பட்டாலும் எழுதியவற்றில் எதுவித கற்பனையும் இராது என எண்ணுவோம்.
புறப்பாடு என்ற நூல் ஜெயமோகன் என்ற மிகமுக்கியம் வாய்ந்த தமிழ் இலக்கியகர்த்தா ஒருவரின் இளம்வாழ்க்கையை அறிந்து கொள்ள ஒருவர் படிக்கும்போது புனைவுகள் கலந்தது என கருதும்பொழுது பாலில் தண்ணீர் கலந்தது என்ற சிந்தனையும் வருவது தவிர்க்கமுடியாதது. சம்பவங்களுக்கு புனைவு மொழியை அவர் பயன்படுத்தியிருப்பதனால் புனைவு கலந்தது என எழுதியிருக்கிறர் என நினைக்கிறேன்.
தமிழ் இலக்கியத்தில் கவிதை சிறுகதை நாவல் என்பவற்றுக்கு அப்பால் சுயசரிதை பயண இலக்கியங்கள் மிகவும் குறைவானவை.
புறப்பாடு என்ற சுயசரிதை நூல் மிகவும் முக்கியமானது என கருதுகின்றேன்.
- நுடக்குரங்கு
- பசலை பூத்தே…
- அவருக்கென்று ஒரு மனம்
- பாவண்ணன் கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 18
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு
- தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு
- மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு
- அலைகள்
- தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90
- காத்திருத்தலின் வலி
- பாஞ்சாலியின் புலம்பல்
- கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’
- நுனிப்புல் மேய்ச்சல்
- வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.
- வல்லானை கொன்றான்
- ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
- 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி
- இரா. நடராசனுக்கு ‘சாகித்ய அகடமி’ விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 19
- ஜெயமோகனின் புறப்பாடு
- ஆனந்த் பவன் [நாடகம்] வையவன், சென்னை காட்சி : 3
ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல.
அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்.
அவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர்.
நாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா கண்டத்துக்கு அவர் ஒரு பயணியாக வந்து எழுதிய புல்வெளி தேசம் மிகவும் முக்கியமான நூல். தமிழில் பயண இலக்கியம் எழுதுபவர்களுக்கு அதனை முன்மாதிரியாகவும் கொள்ளலாம்.
அவர் ஈழத்து இலக்கிய உலகை கூர்ந்து அவதானித்தமையினால்தான் ஈழத்து மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தாம் வழங்கும் விஷ்ணுபுரம் விருதை பரிந்துரைத்து அவரை அழைத்து வழங்கினார். மேடைகளில் காற்றிலே இலக்கியப்பாலம் கட்டுவதாகச் சொல்பவர்களுக்கும் நிஜத்தில் அதனை அமைத்துக்காண்பித்தவர் ஜெயமோகன்.
அவரது புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை வாசகர்களை அந்த நூலுக்குள் நிச்சயம் அழைத்துச்செல்லும்.
முருகபூபதி
அவுஸ்திரேலியா
//அதனை முன்மாதிரியாகவும் கொள்ளலாம்.//
இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்மாதிரி இருக்கக்கூடாது. தன்வரலாற்று நூல்களும் இலக்கியப்படைப்புக்களே. அவற்றை படைப்பவர் தம் வழியேதான் எழுதவேண்டும். பயணக்கட்டுரையும் அவ்வாறே. ஒரு நாட்டிற்கு இருவர் செல்கிறார்கள். நாடு ஒன்றுதான் ஆனால் அவர்கள் பார்வை வெவ்வேறாக இருந்து இலக்கிய பயணக்கட்டுரையாக உருவாகும்போதுதான் இலக்கியம். இல்லாவிட்டால் குப்பைதான். ஒருத்தரை பார்த்து இன்னொருத்தர் காப்பிய்டியுங்கோ என்பது இங்கு செல்லாது. Variety is the very spice of life. அதைப்போல, Lifeline of literature is in its bewildering variety. தமிழ் இலக்கியம் முன்னுக்குப்பின் முரணாக ஓடட்டும்.
//விடைதெரியாத வினாக்கள் இவை.//
என்று எழதும் நடேசன் கொஞ்சம் பின்னர் இப்படி அவரே விடையையும் சொல்லிவிடுகிறார்:
//இலக்கியவாதி வெறும்;; கதைசொல்லியாக மட்டும் இராது சமூகத்தில் ஒரு அங்கமாகவும் இருந்து அந்த சமூகத்தில் காணப்படும் குறைகளை இடித்துரைக்கும் போது அவனுக்கு எதிரிகள் உருவாகுவார்கள்//
வினா: ஏன் ஜயமோஹன் பலரால் விமர்சனத்துக்குள்ளாகிறார்?
முதலில் தெரியவேண்டியது: இலக்கியம் என்றால் வெறும் கதை சொல்லல் மட்டுமன்று. இலக்கியம் என்பது பல வடிவங்களைக்கொண்டது: நாடகம்; சிறுகதை, நெடுங்கதை; குறுநாவல்; பெருநாவல்; தன்வரலாறுகள்; கட்டுரைகள். இவை போக எந்த பொருளையும் பற்றி – அது விஞ்ஞானமாக இருந்தாலும் கூட – அவை அப்பொருள் தொடர்பில்லாதோருக்கும் படிக்கும்போது இன்பமந்தரின் இலக்கியமாகும். காட்டுகள்: ஹக்சிலியின் விஞ்ஞானக்கட்டுரைகள்; கிப்பனின் உரோம வரலாறு; தத்துவம் கூட இலக்கியமாகும். ஜியார்ஜ் சான்டாயனா, ஸ்டூவர்ட் மில் போன்ற தத்துவாதிகளின் நூல்கள் படிக்கப்படிக்க இன்பம் தரும். கருத்துக்களை வைக்கும் மாண்பும், தரமும், நடையழகும் நம்மை ஈர்க்கும். இத்தனைக்கும் நாம் பாமரரே.
ஜயமோஹன் அவர் எழுதிய கதை இலக்கியத்தை வைத்து விமர்சனத்துக்குள்ளாக்கப்படவில்லை; காரணம்; அவர் கதைகள் ஒரு ஹை சொசிட்டி இரசிகர்களால் மட்டுமே படிக்கப்படுகின்றன. தாக்குதல்கள் அவரின் கதை இலக்கியத்தால் வரவில்லை. கட்டுரைகளினாலே வருகின்றன. இலக்கியவாதியென்றில்லாமல், ஒரு சமூக விமர்சகர் என்ற முறையில்தான் அவர் விமர்சனத்துக்குள்ளாகிறார்.
கட்டுரைகள் – அவை சமூகக்கட்டுரைகள்; அரசியல் கட்டுரைகள் – என்றால் அவரின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்ததே. அந்த நிலைபாட்டை அவர் முன்கூட்டியே முடிவுசெய்து எழுதிவிட மாற்றுக்கருத்துக்கொண்டோர் அவரை விரும்பார். தனக்குப்பிடித்தவை; பிடிக்காதவை என்று முன்பே ஒரு பட்டியல் வைத்து எழுதினால், அவருக்குப் பிடித்தவை எவருக்குப் பிடித்ததோ அவர்தானே விரும்புவார்? இல்லையா?
பல்கலைக்கழகங்களின் பணியாற்றும் தமிழறிஞர்களைப்பற்றி தொடர்கட்டுரைகள் தீராநதியில் வரைந்தார். அதைப்படித்தவுடன் எனக்குத் தெரிந்தது இவருக்குத் தமிழறிஞர்கள் மேல் வெறுப்பா? தமிழின் மீதா? மு.வ, மு.இராகவையங்கார், ந சஞ்சீவி, பண்டிதமணி, தேவனேயப்பாவாணர், கார்மேகக்கோனார், மறைமலை. எஸ் வையாபுரிப்பிள்ளை, சதாசிவப்பண்டாரத்தார், ரா. ராகவையங்கார், உ.வே.சா – போன்ற தமிழறிஞர்கள் பலகலைக்கழகங்களில் பணியாற்றியவர்கள். நமக்கு மனம் நோகத்தானே செய்யும்? அவர்கள் பெயரைச்சொல்லாவிட்டாலும் கூட. இன்று பணியாற்றுவோரையே அவர் வைத்துக்கொண்டாலும், அவர்களுள் மாபெரும் தமிழறிஞர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? அவர்களையும் பகடி பண்ணும்போது தமிழ் மொழியை விரும்புவோர் மனம் நோகத்தானே செய்வார்கள்?
தமிழ்வரலாறு என்ற சிறிய நூல் படைத்து, பாரதிதாசனுக்கு ஒரிரு வரிகள் வைத்து இறக்கிச்சொன்னால் (அதாவது அவர் திராவிட இயக்கத்தைச்சேர்ந்தவராம். இவருக்குப் பிடிக்காதாம்!) படிப்பவர் என்ன நினைப்பர்? பாரட்டுவரா? விமர்சிப்பரா?
இதைப்போல தி ஹிந்து தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரை: தமிழின் எழுத்துவடிவத்தை மாற்றவேண்டும் என்று. எதிர்ப்புக்கள் மழையாகக் கொட்டத்தொடங்கின. தமிழார்வலர்கள் பலர் நேரில் அத்தாளின் ஆசிரியரைக்கண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். சமீபத்தில், பெண் இலக்கியவாதிகளுக்கு எழுத வராது என்பது. அதாவது அவை இலக்கியமாகா. அனைத்துப்பெண்களுமே எதிர்த்தார்கள்.
இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள். இப்படி பலபல. இவை என் சொந்த எண்ண்ங்கள் அல்ல. என் எண்ணம் எவரும் எக்கருத்தையும் முன்வைக்கலாம் எனபதே. ஏன் அவருக்கு எதிர்தாக்குதல்கள் வருகின்றன என்பதையும் விளக்கவே எழுதினேன்.
ஐ.ஐ.எம். கணபதி ராமன் அவர்களே,
மிகவும் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்!
வணக்கம்!