ஜேம்ஸின் மலர்ச்சாலை

சபா.தயாபரன்
(பரிமாணம் பத்திரிகையில் பிரசுரமானது )

அப்போதெல்லாம் இரவுகள் துப்பாக்கிச் சத்தத்துடன்தான்  கழிந்தன. .சில  நேரங்களில்  பகலில் கூடதெருக்கள்  கூட  நிர்வாணமாகவே காணப்படும்.அந்த  மரணபயங்கள்  நிறைந்த  கால பொழுதுகளில்  ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரேதப்  பெட்டிக்கான தேவை என்ற எண்ணமே நிர்ப்பந்தமாக   மனதளவில்  நிறைந்தே இருந்தது. எப்போதும் எங்கேயும்  நடக்கலாம் என்ற அச்சப்பாடு. பேரிடர் ஒன்று வருவதற்கான முன்னாயர்த்தமாகதிட்டமிடுதல் என்பது  இதுவாகத்தான் இருத்தல் வேண்டும்..

உலக மயமாக்கலின் அதிதீவிர செயற்பாடுகளுள் ஒன்றாகவே இதை கருத வேண்டியும்  உள்ளது.     பிரேதப்பெட்டிகளுக்கு  தட்டுப்பாடு  மிக அதிகமாகவே  இருந்தன என்பதே உண்மை. முன்கூட்டியே திட்டமிடுதல்என்பதற்காக  மலர்ச் சாலைகளில் பிரேதப் பெட்டிகளையுமா  ஊரவர்கள்  தங்கள் பெயர்களில்  பதிவு   செய்து வைக்க  முடியும் ..? 

சாந்தன் இறப்பும் அத்தோடு சேர்த்து  நடந்த அந்த துயர்  சம்பவங்களும்  நெஞ்சை ரணமாக்கிய மறக்கமுடியாத நிகழ்வுகள்தான். சாந்தனின் பிரேதத்தை பாடை கட்டித்தான்  தூக்கிச் சென்றார்கள் அவன் நண்பர்கள்.  அப்போது குண்டடிபட்டிருந்த    சாந்தனின்  தலையில்    இருந்து திடீரென்று   ரத்தம்  தண்ணீராய்  வழிந்தது.  தூக்கிச் சென்ற அவனின் நண்பர்களின்

உடம்பில்  பட்டு  தெறித்தது.  அவர்கள் சாந்தனின்  நண்பர்கள்தான் என்றாலும்  ரத்தம் என்பது  அதிலும் மனிதரத்தம்  என்பது  ஜீரணிக்க முடியாத  “சங்கடத்தை”  ஏற்படுத்தத்தானே  செய்யும். அந்த  நிதர்சனத்தை அந்தநண்பர்களின்  “சங்கடம்’ உணர்த்தவே செய்தது.

பிரேதப் பெட்டி  என்ற ஒன்றின் அவசியம் என்பது அந்தக் கணங்களில் தான் உணரப்பட்டது. அன்று  ஜேம்ஸ்தனது மலர்ச் சாலையை   மூடி விட்டு  வெளியூருக்கு  தன் காதல்   மனைவியின்  வேண்டுகோளைத் தட்டமுடியாமல்  உல்லாசப் பயணம்  போயிருந்தான்.

சாந்தனின் பிரேத ஊர்வல  வியாபாரம்  கைதவறிப் போன கவலை அவனுக்கு     சாந்தனின் இழப்பை  விடஜேம்ஸுக்கு மிக  முக்கியமாக இருந்தது. அவன்  ஒரு வியாபாரி .அவனுக்கு வியாபாரமே பிரதானம். 

ஜேம்ஸ்  ஒரு பெரிய  முதலாளியாக  தன்னை மாற்றிக் கொண்டு  வலம் வர  தொடங்கியிருந்தான். கடையை   பெரிசாக்கி  இருந்தான்.   ஊரில் தொடரந்து காரணமில்லாத  அநியாய இறப்புகள். அதனால் அவனின் காட்டில்மழை.  புது கார் வாங்கி இருந்தான்.பிரேதப்  பெட்டியோடு சேர்த்து காரையும் வாடகைக்கு விடத் தொடங்கினான்.வியாபாரத்தின் சுளிவு நெளிவுகள் அதன் நுணுக்கங்கள் நியையவே அவன் வசமாகி இருந்தன.   இதனால் பிரேதத்தை  தூக்குபவர்களுக்கு சாந்தனின் சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட அந்த”சங்கடங்கள்” இனியும்  ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

அவன்பக்கம் பலமாகவே வீசுகின்ற காற்றில்   நன்றாகவே  தூற்றிக் கொள்கிறான். ஒரு இறப்புக்கு என்று வாங்கும் வாடகை    உச்சத்தைத் தொட்டது. பேரம்  பேசேல்  அவனிடம் இல்லை.  அவன் சொன்னதே  வாடகை என்ற நிலை .அவன்தான் இந்த  வியாபாரத்தில்தனிக்காட்டு  ராஜாவாக  வலம் வந்து கொண்டிருந்தான் என்பதே யதார்த்த்தம். அவனின்   இந்த  மனோபாவம்  ஒருவிதஎதிர்ப்பலைகளை ஊருக்குள் ஏற்படுத்தி இருந்தது.  அது  பற்றி  அவன் கவலைப்படவில்லை. .  உயிருள்ள மனிதர்களை விட உயிரற்ற உடல்களே அவனின்   மூலதனம் . .பலருடன் அவன்  பேசுவதைத் தவிர்த்தான்..பிணங்களின் மீது அவன் வியாபாரம்  அமோகமாக  களை கட்டிக் கொண்டிருந்தது.

ஜேம்ஸின் போக்கில் பாரிய  மாற்றங்கள் ஏற்படத்தொடங்கி இருந்தன. வியாபார லாபம் ஒன்றிற்காக எதையும் செய்யலாம் என்ற நிலையில் அவன் இருந்தான். 

இரவில் கேட்கும் துப்பாக்கிச் சத்தங்கள்…அதில் ஒரு ரவை  கூட வீணாகி விடக் கூடாது என்பது  ஜேம்ஸின் ஆதங்க மாக இருந்தது.  பட்ட குண்டு எது  படாத குண்டு  என்பதை  அவை எழுப்பும் சத்தத்தை வைத்தேகணக்கிட்டுச்  சொல்லும்  அபார திறமை அவனிடம் இருந்தது.

குண்டுகள் படாமல் போகும்போது அவனிடமிருந்து  எரிச்சல் வெளிப்படும். “  சே என்ன இப்படி சுடுகிறானுகள்  இவனுகள் என்று பியரின் போதையிலும்    சொல்லி சலித்துக்  கொள்வான் என்பது அவனின் கடையில் வேலைசெய்யும்.அல்பேர்ட்டினால் கசிந்த செய்தி.  பிரேதங்களின் மீதான வருமானம் அவனை ஒரு விக்கிற புத்தி உள்ளவனாக மாற்றியிருந்தது.

அன்று இரவு மலை பெய்து ஓய்ந்த கும்மிருட்டு     வழமைக்கு மாறாக  நிறையவே   துப்பாக்கிச் சத்தங்கள் அந்த இரவை கிழித்துக் கொண்டிருந்தது.

இரண்டு   பியர்  போத்தலை  காலி செய்து  கொண்டிருந்த  ஜேம்ஸ்  குண்டுகளின்  எண்ணிக்கையை அந்தபோதையிலும் எது பட குண்டு படாத குண்டு என்று  கணக்கிட்டுக்கொண்டான். நாளைக்கு  எப்படியும்     வியாபாரம்  களை கட்டத்தான் போகிறது  என்ற நம்பிக்கை அவனுக்கு.

கடையில் வேலை செய்யும் அல்பேர்ட்டுக்கு போன் பண்ணினான்.” நாளைக்கு காலையில நேரத்தோடு வந்திடு பிந்திராத..நிறைய வேலை இருக்கு”

ஜேம்ஸின் கணிப்புகள் எப்போதும்  பொய்ப்பதில்லை. தான்  ஒரு “பிஸ்னஸ்  மக்னற்”. என்ற நின்னைப்பில் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கடையைத் திறக்க வேணும்  என்று  நினைத்தவனாக  நான்கரைமணிக்கெல்லாம்  வீட்டை  விட்டு  மோட்டார்  சைக்கிளில்  புறப்படுகிறான்  ஜேம்ஸ்.

அவனைப் பொறுத்தளவில் அந்த அதிகாலை  நேர  பயணம் அவனுக்கு ஆபத்தானது இல்லை என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. காரணம்  அவனது நண்பர்களாகிப்  போயிருந்த “அவர்கள்”.  “அவர்களை” ஜேம்ஸ் உபசரித்த விதம். 

இரவு குடித்த பியரின் மயக்கம் வேறு.மோட்டார் சைக்கிளின் வேகம் அவனை அறியாமலே கூடிக்கொண்டுசென்றது.மூன்று கனரக வாகனங்கள்  அவனை எதிர்த்தாற் போல் வந்து  கொண்டிருந்தன 

மோட்டார் சைக்கிள் முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்கள் மீதான நட்பும் அவனது உபசரிப்பினால் ஏற்பட்ட  நம்பிக்கையும்  அந்த கணங்களில் உள்ள   இருண்மையை  அவனால் புரிந்து கொள்ள  முடியாதிருந்தது.  

பிரகாசமான  வெளிச்சத்துடன் வந்த வாகனத்தின் விளக்குகள் திடீரென்று அணைக்கப் பட்டு   ஜேம்ஸின் மோட்டார்  சைக்கிளின்  ஒளி மட்டுமே தெரிகிறது.

இடியோசைகளாய்  துப்பாக்கி வேட்டுக்கள் .அந்தபிரதேசமே அலறியது.ஜேம்ஸின் இலக்கணப்படி அத்தனையும் குறி தவறாமல்  பட்ட குண்டுகள்.

அதிகாலை மங்கிய வெளிச்சத்தில் ஜேம்ஸ் ரத்த வெள்ளத்தில் வீந்து கிடந்தான் .  தலையில் இருந்து தண்ணீராய்  ரத்தம்   வழிந்தோடியபடி…அவனின் உயிரற்ற உடல்.

ஜேம்ஸின்  பிரேதத்தை  தூக்கிச்  செல்பவர்களுக்கு “சங்கடம்”ஏற்படாமல்    இருக்க ஒரு பிரேதப் பெட்டி  அவனுக்கு     கிடைக்குமா இல்லையா என்பது அவனின் உதவியாளனாக அல்பேர்ட்டுக்கு  மட்டுமே தெரியும்.

Series Navigationபுலரட்டும் புதுவாழ்வுயதார்த்தம்