தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்

 

                   என்றுமாதிரம் எட்டினும் சென்று சென்று

                          எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன

                  சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய

                        சேடன் தெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.             271

 

[மாதிரம்=திசைகள்; தம்பிரான்=யானைகள் தலைவன்; சேகை=படுக்கை; சேடன்=ஆதிசேடன்; தெவ்வு=பகை]

 

வந்த யானைப்படைகளில் உள்ள ஒரு யானையே யுக முடிவில் திக்கயங்கள் எட்டிற்கும் பதிலாகத் தனியாக அண்டம் முழுவதையும் காக்கும் வல்லமை உடையதாகும். திருமால் பள்ளி கொண்டுள்ள  ஆதிசேடன் பகை கொண்டால் இவற்றில் ஒரு யானையே பூமியைத் தாங்கும் வலிமை கொண்டதாகும்.

                  விலங்கல் ஏழில் தடத்தும் குலநதி

வேலை ஏழினும் நீர்க்கு விடுவன

பொலங்கல் மேருகிரிச் சிகரந்தொறும்

போகவிட்ட சிந்தூரப் பொடியன.                   272

 

[விலங்கல்=மலை; தடம்=குளம்; வேலை=கடல்; பொலங்கல்=பொன்மயமான மேரு; கிரி=மலை; சிந்தூரப் பொடி=செஞ்சாந்துக் குழம்பு]

 

ஏழு மலைகளில் உள்ள குளங்களும், அந்த மலைகளில் உற்பத்தியாகி ஓடி வரும் ஆறுகளும், ஏழு கடல்களுமே இந்த யானைகள் நீராடும் இடங்கள். இவற்றின் நெற்றியிலிடப்பட்டுள்ள செஞ்சாந்துப் பொட்டின் துகள்கள் மேருமலையின் உச்சியில்தான் போய்ப் படியும். கீழே பூமியில் விழாதாம்.

                  மழவிற் பாற்கடல் மாந்தி வளர்ந்தன.

                        மதத்தில் அக்கடல் பால்முடை மாற்றின

                  முழவிற் பூரித்தகும்ப குடந்தொறும்

                        மூரி ஏழ்கடலும் தரும் மூக்கின.                  273

 

[மழம்=இளமை; மாந்தி=உண்டு;மதம்=மதநிர்; முடை=துர்நாற்றம்; முழவு=முரசு; புரித்த=பருத்த; கும்பகுடம்=மத்தகம்; மூரி=பெரிய; மூக்கின=துதிக்கை உடையன]

 

இந்த யானைகள் இளமையில் பாற்கடலின் பாலைக் குடித்து வளர்ந்தவை. பாற்கடலின் துர்நாற்றத்தைத் தம் மத்தகத்தின் மணத்தால் மாற்றியவை. முரசு போல் பருத்த மத்தகமாகிய குடத்துள் ஏழுகடல்களின் நீரையும் தம் துதிக்கையால் முகந்து நிறைக்கும் தன்மை உடையவை.

                  ஓடும் நான்கு பரூஉத்தாள் உடையன

                        உருத் தனித்தனி பாற்கடல் ஒப்பன

                  கோடு நான்கின செக்கர் முகத்தின

                        குஞ்சரம் பதினாயிரம் கோடியே.                   274 

 

[பரூஉ=பருத்த; தாள்=கால்; கோடு=தந்தம்; செக்கர்-சிவப்பு]

 

இந்த யானைகள் விரைந்து ஓடும் நான்கு பெரிய பருத்த கால்கள் உடையன. ஒவ்வொன்றும் பெரிய பாற்கடலைப் போல பெரிய வெண்ணிற உருவம் கொண்டவை. நான்கு தந்தங்கள் உடையன. சிவந்த நெற்றி உடையன. அவற்றி எண்ணிக்கை பதினாயிரம் கோடி ஆகும்.

            அப்பெரும் புரவித்தொகை மேலும் நீடு

                  ஆடகக் கொடி ஆடுபொன் தேரினும்

எப்பெரும் களிற்று ஈட்டத்தின் மேலினும்

                  எண்ணில் கோடி நாராயணர் ஏறவே.                    275

 

[புரவி=குதிரை; களிறு=யானை; ஈட்டம்=கூட்டம்; நாராயணர்=திருமாலின் உறவினர்]  

 

பெரிய குதிரைகள் மீதும், நீண்ட கொடிகள் அசைந்தாடும் பொன் தேர் மேலும் பெரிய பெரிய யானைகள் மீதமர்ந்தும் எண்ணிலடங்காத கோடி கோடி நாராயணர்கள் வந்தனர்.    

            முகடுவிண்ட பழஅண்ட கோளமும்

                  முன்னை மேருவும் இட்டுருக்கிப்பெருந்

            தகடு செய்து கொண்டொப்பவும் இட்டன

                  சாத்தும் பீதகஆடை தயங்கவே.                         276

 

[முகடு=உச்சி; விண்ட=உடைந்த; பீதகஆடை=பொன்னிழைத்த ஆடை]

 

வானமுகடு கிழிபட உயர்ந்த பழைய அண்ட கோளங்களையும், பொன்மலை மகா மேருவையும் உடைத்துத்தட்டி  உருக்கிப் பொன்னால் ஒரு தகடு செய்தது போல விளங்கும் பட்டுப் பொன்னாடை விளங்க;

            பொங்கலங்கல் வருணன் உரம்புகப்

                  பொருப்பு மத்தம் திரித்த பொழுதெழும்

            செங்கலங்கல் பரந்தெனப் பாஅற்கடல்

                  செய்யவந்த கவுத்துவம் சேர்த்தியே.                    277    

 

[பொங்கலங்கல்=விளங்கும் மாலை; உரம்=மார்பு; பொருப்பு=மாலை; திரிதல்=கடைதல்; சேப்ப=சிவக்க; கவுத்துவம்=பாற்கடலைக் கடந்தபோது தோன்றிய மணி]

 

பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய கவுத்துவமணியை மாலையாக அணிந்ததால் அதன் நிறத்தால் வெண்ணிறமான பாற்கடலே செந்நிறமாக மாறியதோ எனத் தோன்றியது.

                  அரிசெய் நாட்டத்து அரவிந்த வாள்நுதல்

                        அம்மணிக் கெதிராக வந்து ஆகத்தின்

                  எரிசெய் தாமரைப்பூவிட்டு இலையிலே

                        இருந்த தென்ன எதிர்வீற் றிருப்பதுவே.           278

 

[அரி=செவ்வரி; நாட்டம்=கண்; அரவிஎதம்=தாமரை; நுதல்=நெற்றி; ஆகம்=உடம்பு; எரிசெய்=ஒளிவீசும்]

 

மார்பில் ஒளி வீசும் கவுத்துவமணியை அடுத்து செவ்வரி படர்ந்த அழகிய கண்களாகிய ஒளிவிசும் செந்தமரையை விட்டு, அழகிய நெற்றி உடைய திருமகள் தாமரை இலைமேல் அமர்ந்ததைப் போல எழுந்தருள் செய்யவும்,

            காலை சூழ்செங் கதிர்முதலாயின

                  கமலக் காடன்ன கண்ணன் கமழ்துழாய்

            மாலை சூழ்முடி சூழ்வருதற்கு ஒளி

                  மழுங்கி மேருகிரி சூழ்வருவதே.                         279

[கமலக்காடு=தாமரைக்காடு; துழாதுளசி[ மழுங்கி=மங்கி]

                    

காலையில் தோன்றும் செங்கதிர், மற்றும் சந்திரன், முதலான கோள்கள் எல்லாம் செந்தாமரைக் காடொத்த கண்ணன் தம் துளசிமாலை அணிந்துள்ள திருமுடியில் அணிந்துள்ள மணிகளின் ஒளியால் தங்கள் ஒளி மங்கிவிடும் எனக்கருதி, இப்பெருமானைச் சுற்றி வராது,  மேருமலையைச் சுற்றிக்கொண்டு அவை செல்லும்

            நதிக்குப் போதஒழுகும் முத்தாரமும்

                  நகைசெய் வச்சிர நாயக மாலையும்

            மதிக்குப் புன்மறு வாய்த்தெனத் தன்திரு

                  மரகதப் பெருஞ்சோதிமெய் வாய்ப்பவே.                 280

 

[நசை=ஒளி; வச்சிர=வயிர; மதி=நிலவு; புன்மறு சிறு களங்கம்; மரகதம்=பச்சைமணிக்கல்]

 

ஆற்றொழுக்குப் போல அசைந்தாடும் முத்துமாலைகளும், ஒளிசெய்யும் வைர மாலைலகளும், நிலவைப் போல ஒளிவீச அந்நிலவில் காணப்படும் களங்கம் என்று சொல்வதுபோல திருமாலின் மேனி பச்சை மரகத ஒளி விசித் திகழும்

Series Navigationவாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்நரகமேடு!