தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்

 

            அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும்

                  ஆதிக் காதல்கூர் ஆயிரம் பேரிதழ்

            உந்திச் செந்தனித் தாமரை தாள்மலர்

                  ஊடி ருந்த குரிசிலோ டோங்கவே.                     281

 

[அந்தி=மாலைப் பொழுது; ஆதி=பிரமன்; உந்தி=தொப்பூழ்; குரிசில்=பிரமன்]          

 

அந்தி மாலை போல் சிவந்த திருமேனி உடைய மூன்று கண்களில் சுடர் வீசும் சிவபெருமான், பழங்காலத்தில் மோகினியாய் அன்போடு பார்த்த திருமாலின் கொப்பூழில்   தோன்றிய பிரமனோடும்

 

            திறத்து மாலைத் திருமுடிப் பக்கமே

                  சென்றகன்ற பணங்களம் சேடனும்

            புறத்தும் ஆயிரம் வெள்இதழால் ஒரு

                  புண்டரீகமும் அண்ணலும் போலவே.   282

 

[திறம்=ஒழுங்கு; திருமுடி=தலை; பணம்=பாம்பின் படம்; புண்டரீகம்=தாமரை; அண்ணல்=பிரமன்]

 

அழகிய மாலைகள் அணிந்த தலையின் பக்கமாக, ஆதிசேடனின் ஆயிரம் படங்கள் விரித்தபடி இருக்கும். திருமாலின் உந்தித்தமாரையில் பிரமன் எழுந்தருளி இருப்பதைப் போலத் தலைப்பக்கம் ஒரு பிரமன் இருப்பது போல அது தோன்றும்.                 

            பெயர்த்து ஓரடித் தாமரைத் தாள்விடப்

                  பெரும்பொற் கோள்கைபண்டு பிளந்தற்கு

            உயர்த்தது ஓர்வெள்ளி அண்ட கபாலம்ஒத்து

                  ஒருதனிக் கொற்ற வெண்குடை ஒக்கவே.                283

 

[தாள்=கால்; பொற்கோள்கை= வானப் பொன்னுலகு; அண்டகபாலம்=வான் முகடு; கொற்றம்=அரசு]

 

வாமனாவதார காலத்தில் ஈரடியால் இவ்வுலகை அளந்த போது தூக்கிய திருவடியால் உடைபட்டுப் பிளந்த வானவர் பொன்னுலகை மூடுவதற்காக விரித்தது போல, மேலே வெண்கொற்றக் குடை விளங்கவும்,

                  திரண்டு வந்த வராமிந்த சீகரம்

                        சிதறவீசித் திருபாற் கடல்திரை

                  இரண்டு வந்தன எங்கும் விடாஎன

                        இருமருங்கும் கவரி இரட்டவே.                  284

 

[வராமிர்தம்=மேலான அமுதம்; சீகரம்=துளி; திரை=அலை; மருங்கு=பக்கம்; கவரி=சாமரம்; இரட்ட=அசைய]

 

அமுதத்துளிகளை அள்ளித் தெளித்தபடித் திருப்பாற்கடல் அலைகள் இரண்டு வந்தது போல, இரு பக்கமும் வெண்சாமரம் வீசவும்;

                  வாளும் வில்லும் திகிரியும் தண்டமும்

                        வளையும் என்ற கிளைபுரம் சூழ்வர

                  ஆளும் ஐம்படையும் புடைசூழவந்து

                        அம்பரப் பரப்பு எங்கும் அடைப்பவே.               285

 

[திகிரி=சக்கரம்; வளை=சங்கு; கிளைபுரம்=படை வீர்ர்கள் பக்கம்; அம்பரம்=ஆகாயம்]

 

வாள், வில் சக்கரம், தண்டாயுதம், சங்கு என்னும் ஆயுதங்கள் ஏந்திய படை வீர்ர்கள் ஆகாய வீதி எல்லாம் அடைபடச் சூழ்ந்து வந்தனர்.

                  வயங்கும் ஈர்உரு வண்ணக் கலுழன்மேல்

                        வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன்

                  இயங்கும் மேருகிரி சிகரத்தில் ஓர்

இந்திர நீலகிரிபோன் றிருப்பதுவே.                  286  

 

[ஈர்=இரண்டு; உருவண்னம்=நிற வடிவம்; கலுழன்=கருடன்]

 

இரு நிறம் கொண்டு விளங்கும் கருடன் மீதமர்ந்து வளரும் அலைகளுடைய திருப்பாற்கடல் வறண்டு போக, பொன்மேருமலை உச்சியில் ஒரு இந்திர நீலமலை வந்தமர்ந்தது போல திருமால் யாகம் நடக்கும் இடத்தை வந்தடைந்தார்.

                  இப்பரிசு வேள்வி புரிதாதை செயல் எல்லாம்

                  ஒப்பரிய நாயகி உணர்ந்தனள் உணர்ந்தே.                 287

 

[பரிசு=தன்மை; தாதை=தந்தை]

 

இத்தன்மையுள்ள ஒரு வேள்வியை தம் தந்தையான தக்கன் சிவ பெருமானை அழைக்காமல் செய்ய முற்பட்டதை ஒப்புமை இல்லாத உமாதேவியார் அறிந்தார்

                  ”எந்தைபுரி வேள்வியிடை யானும் விடைகொள்ளத்

                  தந்தருள்க” என்றனள் பணிந்திறைவர் தாளே.            288

 

தந்தை செய்யும் வேள்வி பற்றி அறிந்த உமையவள் “என் தந்தை செய்யும், இந்த வேள்வியினில் நான் கலந்து கொள்ள விடை தந்தருள்க” என சிவபிரானிடம் வேண்டினார்.

                  விண்ணவர்கள் மேலும் அயன்மேலும் அரிமேலும்

                  கண்ணுதல் முதற்கடவுளும் கருணை வைத்தே.         289

 

[அயன்=பிரமன்; அரி=திருமால்; நுதல்=நெற்றி]

 

வானுலகத் தேவர்களூக்கும், பிரமனுக்கும், திருமாலுக்கும், நெற்றி கண்ணுடைய முழுமுதற் கடவுளான சிவபிரான் அன்பு கொண்டு அறிவு புகட்ட நினைத்தவராய்;

                  ”அழைத்திலன் அதற்கு அகல்வது எனகொல்” என ஐயன்

                  ”பிழைத்த  பொறுத்தருள்க” என்றனள் பெயர்ந்தே.         290

 

[அகல்வது போவது; பிழைத்தன=செய்த தவறை]

 

”உன் தந்தை அழைக்காதபோது நீ அங்கே செல்லலாமா” என சிவபெருமான் கேட்க, உமையவள், “ தந்தை செய்தது தவறுதான் எனினும் அதை நீங்கள் பொறுத்தருள வேண்டும்” என்றார்

Series Navigationசிகப்பு புளியங்காகவிதையும் ரசனையும் – 18 நாரணோ ஜெயராமன்