தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்

                                                  

             கொம்மை முலைமருங்கு எழுவர் குமரிமார்

             தம்மை இடுகபேய் என்று சாடியே.                      [351.

[கொம்மை=பருத்த; மருங்கு=பக்கம்]

அப்படை தேவியைக் கண்டு பணிந்து, “பக்கங்களில் பருத்த மார்புகள் கொண்ட ஏழு கன்னியர் கொண்ட படையைப் பணிசெய்ய அருளுக” என்று வேண்டிக் கொண்டன.

  படைவிடா விசும்பாளரைப் பறித்து

இடைவிடா விமானங்கள் ஏறியே.                                  [352]

வானத்தில் இந்த வேள்விக்குப் பாதுகாப்பாக இருக்கும் வானுலகத்தவரைத் தாக்கி

அவர்கள் விமாங்களைக் கைப்பற்றிக்கொண்டு அவ்விமானங்களில் இவை ஏறின.

அகலிடம் தொழும் துவாத சாதித்தர்

புகலிடம் பொடி செய்து போக்கியே.                         [354]

 

அகலிடம்=அகன்ற இடம்; துவாதச ஆதித்தர்=பன்னிரண்டு சூரியர்; தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டா]

அகன்ற உலகங்கள் எல்லாம் வணங்கித் துதிக்கம் பன்னிரண்டு சூரியர் குடிகொண்ட இடங்களை எல்லாம் பொடியாகும்படி இடித்துத் தூளாக்கியும்,

போழும் மின்னின்மின் புகுந்தெழுந்து கீழ்

வீழும் முன்பிடித்து இடி விழுங்கியே.                  [355]

 

[போழும்=கீழிறங்கும்]

பூதப்படையானது வானத்திலிருந்து இறங்கும் மின்னல்களை அவை கீழே விழும் முன்பே பாய்ந்தெழுந்து அவற்றைப் பிடித்து விழுங்கும்

பூதம் யாவையும் புகவிழுங்குமா

ஓதம் யாவையும்தேடி ஓடியே.  [356]

                           

                                                                                       [மாஓதம்=பெருவெள்ளம்]

பூதகணங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களையும் விழுங்க நினைக்கும். ஆனால் அவை ஊழிக்காலத்தின் பெருவெள்ளத்தால் அழிய வேண்டுவன ஆயிற்றே என்றெண்ணி வேறு ஏதேனும் செய்ய இயலுமா என அங்குமிங்கும் தேடி ஓடும்.

இந்து காந்தக் கிரியை இடக்.கண்ணால்

வந்து காந்தக் கடல் செய்து மாந்தியே                           [357]

 

[மாந்தி=குடித்து]

பூதகணங்கள் சந்திரகாந்த மலையைத் தம் இடது கண்ணால் உருக்கி அப்பொழுது பெருகும் கடல் போன்ற நீரைக் குடிக்கும்.  சந்திரகாந்தம் நிலவொளியில் உருகும் தன்மை கொண்டது. சிவபெருமானின் வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். ஆகவே இடது கண்ணின் குளிர்ச்சியால் சந்திரகாந்தம் உருகிற்று.

முதிய வானமீன் வாரி முக்கிவான்

நதிய வானமீன் முழுகி நாடியே.                         [358]

[வாரி=அள்ளி; முக்கி=அழுத்தி; வானமீன்=வானின் நட்சத்திரங்கள்; வானமீன்=ஆகாய கங்கை]

நெடுங்காலமாக வானத்தில் இருக்கின்ற நடசத்திரங்களை எல்லாம் அள்ளிக் கடலில் அழுந்தச் செய்துவிட்டு, ஆகாயகங்கையில் உள்ள மீன்களை எல்லாம் உண்பதற்காக அப்பூதப்படை பிடிக்கும்.

கடவுள் நீலிஊர் கைப்படுத்து

அடவி வாரிமால் யானை வாரியே. [359]

 

[நீலி=துர்க்கை; யாளி=சிங்கமும், யானையும் சேர்ந்த உருவம்; கைக்கொண்டு= கைப்படுத்தி; அடவி=காடு; மால்=பெரிய; வாரி=கடல்]

துர்க்கைக் கடவுளின் வாகனம் யாளி என்பதால் அவற்றைத் தம் படைகளில் சேர்த்துக் கொண்டு யானைக் கூட்டங்களை வாரி எடுத்துப் பூதப்படைகள் கடலில் வீசினவாம்.

செலல்வி லங்குதேன் மடை தெவிட்டிஏழ்

குல விலங்கலும் பாதி குன்றவே.                               [360]

 

[செலல்=செல்லும்; விலங்கு=தடை; ஏழ்குல விலங்கல்=ஏழு மலைத் தொடர்கள்; அவையாவன= கயிலை, இமயம்; மந்தரம். விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமானம்]

பூதப்படைகள் அவை செல்லும் வழியில் தடைகளாக உள்ள ஏழு மலைத்தொடர்களில் உள்ள தேனை வேண்டிய மட்டும் குடித்துவிட்டு, அம்மலைகளை அழகிழக்கச் செய்துவிட்டன.

Series Navigationஅழகியலும் அழுகுணியியலும் வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்