தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

Spread the love

 

 

                                              வளவ. துரையன்

 

 

ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள்

அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர்

சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச்

செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே.      [401]

 

[வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி; அசலம்=மலை]

 

பூதகணங்களில் சில யானைகள் ஆயின; சில பாய்ந்தோடும் குதிரைகள் ஆயின; சில ஆயுதங்கள் மற்றும் போர்க்கருவிகள் ஆயின; சில மலை போன்ற தேர்கள் ஆயின; சில காலாட் படைகள் ஆயின; இவற்றை நடத்திச் செல்வது யார் என்னும் நிலையில் அவையே தானைத் தலைவர்களுமாயினவாம்.

 

அங்கண் நாரணர் பயோத்தியும் இல்லை மகனார்

அம்புயாதனமும் இல்லை அவர்கட்கு அரியராம்

எங்கள் நாயகர் திருக்கயிலை வெற்பும் உளதோ!

இல்லையோ பிறபுலங்களை இயம்புகிலமே.                 [402]

 

[அங்கண்=அவ்விடம்; பயோத்தி=பாற்கடல்; அம்புயாதனம்=தாமரை;

அரியர்=அருமையானவர்; வெற்பு=மலை; புலம்=இடம்]

 

அங்கே திருப்பாற்கடலில் திருமால் இல்லை. அவருடைய மகனார் பிரமனின் தாமரை ஆசனமும் இல்லை; அவர்களுக்கெல்லாம் அரியராம் சிவபிரானின் திருக்கயிலாய மலை உள்ளதோ இல்லையோ யார் அறிவார்? இவையே

இப்படி என்றால் மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

 

கால் எழுந்தபொழுதோ! கடல் எழுந்தபொழுதோ!

கனல் எழுந்தபொழுதோ! கயிலையொளி கடகம்

மேல் எழுந்தபொழுதோ! பிரமர் அண்ட கடகம்

விண்டுஉடைந்தில பெருந்தகிரி வெற்பு உடையவே.            [403]

 

[கால்=காற்று; கடகம்=கோளம்; விண்டு=பிளந்து; பெருந்தகிரி வெற்பு=உலகைச் சூழ்ந்துள்ள பெரிய சக்கரவாளக் கிரி]

 

இப்படைகள் கிளம்பிய காலம் ஊழிக்காற்று எழுவதும், கடல் பொங்கி எழுவதும், ஊழிப் பெருந் தீ பற்றி எழுவதும், சிவபெருமான் ஊழிக் கூத்து நிகழ்த்துமான காலமன்று. அதனால் பிரம்ம கோளமும் சக்கரவாள கிரியும் உடையாமல் தப்பின.

            புத்தர்போதி  அருகந்தர்கள் அசோகு திருமால்

                  புகுதும்ஆல் சதமகன்சுர தருக்கள் பொருளோ!

            ஏத்தரா தலமும் நீழல்இடும் ஏழ்பொழிலும்நேர்

                  எழுவிலங்களும் நேரடி எழுந்து இடறவே.                 404

 

[போதி=அரச மரம்; அருகந்தர்=சமணர்; புகுதும்=இருக்கும்; சதமகன்=இந்திரன்; சுரதரு=வானுலுக மரம்; தராதரம்=உலகம்]

 

புத்தர்கள் போற்றும் அரச மரங்களும், சமணர்களின் அசோக மரங்களும், திருமால் பள்ளி கொள்ளும் ஆலமரங்களும் இந்திரனின் இந்திர லோகத்தில் இருக்கும் கற்பக மரங்களும்,  ஒரு பொருட்டாகவே முடியாது. ஏன் தெரியுமா? எல்லா உலகங்களிலும் இருக்கின்ற நிழல் தரும் மரங்களும், ஏழு தீவுகளில் உள்ள ஏழு சோலைகளும், ஏழு மலைகளும், அடியோடு பெயர்ந்து காற்றில் பறக்கின்றனவே!

           

            விண்ணில் வந்தமழையும் பனியும் எவ்அடவியும்

                மிடைய வந்த தளிரும் துணரும்   வெற்பின்நடு ஏழ்

            மண்ணில் வந்தமணலும் பொடியும் வீரன் அவன்ஓர்

                    வடின் வந்த கழுதும் குறளும் ஆனபரிசே.         405

 

[அடவி=சோலை; மிடைய=நிறைய; தளிர்=இலை; துணர்=பூங்கொத்து; பொடி=தூசு; கழுது=பேய்; குறள்=பூதம்]

 

வானத்தில் இருந்து பொழிகின்ற மழைத்துளியும், பனியும், எல்லா மலர்ச்சோலைகளிலும் நிறைந்துள்ள, மலைகளில் எழும் மணலும், தூசியும் வீரபத்திரரின் பேய்க்கணங்களாக, பூதங்களாக மாறிவிட்டன் என்று சொல்லும் அளவிற்கு அவ்வீரர்களின் தோற்றம்.

                   

                

            பூதமும் பழைய வாமனன் வளர்ந்த தனையும்

                  புடைபெயர்ந்தெழ வளர்ந்து பெயர் போனகழுதின்

            சாதமும் அழுதெனும் பெயர்தவிர்ந்தன நிணத்

                  தசைமிசைந்துடல் விசும்பு புதையத் தணியவே.          406

 

[புடை=பக்கம்; கழுது=பேய்; சாதம்=உணவு; நிணம்=சதை; தசை=கொழுப்பு; மிசைந்து=உண்டு; விசும்பு=ஆகாயம்; புதைய=ஊடுருவ; தணிதல்=நிறைதல்]

 

முற்காலத்தில் வாமனன் ஓங்கி வளர்ந்ததைப் போல புறப்பட்டபோது குள்ளமாக இருந்த பூதங்கள் வழியெல்லாம் பறப்பன, நீந்துவன், ஊர்வன போன்ற எல்லா உயிர்களையும் உணவாக உண்டு ஆகாயம் அளவிற்கு ஓங்கி வளர்ந்து உயர்ந்தவனாயின. பூதம் எனில் குட்டையாக இருக்கும். எனவே இவை பூதம் எனும் பெயரையும் இழந்தனவாம்.

====================================================================================

            கார்அடங்கியன தாரகை அடங்கியன கோள்

                  கதிஅடங்கியன மூவர்சிலர் தேவர்கனத்து

            ஊர்அடங்கியன பின்னும் எழுகின்ற அனிகத்

                  துள்அடங்கியன உள்பதி னால்உலகுமே.              407

 

[தாரகை=நட்சத்திரம்; கோள்=அண்டம்; கதி=இயக்கம்; அனிகம்=சேனை]

 

வீரபத்திரரின் படைக்கூட்டத்துள் மேகங்கள் ஒடுங்கின; நட்சத்திரக் கூட்டங்கள் அடங்கின; அண்டங்களின் சுழற்சி நின்றது. பிரமன், சிவன், விஷ்ணு ஆகிய மூவர் உட்பட எல்லத் தேவர்களின் இருப்பிடங்களும் அடங்கின. பதினான்கு உலகங்களும் அடங்கிப் போயின.

====================================================================================            வானும்இன்றி மகராலயமும் இன்றி நடுஏழ்       

                  மண்ணும் இன்றி வடவானலம் இன்றி அனிலம்

            தானும்இன்றி அறநின்ற தனிமூல முதல்வன்

                  தன்னை ஒத்தது இனிஎன்னை இதுதானை நிலையே.    408

 

[மகராலயம்=மீன்கள் இருக்கும் கடல்; அனிலம்=காற்று]

 

வானம் இல்லை; கடல்கள் இல்லை; ஏழு உலகங்கள் இல்லை; வடமுகாக்கினி என்னும் பெருநெருப்பு இல்லை; காற்று இல்லை; எங்கும் பூதப்படைகளே நிறைந்திருந்தன. உலக இறுதிநாளில் எல்லாம் அழிந்து தான் மட்டும் நிலைத்திருக்கும் மூலப்பரம்பொருளான சிவத்தை ஒத்திருந்தது அப்படைகளின் நிலையே.

            கொண்ட கோடி சதகோடி கூளிகள்

                  குளிக்க அன்று அவை தெளிக்கவே

            அண்ட கோடிகள் அநேக கோடிகளும்

                  உடைய நீர்சுவறும் அடையவே,                       [409] 

 

[சதம்=நூறு; கூளி=பேய்; சுவறும்=வற்றும்]

 

பூதப்படைகளின் எண்ணிகை கோடி கோடியாக நூறு கோடியாகும். அவை குளிக்க உலகில் உள்ள எல்லாக் கடல்களின் நீரும் போதாது மட்டுமன்று. அக்கடல்களின் நீர் அப்படைகள் சிறிது எடுத்துத் தெளித்துக் கொண்டாலே வற்றிப் போய் விடுமாம்.

                  மலைகள் வாரியன ஏழும் முக்கி அவை

                        விக்கி உடுவொடும் அடுத்து எடுத்து

                  அலைகள் வாரிதிகள் ஏழும் நக்கி நடம்

                        ஆடி ஐயை கழல் பாடியே.              [410]

 

[வாரி=கடல்; உடு=நட்சத்திரம்; ஐயை=தேவி; கழல்=கழல் அணிந்த தேவியின் திருவடி]

                       

ஏழு மலைகளையும். ஏழு கடல்களையும் பூதப்படைகள் விழுங்கின. அவை அவற்றின் தொணடைக்குள் சிக்கிக் கொண்டன. அதனால் அவை ஏழு கடல்கலையும் நக்கிக் குடித்து நடனமாடி தேவியின் திருவடிகளைப் போற்றிப் பாடின.

            எயிறு வெட்டுவன சக்ர வாளம்முதல்

                  ஏழ் பொருப்பும் எட்டு எண்பணிக்

            கயிறு கட்டுவன அண்ட கோடிபுனைக்

                  கைய காலன கழுத்தவே.                              [411]

 

[எயிறு=பல்; பொருப்பு=மலை;  பணி=பாம்பு;  புனைதல்=அணிதல்]

 

அவை எல்லா மலைகளையும் தம் பற்களால் கடித்துத் தின்னும் வலிமை கொண்டவை. அவை அட்டமாநாகங்கள் என்னும் எட்டு நாகங்களையும் கயிறாகத் தம் கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடியவை. அவற்றின் கைகளும் கால்களும் எல்லா உலகங்களையும் சுமக்கும் வல்லமை வாய்ந்தவையாகும்

             படம்பொ றாமணி விசும்பிழந்து உலகு    

                  பகல்பெ றாபவணம் அடையஓர்

            இடம்பெ றாவெளி இழந்து நடுஉடு

                  எழப்பெ றாககனம் எங்குமே.                        [412]

 

[படம்=பாம்பின் படம்; விசும்பு=ஆகாயம்; பகல்=சூரியன்; உடு=நட்சத்திரம்; ககனம்=வானம்]

 

நாகலோகத்துப் பாம்புகள் எல்லாம் தம் படத்தில் இருக்கும் ரத்தினங்களை இழந்து போயின. சூரியன் உலா வர இடமே இல்லாமல் போயிற்று; ஆதலால் பூமி வெளிச்சத்தை இழந்தது. காற்று அசைவில்லாமல் போக, நடசத்திரங்களும் மறைந்து போயின.

=====================================================================================                      

            இடும் இடும்பத  யுகத்து வீழ்கதியில்

                  ஏழ்பிலங்களும் இறங்கவே

            விடும்விடும் கரதலத் தெழுத்து கிரி

                  சக்ரகிரி கிழிய வீழவே.                          413

 

[பதம்=கால்; யுகம்=இரண்டு; ஏழ்பிலம்=ஏழ் நாகங்கள்; அவையாவன: அள்ளல், இரௌவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துதானம், பூதி; மாபூதி, கரதலம்=கை]     

 

பூதகணங்கள் நடக்கின்றபோது பாதாளம் இன்னும் கீழே போய் விழும்; அவை வீசி நடக்கின்ற கைகள் பட்டு மலைகள் பெயர்ந்து சக்ரவாள கிரி மலைச்சிகரத்தைச் சிதைத்துக் கொண்டு போய் விழும்.

                                      

            விட்ட குலகிரிகள் எட்டும் உம்பர்திசை

                  யானை எட்டும் விழவீழவே

            சுட்ட விழியில் எழுகடலும் வற்றி எழு

                  தீவும் ஒக்க நிலை சுவறவே.                        414

 

அப்படைகள் நடக்கும் வேகத்தில் எட்டு மலைகளும், திசை யானைகள் எட்டும் எல்லை தாண்டிப் போய் விழுந்தன. அப்படை வீர்ர்கள் கண்களில் எரியும் நெருப்பால் ஏழுகடல்களும் வற்றிப் போயின. தீவுகள் எல்லாம் வறண்டு போயின.

      

            சங்கு நேமியோடு உறங்கும் மேகமும்

                  இறங்கும் மேகமும் தப்புமோ?

            பொங்கு நேமியுடன் வேவவெந்து பொரு

                  பொரியுமே சகல கிரியுமே.                             415

 

[நேமி=சக்கரம்; வேவ=வெந்துபோக; பொருபொரியும்=சடசட என எரியும்; சகலகிரி=எல்லா மலைகளும்]

 

சங்கு சக்கரம் ஆகியவற்றுடன் பாற்கடலில் உறங்கும் திருமாலும் தப்பவில்லை; வானிலிருந்து இறங்கும் எல்லா மேகங்களும் உயர்ந்த சக்ரவாளகிரி உட்பட அனைத்தும் எரிந்து போயினவாம்.

            விழும் விழும் சிலாதல நிலம்பகிர்ந்து

                  உரகர் விடர் நடுவு வீழவே

            எழும்எழும் பணாமணிகள் அவ்வழியில்

                  இரவிகள் வருவ தென்னவே.                           416

           

[சிலாதலம்=மலை;  பகிர்ந்து=பிளந்துகொண்டு; உரகர்=நாகர்; பணாமணி=நாகரத்தினம்; இரவி=சூரியன்]

 

பூதப்படைகள் எடுத்து எறிந்த மலைகள் எல்லாம் பூமியைப் பிளந்தன. பாதாள உலகம் போய் அங்குள்ள நாகர்கள் நடுவே விழுந்தன. அதனால் அங்கிருந்து கிளம்பி வரும் பாம்புகள் தலையில் உள்ள நகரத்தினங்களின் ஒளியானது பூமிக்கு அடியில் இருந்து சூரியன் மேலெழுந்து வருவதைப் போலிருந்ததாம்,

                         

            கரங்களால் இரவிகள் யாவரும் பெரிய

                  கால்களால் உரிய கங்கையும்

            சிரங்களால் அரசுபணியும் ஆதிமுதல்

                  பூதநாதர் பலர் செல்லவே.                            417

 

[இரவி=சூரியன்; உரிய=உடைய; சிரம்=தலை; அரசுபணி=பாம்புகளைன் தலைவன்]

 

பூதகணங்களுக்கு ஆயிரம் கரங்கள் இருந்தன. அதனால் அவை சூரியனை ஒத்திருந்தன.  ஆயிரம் தலைகள் இருந்ததால் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனை ஒத்திருந்தன. ஆயிரம் கால்களிலிருந்ததால் அவை ஆயிரம் கால்வாய்களாகப் பிரியும் கங்கை ஆற்றை ஒத்திருந்தன.

                 

                    

                   விழவிடும் கிரிகள்வீழும் உள்ள பிலம்

                        ஏழும் ஊடுருவ வீழவே

                  எழவிடும் கிரிகள்சூழும் அண்டமுகடு                                             ஏழும் ஊடுருவ ஏறவே.                          418

 

[பிலம்=பாதாளம்; அண்டம்=மேலுலகம்; ஊடுருவ=உள்புக]

 

பூதப்படைகள் எடுத்தெறிந்ததால் கீழே விழுகின்ற மலைகள் எல்லாம் பாதாளம் ஏழும் தாண்டிப் போய் விழும். மேலே எடுத்தெறியும் மலைகள் எல்லாம் ஏழு அண்டங்களையும் தாண்டித் தாண்டி அதற்கு மேலே செல்லும்.

                   

                  ஓமகூட கிரிநின்றெடுத் தெறிய

                        அண்டகூடம் உருவிப் புறத்து

                  ஏமகூடமொடு சித்ரகூடம் எரி

                        கனக கூடம் எனஎரியவே.        419

 

[ஓமகூடம்=வேள்விக் குண்டம்; ஏமகூடம்=இந்திரன் இளைப்பாறும் இடம்; சித்ரகூடம்=இந்திரன் கொலு மண்டபம்; கனகம்=பொன்]          

 

இப்படி எல்லா மலைகளையும் மேலும் கீழுமாக எடுத்தெறியும் பூத கணங்கள் தக்கன் வேள்வி செய்யும் ஹோம குண்டத்தையும் பெயர்த்தெறிந்ததால் அது மேலுலகத்தையும் தாண்டிப் போய் இந்திரலோகத்துச் சித்திர கூடத்தை நெருப்பிலிட்ட பொன்கூடம் போலப் பொசுக்கிவிடும்.

                   

                   எயிறு இரண்டருகு வெண்பிறைக்கு இவை

                        இரண்டுஉடுத் தொடைகொல் எனலாம்

                  அயில் திரண்டனைய பல்ஒழுங்குகள்

                        அலங்கு சோதியொடு இலங்கவே.              420

 

[எயிறு=பல்; உடு=நட்சத்திரம்; அயில்=வேல்; இலங்கு=வீசுகின்ற; சோதி=ஒளி; இலங்க=விளங்க]

 

கடைவாயின் ஓரம் வளைந்த இரு பிறைநிலவுகள் போல இருக்கும் இரு கோரப் பற்களுக்கு ஏற்ப அமைந்த நட்சத்திரங்களைப் போலப் பூதப்படைகளின் மற்ற பற்கள் ஒளி வீசித் திகழ்ந்தன.

                   

                  மாகமே அனையர் தம் மகோதரமும்

                        எம்மகோ ததியும் மாயமேய்

                  மேகமே அனையர் ஆகமே கடவுள்

                        மேருவே அனையர் ஊருவே.                    421

 

[மாகாயம்=ஆகாயம்; மகோததி=கடல்; மகோதரம்=வயிறு; மாய=கெட; மேய்=நீரை உறிஞ்சும்; ஊரு=துடை]

 

பூதகணங்கள் ஆகாயம் போலப் பெரிய வயிறு உடையவர்கள்; அனைத்துக் கடல்களையும் வற்றச் செய்யும் மேகங்கள் போன்றவர்கள்; அவற்றின் துடை கடவுள் இருக்கும் மேருமலை போல இருக்கும்.

               

             உடுத்த நேமிகிரி நெரியஒருவர் நகம்

                  உருவுமே உலகு வெருவுமே

            எடுத்த சூலமொடு காலபாசம் இனி

                  வீசயாது வெளி? இல்லையே.                        422   

 

[நேமகிரி=சக்ரவாள மலை; நெரிய=கிழிபட; வெருவுதல் அஞ்சுதல்; வெளி=இடம்]

 

உலகம் உடுத்திக் கொண்டிருப்பது போல, உலகைச் சுற்றிலும் அமைந்துள்ள சக்ரவாளகிரி என்னும் மலையை இந்தப் பூதப் படைகள் தம் ஒரு விரல் நகத்தினாலேயே கிழிக்கும் என்றால் இவை ஏந்தியுள்ள சூலத்தையும், பாசத்தையும் எடுத்து வீச இடம்தான் ஏது? இடமே இல்லை என்பதே உண்மை.

             

            ஒருவரே அகில லோகமும் புதைய

                  வேறுவேறு உடம்பு உடையரே

            இருவரே தெரிய அரியர் தாம்இவரை

                  எங்ஙனே தருவர் என்னவே.                           423

 

[புதைய=அடங்க; இருவர்=திருமால், பிரமன்; அரிய=காண இயலாதவர்; தருவர்=படைத்தார்]

 

பூதப் படைகளில் ஒருவரின் உடம்பே இந்த உலகம் கொள்ளாத அளவிற்குப் பெரியது எனில் வேறு வேறு உடம்புகளை உடைய இப்படையை திருமால். பிரமன் இருவருமே தேடியும் காண இயலாத  அரியவரான சிவபெருமான் இப்படையினை எப்படித்தான் படைத்துத் தந்தாரோ தெரியவில்லை.

                      

                  கொண்ட கோலம் இவையாக அண்டசத

                        கோடி கொடி நிரைதானை இவ்

                  அண்ட கோளகை வளாகம் ஒன்றினுள்

                        அடங்கி நின்றன மடங்கியே.                    424

 

[சதம்=நூறு; வளாகம்=இடம்; மடங்கி=தாழ்ந்து

 

இத்தகைய உருவைக் கொண்ட கோடி, கோடி, நூறு கோடி என்றுள்ள அப்படை வரிசை இந்த அண்ட கோள எல்லைக்குள் அடங்கிக் கட்டுப்பட்டு இருந்தது.

                         

எங்ஙனே இறைவர் உலகு பொதிவடிவம்

                        எவ்வுடம்பினும் அடங்கு மாறு              

அங்ஙனே அவர்கள் விசுவரூபமும்

      அடங்கி நின்ற படியதனிலே.                     425

 

[பொதி=நிறைந்த; படியதனில்=ஓர் அளவில்]

 

பரம்பொருளின் பேருருவம் எப்படி அடியவர் உள்ளத்தில் அடங்குகிறதோ அதேபோல இப் பூதப்படைகளின் மிகப் பெரியதான பேருருவமும் ஓர் அளவில் அடங்கி நின்றது.

 

Series Navigationஎமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளிமேற்கு மலைத் தொடர்