தனக்கு மிஞ்சியதே தானம்

 

                                                 டாக்டர் ஜி.ஜான்சன்

பத்து ஆண்டுகள் சிங்கப்பூரில் துவக்க, உயர்நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் கற்று முடித்து சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு முடித்தபின் மருத்துவம் பயில இந்தியா சென்றேன்,

அன்றைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியபின் தாம்பரத்தில் என்னுடைய அத்தை வீட்டில் ஒருநாள் தங்கி, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் புகுமுக வகுப்பின் அறிவியல் பிரிவில் பதிவு செய்துவிட்டு பிறந்த ஊரான சிதம்பரம் சென்றேன்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறீயதிலிருந்து என்னை வெகுவாக வருத்தியது நான் பார்த்த பிச்சைக்காரர்கள் !

சிங்கப்பூரில் இதுபோன்று மோசமான நிலையில் நான் பிச் சைச்காரர்களைப் பார்த்ததில்லை.அங்கு ஒருசில ஏழைகளைப் பார்த்திருப்பேன். ஆனால் பிச்சை எடுப்பவர்களை நான் பார்த்ததில்லை.

ஆனால் தாம்பரம் தொடர் வண்டி நிலையத்திலிருந்து வெளியேறியதும் அப்போது மனிதர்கள் இழுக்கும் கை ரிக் ஷா க்களைக் பார்த்தபோதே மனம் கலங்கியது. அங்கே வீதி ஓரத்தில் பலர் வெவ்வேறு கோலத்தில் பிச்சை கேட்டது பெரும் சோகத்தை உண்டு பண்ணியது.

அவர்களில் பெரும்பாலோர் தொழுநோயாளிகள் இருந்தனர். கால்களில் புண்களும் கட்டுகளும், முடங்கிய விரல்கள் இல்லாத கைகளைக் காட்டி பிச்சை கேட்டனர்.கைகால் ஊனமுற்றோர் சிலர் பிச்சை கேட்டனர் . கண்பார்வை இல்லாதவர் சிலர் அங்கு அமர்ந்திருந்தனர்..கிழிந்துபோன அழுக்கு உடைகளை உடுத்திய பெண்மணிகள் பிச்சை கேட்டனர்.அவர்களின் கைகளில் குழந்தைகளை வேறு வைத்திருந்தனர்.வயதானவர்கள், சிறுசிறு பிள்ளைகள் என வயது வித்தியாசம் இல்லாமல் பிச்சை எடுத்தனர்.சாமியார்கள் போன்று காவி உடையிலும், நெற்றியிலும் உடலிலும் விபூதி பூசியவர்களும் அங்கு அமர்ந்திருந்த்தனர்.

எனக்கு பராசக்தியில் ” தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைத்ததும் முதல் குரலே பிச்சைக்கராரின் குரல்தானா? ” எனும் கலைஞரின் வசனத்தை சிவாஜி கணேசன் பேசியது அப்போது நினைவுக்கு வந்தது.

தாம்பரத்திலிருந்து சிதம்பரத்திற்கு தொடர் வண்டியில் பிரயாணம் செய்தோம்.அதிலும் பிச்சை எடுத்தனர்.ஒவ்வொரு இரயில் நிலைய பிளாட்பாரத்திலும் பிச்சைக்காரகளைக் கண்டேன்.

சிலர் அங்கேயே படுத்திருந்தனர்.வண்டி நின்றதும் சிலர் ஜன்னல் வெளியே கை நீட்டி பிச்சை கேட்டனர். சிலர் வண்டி நிற்கும் சொற்ப நேரத்தில் உள்ளே வந்து பிச்சை கேட்டனர்.சிலர் பாட்டுகள் பாடி பிச்சை கேட்டனர்.கண்பார்வை இல்லாதவர்களை பார்வை உள்ளவர் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டனர் .

வண்டி நகர்ந்ததும் அவர்கள் இறங்கி விடுகின்றனர். சிலர் அதுபற்றி கவலை கொள்வதில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் கணியன் பூங்குன்றனாரின் புகழ்மிக்க வரிகளுக்கு ஒப்ப எல்லா ஸ்டேஷன்களும் எங்கள் ஸ்டேஷன்களே என்று கூறுவது[ போன்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுகின்றனர்.அவர்களுக்கு இலவச பிரயாணம்தான்!

பெரும்பாலும் இவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களைப் அனுதினமும் பார்த்து பழகிப் போனதால் அந்த நிலை எனலாம். இரக்கமுள்ள ஒரு சிலர் சிறு சில்லறைகள் தருகின்றனர்.யாருமே ரூபாய் நோட்டை நீட்டி நான் பார்க்கவில்லை.சிலர் அவர்களை அதட்டவும் செய்தனர்.அனால் பிச்சைக்காரர்கள் எது பற்றியும் கவலை கொள்ளாமல் கருமமே கண்ணாயிருந்தனர்..

அது பகல் பிரயாணம் என்பதால் ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் பிச்சைக்காரர்களின் நடவடிக்கைகளை நன்றாகவே கவனிக்க முடிந்தது.

சிலர் பிளாட்பாரத்திலேயே அல்லது அதன் அருகிலேயே குடும்பத்துடன் குடியிருப்பதும் தெரிந்தது.

தாம்பரத்தில் இவர்களை முதன்முதலாகப் பார்த்தபோது ஆளுக்கு பத்து ருபாய் தந்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன். அவர்கள் அதைப் பார்த்து நம்ப முடியாமல் அதை கண்களில் ஒற்றிக்கொண்டு இரு கைகள் குவித்து நன்றி கூறினர். இதைப் பார்த்த சிலரும் என்னை அதிசயமாகப் பார்த்தனர்.

கொஞ்ச நேரத்தில் நூறு ரூபாய் முடிந்து விட்டது.

அப்போது நான் ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன். ஒருவருக்கு பணம் தந்தால் அனைவரும் உடன் சூழ்ந்து கொள்கின்றனர். நிறைய பேர்களுக்கு தரவேண்டியுள்ளதால் பாத்து ரூபாய் தந்தால் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது.

பிரயாணத்துக்கு முன்பே பிசைக்காரர்களுக்கு தருவதற்காக நிறைய ஒற்றை ரூபாய்களை மாற்றி எடுத்துக்கொண்டேன்.இது எனக்கு சுலபமாகப் பட்டது. ஒரு ரூபாயை சுலபமாக நீட்டி விடலாம். சில்லறை காசுகள் தருவதைவிட இது எவ்வளவோ மேல்!

சிதம்பரம் இரயிலடியிலும் அதே கதைதான்.அங்கு ஊரிலிருந்து எங்கள் கூண்டு வண்டி வந்திருந்தது.அதில் ஏறி கிராமம் சென்றேன்.

அங்கு இரவில் ” இராப் பிச்சை அம்மா ” என்ற குரல் கேட்டது. பிச்சை கேட்டு இரவில் வந்த பெண்மணி கையில் அலுமினிய பாத்திரம் என்றி வந்தாள் .அதில் அம்மா சோறு போட்டார். இவர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களிடம் உணவு வாங்கி ஊரின் ஒதுக்குப்புறத்தில் அவர்களின் குடும்பத்தோடு உண்கின்றனர்.இவர்களுக்கு பணம் தர வேண்டியதில்லை.

பிச்சைக்காரர்கள் பற்றிய ஆய்வு இத்துடன் போதும் என்று கருதுகிறேன். இனி நான் சொல்ல வந்த கதைக்கு வருவோம்.

கிராமத்தில் சில நாட்கள் கழித்துவிட்டு திருச்சி சென்றேன். அங்கு அண்ணியின் வீடு இருந்தது,. சில நாட்கள் திருச்சியில் தங்கலாம் என்று சென்றிருந்தேன்.

அண்ணியின் தம்பி தாஸ். அவருக்கு என் வயதுதான். செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்று வந்தார் அவருடன் திருச்சி மலைக்கோட்டை காவிரி ஆறு போன்ற இடங்கள் சென்று வந்தேன்.

மலைக்கோட்டை கோவில் அடிவாரத்தில் நிறையவே பிச்சைக்காரர்களைப் பார்த்தேன். அவர்களுக்கெல்லாம் நான் தானம் செய்வதைக் கண்ட அவர் அசந்து போனார்! எல்லாருக்கும் அப்படி தருவது தேவை இல்லை என்றுகூட கூறினார்.அப்படி அனைவருக்கும் தந்தால் கட்டுப்படியாகாது என்று விளக்கினார். பிச்சைக்காரர்கள் கூட்டம் அப்படி என்றார்.நான் அதைப் பொருட்படுத்த வில்லை.

மறு நாள் புதுக்கோட்டை சென்றுவர புறப்பட்டோம். பணப் பையை உடன் எடுத்து வர வேண்டாம் என்றார். யாராவது திருடிக் கொண்டால் பிரச்னை என்றார். பிக் பாக்கட்கள் பற்றி எச்சரித்தார்.

நான் பிச்சைக்காரர்களுக்கு தர போதுமான ருபாய் நோட்டுகளையும் எங்கள் செலவுக்கு கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டேன்.

தொடர் வண்டிமூலம் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம்.

திருச்சி சந்திப்பில் நிறைய பிச்சைக்காரர்களுக்கு பணம் தந்தேன்.தொடர் வண்டியிலும் தந்தேன்.

புதுக்கோட்டையில் இறங்கியதும் அங்கும் நிறைய பிச்சைக்கார நண்பர்களைக் கண்டு மனம்போன போக்கில் ரூபாய் நோட்டுகளை வாரி வழங்கினேன்

புதுக்கோட்டையில் அருங்காட்சியகம், மன்னர் அரண்மனை, மன்னர் கல்லூரி போன்ற இடங்களுக்கு ஆட்டோவில் சென்று பார்த்தோம்.

போகும் இடங்களிலெல்லாம் காணும் பிச்சைக்காரகளுக்கு உதவினேன்.அதற்கு முடிவே இல்லாதது போல் தோன்றியது.

இறுதியாக ஒருவழியாக திருச்சி திரும்ப மீண்டும் தொடர் வண்டி நிலையம் வந்தோம்.

டிக்கட் கவுண்டரில் திருச்சிக்கு இரண்டு டிக்கட் கேட்டேன். அதற்கான கட்டணம் செலுத்த பணம் போதவில்லை! நான் கொண்டுவந்த பணம் அனைத்தும் தானம செய்ததில் காலியாகிவிட்டது! எங்கள் இருவரிடம் இருந்த பணத்தை சேர்த்தாலும் ஒரு ரூபாய் குறைந்தது.!

அவரிடம் கொஞ்சம் பொருத்திருக்குமாறு இருவரும் வெளியேறினோம்.

நான் தனம் பண்ணின பிச்சைக்காரர்களைப் பரிதாபமாகப் பார்த்தேன்.

ஏதாவது உதவி தேவையா என்று அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்பது போலிருந்தது.

இப்போது யார் பிச்சைக்காரர் என்ற வேறுபாடு இல்லாதது போல் ஆனது!

யாரிடம் பொய் ஒரு ரூபாய் கேட்பது ?

வண்டி இன்னும் சில நிமிடங்களில் புறப்பட்டு விட்டால் இரவு எங்கு தங்குவது? எப்படி சாப்பிடுவது? உடன் யாரிடமாவது ஒரு ரூபாய் வாங்கியாக வந்துமே?

பிசைக்காரரிடம் கொடுத்த ரூபாயை திரும்ப வாங்க முடியுமா? நிலைமையைச் சொல்லி கேட்கலாம். ஆனால் அது முறையா?

நேராக ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குச் சென்றேன்.அவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.அவருக்கு வயது முப்பது இருக்கும். நல்லவர் போல் தென்பட்டார்.

” குட் ஈவ்னிங் சார் .” அவரைப் பார்த்து கூறினேன்.

” எஸ்? குட் ஈவ்னிங் . நீங்கள் யார்? ஏதும் பிரச்னையா? ” பரபரப்புடன் கேட்டார்.வண்டி வரும் நேரம் அது.

” சார். நாங்கள் ஒரு உதவி வேண்டி வந்துள்ளோம். ”

” உதவியா? என்ன உதவி?

” நாங்கள் திருச்சி செல்லவேண்டும். டிக்கட் வாங்க ஒரு ரூபாய் குறையுது. கொண்டு வந்த பணம் எப்படியோ செலவாகி விட்டது.நீங்கள் ஒரு ரூபாய் கடன் தந்தால் திருப்பி அனுப்பி விடுகிறேன்.

எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்துத் தந்தார்.

” இதை வைத்துக் கொள்ளுங்கள் . திருப்பி அனுப்ப வேண்டாம்.” புன்முறுவலுடன் கூறினார்.

நாங்கள் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம்.

போகுமுன் மீண்டும் அவரிடம் சென்று , ” சார். உங்கள் பெயர்? ” என்று கேட்டேன்.

” கமால் ” என்றார்.

அப்போது தொடர் வண்டியும் இரைச்சலுடன் வந்து சேர்ந்தது.

அவரும் உடன் எழுந்து எங்களுடன் வெளியில் வந்தார்.

திருச்சி திரும்பியதும் முதல் வேலையாக அவருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஐந்து ரூபாய் வைத்து தபாலில் சேர்த்தேன்.அதில் என்னைப் பற்றிய விவரங்களும், பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்தது பற்றியும் எழுதியிருந்தேன்.தாம்பரம் முகவரி தந்தேன்.

ஒரு வாரத்தில் தாம்பரம் திரும்பிய போது அவரின் கடிதம் வந்திருந்தது.. அவரைபற்றி நிறைய எழுதியிருந்தார்.மீண்டும் திருச்சி வந்தால் கட்டாயம் வந்து பார்க்கச் சொல்லியிருந்தார்.

எங்கள் கடிதத் தொடர்பு நீடித்தது.. நங்கள் நல்ல நண்பர்களானோம்.

( முடிந்தது )

Series Navigationஇரகசியமாய்நீங்காத நினைவுகள் 14