தனிமை

 

 

கொரொனாவோடு

கூட இருந்தேனாம்

இரண்டு வாரம் தனிமை

 

அர்த்தம் தொலைத்த

சொற்களில் இப்போது ‘தனிமை’

 

உறவுகள் நட்புகளோடு

கூகுலாரும் சட்டைப் பையில்

இது எப்படி ‘தனிமை’

 

கோழிக்குஞ்சுகளை

பஞ்சாரத்தில் அடைப்பது

பருந்திடமிருந்து காக்கத்தானே

 

பதினான்கு நாட்கள்

‘தனிஅறையில்’

 

நூலகம், மயானம்

இந்த மௌனம் வந்த வகை

 

ஓட்டுநரல்ல

நான் பயணி மட்டுமே

 

தேர்வு எழுதாமலேயே

தேர்வுமுடிவு எதிர்பார்த்தபடி

 

செக்குமாடு அவஸ்தை

 

தொலைந்தன ருசிகள்

 

ஓய்வுதான் வேலை

சாளரமே  வெளியுலகம்

 

பிம்பங்கள் மனிதப் பொய்கள்.

அந்தப் பொய்களோடு வாழ்க்கை

 

நான் வௌவாலா?

வானம்பாடியா?

 

சிரிக்க ஆசை

தனியாக எப்படி?

 

வீட்டில் பதினான்கு நாட்கள்….

‘என்னைக் கழித்த என்வீடு’

சிறு ஒத்திகை

 

தேதி முடிந்த என் ரொட்டி

களைந்துபோட்ட உடுப்பு

மேசைமீது என் பாதிக்கவிதை

காய்கறிக்கடை பாண்டி

என் ஓவியத்தில் கண்ணதாசன்

சன்னலில் வந்தமரும் மைனா

தொட்டியில் புதுரோஜா

அதிகாலை முரசு

பழைய கடிகாரம்

பாதி சௌக்காரம்

 

என்னைத் தேடியிருக்கலாம்

 

ஒருபுள்ளி தொலைந்தாலும்

உயிராகவே ஓவியம்

 

நான் உபரிதானோ?

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationசூடேறும் பூகோளம்அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !