தனியே

 

 

இருட்டுப் போர்வையைத்

தரை போர்த்திக் கொள்கிறது

 

எம்மை அணைக்க

யாரும் இல்லையென

இலைகள் கேவின

 

வியர்வை ஆறுகள்

மறையும் மந்திரம்

தேடினர் மாந்தர்கள்.

 

அணு அனல் நீரால்

வரும் சக்தி வாசல்களும்

அனல்கள் கக்கின

 

ஒரே ஓர் அசைவு

போதுமென உச்சிக் கழியில்

கொடி கூக்குரலிட்டது

 

புகை போக்கிகளோடு

நேர்க்கோடொன்றாய்

புகையும் நிற்கிறது

 

கடைசியில் வந்த காற்று

கவிதையில் அடங்காத

சொல்லெனத் தனியே போனது

Series Navigation