தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 30 of 33 in the series 3 மார்ச் 2013

து.ரேணுகாதேவி
முனைவர் பட்ட ஆய்வாளர்
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
ஒருவர் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே வரையின், அது தன்வரலாறு எனப்படும். ‘ஒரு தனிமனிதனின் வரலாறு அவனால் எழுதப்படும் அளவு முழுமையோடும் உண்மையோடும் வேறு எவராலும் எழுதப்படமுடியாது’ என்கிறார் டாக்டர்.ஜான்சன். (ப.66)

தன்வரலாறுகள் வழிப் பதிவாகியுள்ள தீண்டாமை, அடிமை நிலை, மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மனித இன்னல்கள் ஆகியவற்றை இவ்வாய்வானது எடுத்தியம்புகிறது.
மஹர்களின் அடிமைநிலை
மஹாராஷ்டிராவில் உள்ள சடாரா என்னும் சிறுநகரத்திலுள்ள பால்தானைச் சார்ந்தவர்கள் மஹர் இன மக்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடந்தனர். இத்தகைய ‘மஹர்’ சாதி மக்களின் அவல வாழ்க்கையைப் பற்றியும் படிப்படியான வளர்ச்சிப்பற்றியும் தன் சுயசரிதையின் வாயிலாக பதிவுசெய்துள்ளனர் பேபி காம்ப்ளி.

“மஹர்கள் இல்லாமல் மகராஷ்டிரம் இல்லை”, என்கிறார் மானுடவியல் அறிஞர் ஐராவதம் கார்வே. மஹர்கள் இல்லாமல் கிராமங்கள் இல்லை என்கிறது ஒரு மராத்தியப் பழமொழி. அதாவது கிராம அசிங்கங்களைச் சுத்தம் செய்ய மஹர்கள் இருப்பார்கள் என்பதுதான் இதன் பொருள்.
மரணச் செய்திகளைக் கொண்டுச் செல்வது, மலம் அள்ளுவது, சுடுகாட்டுக்கு விறகுகள் எடுத்துச் செல்வது, இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவது போன்ற இழிவான வேலைகள் தான் மஹர்களின் பரம்பரைத் தொழில்களாக இருந்தன. மகாராஷ்டிரம் முழுவதும் இம்மக்கள் பரவலாக இருந்தாலும் விதர்பா பகுதியில் (கிழக்கு மகாராஷ்டிரம்) இவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்.

பேபி காம்ப்ளி இந்து மத ‘வர்ணா’ சிரமத்தால் மஹர் சாதியினர் எப்படி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள் தன் குடும்பம் தன் கிராமம் 1930 களில் எப்படி அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்பதை கண்முன் நிறுத்துகிறார்.

“நாங்கள் வாலில்லாத விலங்குகளைப் போல இருந்தோம். இரண்டு கால்கள் இருந்ததால் நாங்கள் மனிதர்கள். கிராமத்திற்கு வெளியே குப்பைக்குழிகளில் தங்கியிருந்தோம். வீசி எறியும் செத்த மிருகங்களுக்கு மட்டும் முதலாளிகளாய் இருந்தோம்”(ப.8)
விறகுகளை பார்ப்பனர்கள் வீடுகளுக்கு விற்பனை செய்யும் போது அந்த விறகுகளை அவர்களின் வீட்டின் முற்றத்தில் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு விறகிலும் தன் தலைமுடியோ, தன் புடவையிலிருந்த நூலோ ஒட்டிக் கொண்டிருக்கின்றதா? என்பதனையும் கவனமாக ஆராய வேண்டும். அவ்வாறு இருப்பது தெரியவந்தால், ‘எங்கள் வீடு தீட்டுப் பட்டு விடும்’ நாங்கள் மாட்டுச் சாணி போட்டுத் தரையை மெழுகி விட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள அனைத்துத் துணிகளையும் துவைக்க வேண்டிவரும். கடவுள் இதனை எப்படிப் பொறுத்துக்கொள்வார். கடவுளுக்கும் தீட்டுப்பட்டு விடும்? என்ற அதிகார வர்க்கத்தின் கட்டளைகளை இங்கு பதிவு செய்துள்ளார்.
மகர்இன பெண்களின் நிலைகள்
மஹர் இனப் பெண்கள் கடைத்தெருகளுக்கு போவாள், கடையின் வாசலில் கடைக்காரனை விட்டு மிகவும் விலகி நின்று, தன் முந்தானையை தலையில் சுறறி இருப்பாள். ‘முதலாளி, தயவு செய்து இந்த இழிவான மஹர் இனப் பெண்ணிற்கு ஒரு பைசாவிற்கு சிகைக்காயும், அரை மூடித் தேங்காயும் தருவீர்களா? என்பார்.

அந்தக் கடைக்காரரின் குழந்தைகள் காலைக் கடனைக் கழிக்க வரிசையாக முற்றத்திற்கு வருவார்கள் கடைக்காரர் அந்தக் கபடமற்ற குழந்தைக்கு சமூக நடத்தையைக் கற்றுக் கொடுப்பார். ‘டேய், சாயு அந்த அழுக்கான மஹர் பொம்பளை அங்கு நின்று கொண்டிருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா? அவளைத் தொட்டு விடாதே. தள்ளிப்போ’ (ப.31) என்று ஒதுக்குவதை பதிவுசெய்துள்ளார். கடைக்காரர் வெளியில் வந்து அவளை விட்டு விலகி நின்று அவள் கேட்ட பொருட்களை தூக்கி வீசுவார். அவற்றைத் தன் முந்தானையால் பிடித்துக்கொள்வாள். தன் கையிலுள்ள காசை வாசற்படியில் வைப்பாள். அந்தக் காசு முதலாளியை தீட்டுப் படுத்தாது. மனிதரை மனிதர் தீண்டாமையினால் ஒதுக்குவது கீழ்தனமான செயல். இத்தகைய செயல்கள் இன்றும் சில பகுதிகளில் நிகழ்ந்து வருவதைப் பதிவுசெய்துள்னர்.
பெண்களின் மூடநம்பிக்கை
மஹர் சாதிப் பெண்கள் அனைவருக்கும் சிறு வயதிலேயே திருமணமாகி விடும். முதல் பிரசவத்தின் பொழுது அவர்கள் உடல் முழு வளர்ச்சியடைந்திருக்காது. படிப்பறிவில்லாத மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் பெண் உறுப்பில் கையை நுழைத்து குழந்தை எங்கிருக்கிறது என்று பார்ப்பார்கள். அடிக்கடி அப்படிச் செய்வதால் அவளுடைய பெண்ணுறுப்பு வீங்கி குழந்தை பிறக்கும் பாதையை அடைத்துக் கொள்ளும். அவள் தாங்க முடியாத வலியால் துடிப்பாள். துணியோ, பஞ்சோ இல்லாததால் தொடர்ந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கும். அந்தப் பெண் நல்வாய்ப்புள்ளவளாக இருந்தாள் என்றாள் அவளுடைய குடும்பத்தினருக்கு அழுக்கான கந்தலாவது கிடைக்கும் இதுதான் அவர்களுடைய ஏழ்மையின் வெளிப்படையான நிலை. பிரசவித்த பெண்களில் பலர் அளவுக்கதிகமான பசியைப் பொறுத்துக்கொண்டு படுத்திருப்பர். ஓரிரு கவளம் உணவு கிடைக்காதா? என்று ஏங்குவாள்.
பிரசவ வலி, படிப்பறிவில்லாத மருத்துவச்சிகளின் தவறான பராமரிப்பு, பார்க்க வருபவர்களின் நகங்கள் உண்டாக்கிய காயங்கள், அடங்காப் பசி, சீழ் வடியும் ஆறாத புண்கள், வெந்நீர்க் குளியல், எரியும் கரித்துண்டு வைத்தியம், அதிகப்படியான வியர்வை ஆகிய அனைத்தும் பிரசவித்த பெண்ணின் உடல் நிலையை மோசமாக்கிவிடும். கொஞ்ச கொஞ்சமாக அவளுடைய உயிர் அவளை விட்டுப் பிரிந்து போய்விடும். பிரசவத்தின்பொழுது பத்தில் ஒரு பெண் இறந்து விடுவாள். பிறந்த உடனே இறந்து விடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகம். (ப.94) இவ்வாறு மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருப்பதும் தவறான முறைகளைக் கையாண்டு உயிர்களை இழப்பதையும் மூட நம்பிக்கையில் மூழ்கி இருந்த இத்தகைய மக்கள் டாக்டர். அம்பேத்காரின் கருத்துக்களால் தன்னை ஓரளவு செம்மைப் படுத்தியுள்ளனர். மேலும், “உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள் அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு சதவீதத்தை பல ஏழைக் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகச் செலவிடுவார்கள். அவர்களுடைய அடுத்த தலைமுறையினரும் கல்வி கற்றவர்கள் ஆவார்கள். கல்வி கற்று விட்டால் தங்களைத் தாங்களே ஒழுங்குப்படுத்திக் கொள்ளவும் முடியும்” (ப.193) என்ற அம்பேத்காரின் பேச்சிகளாலேயே மஹர் இனத்தினர் தனது நிலையை உணர்ந்துக் கொண்டு இன்று பள்ளிக்குச் செல்லுவதும், அறியாமையிலிருந்தும் விலகியும், அடிமைத்தனத்திலிருந்து ஓரளவு விலகியும் வருகின்றனர் என்பதை காம்ப்ளி தன் வரலாறுகளின் வழி பதிவு செய்துள்ளார்.

தழும்புகள் காயங்களாகி
தீண்டாமை என்னும் கொடிய பழக்கத்தை தான் மூன்றாம் வகுப்பு படித்த போதே அனுபவித்ததாகவும் பாமா தனது தழும்புகள் காயங்களாகி கருக்கு, சங்கதி என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
“அந்நியாரம் செக்கடி பக்கத்துல எங்க தெரு பெரியவரு ஒருத்தரு வடை பொட்டலத்தைத் தொடாம, அதக் கெட்டியிருந்த சரடப்புடுச்சி தூக்¢கிட்டு வந்தாரு. வந்தவரு நேரா நாயக்கருட்ட போயி முதுகு கூனி வளச்சக்கிட்டு, பொட்டலம் இருந்த கைய நொட்டாங்¢கையால தாங்கிப் புடிச்சக்கிட்டு நாயக்கர்க்கிட்ட குடுத்தாரு. நாயக்கமாரு ஒசந்த சாதிங்கிறதுனால பறப்பெலுக பொட்டலத்த தொடக்கூடாதாம். தொட்டா தீட்டாம்”. (ப.25) “தாகத்துக்குத் தண்ணி குடுக்கறதுல கூட அசிங்கத்தனந்தான். நாயக்கமாரு பொம்பளைக தண்ணிய நாலு அடிக்கு ஒசப்புடுச்சிட்டு ஊத்த, பாட்டியும் மத்தவங்களும் கையை விரிச்ச வாய்கிட்ட வச்சு தண்ணிவாங்கி குடிப்பாங்க. பொழுது விடிஞ்ச நாயக்கருமாரு வீட்டுக்குள்ள போயி மாட்டுத் தொழுவம் பெருக்கி சாணி சகதி அள்ளிப்போட்டுட்டு முந்துன நாள் மிஞ்சிப்போன பழைய சோறு, கொழம்பு வாங்கிட்டு வருவாங்க” (ப. 26) என்கிறார். தீண்டாமையினால் அடிமைநிலை வாழ்க்கையை அனுபவித்த நிலையினை பதிவுசெய்துள்ளார்.
இளமைக் காலத்தில் உருவான ‘வடு’
இளையான் குடியில் இல்லாத சாதி வேற்றுமை அதன் இரண்டு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விளங்கியதை என் பள்ளி நாள்களில் உணர்ந்தேன். கிராமங்களில் வாழும் சாதி இந்துக்கள் சொல்லிவைத்தாற்போல் கடைப்பிடித்து வரும் தீண்டாமையின் கொடுமைகளைத் தினசு தினுசாக அனுபவித்த என் இளமைக்கால வாழ்க்கையை அசை போட்டேன். ‘வடு’ உருவானது என்கிறார் கே.ஏ. குணசேகரன்.

“எந்தக் கிராமத்துல நுழைஞ்சாலும் மொதக் கேள்வி நீங்க என்ன ஆளுக? பறையங்கன்னு தெரிஞ்சதும் சொம்புல கொடுக்காமப் பட்டை புடுச்சுக் கொடுப்பாங்க. பதனியக் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிப்போம். கொஞ்சம் தண்ணி கொடுங்கன்னு கேக்கறதுக்கு முன்னெ ‘என்ன-ஆளுக? ங்கற கேள்வி முந்திக்கிட்டு வரும். கருஞ்சுத்தியில ஒரு அம்பது முஸ்லீம் குடும்பங்களும் இருந்திச்சு அங்கே ஒரு பள்ளிவாசலும் இருந்துச்சு அவுங்க வூடுகள்ல கேட்டாக்கூடத் தண்ணி கொடுக்கறதுக்கு முந்தி என்ன ஆளுகன்னு கேப்பாங்க’ இங்க உள்ள முஸ்லீம் காரங்களச் சுத்திச் சாணாரு, கோனாருன்னு பல சாதிகாரங்க இருக்காங்கல்ல, அவுக சொல்லிக் குடுத்திருப்பாக, அதனாதான் இவுகளும் சாதியப் பாக்கறாகன்னு அண்ணன் சொல்லிச்சு கம்மாயில கிடக்குற தண்ணிய குடிச்சாக்கூட அது மேல்சாதிக் காரங்களோடதா இருந்தா நம்மளக் கட்டி வச்சி ஒதப்பாங்க”. (ப.46) என்று இயற்கையால் படைக்கப்பட்ட தண்ணீரைக்கூட குடிக்க சுதந்திரமில்லாமல் ‘தீண்டாமை’ என்னும் சுமையை தூக்கிச் சுமந்த நிலைமையை விவரிக்கிறார் கே.ஏ குணசேகரன்.
உச்சாலியா இன மக்களின் அடிமைநிலை
திரு லட்சுமணன் கெய்க்வாட் தன் தொடக்ககால வாழ்க்கையைப் பற்றி மராத்தியில் எழுதியுள்ள சுயசரிதையே ‘உச்சாலியா’ ஆகும்.

பிறக்கும்போதே குற்றவாளிகளாகப் பிறப்பதாக ஆங்கிலேயே அரசாங்கம் முத்திரை குத்தியது. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் கூட அவ்வாறே பார்த்தனர். பண்பாடுள்ள சட்டப் பூர்வமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் திருடுதல், களவாடுதல், பிக்பாக்கெட் அடித்தல் போன்றவை மட்டுமே மாற்றுவழிகளாயின. குற்றப்பரம்பரையாக முத்திரைக்குத்தப்பட்ட லட்டூர் தாலுகாவில் தானேகோன் கிராமத்தில் உச்சாலியர் சாதியினர், தாம் வாழ்வதற்கெனத் தம்மீது திணிக்கப்பட்ட சமூகச் சூழலில் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு சொற்பொழிவுகள், விவாதங்கள் மூலமாக அவர்களுடைய சுகதுக்கங்களை வெளிப்படுத்தியும், இலட்சியத்திற்கு குரல்¢ கொடுத்தும் வருவதாகவும், மக்கள் கல்வி அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் புகட்டி கண்ணியமான மனிதர்களாக வாழவும், வாழ்வதற்காகத் தாம் புரியும் குற்றங்கள், ஒழுக்கத்துக்கு மாறான செயல்கள் ஆகியவற்றைக் கைவிட்டு, பண்போடும் மரியாதையோடும் வாழ்வதற்கு பழங்குடிச் சாதியினரான உச்சாலியா இனத்தின் துயரங்களையும் இலட்சியங்களையும் பூர்ஷ்வா சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக இந்நூலை எழுதியதாக லட்சுமண் கைய்க்வாட் பதிவு செய்துள்ளார்.
நீக்ரோக்களின் அடிமை நிலை
புக்கர் டி. வாஷிங்டன், அடிமையின் மீட்சி சுயசரிதையில் “அமெரிக்க நீக்ரோக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தனர். ஆட்டுமந்தை என்பதுபோல நீக்ரோக்கள் மந்தைகளாக நடத்தப்பட்டனர். ஆடு, மாடு, சொத்துக்கள் என்பனபோல், மனிதர்களான நீக்ரோக்களும் சொத்தாகக் கருதப்பட்டனர். விலைக்கு விற்கப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக அடிமைப்பட்டு கிடந்திருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தில் இருப்பவன் தனக்க பிடித்தவர்களை அடிமைகளாக தேர்வு செய்வான் அவனைத் தொடர்ந்து, அவனது குடும்பமே அவர்களுக்கு அடிமைகளாக வேலைகள் செய்ய வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டது. என்ற பதிவுகள் தன்வரலாறுகளின் வாயிலாக அறியப்படுகின்றது. (அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாவட்டங்களில், வர்ஜீனியா மாவட்டத்தில் அடிமையாக பிறந்தவர் புக்கர் டி.வாஷிங்டன்.
முடிவுரை
தன் வரலாறுகள் ஒருவரின் புகழைப் பறைச்சாற்றிக் கொள்வதற்கோ, அவர்களின் கரார் தன்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கோ அன்று. தான் வாழ்ந்த சூழலில்தான் உணர்ந்த அனுபவங்கள், தான் எதிர்கொண்ட அவலங்கள், கொடுமைகள், போராட்டங்கள் ஆகியவற்றை அடுத்த சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவதோடு அடுத்த தலைமுறையினர் அடிமை நிலையிலிருந்தும், மூட நம்பிக்கையிலிருந்தும் மீண்டும் தன்னம்பிக்கையோடும், தலைநிமிர்ந்தும் கூனிகுருகி வாழாமல் மனிதராக தனது உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்ற நோக்கிலே பதிவுசெய்யப்படுகின்றது.
வசதியுள்ளவராக இருந்தாலும், வசதி அற்றவராக இருந்தாலும், ஒருவர் முன்னேற கல்வி அவசியம் என்று புக்கர் டி.வாஷிங்டன் வற்புறுத்துகிறார். கல்வியுடன் பணியில் உக்கம், தரம், நன்னடத்தை ஆகியவற்றையும் வற்புறுத்துகிறார்.
கல்விக்கற்று அடிமை விலங்கினை உடைத்தெரிந்து, சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழும் ஒரு நிலையினை அடைய வேண்டும். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலை உருவாக வேண்டும் என்பதனை தன்வரலாறு வழி பதிவுசெய்துள்ளனர் என்பதனை இக்கட்டுரை உணர்த்துகிறது.
துணை நின்ற நூல்கள்
1. பேபி காம்ப்ளி, சுதந்திரக் காற்று (The prisons we broke) தமிழில் மு.ந.புகழேந்தி, நியூ ஸ்கீம் ரோடு, ª பாள்ளாச்சி -டிசம்பர் 2010.
2. வசந்த் மூன், ஒரு தலித்திடமிருந்து……(தமிழில் வெ. கோவிந்தசாமி), விடியல் பதிப்பகம், கோயபுத்தூர் – அக்டோபர் 2002.
3. புக்கர் டி.வாஷிங்டன், அடிமையின் மீட்சி (தமிழில் ம.ந.ராமசாமி), நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை – 2007.
4. லட்சமண் கெய்க்வாட், உச்சாலியா பழிக்கப்பட்டவன் (தமிழில் எஸ். பாலச்சந்திரன்), விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர் – 2001.
5. கே.ஏ. குணசேகரன், வடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் -2007.
6. பாமா, தழும்புகள் காயங்களாகி கருக்கு, சங்கதி விடியல் பதிப்பகம் கோயம்புத்தூர் – 2001.
7. சாலை இளந்திரையன், வாழ்க்கை வரலாற்ற இலக்கியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் -2002.

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10திருக்குறளில் ‘இயமம் நியமம்’
author

Similar Posts

Comments

  1. Avatar
    r.vidhyashabapathi says:

    நட்பிற்கு,
    நான் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகிறேன். எனது ஆய்வுத் தலைப்பு “இலக்கிய இலக்கணங்களில் எண்கள்”. எனது ஆய்வுத் தொடர்பாக மெய்.மு.தமிழப்பனாரின் “தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” என்னும் நூலைத் தேடி வருகிறேன்,கிடைக்கவில்லை. நண்பர்கள் யாராவதும் நூல் பற்றியோ நூலாசிரியர் பற்றியோ தகவல் கொடுத்துதவுங்களேன். மேலும் எனது ஆய்வுத் தொடர்பான தகவல்கள் உங்களிடம் இருந்தாலும் கொடுத்துதவுங்கள், கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.
    தொடர்புக்கு:
    r.Vidhyashabapathi
    senni347@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *