தபால்காரர்

1960ல்

ஆறாம் வகுப்பு நாட்கள்

தண்ணீரும் தாகமுமாய்க் கலந்த

நண்பனைப் பிரிகிறேன்

ஈரம் சேர்த்துச் சொன்னான்

‘போய்க் கடிதம் எழுதுகிறேன்’

ஏழெட்டு நாட்களாய்

என்னைக் கிழித்துப் போட்ட

அந்தக் கடிதம் வந்தது

இந்த நாட்களில்தான்

தபால்காரர் எனக்குள்

இன்னொரு இதயமானார்

தொடர்ந்தன பல

நட்புகள் பிரிவுகள்

அடி வயிற்றில்

உலை ஏற்றிய

எதிர்பார்ப்புக் கடிதங்கள்

அந்த நாட்களில்

பகல் 12முதல் 2வரை

நான் நெஞ்சைக் கிழித்தால்

அங்கு தபால்காரர்தான் இருப்பார்

கல்லூரி வேலை

கல்யாண மெல்லாம்

கடவுள் தரும் வரங்கள்

இந்த வரங்களோடு வந்த

கடிதங்கள் எல்லாம்

இவர் கை பட்டுத்தான்

என் வாழ்க்கையை எழுதின

பணியிலிருந்து அவர் விடுபட்டார்

ஊரிலிருந்து நான் விடுபட்டேன்

கடிதங்களில் நாங்கள்

கரைந்து கொண்டோம்

கைப்பேசி வந்தது

பூகோளம் புள்ளியானது

தக்காளிச் செடிக்கு

தண்ணீர் ஊற்றிக் கொண்டே

தபால்காரரிடம் பேசுகிறேன்

ஒரு நாள்

ஊரிலிருந்து அழைத்தான் தம்பி

‘என்ன சேதி?’

‘தபால்காரர் இறந்துவிட்டார்’

மௌனத்தில்

இமை இறுக்கிய இருட்டில்

புதைந்து கொண்டேன்

கைத் துண்டு மட்டும்

கனம் ஏறியது ஈரத்தால்

மகன் யாரிடமோ

பேசிக் கொண்டிருக்கிறான்

‘யாரோ தபால்காரனாம்

போய்ட்டானாம்

என்ன பென்சனா போச்சு?’

சே!

தலைமுறை இடைவெளி

இவ்வளவு கொடூரமா?
———————-

அமீதாம்மாள்

Series Navigationமீட்சிக்கான விருப்பம்தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்