தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 7 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

தமிழ்மணவாளனின் ‘ அதற்குத் தக ‘ தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும்
நேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான வெளியீட்டு முறை கொண்டவை. ‘ எதையும் கவிதையாக்கலாம் ‘ என்னும் அணுகுமுறை தெரிகிறது.
‘ தொலைந்து போன கவிதைகள் ‘ — ஒரு படைப்பாளியின் தவிப்பைக் கருப்பொருளாகக் கொண்டது.
இது பலரை உஷார்ப்படுத்தும். ஒரு சிறுகதையில் , வைக்கம் முகம்மது பஷீர் ஒரு ஓய்வூதியரின் பாஸ்
புத்தகம் தொலைந்து போன தவிப்பைச் சொல்லியிருப்பார். இக்கவிதை அதை நினைவுபடுத்தியது.
சொல்லாட்சியில் தமிழ்மணவாளன் சற்றே கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘ தபால் பெட்டி பற்றிய கவிதை ‘ — இதன் தலைப்பு ‘ தபால் பெட்டி ‘ என்று இருந்தால் என்ன?
அவ்வப்போது காகம்
வந்தமர்ந்து கரையும்
விருந்தினர் வருவதைத் தெரிவிக்கும்
தபால்போல
— என்பது மிகவும் யதார்த்தம்.
தபால் மட்டுமின்றி கொஞ்ச நாளாய்
பாக்கட் பாலும்
அதட்குள்தான் வைக்கப்படுகிறது
பத்திரமாய்
— இது உண்மையா ? கிண்டலா ? சிறுவர்களின் குறும்பாய்க் கல் போடப்படுவதும் உண்டு.
‘ எதிர் கொள்ளல் ‘ — என்ற கவிதை பெண் பற்றியது.

என்னை எதிரில் கண்டதும்
தேங்கிய நீரில்
பாதம் நனைந்து விடாதபடி
ஒதுங்கிச் செல்லும்
பாவனையோடு
விலகிச் செல்கிறாய்

நாம் பழகுவதற்கு முன்னரும்
இப்படித்தான் போவாய்
மரியாதை நிமித்தமாக
அதுவே இப்போது
அவமரியாதையாய் இருக்கிற தெனக்கு
— கவிதையில் உருவாகும் கனம் ரசிக்கத்தக்கது.
காதலை சீட்டாத்துடன் ஒப்பிடும் போக்கு அமைந்த கவிதை ‘ உள் ஒளித்தல் ‘ .
கால்சட்டைப் பைக்குள்
கபடமற்று நிரப்பிக் கொண்டு
ஓடிய பாதையெங்கும்
ஒழுக விட்ட சந்தோஷங்கள்
— என்பதை ஒருவித ஏக்கத்துடன் ரசிக்கிறோம்.
உன் ஞாபகம் வரைந்த சீட்டை மட்டும்
கவிழ்த்து மூடும் கடைசிச் சீட்டென
மறைத்து விடுகிறேன்
யாருக்கும் தெரியாமல்
— எனக் கவிதை முடிகிறது.
தினசரி வாழ்க்கையின் மீது தத்துவக் கவலை கொள்வதைச் சொல்கிறது ‘ அதனாலென்ன ?’
எதையும் எழுதிவிடக் கூடிய
வெள்ளைத் தாளென
விரிந்து கிடக்கிறது மனசு
— என்ற படிமம் அழகாக இருக்கிறது.
அமைதியாய் வரைந்தயிக் கோலம்
பாதங்களின் கீழே
சிதைந்து போகத்தான் செய்கின்றன
அதனாலென்ன ?
அடுத்த அதிகாலையிலும்
வரையத்தானே போகிறோம்
அழகான இன்னொரு கோலத்தை
— என்று திரும்பத் திரும்ப வரும் வாழ்க்கைச் சம்பவங்களை கசப்பு மருந்தாகவும் , மகிழ்ச்சியாகவும்
ஏற்கிறார் தமிழ்மணவாளன்.
‘ தெளிவுறுதல் ‘ — ஒரு புனைவுக் கவிதை !
மீனொன்று காற்றில் பறந்து போனது
வியப்பாக இருக்கிறது
— எனக் கவிதை தொடங்குகிறது. ‘ மீன் பறத்தல் ‘ என்பது குறியீட்டுச் செயல்பாடாகச் சுட்டப்படுகிறது.
இதன் உட்பொருள் , வியத்தக்க செயல் ஒன்று நடந்தது என்பதுதான் என் யூகம். ‘ மீன் பறவையானதா
செதில்கள் சிறகுகளாய் ‘ என்ற கேள்வியில் வெளிப்படும் ரசிக்கத்தக்கது. இது வித்தியாசமான கவிதை.
முழுமை என்று ஒன்றுமில்லை எனச் சொல்கிறது ‘ முழுமை ‘ .
முழுமை பெற்றதாகயெண்ணி
சிலாகித்திருக்கையில்
தொடரும் முடிவிலாத் துயரம்
உணர்த்தும்
வெற்று மாயை வெளியில்
— எனத் தொடங்கும் கவிதை ! வாழ்க்கையை ஆய்ந்து வெளிக்கொணரும் உண்மையிது . முழுமையின்மை என்பது இங்கு மனம் சார்ந்து இயங்கும் நிலைப்பாடு எனலாம். அறிவார்ந்து பார்த்தால்தமிழ்மணவாளன் சொன்னது போல
மழைக்கால ஏரியாய்
மனம் நிரம்பி வழிகிறது. [ பக்கம் ]
— என்ற திருப்தி கிட்டும்.
நிறைவாக , தமிழ்மணவாளன் கவிதைகள் படித்து ரசிக்கத்தக்கன. வாழ்க்கையின் மீதான இவரது
பார்வை பிற கவிஞர்களுக்கும் உதவக்கூடும்.

Series Navigationதொடுவானம் 181. பதிவுத் திருமணம்வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *