தளர்வு நியதி

ratnes

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

கோணல் தனமாக
வளைந்து எரிகின்ற
ஊர்ப்பக்கத்துக் கோயில்
விளக்குகள்.
ஏன் எரிகின்றன?
யாதேனும் நேர்த்திகளா?
ஆகம நியதிகளா?

நூற்றாண்டின் துருப்பிடித்த நம்பிக்கைகள் கடந்தும்
அவைமட்டும் நிரந்தரமாகப் பற்றுகின்றன.

சில ஈக்களையும்
சில்வண்டுகளையும்
கொசுக்களையும்
பலி எடுத்தபடி.

ரத்தச் சிதறல்களால்
கற்கடவுளின் நைவேத்திய யாசகம் நிகழ்கிறது.

சம்வாதம் செய்ய ஒரு
சக கடவுள் எனக்கில்லை
என்ற வேட்கை மட்டும்தான்.

இங்ஙனமே அரிதார
புனரமைப்புக்கள் நிகழ்த்தி
மனிதன் கடவுள் நிலைக்கு வரக்கூடும்.

அதில் நான் மட்டும்
மனிதனாகவே விரும்புகிறேன்.
=====

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Series Navigationவேழப்பத்து 14-17பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை