தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

நொயல் நடேசன்


ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சிலகாலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு முன்பானது இன்னமும் செவ்வியல் இலக்கியமாக மட்டுமல்லாது நிகழ்கால இலக்கியமாகவும் பேசப்படுவதற்கு காரணம், கரமசோவ் சகோதரர்கள் மனித வாழ்க்கையின் முரண்பாடுகளை, நம்பிக்கைகளை, மற்றும் உறவுகளைப் பேசுகிறது. மற்றைய நாவல்கள் ஒரு காலத்தில் உள்ள கலாச்சாரத்தையோ வரலாற்றையோ பேசினால் கலாச்சாரம் மாறும்போதோ,காலம் கடந்தபோது எளிதாக மறக்கப்பட்டுவிடும். மனித வாழ்க்கையின் வேர்களைகளைப் பற்றிய விடயங்கள் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இருப்பதால் இந்த நாவல் மானிட வாழ்வின் நிழலாகத் தொடருகின்றது.

அப்ப என்ன இருக்கிறது?

எடிப்பஸ் என்ற புராதன கிரிக்க இளவரசன், தந்தையை தவறுதலாகக் கொன்று, தாயைத் திருமணம் செய்தது கிரிக்க இதிகாசங்களில் சொல்லப்படுகிறது . அதை வைத்து சிக்மணட் பரோய்ட் குழந்தைகளில் பெற்றோரில் எதிர்ப்பாலருக்கு வரும் கவர்ச்சியை எடிப்பஸ் சிக்கல் என வரைவிட்டார்.

கரமசோவ் சகோதரர்கள் தந்தையை தனயன் கொன்ற கதை. சமூகத்தின் இருளடைந்த பக்கங்கள் அல்லது மனங்களில் இருந்து வெளிவராத பக்கங்கள் இங்கு நாவலாகின்றன. சீழ் கொண்ட கட்டை உடைத்துவிடுவது போன்ற செயலாகும். நாவலின் புளட்டுக்கப்பால் பாத்திரப்படைப்பே உன்னதமாக வருகிறது. இறுதியில் யார் கொலை செய்தது என்பது நீதி மன்றத்தில் விசாரணையாகி சென்று தண்டனை கிடைக்கிறது.

யார் தண்டனை பெறுவது?

உண்மையான கொலையாளி தற்கொலை செய்து இறந்து விடும்போது கொலை செய்ய நினைத்த மகன் டிமிரி சந்தர்ப்பசாட்சியங்கள் வழியாகத் தண்டனை பெறுகிறார்.

மனிதர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்த தெய்வ நம்பிக்கை, காதல், காமம் , பெண்களது பொறாமை, சிறுவர்களது உறவுகள், தகப்பன் -மகன் என்ற குடும்ப உறவுகள் அதற்கப்பால் மனிதன் சமூகத்தில் உள்ள கவுரவம், குரோதம், பழிவாங்கல் எனப் பல விடயங்கள் நாவலில் பேசுபொருளாகிறது.

ஒரு நாவலையே பல தளத்தில் எழுதலாம். (நான்கூட அசோகனின் வைத்தியசாலையில் முயற்சித்தேன் மனிதர்களின் ஆசாபாசங்கள், மிருக வைத்தியம், அத்துடன் மனசாட்சி என்பது என்ன என்ற கேள்வியை கொலின்வூட்என்ற பூனையூடக) ஆனால் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஒவ்வொரு பாத்திரங்களும் பல தளங்களில் செயல்ப்படவைக்கப்படுகிறது. டிமிரியின் காதலியான குருஷென்கா ஆரம்பத்தில் ஒரு பணத்திற்காக செல்லும் பெண்ணாகவும், இடையில் டிமிரியின் தம்பியான அலக்சியை மயக்க முயற்சிக்கிறாள். இறுதியில் அவள் மிகவும் உறுதியாக டிமிரியை காதலிப்பது தெரிகிறது. இதேபோல் இவான், தந்தையையும் தமயனான டிமிரியையும் வெறுத்தது இரு பாம்புகள் ஒன்றையொன்று கொலை செய்யப் போகின்றன எனக்க கூறினான். இறுதியில் தந்தையின் கொலைக்குத் தனது பொறுப்பு இருப்பதாக நினைத்து நோயுறுகிறான். மேலே குறிப்பிட்ட இருவர் மட்டுமல்ல மற்றைய பாத்திரங்கள் பல தளங்களில் மாறுவது தெரிகிறது.

இந்த நாவல் பலரை கதாநாயகர்களாக வைத்து நகர்த்துகிறது. இங்கே யார் முக்கிய பாத்திரம் என்பது இறுதியில் வாசித்து முடித்த பின்னும் சந்தேகம் தொடரும். ஒவ்வொரு பாத்திரங்களும் முழுமையாக அகம், புறமாக வளர்ந்து நாவலில் நடமாடுகிறார்கள்.

கதையின் கரு ரஸ்சிய பண்ணையாரின் இரண்டு மனைவிமாருக்குப் பிறந்த மூன்று ஆண்கள் மக்கள். அதைவிட சமையல்காரனாக வேலை செய்யும், ஆனால் இதே பண்ணையாரின் கள்ள தொடர்பில் பிறந்த நான்காவது ஒருவன். இவர்களிடையே இரண்டு பெண்கள் வருகிறார்கள். அதில் மகனது காதலியை திருமணம் செய்ய நினைக்கும் தந்தையைத் தனயன் கொலை செய்வதான கதை. இங்கு பாத்திரங்களது செயல்கள் மட்டுமல்ல, சிந்தனைகள் கதையை நகர்த்துகின்றன.

யார் கொலை செய்தது என்பதை விடக் கொலை செய்ய எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பதே முக்கியமாகிறது. அலெக்ஸிவைத் தவிர மற்றைய மகன்கள் தந்தையை வெறுக்கிறார்கள்.அதற்கான காரணம் பலமானது. மனைவி பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய பெண்ணாசை நிரம்பியவர். ஆனாலும் அவரது பாத்திரப்படைப்பு வாசகர்களை வெறுக்கப் பண்ணாது உருவாக்கிய பாத்திரம் தந்தை ஃபியோதர் பாவ்லோவிட்ச் கரமசோவ்.
மூத்த மகனான டிமிரி ஒரு கட்டத்தில் வீங்கிய கண்களும், பெரிதான தொண்டை முடிச்சும் , சூத்தைப் பற்கள் கொண்டு பேசும்போது எச்சில் பறக்கும் தந்தையைப் பார்த்தாலே கொலை செய்யவிரும்புவதாகச் சொல்கிறான்.

சாத்தான் தன்னை கொளுக்கிகளைப் போட்டு நரகத்திற்கு இழுத்துச் செல்வது உறுதி. ஆனாலும் அங்கு இரும்புக் கொளுக்கிகள் எப்படி இருக்கும்? என்னை கொளுக்கிகளில் தூக்கிக் கட்டிவிட வசதிகள் நரகத்தில் இருக்கிறதா? என ஃபியோதர் பாவ்லோவிட்ச் கரமசோவ் கேட்பது சொர்கம், நரகம் என்ற கருத்தாக்கத்தையே தகர்க்கும்

தந்தையான ஃபியோதர் பாவ்லோவிட்ச் கரமசோவ் ஆம்பத்தில் டிமிரியின் தாயை மணம் முடிப்பதன் மூலம் பணத்தை பெற்று கொண்டாலும் மனைவியை மிகவும் கேவலமாக நடத்துகிறான். குழந்தையைக் கவனிப்பதில்லை. இரண்டாவது பெண்ணை திருமணம் முடித்த பின்பு அந்தப் பெண்ணுக்கும் அதே கதி. இவான் அலக்சி என்ற இரு மகன்களைத் தந்துவிட்டு இறந்து விடுகிறாள் குழந்தைகள் தாயின் உறவினர்களால் வளர்க்கப்படுகிறார்கள். ஊரில் பைத்தியமாக திரியும் பெண்ணை குடிபோதையில் கரமசோவ் கெடுத்தபோது அந்தப் பெண் வந்து வீட்டருகே குழந்தையை பெற்று விட்டு இறந்துவிடுகிறாள் அந்தக் குழந்தை வீட்டில் உள்ள வேலைக்காரனால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்து பின்பு வீட்டில் சமையல்காரனாகிறான். காக்காய் வலிப்பு கொண்ட அவனே இறுதியில் கொலை செய்த குற்றவாளி என வாசகர்களுக்குத் தெரிகிறது.

டிமிரி, தனது காதலி குருஷென்கா தகப்பனைதேடி பணத்திற்காக வருகிறாளா என நினைத்தது தந்தையை உளவு பார்க்க வரும்போது அவனைப் பார்த்த வேலைக்காரனை அடித்து விட்டுத் தப்புகிறான். பல தடவை தகப்பனை கொலை செய்வதாக சொல்லியும் கடிதத்திலும் எழுதியிருக்கிறான். கொலை செய்யும் எண்ணம் அவனுக்கு இருந்ததால், அவனால் தண்டனையை ஏற்க வைக்கிறது. அதே நேரத்தில் கொலை நடக்கும் நேரத்தில் இவான் வீட்டில் இல்லாது போவதால் கொலைக்குத் தான் உடந்தை என அவன் நினைக்கிறான். இவர்கள் இருவரையும் நேசிக்கும் அலக்சி குடும்பத்தின் சமாதானத தூதுவராகவும் புனிதமானவனாகவும் வருகிறான். அவனே தஸ்தாவெய்ஸ்கி இலட்சிய பாத்திரமாக இருக்கும்.

கொலையின் மீதான ஆரம்ப பொலிஸ் விசாரணை அதன் பின்பு நீதிமன்ற விசாரணைகள் இக்காலத்து துப்பறியும் நாவல்களையே தூக்கியெறிவதுபோல் நேர்த்தியாக இருக்கிறது. 1000 பக்கம் சிறிய எழுத்துகளில் பென்குவின் பதிப்பை மனமில்லாமல் நிறுத்தி நிறுத்திப் படிக்கவேண்டியிருந்தது. ஒரு விதத்தில் இந்தப் புத்தகத்தை படித்து முடிப்பதே சாதனையாக இருந்தது.

ஆரம்பத்தில் யேசுநாதரை பின்பற்றியவர்கள் கிறிஸ்துவ ஓதோடொக்சினர் . அதன் பின்பே நாலாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் கொஸ்ரன்ரைனால் கத்தோலிக்க மதம் ஸ்தாபிக்கப்பட்டது. கிறித்துவ ஓதோடொக்சினரது மதம் கிரேக்கத்தில் இருந்து எகிப்துஇ தற்போதைய மத்திய கிழக்கு மற்றும் துருக்கிக்கு பரவியது 10ம் நூற்றாண்டில் உக்கிரேன் மற்றும் ரஸ்சியாவுக்கு விளாடிமீர் என்ற கீவ் இளவரசனால் எடுத்துச் செல்லப்பட்டது. ஒதோடொக்ஸ் மதத்தில் பல புனிதர்கள் உருவாகினார்கள். அப்படியான ஒரு புனிதர் ஒருவர் இங்கும் வருகிறான். அலக்சி அந்த மத மடத்தில் சேர்ந்து விடுகிறான். அந்த மடத்தின் தலைமைக்குரு சொஸ்சிமாவிடம் கரமசேவ் குடும்பத்தினர் மத்தியஸ்தத்திற்கு செல்கிறார்கள் அப்பொழுது அந்தத் துறவி டிமிரியின் மனநிலையைத் தெரிந்து கொள்கிறார். அலக்சியை மடத்திலிருந்து விலகி குடும்பத்தில் உள்ள விடயங்களைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

இந்த நாவலின் மிகவும் சிறப்பாக இருப்பது குழந்தைகள் பற்றியது. ஒரு இடத்தில் பல சிறுவர்கள் கல்லால் இலயோசா என்ற சிறுவனை அடிக்கிறார்கள். அவனைப் பாதுகாக்க சென்றபோது அந்தச் சிறுவன் அலக்சியின் கையில் கடித்துவிடுகிறான். அந்தச் சிறுவனின் தந்தை பணத்திற்காக டிமிரியால் அவமானப்படுத்தப்பட்டதை கண்டு அந்தச் சிறுவன் கொதித்திருந்தான். டிமிரியை வளர்ந்தபின் பழி வாங்குவதாக தந்தையிடம் கூறுகிறான். அதே சிறுவன் பின்பு இறக்கும் தறுவாயில் அலக்சியின் நட்பை ஏற்றுக்கொள்கிறான். இறக்கும் முன்பான தருணத்தில் தந்தையிடம் “எனது புதைகுழியில் பாண்களைக் கசக்கி துகள்களாகத் தூவும்போது அங்கு குருவிகள் வரும். அப்போது நான் புதைகுழியின் தனிமையை உணரமாட்டேன்” என்கிறான்.

படிமமான பல விடயங்கள் நாவலில் நிறைந்து காணப்படுகிறது. மத குரு இறந்ததும் வெகுவிரைவில் துர்மணம் வெளியாகிறது. அது பெரிய விடயமாகப் பேசப்படுகிறது. அந்த மணம் அந்த மடத்தின் சீர்குலைவை எடுத்துச் சொல்கிறது அதே நேரத்தில் இலயோசா என்ற சிறுவன் இறந்தபின்பு துர்மணம் வரவில்லை.

இவான் என்ற புத்தியீவியாக கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் இந்த உலகத்தில் துன்பங்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாகக் குழந்தைகள் எதுவித குற்றமற்றவர்கள் அவர்களது துன்பங்களுக்கு காரணமென்ன என வினவுகிறான். குழந்தைகளைத் துன்புறுத்தும் சமூகத்தைப் பற்றி பேசும்போது தாயின் மடியிலே வைத்து ஈட்டியால் கொல்லும் துருக்கிய போர்வீரர்கள் பற்றியும், குழந்தைகளை வீட்டில் சிறிய குற்றத்திற்காக குளிரறையில் அடைத்துத் தண்டிக்கும் ரஸ்சியர்களைப் பற்றியும் பேசுகிறான்.

இவானினின் கவிதையில் கத்தோலிக்கர் மற்றய மதத்தினர் மீது விசாரணைகள் என நடத்திய சித்திரவதைகள் வருகிறது. கத்தோலிக்க மதத்தின் பேரில் ஸ்பானியர்கள் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நடத்திய சித்திரவதை விசாரணைகள் இங்கு வருகிறது. இதில் மிகவும் சிறப்பான பகுதியாக ஒரு இடம் முக்கியமானது. 15 நூற்றாண்டில் செவில் நகரத்தில் மீண்டும் யேசுநாதர் திடீரென வீதியில் அவதரிக்கிறார். அவர் பாதையில் நடந்து செல்லும்போது இறந்த சிறுமியின் பிரேத ஊர்வலத்தைப் பார்த்து அந்தச் சிறுமியை உயிர்ப்பிக்கிறார். மக்கள் யேசுநாதரைப் பின்தொடர்கிறார்கள். அங்கு வந்த பிஷப் போன்ற ஒருவரால் யேசுநாதர் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதன்பின்பு பிஷப் பேசிய விடயங்கள் எல்லாம் எழுதமுடியாது.

ஆனால் மிகச் சுருக்கமாக

1500 வருடத்திற்கு முன்பு வந்து நீங்கள் சொல்வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. ஏற்கனவே மதத்தை போப்பாண்வரிடம் நீங்கள் பொறுப்பு கொடுத்தாகி விட்டது இப்பொழுது உங்களுக்கு எதுவித வேலையும் இல்லை. நீங்கள் சொல்ல எதுவுமில்லை. இங்கு உள்ளவர்களை எப்படி வைத்திருப்பது என்பது எங்களுக்குத் தெரியும் . மக்களை அமைதியாக வைத்திருக்க புதிர், அதிசயம், அதிகாரம் என்பனவே தேவை. அதைக் கொண்டு மக்களை மிகவும் ஒழுங்காக நடத்தி வருகிறோம்.நாளை உங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்கிறார் . இதை மவுனமாக கேட்டபடியிருந்த யேசுநாதர் இறுதியில் அந்த பிஷப்பை முத்தமிடுகிறார்.

கத்தோலிக்கர்களுக்கும் ஓதோடக்ஸ் மதப்பிரிவின் வேறுபாட்டை மட்டும் சொல்லாமல் மதங்கள் நிறுவனப்படுத்தியபின் அதன் மூலவருக்கு வேலையில்லை என்பதை அழகாகக் காட்டுகிறது. காந்தியைச் சுதந்திரத்தின் பின் சுட்டச் செயல் போன்றது. முகம்மதுவோ புத்தரோ தற்பொழுது மத்திய கிழக்கிலோ அல்லது இலங்கை, பர்மா போன்ற இடங்களில் முறையே மீண்டும் தோன்றினால் அவர்களுக்கும் இதே நிலை என்பதுதான் படிமம்

.இந்த நாவல் எழுதியகாலம் 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலம். ரஸ்சியாவில் விஞ்ஞானம் மதநம்பிக்கை மற்றும் சோசலிசம் என்ற கோட்பாடுகளின் மோதல்கள் நடந்த காலம்.தஸ்தாவெய்ஸ்கி ஜார் மீதும் கிறிஸ்துவ ஓதோடொக்ஸ் மதத்தின மீது அளவு கடந்த பற்று கொண்டவர்.சோசலிசக் கருத்துகள் கொண்டவர்களையும் நாத்திகர்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தனிப்பட்ட ரீதியில் பல நெருக்கடிகளுக்கு தஸ்தாவெய்ஸ்கி முகம் கொடுத்தார். 1878ல் அவரது 3 வயதான குழந்தை அலோசா காக்காய் வலிப்பில் விழுந்து இறக்கிறது. அந்த இறப்பு தஸ்தாவெய்ஸ்கியிடம் மிகவும் பாதிப்பை உருவாக்கிறது இந்தக் காக்கா வலிப்பு தஸ்தாவெய்ஸ்கியிடமிருந்து வந்த பரம்பரை நோய். அதன் பின்பு மதமடத்தில் சிலகாலம் மன அமைதிக்காக இருக்கிறார். அங்குள்ள வயதான மதகுருவே இந்த நாவலில் வருகிறார்.

இந்த நாவலே தஸ்தாவெய்ஸ்கியின் மிகவும் உன்னதமான இறுதிப் படைப்பாகும். கரமசோவ் சகோதரர்கள் நாவல் அவருடன் 15 வருடங்கள் வாழ்ந்த இரண்டாவது மனைவியும் சுருக்கெழுத்து உதவியாளருமான அன்னாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Series Navigationதுபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழாஆப்பிள் தோப்புக்குப் போவோமா ? மூலம் : பீட்டில்ஸ் பாடகர்