தாகம்

Spread the love

 

குறைந்தது
வாரத்திற்கு இரண்டு
இலக்கியக்கூட்டங்கள்

சின்ன அறையில்
எண்ணிக்கைக் குறைவில்
வருகையாளர்கள்

அவர்களில் அதிகம்
எழுத்தாளர்கள்

எழுத்தும் வாசிப்பும்
தவம்

பெரிய அரங்கில்
அதிக அளவில்
வருகையாளர்கள்

சிற்றுண்டி விரும்பிகள்
அதிகம்

சுட்டுதலும்
சுருங்கக்கூறுதலும் குறைவு

பெரிய அரங்கில்
வழிபாடும் துதிபாடுதலும்
அதிகம்

அது
முகம்காண வந்தக்கூட்டம்

வந்து திரும்புவது
அதன் வாடிக்கை

சிற்றரங்கில்
வசைபாடுதலும் கிண்டலும்
கேளியும் அதிகம்

உட்காருவதில்
ஒரு ஒழுங்கில்லை

அங்கே
எல்லாரிடத்திலும்
வெளிப்படுகிறது கோபம்

அவர்களின் கோபத்தில்
யாரும் தப்புவதில்லை

மாற்றமுடியாத சமுகத்தைக்கண்டு
மனம்கொதித்துப் போகிறார்கள்

எரிந்துகொண்டிருக்கும்
காமம் காதல்
விசாரிக்கப்படும்

எண்ணிக்கையைப்பற்றிக்
கவலைப்படாமல்
எழுத்தை நம்புகிறார்கள்

நண்பர்கள் வட்டம்
நம்பிக்கையாக இருக்கிறது

சமாதானம் அடையாத
ஆவேசம்
எரிமலையாய். . .

கம்பீரம் கலந்த
பற்றாக்குறையில்
நீள்கிறது நிமிடங்கள்

சமுகத்தைப்புரட்டும்
வல்லமையை
எழுத்தில் இறக்கிவிட்டு
பலவீனமாகி
தாகம்தீர்த்துக்கொள்கிறார்கள்
தோழமையோடு

சமுகத்தின் மீதான ஆவேசம்
தண்ணீராய்ப்போய்விடுகிறது

 

பிச்சினிக்காடு இளங்கோ

Series Navigationகுப்பைத்தொட்டியாய்ஜென் ஒரு புரிதல் பகுதி 9