திடீர் மழை

Spread the love

மணிகண்டன் ராஜேந்திரன்

சரியாக எட்டு மணிக்கு அலாரம் அடித்தது. எப்போதும் ஜீவன் காலை எட்டு மணிக்கு பிறகுதான் எழுந்திருப்பான்.பண்டிகை விசேஷ தினங்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

இரவு முழுவதும் மின்விசிறி கக்கிய அனல் காற்றும் கொசுக்கடியும் அவனுக்கு இன்று எட்டு மணிக்கு முன்பே விழிப்பு வர வைத்துவிட்டது. இருந்தும் படுக்கையை விட்டு எழாமல் அலாரம் அடிக்கட்டும் என்று காத்திருந்தான்.

கை கால்களை விறைப்பாக நீட்டி உடம்பை திமிர் முறித்து வாயில் ஊறியிருந்த எச்சிலை சன்னலின் வழியே வெளியே துப்பிவிட்டு மீண்டும் படுத்துவிட்டான்.

டிவியை போடலாமென ரிமோட்டை தேடியபோது வைத்த இடம் இவனுக்கு சட்டென்று தெரியவில்லை. லைட்டை போட எழுந்த போது கீழே விரித்து படுத்திருந்த துண்டு வியர்வையில் அவன் முதுகோடு ஒட்டிக்கொண்டு வந்தது.

துண்டை முதுகில் இருந்து எடுத்து இடுப்பில் அம்மணத்தை மறைக்க கட்டிகொட்டன்.

கொஞ்ச நேரம் டிவி பார்த்தவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது அலுவலகத்திற்கு கிளம்ப நேரமாகிவிட்டது. சற்றென்று குளிக்க பாத்ரூமுக்கு சென்று தண்ணீர் குழாயை திறந்தான். தண்ணி அனலாக கொதித்தது.

அவசர அவசரமாக குளித்து ட்ரெஸ்ஸை மாட்டிகிட்டு பஸ்ஸை பிடிக்க கிளம்பிவிட்டான்.

இவன் வாடகை இருக்கும் வீட்டிற்கும் பேருந்து நிற்கும் இடத்திற்கும் நடக்கும் தொலைவு தான். பேருந்து நிற்கும் இடத்திற்கு செல்வதற்குள் உடம்பு முழுவதும் வியர்வையில் நனைந்து விட்டது. உள்ளாடைகள் எல்லாம் உடலோடு வியர்வையின் ஈரத்தில் ஒட்டிக்கொண்டன.

ஒரு மரத்திற்கு கீழே நின்றான் ஜீவன். வானத்தை சுற்றும் முற்றும் பார்த்து இன்றாவது மழை வருமா ? என மனதில் நினைத்துக்கொண்டான்.

சற்றென்று ஜீவனின் நினைவிற்கு அவனின் தாத்தா சொன்ன மழை வருவதற்கு முன்பு தெரியும் சில அறிகுறிகள் ஞாபகம் வந்தது.

உடனே கீழே தரையில் எறும்புகள் உணவை சாரையாக வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறதா ? என பார்த்தான். ஈசல்களோ தட்டான்களோ எங்காவது பறக்கிறதா எனவும் தேடி பார்த்தான். எதுவும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை.

இன்றும் மழை வராது என நினைத்து கொண்டிருக்கும் போதே அவன் போவதற்கான பஸ் வந்துவிட்டது.

அடித்து பிடித்து பஸ்ஸில் ஏறி பஸ்ஸின் கம்பியை பிடித்து வலுவாக நின்றுகொண்டான். வியர்வை முகத்தில் இருந்து வழிந்து கழுத்தில் இறங்கி கொண்டிருந்தது இவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

எப்போதும் போல அலுவலகத்திக்கு தாமதமாக சென்றதால் மேனேஜரிடம் திட்டுவங்கி கொண்டு அவனுடைய சீட்டில் உட்கார்ந்தான்.

வேலையின் காரணமாக சாப்பிட கூட போகாமல் நான்கு மணிவரை சீட்டிலேயே இருந்தான். திடிரென்று சன்னல்கள் வேகமாக காற்றில் அடித்து கொள்ளும் சத்தம் கேட்டு சன்னலை பார்த்தான்.

இவனுடைய நாசிகள் எதையோ நுகர்ந்து கொண்டு இருந்தன. மண்வாசனையை விரைவாகவே உணர்ந்து விட்டான். அதற்குள் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்க்கான சூழல் உருவாகிவிட்டது.

உடனே போனை எடுத்து இரண்டாவது காதலிக்கு கால் செய்தான். சாயிங்காலம் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சம்பிரதாயத்துக்கு ஏதோ நாலு வார்த்தை பேசி போனை வைத்துவிட்டான்.

அப்போது மழை தூர ஆரம்பித்து இருந்தது. கான்டீன் சென்று ஒரு டி குடித்து வருவதற்குள் மழை சோ என்று அடித்து பெய்துகொண்டிருந்தது.

ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. இரண்டாவது காதலியிடம் இருந்து கால் வந்தது. அவளை மழையில் நனையாமல் இருக்க சொல்லிவிட்டு. அலுவலகத்தில் இருந்து ஜீவன் அவளை பார்க்க கிளம்பினான்.

அடித்த மழையில் சாலை முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணி தேங்கி நின்றது. மழையில் நனைந்து கொண்டே அந்த தண்ணியில் நடக்க ஆரம்பித்தான் ஜீவன்.

மரத்தடியிலும் சுவற்றிலும் விட்ட மூத்திரமும் சாலையின் ஓரத்தில் அவசரத்திற்கு போயிருந்த மலமும் நன்றாக அந்த மழை தண்ணியில் கலந்திருந்தது. ஆங்காங்கே மழை நீர் வடிகால் ஓட்டைகளில் பாலீத்தின் பைகள் அடைத்திருந்தன.

எதை பற்றியும் கவலைகொள்ளாமல் மழையில் சந்தோசமாக நனைந்து கொண்டே அவள் நிற்கும் இடத்திற்கு சென்றான்.

அவளை ஸ்சுகுட்டியை ஓட்ட சொல்லிவிட்டு ஜீவன் வண்டியின் பின்னால் உட்கார்ந்து கொண்டான். மழையில் நனைந்து அவளின் உடையெல்லம் உடலோடு ஒட்டிக்கொண்டதால் அவளின் அங்கங்கள் இவனுக்கு பளிச்சென்று தெரிந்தன.

எத்தனையோ முறை அவளை பார்த்திருக்கிறான் சில முறை உடையே இல்லாமல் கூட பார்த்திருக்கிறான். ஆனால் இப்பொது இவளை இப்படி பார்த்து ஜீவனுக்கு மனதில் ஏதோ பரவசத்தை ஏற்படுத்தியது.

சாலை முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் ஸ்குட்டி பத்து அடி தூரம் கூட நகரவில்லை. அவனுக்கு முன்னும் பின்னும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் உறுமி கொண்டு நின்றன.

ஜீவன் கையை விட்டு அவளை எங்காவது தடவலாமா என்று கூட யோசித்தான். ஆனால் பக்கத்திலேயே ஆட்கள் இருந்ததால் தற்போதைக்கு அந்த யோசனையை விட்டுவிட்டான்.

மழையில் நனைந்து ஜீவனின் உடல் விறைத்துவிட்டது. இவன் உடம்பு சூட்டை தேடியது. அவளின் இடுப்பினை இவனின் இரண்டு கைகளாலும் இறுக்கி அவளை அணைத்து அவளின் முதுகில் முகத்தை வைத்து அவள்மேல் சாய்ந்தான் ஜீவன்.

டேய் என்பதோடு அவள் அப்போது எதுவும் சொல்லவில்லை. அவளுக்கும் அவன் உடலின் சூடு தேவை என்பதை போல அமைதியாக இருந்து விட்டாள்.

எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேகமாக ஹாரனை அழுத்தி கொண்டிருக்க இவன் மட்டும் இங்கவே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நல்லா இருக்குமென்று நினைத்து. பெருமூச்சை வேகமாக இழுத்து அவள் முதுகில் படும்படி விட்டான்.
லேசாக முன்னாள் இருக்கும் வண்டிகள் நகர ஆரம்பித்தன. கருமேகங்கள் விலகி இவனது முன்றாவது காதலி லேசாக இவனுக்கு முகம் காட்டினாள்.

தூறல் இப்பொது முழுவதும் நின்றுவிட்டது.

Series Navigationதமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு