திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]

 

மதுரை என்றாலே அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனால் மதுரை மாநகரம் ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திருக்கூடல் எனும் பெயரில் திகழ்ந்துகொண்டுள்ளது. பாண்டிய நாட்டின் பதினெட்டுத் திவ்யதேசங்களில் அதுவும் ஒன்றாகும்.

 

ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ எனும் பெயரில் வழங்கும் மரபு ஒன்று உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். தொண்டை நாட்டுப் பகுதியில் சேயாறு, பாலாறு, கம்பையாறு ஆகியவை கூடும் இடத்திற்கு முக்கூடல் என்று பெயர். அதுபோல தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகியன கூடும் இடமும் முக்கூடல் எனும் பெயர் பெற்றது. பள்ளு இலக்கியத்தில் மிகப்புகழ்பெற்ற ‘முக்கூடற்பள்ளு’ எனும் நூல் இவ்வூரைப் பற்றியே எழுந்தது. ’கிருதமாலா’ எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் சுற்றி வந்து மீண்டும் ஒன்றாகக் கூடுவதால் அந்நகருக்குக் கூடல் எனும் பெயர் வந்ததாம்.

 

இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருந்த கோலத்தில் கூடலழகர் எனும் திருநாமத்துடன் காட்சியளிக்கிறார். தாயாருக்கு மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி, என்னும் திருநாமங்கள் உண்டு. இங்குள்ள தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி, கிருதமாலா எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் விமானம் அட்டாங்க விமானம் எனும் எண்கோண விமானமாகும். பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.

 

கூடற் புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியன இத்திவ்யதேசம் பற்றி விளக்குகின்றன. நான்கு யுகங்களிலும் இத்திவ்யதேசம் விளங்கி இருப்பதாகப் பல புராணங்கள் கூறுகின்றன. கிரேதாயுகத்தில் பிரம்ம தேவனின் மகன் பெருமாளை வழிபட விஸ்வகர்மாவின் மூலம் இத்திருக்கோயில் அமைத்தானாம். இதேயுகத்தில் உமாதேவியை மணம் புரிய சிவபெருமான் இத்திவ்யதேசத்தில் தவம் செய்தாராம்.

 

திரேதாயுகத்தில் பிருது மன்னன் ஒருமுறை விமானத்தில் பறந்து சென்றபோது இங்குள்ள அட்டாங்க விமானத்தின் சக்தியால் மேலே பறக்க முடியாமல் போக அவன் இங்கே இறங்கி இத்திவ்யதேசத்தின் கூடலழகரை வழிபட்டு இங்கேயே தங்கியிருந்து பரமபதம் அடைந்தானாம். துவாபரயுகத்தில் அம்பரீஷன் எனும் மன்னன் இங்கு வழிபட்டு நற்பேறு பெற்றான்.

இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் புருரவன் எனும் மன்னன் இங்கே எழுந்தருளி உள்ள கூடலழகர் பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் செய்து மோட்சம் பெற்றான். அவனுடைய மகனான இந்திரத்யுமன் என்பவன் இப்பெருமாளை வழிபட்டு நற்கதி அடைந்தான். அவனது மகனே மலயத்துவசப் பாண்டியன் எனும் பெயரில் புகழ் பெற்றான். அவன் பெருமையைப் பெரியாழ்வார்,

”பருப்பத்துக் கயல் பொறித்த பாண்டியர்”

என்று போற்றுவார். அதாவது அவன் வடநாட்டின் மீது படையெடுத்து அங்கிருந்த அரசர்களை வென்று அத்துடன் இமயமலையில் தம் மீன் கொடியை நாட்டினான். அத்துடன் தம் சின்னமான மீன் முத்திரையையும் அங்கே பொறித்தான் என்பதைப் பெரியாழ்வார் இவ்வாறு உணர்த்துகிறார்.

இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே கலியுகத்தில் பாண்டிய நாட்டை வல்லப தேவன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். ஒருநாள் அவனுக்கு முக்தியை அளிக்கக் கூடிய பெருந்தெய்வம் எது? எனும் சந்தேகம் தோன்றியது. தன் அவையில் இருந்த அனைத்து ஆன்மீக அறிஞர்களையும் அழைத்து விளக்கம் கேட்டான். யாருக்கும் விடை தெரியவில்லை. பல மதத்தைச் சார்ந்தவர்களிடமும் கேட்டும் பதில் தெரியவில்லை.

 

வல்லபதேவன் தன் அரண்மனை வாயிலில் ஒரு பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்தான். முக்தி அளிக்கும் பரம்பொருளை எப்பொழுது யார்   எனக்கு நிரூபணம் செய்து காட்டுகிறர்களோ அப்பொழுது இப்பொற்கிழி தானாகவே அவர் கைகளில் வந்து விழட்டும் என்று முரசறைந்து தெரிவிக்க மன்னன் ஆணையிடுகிறான். அந்த மன்னனின் அரசவையில் செல்வநம்பி எனும் பெயரில் ஓர் அரண்மனைப் புரோகிதர் ஒருவர் இருந்தார். அவர் கனவில் கூடலழகர் எழுந்தருளி “நீர் சென்று திருவில்லிபுத்தூர் சென்று அங்கே இருக்கும் பெரியாழ்வாரை அழைத்து வாரும். அவர் வந்து திருமாலே பரம்பொருள், ஸ்ரீவைஷ்ணவமே அனைவருக்கும் முக்தி அளிக்கும் சமயம் என்று நிலைநாட்டுவார்” என்று உரைத்தார். செல்வநம்பி சென்று அழைக்க பெரியாழ்வாரும் கூடல் நகரை வந்தடைந்தார்.

 

பாண்டிய மன்னனின் அவைக்களத்திற்கு வந்த பெரியாழ்வார் இதிகாசம், புராணங்கள், வேதம் ஆகியவற்றிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகள் கூறி திருமாலே அனைவர்க்குமான பரம்பொருள், மேலும் ஸ்ரீவைஷ்வணவமே முக்தி அளிக்கக்கூடிய மதம் என்று நிரூபணம் செய்தார். அக்கணமே பொற்கிழி அறுந்து தானாகக் கீழே விழுந்தது.

 

பெருவியப்படைந்த பாண்டிய மன்னன் பெரியாழ்வாரைப் புகழ்ந்து பணிந்தான். மேலும் அவரை யானைமேல் ஏற்றித் தான் அவரைப் பின்தொடர்ந்து வந்தான். இக்காட்சியைக் காண்பதற்காகக் கூடலழகர் தம் பிராட்டியான திருமகளோடு கருட வாகனத்தில் விண்ணில் எழுந்தருளினார்.

 

பெருமாளையும் பிராட்டியையும் ஒரு சேரக் கண்ட பெரியாழ்வார்,

”எம்பெருமானே! பெருமாளே! இந்தக் கலியுகத்தில் தாங்கள் இவ்வாறு காட்சி அளிக்கலாமா? தங்களுக்குக் கண்ணேறு பட்டுவிடுமே”

என்று எண்ணிப்

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு’ என்று பல்லாண்டு பாடினார். இந்தத் திவ்ய தேசத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்த பல்லாண்டுதான் எல்லாத் திவ்யதேசங்களிலும் முதலில் பாடுவதாக அமைந்துவிட்டது.

 

”வானார் எழிலி மழைவளம் நந்தத்

தேனார் சிமய மலையின் இழி தந்து

நான்மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா

மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய

இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்

திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”

இந்தப் பாடல் அடிகள் பரிபாடலில் வருகின்றன. ‘இருந்தையூர் அமர்ந்த செல்வா’ என்ற சொற்றொடர் இந்தத் திருக்கூடலில் எழுந்தருளி உள்ள பெருமாளையே குறிக்கிறது. இந்தத் திவ்யதேசம் உள்ள பகுதியானது சங்க காலத்தில் ‘இருந்தையூர்’ என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் பெயரில் ஒரு புலவர் இங்கே வாழ்ந்திருக்கிறார். அவரைப் பற்றி நக்கீரனாரின் களவியல் உரையில் குறிப்பு காணப்படுகிறது. இங்கே எழுந்தருளி உள்ள பெருமான் சங்க காலத்தில் ”இருந்த வளமுடையார்” என்னும் திருநாமத்தால் வழங்கப்பட்டுள்ளார். காரணம் இங்கே பெருமாள் இருந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அரும்பத உரைகாரரும் அவ்வாறே கூறுகிறார்.

 

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய அரசன் இப்பெருமாளுக்குப் பல உற்சவங்கள் எடுத்துள்ளான். குறிப்பாக ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் பெரிய திருவிழா நடத்தி உள்ளான். மாங்குடி மருதனார் எனும் புலவர் தாம் எழுதிய மதுரைக் காஞ்சியில் ‘மாயோன் மேய ஓண நன்னாள்” என்று அதைக் காட்டுகிறார்.

 

புலவர்கள் சங்கம் அமைத்துத் தமிழ் ஆய்ந்த போது இக்கூடலழகர் ’துவரைக் கோமான்’ எனும் பெயர் தாங்கி சங்கப் புலவராக வீற்றிருந்தார் என்று கூறப்படுகிறது. கூடலழகர் எனும் திருநாமம்தான் வடமொழியில் ’வ்யூக சுந்தர ராஜன்’ என்று வழங்கப்படுகிறது.

 

வாமனனாக வந்த திருமால் மூன்றடி மண் கேட்டு ஓங்கி உளகளந்த திருவிக்ரம அவதாரம் எடுத்தபோது அவரின் திருப்பாதம் மேலே சத்யலோகம் வரை சென்றதாம். அதைக்கண்ட பிரமன் மனம் மகிழ்ந்து அப்பாதங்களைத் தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் திருமஞ்சன நீராட்டினார். அந்த நீரின் சிறுதுளிகள் இம்மண்ணுலகில் வீழ்ந்தன. அவையே வைகை ஆறாகப் பெருகின. அந்த ஆறு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு மாலைபோல் மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டு ஓடியது. ஒரு பிரிவு வகை என்றும் மற்றொன்று கிருதமாலா என்றும் பெயர் பெற்றன. அந்தக் கிருதமாலா நதிக்கரையில்தான் இக்கூடலழகர் எழுந்தருளி உள்ளார்.

 

பாண்டிய மன்னர்களுக்கு மீன் லச்சினையாக அமைந்ததற்கும் இக்கூடலழகர்க்கும் தொடர்புபடுத்தி ஒரு வரலாறு உண்டு அதாவது சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் இக்கூடலழகர்பால் மிக்க பக்தி கொண்டு கடும் விரதம் மேற்கொண்டான். அவன் ஒரு நாள் மாலை வேளையில் அவன் நீர்விட்டு தர்ப்பணம் செய்யும்போது அந்த நீரில் பெருமாள் மச்சாவதராமாய் மீனாக எழுந்தருளினார். அவனுக்கு அருள் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அதன் பிறகுதான் பாண்டிய மன்னர்கள் அனைவரும் மீனைத் தங்கள் கொடிகளில் மீனையே லச்சினையாக ஏற்றனராம்.

 

இந்த மதுரை நகருக்கு அருகில் கொந்தகை என்னும் ஊர் ஒன்று உள்ளது. அங்குதான் 1307-இல் திருவாய்மொழிப்பிள்ளை என்பவர் அவதரித்தார். அவர் சில காலம் பாண்டிய நாட்டின் முதலமைச்சராய்ப் பதவி வகித்தார். இந்தத் திவ்ய தேசத்திற்கு முஸ்லீம்கள் படையெடுத்தபோது எந்த ஊறும் ஏற்படாமல் அவர்தான் பாதுகாத்தார். அவரது சீடர்தான் ஸ்ரீமத் மணவாள முனிகள் ஆவார். அந்த மணவாள முனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும் இது. மேலும் இங்கு பல்லாண்டு பாடப்பட்டதால் இதை ஸ்ரீமத் இராமானுஜர் பரமபதத்திற்கு ஈடாகக் கருதினார்.

 

வில்லாண்ட வடவரையான் மணம் புணர

அட்டாங்க விமான மென்னும்

இல்லாண்டு புயன் கனகன் காசிபனார்

பிருகு அம்பரீடன் கூடல்

தொல்லாண்ட புருவரசு மலயகேதனன்

முதலோர் தொழப் புத்தூரான்

பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட

தோளனடி பணிதல் செய்வாம்

எனும் பாடல் மூலம் கூடலழகரை

வேண்டிப் பேறு பெற்றவர்களை அறிய முடிகிறது

 

இத்திருக்கோயில் மூன்று அடுக்குகளாலானது. மூன்று அடுக்குகளிலும் பெருமாள் இருந்த நின்ற, கிடந்த கோலங்களில் எழுந்தருளி அருள் செய்கிறார் மேலும் நவக்கிரங்களும் இக்கோயிலின் உள்ளே அமைந்துள்ளது மற்றோர் சிறப்பம்சமாகும்.

 

மதுரையை நான்மாடக்கூடல் எனும் பெயரிலும் வழங்குவது ஒரு வழக்காகும். ஒரு காலத்தில் இம்மண்ணுலகெங்கும் பெருமழை கொட்டித் தீர்த்தது. அப்போது அடியார்கள் அனைவரும் இத்திவ்யதேசத்துப் பெருமாளிடம் வந்து வழிபட அவர் நான்குத் திசைகளிலும் நான்கு மேகங்களை ஏவி அவைமேலே ஒன்று சேர்ந்து மழையைத் தடுத்தனவாம். எனவே இந்நகருக்கு நான்மாடக்கூடல் எனும் பெயர் வந்தது என்று கூறுவர்.

 

வைகை ஆற்றுக்கு வேகவதி என்று ஒரு பெயரும் வழங்கப்படுவதுண்டு. வேகமாக ஓடியதால் அப்பெயர் வந்தது. விண்ணுலகத்திலிருந்து இவ்வையத்திற்கு வந்ததால் வையை எனும் பெயர் பெற்றதாம். அந்த ஆறு இரண்டு பிரிவாகப் பிரிந்து மாலைபோல மதுரைச் சுற்றியதால் அதற்கு கிருதமாலா எனும் பெயர் ஏற்பட்டது. இதனைக் கீழ்க்கண்ட புராணப்பாடல் விளக்குகிறது.

”வேகமாதலின் வேகவதி என்றும்

மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்—தார்

ஆகலால் கிருதமலையதாம் என்றும்

நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

இக்கோயில் அஷ்டாங்க விமானத்தைக் கொண்டது. இந்த அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறுவர். மேலும் இவ்விமானத்தை நாள்தோறும் 11 சுற்றுகளாக 45 நாள்கள் தொடர்ந்து சுற்றினால் அவர்கள் எண்னிய செயல் நிறைவேறும் என்பது சிலரின் கூற்றாகும்.

 

சிலப்பதிகாரத்தில் வரும் மாதுரி எனும் இடையர் குலப்பெண் ஆய்ச்சியர் குரவை வழிபாடு நிறைவுபெற்றதும் இத்தலப் பெருமாளை வழிபடச் சென்றதை அறிய முடிகிறது. இங்கு எழுந்தருளி உள்ள பெருமாளை சிலப்பதிகாரத்தில் நெடுநீர் வையைப் பெருமாள் என்று இளங்கோவடிகள் போற்றுகிறார்.

”ஆயர் முதுமகள் ஆடிய சாயலால்

பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்

நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்

தூவித் துறை படியப் போயினாள்.”

என்பது சிலப்பதிகார அடிகளாகும்.

 

பெரியாழ்வார் பரம்பொருளை நிலைநாட்டிப் பொற்கிழி அறுத்த இடத்தை மெய்காட்டும் பொட்டல் என்று கூறுவர். அது நாளடைவில் சிதைந்து இன்று மேங்காட்டுப் பொட்டலாயிற்று. இன்றைக்கும் மார்கழி மாதம் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருளுகிறார்.

 

நாயக்க வம்ச அரசர்கள் இம்மதுரையை ஆண்டபோது இக்கோயிலுக்கு நிறைய திருப்பணிக் கைங்கர்யங்கள் புரிந்துள்ளனர். கோயிலில் உள்ள 557,558,559 ஆகிய எண்ணுள்ள கல்வெட்டுகள் அவற்றைத் தெரிவிக்கின்றன.

 

ஸ்ரீபாகவதத்தின் 11-ஆம் அத்தியாயத்தில் தாமிரபரணி மற்றும் கிருதமாலா ஆற்றங்கரைகளில் ஸ்ரீவைஷ்வணத்தை பாரெங்கும் பரப்பும் மகான்கள் அவதரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படியே தாமிரபரணி நதிக் கரையில் நம்மாழ்வாரும் இங்கே கிருதமாலா ஆற்றங்கரையில் பெரியாழ்வாரும் தோன்றினர்.

 

ஒருவகையில் பூலோக வைகுந்தம் என்றும் பெரிய கோயில் என்றும் போற்றப்படுகின்ற திருவரங்கத்தைப் போல இத்திவ்யதேசமும் இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ளதாகும். திருவரங்கம் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவில் உள்ளது என்றால் இக்கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடையில் உள்ளது.

 

இத்திருக்கோயிலின் உள்ளே 108 திவ்யதேசங்களின் பெருமான்கள் எங்ஙனம் அந்த அந்தத் திவ்யத் தேசங்களில் எழுந்தருளி உள்ளனரோ அப்படியே வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

 

பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப் பெற்ற திவ்யதேசமாதலால் இக்கூடலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஆண்டாளின் சன்னதி மிகவும் சக்தி பெற்றதாகும்.

 

சிலப்பதிகாரத்தில் வரும் “உவணச் சேவல் உயர்ந்தோன் நியமும்

மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”

என்ற அடிகளின் மூலம்  உவணச் சேவல் எனும் கருடக்கொடியை உடைய திருமால் கோயிலும், மேழி எனும் கலப்பையை உடைய பலராமன் திருக்கோயிலும் மதுரையில் இருந்தன என்பது தெரிய வருகிறது. இந்த அடிகளில் மதுரை நகரம் வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு எப்பொழுதும் வெண்ணிற மேகங்கள் சூழ்ந்திருக்குமாம்.

 

திருமங்கையாழ்வார் திருநாகைக்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யப்பெருமாளின் அழகைக்கண்டு மனம் பறி கொடுக்கிறார். ”இத்தகைய அழகுடையவரை நான் இதற்கு முன்னம் பார்த்ததில்லையே?” என்று இவர் அழகைக் கண்டு வியக்கிறார். அவரைப் போற்றி மங்களாசாசனம் செய்யும்போது திருக்கூடல் பற்றியும் போற்றுகிறார். இதோ அந்தப் பாசுரம்:

 

”கோழியும் கூடலும் கோயில் கொண்ட

கோவல ரேயொப்பர்; குன்ற மன்ன

பாழியந் தோளுமோர் நான்கு டையர்

பண்டிவர் தம்மையும் கண்டறியோம்

வாழிய ரோஇவர் வண்ண மெண்ணில்

மாகடல் போன்றுளர்; கையில் வெய்ய

ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி

அச்சோ ஒருவர் அழகியவா!”

[பெரிய திருமொழி—2-9-5]

இதன் பொருள் :

உறையூரையும், கூடல் என்னும் தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரான் போன்றே இவர் இருக்கிறார். மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். இவரை நாம் முன்பு பார்த்ததில்லை. இவர் பல்லாண்டு வாழ்க. மேலும் இவர் கடல் வண்ணன் போலே இருக்கிறார்.ஒரு திருக்கையில் சுடர்விடும் சக்கரத்தை ஏந்தியும், மற்றொன்றில் சங்கைத் தரித்துக் கொண்டும் உள்ளார். அச்சோ இவர் அழகை என்னென்பேன்?

இப்படித் திருமங்கையாழ்வாரால் மட்டுமே ஒரே ஒரு பாசுரம் கொண்டு மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம் இது.

ஆனால் ஒரு சிலர் நான்முகன் திருவந்தாதியின் கீழ்க்கண்ட 39- ஆம் பாசுரத்தினை எடுத்துக் காட்டி அதுவும் இந்தக் கூடலைத்தான் குறிக்கிறது என்பார்கள்.

”அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண

இழைப்பன் திருக்கூடல் கூட—மழைப்பேர்

அருவி மணிவரன்றி வந்திழிய யானை

வெருவி அரவொடுங்கும் வெற்பு”

இப்பாடலில் ‘திருக்கூடல்’ என்று வருவதால் இப்பாசுரம் திருக்கூடல் பற்றித்தான் எழுந்ததென்பர். ஆனால் இதில் வரும் திருக்கூடல் என்னும் சொல்லின் பொருளே வேறாகும்.

அதாவது தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவி தன் தலைவன் வருவானா மாட்டானா என்பதை அறிய குறி பார்ப்பது போலாகும் இது. தலைவி மணலில் கண்ணை மூடிக் கொண்டு ஆள்காட்டி விரலால் வட்டம் போட முயற்சி செய்வாள். அந்த வட்டம் நிறைவு பெற்றால் தலைவன் வருவான் என்று மகிழ்வாள். இந்நிகழ்ச்சிக்குத்தான் கூடலிழைத்தல் என்பது பொருளாகும்.

இப்பாசுரத்தைப் பொருத்தமட்டில் திருவேங்கமுடையானைக் கண்ணால் சேவிக்கவும், அவன் எழுந்தருளி உள்ள திருமலையை சென்று அடையவும் எண்ணிய தலைவி தான் கூடல் இழைப்பது பற்றிக் கூறுகிறாள். எனவே இப்பாசுரம் திருக்கூடல் பற்றி அன்று என முடிவு செய்யலாம்.

ஆதலால் இத்திவ்யதேசம் திருமங்கை மன்னனால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்ய தேசமாகும்.

 

இத்தகைய பேரும் பெருமையும் பெற்ற மதுரையின் சிறப்பு நினைக்க நினைக்க இன்பம் பயப்பதாகும்.

Series Navigationகலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி