“திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை

முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி

 

[வளவ. துரையன் எளிய உரை எழுதிஉள்ள “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” நூலை முன்வைத்து]

 

பாச்சுடர் வளவ. துரையன் பல பரிமாணங்கள் கொண்ட ஓர் அறிஞர். நவீன எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிற்றிதழ் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சோலை அமைப்பாளர், மரபுத் தமிழில் ஆழங்கால் பட்டவர் என்று அவரைப்பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பல முகங்களில் ஒரு முகம் வைணவ அறிஞர் என்பது.

 

”வைணவ விருந்து” என்கிற அவருடைய மகத்தான படைப்பை வைணவ உலகம் மறந்திருக்காது. அந்நூல் திருமலை திருப்பதி தேவஸ்தான நிதி உதவி பெற்று வெளிவந்ததாகும். வைணவக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வரும் வளவ. துரையனின் சமீபத்திய நூல் “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” என்கிற வைணவ இலக்கியத்துக்கான எளிய தமிழ் உரை. சமுதாயச் செம்மல் ஸ்ரீமத் இராமானுஜரின் 1000-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடு என உரையைப்பற்றி முகப்பு அட்டை தெரிவிக்கிறது.

நூலுக்கான காரணத்தை முகவுரை சொல்கிறது. எம்பெருமானார் இராமானுஜர் ஒருமுறை திருக்கோளூருக்கு எழுந்தருளுகிறார். அப்போது அவ்வூரிலிருந்து வெளியே புறப்படுகிறார் ஒரு பெண்மணி. தன்னை வணங்கிய பெண்ணைப் பார்த்து எம்பெருமானார் இராமானுஜர் கேட்கிறார்.

”பெண்ணே! நீ எங்கிருந்து புறப்பட்டாய்?”

அதற்கு அப்பெண் பதில் சொல்கிறாள். “நான் திருக்கோளூரிலிருந்து புறப்பட்டு விடையும் கொண்டேன்”. உடனே இராமானுஜர், “இந்தத் திருக்கோளூரைத் திண்ணம் என் இளமான்புகும் ஊர் திருக்கோளூர்” என்பார்கள். அப்படி எல்லார்க்கும் புகும் ஊராக இருக்கும் ஊராக இருக்கும் இத்திருக்கோளூர் உனக்கும் மட்டும் ஏன் புறப்படும் ஊர் ஆயிற்று? எனக் கேட்கிறார்.

 

அதற்கு விடையாக அப்பெண்பிள்ளை சிலவற்றைக் கூறுகிறார். அதாவது, “பெரியவர்கள் செய்த புண்ணியச்செயல்களையோ அல்லது வேறு சில நன்மைகளையோ பகவானுக்குச் செய்தேனோ நான் இவ்வூரில் குடியிருக்க” என்று கேட்கிறாள். அப்படிச் சொல்லும் போது அப்பெண்மணி கூறிய எடுத்துக்காட்டுகள் மொத்தம் 81 ஆகும். அவையே “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” என்று வாழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நூலுக்கு இதுவரை மணிப்பிரவாள நடை உரைகளே வந்துள்ளன. எளிய தமிழில் வளவ. துரையன் இதற்கு உரை யாத்துள்ளார். தெள்ளிய நீரோடை போன்ற நடையும், சரளமான தமிழும் வாசகனை இருகரம் நீட்டி நூலுக்குள் ஆற்றுப்படுத்துகின்றன.

திருக்கோளுர்ப் பெண்பிள்ளையின் 81 வாக்கியங்களும் மிக காத்திரமானவை. நுட்பமானவை. பாகவதம் தொடங்கி மகாபாரதம் வரை பரந்துள்ளவை. இராமாயணம் தொடங்கி ஆழ்வார் பாசுரங்கள் முடிய அனைத்தயும் உள்ளடக்கியவை.

 

எளிய ஒன்றிற்கு எடுத்துக்காட்டு ”அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே” என்பதாகும். முதிய அரிய சம்பவம் “என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே” என்பதாகும். 88 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் படித்து முடிக்கும்போது வைணவ உலகத்தில் ஒரு பெரிய பெரும்பயணம் நடத்தி முடித்த ஒரு திருப்தி ஏற்படுகிறது. வைணவ இலக்கியங்களின் மீதான ஒரு பருந்துப்பார்வை எனக் குறிப்பிடலாமோ எனத் தொகுத்தும், வகுத்தும் கூறத் தோன்றுகிறது.

 

தரமான தாள்; பெரிய அச்செழுத்துகள்; ஒவ்வொரு எடுத்துக்காட்டு முடியும்போதும் அடுத்த கேள்வியைப் பிரித்துக் காட்டும் எல்லைக்கோடு. வேதஸ்வரூபம் ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீமத் மணவாள மாமுனிகள், ஸ்ரீபெருந்தேவித்தாயார் மற்றும் ஸ்ரீகருட ஜெயந்தி உற்சவ ஹோம குண்டத்தில் ஸ்ரீகருடாழ்வார் தோன்றிய காட்சி  ஆகிய வண்ணப் படங்கள்மிகச் சிறப்பாக அச்சிடப்பட்டு நூலோடு சேர்க்கப்பட்டுள்ளன. பக்தியின் பரவசமும், தமிழின் இனிமையும் இந்த உரையாக்கத்தின் பண்பும், பயனும் என்றுரைத்தால் அது  மிகையாகாது.

===============================================================================

Series Navigationகதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)