திருப்புகழில் ராமாயணம்

Spread the love

ஜயலக்ஷ்மி

 

”திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்ற இனிமையான பாடலை நாம் நிறையவே கேட்டிருக்கிறோம். ஆம் திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் கேட்டாலோ மனத்தை உருக்கும். காரணம் அவற் றின் சந்தம். பாடுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அவற்றின் தாளமும் ஓசையும் மிகவும் இனிமை யானவை.

முருகனின் புகழ் பாடும் இப் பாடல்களை இயற்றியவர் அருணகிரிநாதர். இன்றைக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அருணகிரி நாதர் ஒரு நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் திருவண்ணா மலை கோபுரத்திலிருந்து குதித்த பொழுது முருகனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். முருகன் “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்று அடியெடுத்துக் கொடுக்க சந்தக் கவி பாட ஆரம்பித்தார்ர்.

அதன் பின் முருகன் கோயில் கொண்டிருக்கும் பல தலங்களுக்கும் சென்று அந்த அந்தத்

தலங்களில் கோயில் கொண்டிருக்கும் முருகனைப் பாட லானார். இப்படி இவர் பாடிய 16000 பாடல்களில் கால

வெள்ளத்தால் அழிந்து போனவை போக எஞ்சியவை சுமார்

1350 பாடல்கள் மட்டுமே.

இந்தப் பாடல்களில் முருகனின் பல லீலைகளையும் பாடி யிருப்பதோடு புராண இதிகாச நிகழ்ச்சி களையும், தேவார மூவர் நிகழ்த்திய அற்புதங்களை யும் பாடியுள்ளார் இவர் தீவிர முருக பக்தரான இருந்த போதிலும் சைவ, வைணவ பேதமின்றி திருமாலின் லீலை களையும் விரிவாகப் பாடி யிருக்கிறார். ராமாயண பாகவத மகாபாரத நிகழ்ச்சிகளையும் திருப்புகழில் இடம் பெறச் செய் துள்ளார். திருமால், இராமர். கிருஷ்ணரின் பல லீலைகளை யும் சொன்னபின் மாயோன் மருகோனே என்று முடிப் பார். திருப்புகழில் இராமாயணமே இடம் பெற்றுள் ளது. என்று சொல்லும்படி பல இராமாயண நிகழ்ச்சிகளையும் அமைத்தி ருக்கிறார்.

ராமாவதாரம்.

ராமாவதாரத்தின் நோக்கமே தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த அசுரர்களையும், அவர் கள் தலைவனான இராவணனை வதைப்பதுமே ஆகும். தேவர்கள் திருமாலிடம் சென்று இராவணனின் கொடுஞ் செயல்களை யெல்லாம் எடுத்துச் சொல்லி அபாயம் வேண்டு கிறார்கள். இதைக் கேட்ட திருமால் எந்தெந்த தேவர்கள் எப்

படிப் பிறக்க வேண்டும் என்று அறிவிக்கிறார். சூரியனும் இந்திரனும் முறையே சுக்கிரீவ வாலியாகவும் பிரும்மா கரடி அரசனான ஜாம்பவானாகவும் அக்கினி நீலனாகவும் ருத்திரனின் அம்சமாக அனுமனும் மற்ற தேவர்கள் அனை

வரும் வானரர்களாகவும் சென்று வனத்தில் பிறக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.

இரவி, இந்திரன் வெற்றிக் குரங்கின்

அரசரென்றும்

ஒப்பற்ற உந்தியிறைவன் எண்கினக்

கர்த்தனென்றும்

நெடிய நீலன் எரியதென்றும்,

ருத்ரற் சிறந்த அனுமனென்றும்

ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த

வர்க்கத்தில் வந்து புனம் மேவ

என்று திருமால் சொன்னதைக் காட்டுகிறார்.மேலும் தான் சென்று தசரதற்கு மகனாக அவதரிக்கப் போவதாகவும் சொல்கிறார் திருமால். இதை

மேலை வானோர் உரைத்த அரசற்கொரு

பாலனாகி உதித்து

அருணகிரிநாதர் பதிவு செய்கிறார்.

வருகைப் பருவம்

அயோத்தியில் தசரத குமார னாக அவதாரம் செய்த ராமன் தவழ்ந்தும் தளர் நடை பயின் றும் வருகிறான். அவனை முலை உண்ண வரும்படியும், பூச்சூட வரும்படியும் கோசலை அழைப்பதைப் பார்ப்போம்.

”எந்தை வருக, ரகு நாயக வருக

மைந்த வருக, மகனே இனி வருக

என்கண் வருக, எனதாருயிர் வருக—அபிராமா

இங்கு வருக, அரசே வருக முலை

உண்க வருக, மலர்சூடிட வருக

என்று பரிவினொடு கோசலை புகல

வருமாயன்

பெரியாழ்வார் கண்ணனை அழைப்பது போல் கோசலை அழைத்ததையும் அருணகிரி நமக்குக் காட்டுகிறார்.

யாகம் காத்தது

சிறுவன் ராமனைத் தனது யாகம் காப்பதற்காகத் தன்னுடன் அனுப்பி வைக்கும் படி விசுவாமித்திர முனிவர் கேட்கிறார்.புத்ர பாசத்தால் முதலில்

தயங்கினாலும், பின்னால் குலகுரு வசிஷ்டரின் அறிவுரை யின் படி இராமனோடு லக்ஷ்மண னையும் சேர்த்து

அனுப்புகிறான் தசரதன். தனது கன்னிப் போரிலேயே தாடகையை வதம் செய்து வெற்றிவாகை சூடுகிறான்.

வெடுத்த தாடகை சினத்தை ஓர்கணை

விடுத்து

என்றும்,

பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை

வென்று தாடகை உரங்கடிந்து

எனவும், ராமன் வெற்றியைக் கொண்டாடுகிறார். அடுத்தது யாகம்.

காலைக்கே முழுகி குணதிக்கினில்

ஆதித்யாய எனப்பகர் தர்ப்பண

காயத்ரீ ஜபம், அர்ச்சனை செயும்

முனிவோர்கள்

கானத்து ஆச்ரமத்தில் உத்தம

வேள்விச்சாலை யளித்தல் பொருட்டு

எதிர் காதகத் தாடகையைக் கொல்

க்ருபைக் கடல்

என்று ராமன் யாகம் காத்ததை விளக்குகிறார்.

அகலிகை சாப விமோசனம்

யாகம் காத்த ராமன் தம்பி இலக்குவனோடும் குரு விசுவா மித்திர முனிவரோடும் மிதிலை நோக்கி வருகிறான். வரும் வழியில் கல்லுருவத் தோடு கிடந்த அகலிகையின் மேல் இராமனின் பாததூளி பட அவள் சாப விமோசனம் பெற்று பழைய உருவம் பெறு கிறாள்.

கல்லிலே பொற்றாள் படவே அது

நல்ல ரூபத்தே வர, கானிடை

கௌவை தீரப் போகும் இராகவன்

என்று அகலிகை சாப விமோசனத்தைப் பார்க்கிறோம்.

சீதா கல்யாணம்

மிதிலை செல்லும் வழியில் கன்னி மாடத்தில் நிற்கும் சீதையை ராமனும் நோக்குகிறான். அவளும் நோக்குகிறாள். மறுநாள் அரச வைக்கு வந்த ராமன் கன்யாசுல்க மாக வைக்கப்பட்டிருந்த சிவதனுசைப் பார்க் கிறான். குருவின் உத்தரவின் பேரில் வில்லை வளைக்கச் செல்கிறான். மிதிலை அரசவையில் இருந்த மக்கள் அனை வருமே

தடுத்து இமையாமல் இருந்தவர்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.

இந்த நிகழ்ச்சியை

சிலை மொளுக்கென முறிபட மிதிலையில்

ஜனக மன்னன் அருள் திருவினைப் புணர் அரி

என்றும்

மிதிலைச் சிலை செற்று மின் மாது தோள்

தழுவிப் பதி புக்கிட

என்றும் சீதா கல்யாண நிகழ்ச்சியைச் சுருக்கமாகப் பதிவு செய்கிறார்.

வனவாசம்

சீதாராமனுக்கு முடிசூட்டி ராஜா ராமனாகப் பார்க்க விரும்புகிறான் தசரதன்.ஆனால் முன்னரே கைகேயிக்குத் தருவதாக வாக்களித்த இரு வரங்களின் படி இராமனுக்கு 14 ஆண்டு கள் வனவாசமும், பரதனுக்கு மகுடமும் வரமாக வேண்டுகிறாள் கைகேயி.

”மன்னவன் பணி அன்று ஆகில்

நும்பணி மறுப்பனோ?

என் பின்னவன் பெற்ற செல்வம்

அடியனேன் பெற்றதன்றோ?”

என்ற ராமன் அதன்படி இலக்குவனோடும் சீதையோடும் வனம் செல்கிறான்.

வேறு தாய் அடவிக்குள் விடுத்த

பின்னவனோடே, ஞாலமாதொடு

புக்கு வனத்தில்

என்றும்

“எனது மொழி வழுவாமல் நீ

ஏகு கான் மீதில் என

விரகு குலையாத மாதாவும் நேரோத

இசையுமொழி தவறாமலே ஏகி

மாமாதும் இளையோனும்

இனிமையொடு வரும்

என்று ராமனின் தியாக மனப்பான்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

சூர்ப்பணகை அறிமுகம்.

தம்பி இலக்குவனோடும் சீதை யோடும் வனம் சென்ற ராமன் பஞ்சவடிக்கு வரு கிறான். மூவரும் அங்கு தங்கியிருக்கும் சமயம் ஒருநாள் சூர்ப்பணகை அங்கு வருகிறாள். தன் உண்மையான அரக்கி

உருவத்தை மறைத்து அழகான பெண் உருவத்தோடு வரு

கிறாள் ஆனால் அருணகிரிநாதர் அவளை எப்படி அறிமுகப் படுத்துகிறார்.

மூக்கறை, மட்டை, மகாபலகாரணி

சூர்ப்பணகைப் படு மூளி, உதாசனி,

மூர்க்க குலத்தி, முழு மோடி

என்று அவள் குணத்தைக் காட்டுகிறார். இப்படிப்பட்ட தன் உருவத்தோடு போனால் ராமன் தன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று எண்ணி அழகான உருவத்தோடு ராமனிடம் சென்று தன்னை காந்தர்வ விவாகம் செய்து கொள்ளும் படி மன்றாடுகிறாள். அங்கு வந்த சீதை யின் அழகைக் கண்டு பொறாமை கொண்டு அவளைக் கவரப் போகும் சமயம் லக்ஷ்மணனால் மூக்கறுபடுகிறாள்.

அவமானப் பட்ட சூர்ப்பணகை தன் அண்ணனான இராவணனிடம் சென்று முறையிடு கிறாள். சீதையின் அழகைப் பற்றி அவனிடம் சொல்லி அவளைக் கவர்ந்து வரும் படி அவனை உசுப்பேற்றுகிறாள்.

”தோளையே சொல்லுகேனோ

சுடர்முகத்து உலவுகின்ற வாளையே

சொல்லுகேனோ!

என்றெல்லாம் சீதையின் அழகைப் பற்றி விரிவாகச் சொல் கிறாள். இதைக் கேட்ட ராவணன் தனக்கு ஏற்பட்ட அவமா னங்கள் நஷ்டங்கள் அனைத்தும் மறந்து சீதையை மட்டும் மறக்கமுடியாமல் தவிக்கிறான். இவள் எண்ணப்படியே மாய மானை ஏவி சீதையை வஞ்சக மாகக் கவர்ந்து வந்து அசோகவனத்திலே சிறை வைக்கிறான்

மூத்த அரக்கன் இராவணனோடு

இயல்பேற்றி விடக் கமலாலய சீதையை

மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே

கொடு முகிலே போய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை

வீட்டிலிருத்திய

என்ற வரிகளில் தெரிவிக்கிறார். மாய மாரீசனையும் கர தூஷணர்களையும் வதம் செய்ததை

இனிமையொடு வரும் மாயமாரீசன்

ஆவி குலைய

வரு கரதூஷணா வீரர் போர்மாள

என்று அவர்களை வதம் செய்ததையும் பார்க்கிறோம்

ஏழுமராமரம்

சீதையைத் தேடி வரும் இராம லக்ஷ்மணர்கள் அனுமனைக் கண்டபின் சுக்கிரீவனை அடைந்து அவனோடு நட்புக் கொள்கிறார்கள். வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குத் தாரமும் அரசும் பெற்றுத் தருவ தாக ராமன் உறுதி யளித்த போதிலும் சுக்கிரீவனுக்கு நம் பிக்கை ஏற்படவில்லை. ஏனென்றால் வாலி அவ்வளவு பல முடையவன். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது கைசோர்ந்து களைத்துப் போகிறார்கள் அவர்கள் எல்லோரையும் விலகி யிருக்கச் சொல்லி விட்டுத் தனி யொருவனாகவே திருப்பாற் கடலைக் கடைந்தவன் வாலி. சுக்கிரீவனுடைய சந்தேகத்தைப் போக்குவதற்காக மராமரம் ஏழையும் ஒரே அம்பால் தொளைக்கிறான் ராமன் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம்,

இறுகி நெடுமரம் ஏழும் தூளாக

என்று ஒரு பாட்டிலும்

ஏழுமரங்களும் வன் குரங்கெனும்

வாலியும் ஈடழியும்படி

என்று இன்னொரு திருப்புகழிலும் மரங்களைத் தொளைத்த தைச் சொல்கிறார்.

வாலிவதம்

மராமரம் ஏழையும் தொளைத்த ராமனின் ஆற்றலை உணர்ந்த சுக்கிரீவன் ராமன் சொன்னபடி வாலியைப் போருக்கழைக்கிறான். இருவரும் போர் செய்யும் போது ராமன் மரத்தின் பின்னிருந்து வாலிமேல் அம்பு தொடுக்கிறான்.

சாலை மரத்துப் புறத்து ஒளித்து

அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு

என்றும்

வனத்தில் வாழும் வாலிபடக்

கணைதொட்டவன்

என்று வாலி வதத்தைக் காட்டுகிறார்.

சுக்கிரீவனுக்குச் செய்தி

வாலியின் மறைவுக்குப் பின் ராமன் வாக்களித்தபடி சுக்கிரீவனுக்கு கிஷ்கிந்தை அரசை அளிக்கிறான். கிஷ்கிந்தையில் போய் அரசாட்சி செய்து மனைவி மக்களோடு கூடியிருந்து விட்டுக் கார் காலம் கழிந்ததும் வரும்படி சொல்லி யனுப்புகிறான். ஆனால் சுக போகங்களில் திளைத்த சுக்கிரீவன் வராமல் காலம் தாழ்த்து

கிறான். இதனால் சீற்றமடைந்த ராமன் லக்ஷ்மணனிடம் சேதி சொல்லி அனுப்புகிறான். “வாலியை வதம் செய்த அம்பு இன்னும் ராமனிடம் இருக்கிறது என்பதை நினைவு படுத்து லக்ஷ்மணா” என்று ராமன் சொல்லி அனுப்புகிறான்

மறந்த சுக்ரீப மா நீசன் வாசலில் இருந்து

உலுத்த நியோரதது ஏது மனம் களித்திடலாமோ?

துரோகித, முன்பு வாலி வதம் செய் விக்ரம

ஸ்ரீராமன் நானிலம் அறிந்த அதிச் சரமோ கெடாது

இனி வரும்படிக்கு உரையாய்

என்று சொல்ல லக்ஷ்மணன் அதி வேகமாகப் புறப்பட்டு வருகிறான். லக்ஷ்மணன் வருகையையும் கோபத்தையும் அறிந்த தாரை தன் தோழி களோடு லக்ஷ்மணனை எதிர் கொண்டு மிக்க விநயத்துடன் பேசி அவனை சமாதானம் செய்கிறாள். தவறை உணர்ந்த சுக்கிரீவன் ராமனிடம் ஓடோடி வந்து மன்னிக்கும் படி இறைஞ்சுகிறான்.

அனுமன் தூது.

சுக்கிரீவன் ஆணைப்படி எழுபது வெள்ளம் வானர சேனை திரண்டு வருகின்றன. அங்கதன் தலைமையில் அனுமன், ஜாம்பவான் முதலியோர் தெற்குத்

திசையில் செல்லத் தீர்மானிக்கிறார்கள். ராமன் அனும னிடம் தன் கணையழியை அடையாளமாகக் கொடுத்தனுப்பு கிறான். அனுமன் கடல் தாண்டிச் சென்று சீதையைக் கண்டு கணையாழி கொடுத்து வருகிறான். இதை

குடக்குச் சில தூதர் தேடுக

வடக்குச் சில தூதர் நாடுக

குணக்குச் சில தூதர் தேடுக—எனமேவி

குறிப்பில் குறி காணும் மாருதி

இனித் தெற்கொரு தூது போவது

குறிப்பில் குறி போன போதிலும்—வரலாமோ?

அடிக்குத்திர காரராகிய அரக்கர்க்கிளையாத

தீரனும்

மலைக்கப்புறமேவி மாதுறு—வனமே சென்று

அருள் பொற் திரு ஆழி மோதிரம் அளித்து

என்று அனுமனின் தூதைச் சிறப்பிக்கிறார்.

லங்காதகனம்.

கணையாழி கொடுத்துச் சூளா மணி பெற்ற அனுமன் அசோகவனத்தை அழிக்கிறான். அதனால் இந்திரஜித்தின் பிரம்மாஸ்த்திரத்தில் கட்டுப்படு கிறான். இராவணனை நேருக்கு நேர் சந்தித்த அனுமன்

சீதையை விடுவிக்கும் படி ராவணனுக்கு அறிவுரை சொல் கிறான். மேலும் வாலியைப் பற்றியும் சொல்கிறான். முன் னொரு சமயம் ராவணனைத் தன் வாலில் வாலி கட்டிக் கொண்டு வந்ததையும் ஞாபகப் படுத்துகிறான். ”ராவணா! பயப்பட வேண்டாம் வாலி ராமன் அம்பால் மாண்டு விட் டான் அவனோடு அவன் வாலும் போய் விட்ட்து! என்று பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவூட்டுகிறான். இத னால் கோபமடைந்த ராவணன் அனுமன் வாலில் தீ வைக் கும் படி ஆணையிடுகிறான். தன் வாலில் வைத்த தீயால் இலங்கைய அழிக்கிறான் அனுமன். தன்வினை தன்னைச் சுடும் என்ற முதுமொழிக் கேற்ப இலங்கை வெந்து தணிகிறது.

கடிய வியன் நகர் புகவரு

கனபதி கனல் மூழ்க

எனவும்

அந்த மந்தி கொண்டிலங்கை வெந்தழிந்திடும்

எனவும்

இலங்கேசர் வனத்துள் வனக்குரங்கேவி

அழற்புகையிட்டு

எனவும்

எழுந்தே குரங்கால் இலங்காபுரம்

தீயிடுங் காவலன்

எனவும் லங்கா தகனம் வருணிக்கப் படுகிறது.

அணிவகுப்பு

இலங்கையை எரித்தபின் அனுமன் இராமனிடம் வந்து சூளாமணியைக் கொடுக்கிறான். இன்னும் ஒரு மாதமே உயிர் வாழ்வேன் என்று பிராட்டி சொன்ன சேதியையும் தெரிவிக்கிறான். இதன் பின் வானர சேனை அணிவகுத்துக் கிளம்புவதைப் பார்ப்போமா?

பரத சிலம்பு புலம்பும் அம்பத

வரிமுக எண்கினுடன் குரங்கணி

பணிவிடை சென்று முயன்ற

குன்றணி யிடையே போய்ப்

பகடி இலங்கை கலங்க

அணி வகுத்துச் செல்கிறது.

விபீஷண சரணாகதி

ராவணனுக்கு எவ்வளவோ அறி வுரை சொல்லியும் கேளாததாலும், விபீஷணனைத் துரோகி என்று மிரட்டியதாலும் மனம் வருந்திய விபீஷணன் ராம னைச் சரணடைகிறான். சரணடைந்த விபீஷணனைத் தன் தம்பியாகவே ஏற்றுக் கொண்டு “நின்னொடும் எழுவரா னோம்” என்று அபயமளித்து ”இந்தா விபீஷணா லங்காபுரி

ராஜ்யம் இந்தா இந்தா” என்று அவனுக்கு அப்போதே இலங்கை அரசையும் அளிக்கிறான் ராமன். இதை

எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி

எதிரடைந்து இறைஞ்சல் புரிபோதே

இதமகிழ்ந்து இலங்கை அரசுர

என்றும்

பரிதிமகன் வாசல் மந்த்ரி அனுமனோடு

நேர் பணிந்து

பரிதகழையாமுன் வந்து பரிவாலே

பரவிய விபீஷணன் பொன்மகுட

முடி சூட நின்ற

என்று விபீஷண சரணாகதியையும் அவனுக்கு முடி சூட்டிய தையும் பார்க்கிறோம்

வருணனுக்கு அபயம்

கடல்மீது அணைகட்ட வருணன் அனுமதிக்காக ராமன் காத்திருக்கிறான். ஆனால் வருணன் வருவதாகத் தெரியவில்லை. பொறுமை யிழந்த ராமன் அஸ்திரத்தை விடுகிறான். உடனே ஓடோடி வருகிறான் வருணன். தன்மீது அணைகட்டிக் கொள்ளும்படி இறைஞ்சு கிறான்.

பரவையூடு எரி பகழியை விடுபவர்

பரவுவார் வினைகெட அருள் உதவிய

பரவு பாற்கடல் அரவணை துயில்பவர்

என்றும்

மகர நின்ற தெண்டிரை பொருகணை

கடல் மறுகி அஞ்சி வந்தடி தொழுதிட

ஒரு வடிகொள் செஞ்சரம் தொடுபவன்

என்றும் வருணனுக்கு அருள் செய்ததைக் காண்கிறோம்.

அணைகட்டியது.

வருணன் சென்றதும் வானர வீரர்கள் அணை கட்டுகிறார்கள் நளன் தலைமையில். அவர் கள் நளன் கையில் சரியாகப் போய்ச் சேருமாறு லாவகமா கப் பாறைகளையும் மலை களையும் வீசுவதைப் பார்ப்போம்.

வேலையடைக்க அரிக்குலத்தொடு

வேணுமெனச் சொல்லும் அக்கணத்தில்

வேகமொடு அப்பு மலைக்குலத்தை

நளன்கைமேலே வீச

அவற்றினை ஒப்பமிட்டு அணைமேவி

அரக்கர் பதிக்குள் முற்பட

என்றும்

கடிதுலாவு வாயு பெற்ற மகனும்

வாலி சேயும் மிக்க மலைகள் போட

ஆழிகட்டி இகலூர் போய்

சேர்ந்து விடுகிறார்களாம்.

போர்க்களம்

கடல் தாண்டி வந்த வானர வீரர்களுக் கும் அரக்கர்களுக்கும் போர் ஆரம்பமாகிறது. இரு வரும் உக்கிர மாகப் போர் செய்கிறார்கள். இராவணனோடு சுக்கிரீவனும் அனுமனும் போர் செய்யும் போது வீரவாதம் செய்கிறார்கள். வானரர்கள் மரங்களைப் பிடுங்கி வீசியும், பாறைகளைப் பேர்த்து வீசியும் போர் செய்கிறார்கள். எப்படி?

வஞ்சம் கொண்டுந்திட ராவணனும்

பந்தெண் திண் பரி தேர் கரி

மஞ்சின் பண்பும் சரியாமென வெகுசேனை

வந்தம்பும் பொங்கியதாக எதிர்ந்தும்

தன் சம்பிரதாயமும்

வம்பும் தும்பும் பல பேசியும்—எதிரேகை

மஞ்சென்றும் சண்டை செய் போது

குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டும்

குன்றும் கரடார் மரமதும் வீசி

மிண்டுந்தும் கங்கங்களினால்

தகர்ந்தங்கள் மார்பொடு மின் சந்தும்

சிந்த நிசாசரர் வகை சேர

என்று அந்தப் போர்க்களக் காட்சியைக் கண்முன் கொண்டு

வருகிறார்.

கும்பன் வதம்

முதல்நாள் போரில் தன் ஆயுதங்கள் அனைத்தையும் இராவணன் இழந்த நிலையில் “இன்று போய் போர்க்கு நாளை வா” என்று அருள் செய் கிறான் ராமன். ஆனால் மறுநாள் அவன் தம்பி கும்பகருணன் போர் செய்ய வருகிறான். ராமனும் கும்பகருணனும் மிகக் கடுமையாகப் போர் செய்த போதிலும் கடைசியில் கும்ப கருணன் வீழ்ந்து படுகிறான்.

அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம்

புரிந்து நின்று

அம்பு கொண்டு வென்ற கொண்டல்

என்று கும்பகருணனை வீழ்த்தியதை பாடுகிறார்.

இராவண வதம்

கும்பகருணன், இந்திரஜித், மூல பல சேனை என்று எல்லாவற்றையும் போரில் இழந்த பின் இராவணன் மறுபடியும் போர் செய்ய வருகிறான். இராம ராவண யுத்தம் வெகு உக்கிரமாக நடக்கிறது. ஆனால் இறுதி யில் இராமனே வெற்றி பெறுகிறான். ஆணவம் கொண்ட இராவணன் வீழ்ந்து படுகிறான். கயிலை மலையையே எடுத்தவன் மலையென வீழ்கிறான்.

மலையே எடுத்தருளும் ஒரு

வாளரக்கன் உடல் வடமேரெனத்

தரையில் விழவேதான்

வகையா விடுத்த கணை உடையான்.

என்றும்

முரணிய சமரினில் மூண்ட ராவணன்

இடியென அலறி முன் ஏங்கி வாய்விட

முடிபல திருகிய நீண்ட மாயவன்

இங்கே ராவணன் இடியென அலறியதைக் கேட்கிறோம். தலை வணங்கி அறியாத ராவண தலைகள் பத்தும் எப்படித் தரையில் உருண்டன என்று பார்ப்போம்.

வணங்கச் சித்தமில்லாத ராவணன்

சிரம் பத்தும் கெட வாளி கடாவியே

மலங்கப் பொக்கரை யீடழி மாதவன்

என்று ராவணன் தலைகள் பத்தும் வீழ்ந்ததைப் பேசுகிறார்,

சீதையை மீட்டது.

அனுமனிடம் சீதை சொல்லி யனுப்பியது போல் ராவணனை வதம் செய்து சீதையை மீட் கிறான் ராமன்.

தடையற்ற கணை விட்டு மணி

வஜ்ர முடி பெற்ற

தலை பத்துடைய துஷ்டன் உயிர் போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வரு

வெற்றி தரு சக்ரதரன்

என்றும்

மகாகோர ராவணனை மணிமுடி துணித்து

ஆவியேயான ஜானகியை ஆவலுடன்

அழைத்தே கொள் மாயோன்

என்றும்

சிலையில் வாளிதான் ஏவி எதிரி

ராவணனார்

தோள்கள் சிதையுமாறு போராடி

ஒரு சீதை யிராமலே கூடி

என்று சீதையின் மீட்சியை விவரிக்கிறார். சீதையை மீட்ட பின் எல்லோரும் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிறார்கள். இதை

சமத்தினால் புகழ்ச் சனகியை நலிவு செய்

திருட்டு ராக்கதன் உடலது துணி செய்து

சயத்த அயோத்தியில் வருபவன்

என்று அயோத்திக்குத் திரும்பியதையும் பதிவு செய்கிறார்.

இப்படி அநேகமாக ராம

காதையின் பல முக்கிய நிகழ்சிகளையும் தனது திருப்புகழில் இடம்பெறச் செய்திருக்கிறார் அருணகிரிநாதர்.

**************************************************************

Series Navigationஅஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவிசி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)