திரையுலகின் அபூர்வராகம்

Spread the love

balachander

 

1975 ஆம் வருடம். ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் வெளிவந்த வருடம்.

இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை

பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு.

படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில்.

விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில் ஏகப்பட்ட சட்டதிட்டங்கள்

உண்டு. கோடை விடுமுறை தவிர மற்ற விடுமுறைகளின் போதும் பெற்றோர்

மும்பையில் வ்சித்ததால் என் போன்றவர்களும் சில மலையகப்பகுதி

மாணவிகளும் விடுதியிலேயே இருப்போம். அப்படி இருந்த ஒரு விடுமுறை.

எப்படியொ விடுதி வார்டனிடம் பாதி பொய்யும் பாதி உண்மையுமாக

காரணங்கள் சொல்லி தோழியருடன் விடுதியிலிருந்து எஸ்கேப். நேராக

திரையரங்குப்போய் படம் பார்த்துவிட்டு வரும்போது பெரிய சாதனை

செய்துவிட்டதாக நினைப்பு.

ஆனால் எங்களைத் திரையரங்கில் பார்த்த ஏதோ ஒரு பேராசிரியை

இதை வார்டனிடம் சொல்ல மாட்டிக்கொண்டொம்.

இரவு பிரேயருக்கு முன் வார்டன் அழைத்தார். கண்டிப்பானவர் அப்பெண்மணி,

அதே நேரத்தில் ரொம்பவும் அன்பானவர்.

 

இனி உண்மையை அப்படியே சொல்லிவிட வேண்டியது தான் என்று முடிவு

செய்துவிட்டு ‘அபூர்வராகங்கள்’ திரைப்படம் பார்த்ததை ஒத்துக்கொண்டோம்.

இந்தப்படம் பார்க்கனும்னு யாரு ஐடியா என்று கேட்க தோழியர் அதிலும்

உண்மை சொல்லி என்னைக் காட்டிக்கொடுத்தாள். வார்டன் முன்னால்

நின்றேன். தலையைக்குனிந்துக் கொண்டு.

முட்டுப்போட்டு பிரார்தனை ஆரம்பித்தது…”ஏசுவே… இதோ …என்னருகில்

நிற்கும் உம் மகள் அறியாது செய்த இக்குற்றத்தை மன்னியும் பிதாவெ..

இவளுடைய பெற்றோர்கள் என்னை நம்பி இவளை என்னிடத்தில் விட்டு

சென்றிருக்கிறார்கள். நான், பிதாவே, அக்குழந்தையை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

நீரே இவளை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.. இன்று இவள் அறியாமல்

தவறு செய்துவிட்டாள்.. கெட்ட எண்ணங்கள் இவள் மனதில் வந்துவிடாமல்

காத்தருளும் பிதாவெ… ” வார்டன் மேடம் இப்படியாக எனக்கும் என் தோழியருக்கும்

அன்றைய தினம் பாவமன்னிப்பு கேட்டு பிரார்தனை செய்தார்கள். அவர் முன்னால்

கண்ணை மூடிக்கொண்டு நின்ற நான் அடிக்கடி திரும்பி பார்த்து என்னுடன்

வந்த தோழியர் சிலர் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு பேர்

கண்களில் கண்னீருடன். எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

இப்போது நினைத்தாலும் அக்காட்சி அப்படியே கண்முன் விரிகிறது.

இதுதான் அபூர்வராகங்கள் திரைப்படம் வந்தக் காலத்தில் இருந்த

கல்லூரி நிலை. ஓரளவு படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் அபூர்வராகத்தை

சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறினார்கள்.

 

மக்கள் திலகம் எம்ஜியார், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்ற பெயர்களுடன்

மட்டுமே திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தக் காலக்கட்டம்.

எம்ஜியார், சிவாஜியை வைத்து எத்தனை எத்தனையோ வெற்றி படங்களைக்

கொடுத்த இயக்குநர்கள் யார் யார்? என்று எவரிடம் கேட்டாலும் தெரியாது.

இந்தக் காலக்கட்டத்தில் தான் கதை வ்சனம் டைரக்ஷன் கே.பாலசந்தர்

என்ற திரைப்படத்தின் உண்மையான அடையாளம் முன்னிறித்தப்பட்டது.

ஒரு திரைப்படத்திற்கு இயக்குநர் எவ்வளவு முக்கியம் என்பதை தமிழ்

திரை ரசிகர்கள் புரிந்து கொள்ள கேபி மிக முக்கியமான ஒரு காரணமாக

இருந்தார்.

 

படகோட்டி என்ற எம்ஜியாரின் வெற்றிப்படம் மீனவர்களின் எந்தப் பிரச்சனையை

பேசி இருக்கிறது? இக்கேள்வியை படகோட்டி படம் எடுக்கும் போதே விமர்சிக்கப்பட்டது.

அதெல்லாம் தேவையில்லை… எம்ஜியார் மீன்வர் உடையில் வந்து ஆடிப்பாடினால்

போதும். எம்ஜியார் ரிக்ஷாக்காரன் உடையில் வந்து ரிக்ஷாவை மிதிக்கிற மாதிரி

நடித்தால் போதும். மீனவ்ர் பிரச்சனையோ ரிக்சாக்காரர்கள் பிரச்சனையோ பேசப்பட

வேண்டும் என்ற அவசியமில்லை… இப்படி இருந்த தமிழ் திரையுலகில்

பிரச்சனைகளின் மையப்புள்ளியைத் தொட்டு அதைச் சுற்றி மட்டுமே கதையை

நகர்த்திச் சென்றவர் கே.பி. தமிழ் திரையுலகில் நடந்த மவுனமான புரட்சி இது.

 

கே.பி அருவருப்பான அரசியல் அநாகரிகங்க்ளை தன் திரைப்பட வசனங்களில்

புகுத்தியதே இல்லை. அவர் பேசிய கதைகளின் கதையோட்டங்களில் அதற்கான

புள்ளிகள் கொட்டிக்கிடக்கின்றன். ஆனால் அவர் தன் தனித்தன்மையை

கடைசிவரைக் காப்பாற்றிக்கொண்டார்.

 

கே.பியின் இன்னொரு புரட்சி அவர் காட்டிய பெண்ணியம். அவர் மட்டும்தான்

திரைக்கதையை பென்ணைச் சுற்றி அவள் சார்ந்த பிரச்சனைகள், அவள் பார்வைகள்,

அவள் காதல், காமம், சமூக ஒழுக்க விதிகளை மீறும் தருணம், இப்படி

முழுக்கவும் பெண்ணிய முகங்களை அவர் காட்டினார். அவரைத் தன

குருநாதர் என்று சொல்லிக்கொள்ளும் திரைநட்சத்திரங்க்ள் எவருக்குமே

அவருக்கிருந்த இந்த துணிச்சல் இல்லை.

பெண்ணின் பிரச்சனைகள் எல்லாம் பெண்ணியமாகவும் ஆணின்

பிரச்சனைகள் எல்லாம் சமூகப்பிரச்சனைகளாகவும் இன்றுவரை

வரையரை செய்யப்பட்டிருக்கின்றன என்பார் எழுத்தாளர் அம்பை.

பெண்ணின் பிரச்சனைகளை இச்சமூகத்தின் பிரச்சனைகளாக

திரையுலகில் காட்டியதில் முதலும் கடைசியுமான வெற்றியைப்

பெற்றவர் கே. பாலசந்தர்.

 

பாலசந்தர் ஓர் அபூர்வராகம்.

 

.

Series Navigationஎன்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?ஒரு காமிரா லென்ஸின் வழியே…..