திரை விமர்சனம் – உத்தம வில்லன்

uttamavillan

கலைஞானி கமலஹாசன் ஒரு அதிசயம். மொழியும் இசையும் அவரது அங்கங்களை அசைக்கும் விதம், காணக் காண ஆச்சர்யம். உத்தம வில்லன் ஒரு கலைப்படம். கமர்ஷியல் படமல்ல.

மனோரஞ்சன் திரையுலக சூப்பர் ஸ்டார். அவரை உருவாக்கிய இயக்குனர் மார்கதரசியிடமிருந்து பிரிந்து, மசாலா படங்களில் நடித்து, உச்ச நட்சத்திரமாக ஆனவர். அவரை பாதை மாற்றி, தன் பெண்ணையும் கட்டிக் கொடுத்து, தன் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் மாமனார் பூர்ண சந்திர ராவ், மனோவுக்கு வெற்றியைக் கொடுத்தாலும், அவரது காதலியையும், அவள் வயிற்றில் வளரும் கருவையையும் பிரித்த வில்லனாகிறார்.

காதலை மறக்க முடியாமலும், கட்டிய மனைவியை ஒதுக்க முடியாமலும், பெற்ற பிள்ளையால் வெறுக்கப்பட்டும் வாழும் மனோ, குடிக்கு அடிமையாகிறார். ஆனால் அதிக மனச்சுமை, அவரது மூளையில் கட்டியாக உருவாகி, அவரது வாழ்வுக்கு கெடு வைக்கிறது.

இறப்பதற்கு முன், தன் பெயர் நிரந்தரமாக ஒரு படம் செய்ய அவர் தன் குரு மார்கதரசியை நாடுவதும், அது உத்தம வில்லானாக உருவாகி முடியும் தருணத்தில், மனோரஞ்சனின் வாழ்வும் முடிவது கதை.

கமலை தவிர்த்து இந்தப் படத்தைப் பார்ப்பது கடினம். அவரைத் தவிர யாருமே மனதில் பதியவில்லை.

திரைக்கதையில் இந்தப் படம் ஒரு மைல்கல். முதல் காட்சியிலேயே கதையின் மையக்கரு அவிழ்க்கப்படுகிறது. அதன் பிறகு தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமே இல்லை. முக்கியமாக அதீத அழுகைக் காட்சிகளுக்கு தடா. எதிரும் புதிருமாக இருக்கும் தந்தை மகன் இணைதலைக் கூட ஒரு வித்தியாச கோணத்தில் காட்டியிருக்கிறார் கமல்.

கமலைத் தாண்டி நினைவில் நிற்பது ஜிப்ரானின் பின்னணி இசை. ஆசாமி, சாமியாடி இருக்கிறார். தொடர்ந்து கமல் அவருக்கு வாய்ப்பு தருவதற்கு நியாயம் இருக்கிறது. ஆனால் பூஜா குமாருக்கு இன்னொரு படத்திலும் வாய்ப்பு கொடுத்திருப்பதில் அநியாயம் இருக்கிறது.

கலையில் லால்குடி இளையராஜா, தான் ஒரு சக்ரவர்த்தி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியின் ஜோடனைகள் அசத்துகின்றன.

உத்தமனின் கதை கொஞ்சம் இழுவைதான். ஆனால் கமலின் நவரச நடிப்பு அதை மறக்கடித்து விடுகிறது. உத்தம வில்லன் சூப்பர் ஹிட் படமல்ல. ஆனால் பின்னாளில் கமலின் பேர் சொல்லப் போகும் ஒரு முத்திரைப் படம்!

0

Series Navigation‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவைபெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015