தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

முள்முடி – 3

நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம். நான் தினமும் இரவு படுக்கப் போகு முன், அந்த வயதிலேயே என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும், உறவினர்களையும், நண்பர்களையும் அவர்கள் குடும்பங்களையும் பிதாவே காப்பாற்றும் என்று சொல்லி நெஞ்சில் சிலுவைக் குறி கீற்றிக் கொள்வேன். இதனால்தான் “முள்முடி” கதையில் வரும் ஆசிரியர் அனுகூலசாமி அவருடைய வகுப்புக் குழந்தைகளிடம், தவறு செய்த ஒரு மாணவனுடன் இனிமேல் யாரும் பேசக் கூடாது என்று சொன்ன பின்பு வருடம் முழுக்க அந்த மாணவர்கள் ஆசிரியரின் கட்டளையை மீறாமல் இருந்தார்கள் என்று ஜானகிராமன் எழுதும் போது அதை நம்ப எனக்குத் தயக்கம் எதுவும் ஏற்படவில்லை . 

இந்தக் கதையைத்  தி.ஜா. எழுதிய போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மேற்குறிப்பிட்ட அதே ஆர்.சி.பள்ளியில். என் ஆசிரியர்கள் எவரும் அன்று கூட அனுகூலசாமியாக இருக்கவில்லை. என் வகுப்புக்கும் கணக்குப் பாடத்துக்கும் தாமஸ் என்ற ஆசிரியர் இருந்தார். பயல்கள் கணக்கில் தவறு செய்யும் சமயங்களிலெல்லாம் அவர் தொடையில் கிள்ளி விடுவார். உயிரே போய் விடும் போலிருக்கும். நாலாம் வகுப்பில் எண்ணற்ற முறை என் உயிர் போய் வந்திருக்கிறது. (அதற்குப் பிறகு பதினைந்து வருஷங்கள் கழித்து நான் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆக ஆகி ஒளவையார்(தானே!) சொன்ன மாதிரி எண்ணும் எழுத்தும் கண்ணனெத் தகுமாறு நம்பர்களில் வாழ்வை அடகு வைத்தது விதியின் குரூர ஹாஸ்யம் !) 

ஊரும் உலகமும் “நீங்க நிஜமான கிறிஸ்தவர். முப்பத்தாறு வருஷம் பிரம்பைத் தொடாம அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லாம, வாத்தியாராய்  இருக்கிறதுன்னா, அந்தத் தெய்வத்தை விழுந்து கும்பிட்டாத்தான் என்ன?” என்று கொண்டாடுகிறது. ஏன் அவரது மனைவி மகிமையும் கூட.  அவருக்குப்  பள்ளியில் கொடுத்த பிரிவு உபசாரம் போதாது என்று அவர் வகுப்பு என்று ஒரு நாற்பது பையன்கள் மேளதாளத்துடன் வீட்டு வரை கொண்டு வந்து விட்டு  “பிரேம் போட்ட ஏழெட்டு உபசார பத்திரங்கள், ஒரு வெள்ளித்தட்டு,ஒரு பேனா, கடையில் நாலு ரூபாய் விலை. ஆனால் இங்கு இந்தப் பேனாவுக்கு விலை கிடையாது. நாலு லட்சம். நாலு கோடி பெறும் என்று சொன்னால் வீண்வார்த்தை. ஏதோ இரண்டும் சமம் என்று ஆகிவிடும்” – .இவற்றைக் கொடுத்து விட்டுப் போகிறார்கள்.  “பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டு நிற்கிற, இத்தனை மேளதாளங்களும், தழதழப்பும் தனக்குக் கிடைத்தாற் போல ஒரு பார்வையுடன் ஒரு நிமிஷம் அவரைப் பருகிக் கொண்டு நிற்கிற” அவருடைய மனைவி மகிமை.

அனுகூலசாமிக்கு ஒரு குழந்தையையும் அடிக்காமல், திட்டாமல் அவர்களை மனுஷப் பிறவிக்குக் கொடுக்கிற மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தோன்றியது எப்படி? அவருடைய ஒரே பெண் லூயிசா பிறந்து பள்ளிக்கூடம் சேர்த்து ஆறு வயதில் ஏதோ விஷமம் பண்ணியதற்காக வாத்தியாரிடம் அடிவாங்கிவிட்டது. அந்த வாத்தியார் ஸ்கேலால் அடித்த போது சட்டைக்குள் இருந்த கோடைக்கட்டியின் மீது பட்டு…அப்பப்பா ! – அன்று துடித்த துடி ! அதைப் பார்த்ததும் சுபாவத்தை சங்கல்பமாகச் செய்து கொண்டார் அனுகூலசாமி.  அந்த உறுதி முப்பத்தாறு வருஷமும் ஒரு மூளி இல்லாமல் பிழைத்து விடுகிறது. எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன்  உயிரை விலை கொடுத்தானே, அவன் எல்லாத்  தலைமுறைகளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்தான் என்ற நம்பிக்கை அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. வீட்டுச் சுவரின் மேலே முள்முடியுடன் கருணை வெள்ளமாகப் பொழிந்து கொண்டிருக்கும் முகத்தைப் பார்த்துப் பரவசம் அடைகிறார். ஒரு கட்டத்தில் அவர் மனைவி “தடியெடுக்காம, அதட்டாம, அப்படியே கெட்டிக்காரன்னு பேர் எடுக்கறதும் கஷ்டம்தானே?” என்று கேட்கும் போது  அவருக்குத் தான் கர்வப்பட உரிமை உண்டு என்று கூடத் தோன்றி விடுகிறது.

அவருடைய வகுப்பில் படிக்கும்  நாட்டாண்மை மாதிரி நடமாடும் ஆறுமுகம் என்ற இருபத்தி மூன்று வயதுப் பையன், – வெகு காலமாக வாசிக்கிறான் ! – அவரிடம் பிரிவு உபசார விழா நடத்த வேண்டும் என்று கேட்கும் போது எதுவும் மறுபேச்சுப் பேசாமல் அவர் ஒத்துக் கொண்டு விடுகிறார். அவன் பேச ஆரம்பித்தால்  “உங்களுக்குத் தெரியாதா சார்? ‘நான் ரிட்டயராகப் போறேன்; நிதி திரட்டுங்க’ன்னு நீங்க சொல்லலே…’ என்று ஒரு பெரிய ராமாயணத்தை ஆரம்பித்து விடுவானே என்னும் பயத்தில் அவனை அனுப்பி விடுகிறார். அவன் போனதுக்குப் பின் அவர் தன்னோடு மற்றவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். ஜவுளிக்கடையிலிருந்து கொத்தமல்லிக்காரி வரை காலணாவுக்கு மதிக்க முடியாத நிலையில் இருக்கும் நாரணப்பய்யர். பரீட்சை அதிகாரியாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று வந்த கடிதத்தைக் காட்டி இருபது பேரிடம் கடன் வாங்கி விட்டவர் அவர். இன்னொரு ஆசிரியரான சாமிநாதய்யர் பித்தளை நகையைத் தங்கம் என்று கொடுத்து பாங்கிலிருந்து கடன் வாங்கி விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததும் அவமானப்படும் பிரகிருதி. இந்த மாதிரி ஹிம்சையைக் கொடுத்ததில்லை என்று அனுகூலசாமி தன்னைப் பற்றி நினைத்துக் கொள்கிறார்.  

ஆனால் வந்திருந்த மாணவர்கள் எல்லோரும் திரும்பிப் போனதற்குப் பிறகு சற்றுக் கழித்து ஆறுமுகம், சின்னையன் என்கிற அவரது வகுப்பு மாணவனோடும் அவனது அம்மாவோடும் வருகிறான். என்ன விஷயம் என்று அவர் கேட்க சின்னையன் அழ ஆரம்பித்து விடுகிறான்.அவன் அம்மா அனுகூலசாமியிடம் அவள் குழந்தை ஒரு வருஷமாகத் துடித்துப் போய்விட்டான் என்றும் எப்பவும் சிரித்துப் பேசும் அவன் சரியாகப் பேசுவதில்லை என்றும் வீட்டில் தங்கைகளுடன் கூடப் பேசுவதில்லை  என்றும் கூறுகிறாள். ஆறுமுகம் அனுகூலசாமியிடம் ஒரு நாள் சின்னையன் வகுப்பில் உள்ள மற்றொரு பையனின் இங்கிலீஷ் புத்தகத்தைத் திருடி வெளியில் விற்று விட்டான் என்றும் அது தெரிய வந்ததும் அனுகூலசாமி மற்ற பையன்களிடம் இனிமேல் யாரும் பேசாதீங்க என்று சொல்லி விடுகிறார் என்றும் கூறுகிறான். அதற்குப்பின் மற்றவர்கள் அவனை ஒதுக்கி விட்டுப் பேசாமல் இருந்ததாகவும், அன்றையப் பிரிவு உபசாரத்துக்கு அவன் மற்றவர்களைப் போல வசூல் பணம் கொடுக்க வந்த போது அவனை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து நிராகரித்து விட்டதாகவும் சொல்கிறான். 

அவன் கொடுக்கும் ஒரு ரூபாயை அனுகூலசாமி வாங்கிக் கொள்கிறார். ‘இந்தப் பயலுங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரியாம போயிடிச்சே எனக்கு” என்கிறார் அனுகூலசாமி. 

“நீங்க சொன்னதைத்தான் செய்தாங்க” என்கிறாள் அவர் மனைவி.  

“அவர் லேசாகச் சிரித்தார். அழுகைதான் சிரிப்பாக வந்தது. மேலே படத்தில் தோன்றிய முள்முடி அவர் தலையை ஒரு முறை அழுத்திற்று” என்பது கதையின் இறுதி வரிகள்.

அனுகூலசாமி முள்முடிக்காரரின் கருணையிலும், அன்பிலும் தோய்ந்தவராய் இருப்பதினால் அவருக்கு மற்றவர்கள் மீது அதே கருணையைச் செலுத்த முடிகிறது. ஆனால் யார் எதிர்பார்த்தார்கள் அவரும் சறுக்கி விழக் கூடிய 

சமயமொன்று வரும் என்று? வாழ்வின் கூர்வாளை ஒத்த செயல்களை முன்கூட்டியே யாரறிவார்? அவர் எதிர்பார்க்கவில்லைதான். அது வரும் போது அவர் சமாளிப்பு, சால்ஜாப்பு எவற்றிலும் இறங்கவில்லை. அவர் தண்டித்த மாணவன் சின்னையன் துடிதுடித்த ஒரு வருஷ வேதனையை அவர் தனது தோள் (அல்லது தலை ?) மேல் ஏற்றுக் கொள்கிற தருணம் அது.  தான் இழைத்த தவறை எண்ணி. அறுபது வயதில் அந்த மாஜி ஆசிரியருக்கு அழுகை வருகிறது  அவர் கொண்டாடும் தேவனின் முள்முடி அவர் தலையை அழுத்திற்று என்பதில் அவர் அதுதான் தனக்கான தண்டனை என்று நினைக்கிறாரா என்னும் கேள்வியை ஜானகிராமன் எழுப்புகிறார்.

Tailpiece : இந்தக் கதையில் அனுகூலசாமி என்னும் கிறிஸ்துவ ஆசிரியர் உயர்ந்தவர் என்று காண்பிக்கப்படுகையில் இரண்டு பிராமண ஆசிரியர்கள் தெருவில் கிடத்தப்படுகிறார்கள். ஒருவர்  நாரணப்பய்யர். இன்னொருவர் சாமிநாதய்யர். இவர்கள் இக்கதையில் வாத்தியார் இனத்துக்கே அவமானமாகவும், ஊர் சிரிக்கும்படியும் வாழும் ஆசிரியர்கள். ஜானகிராமன் ஏன் இப்படி எழுதினார் ?அனுகூலசாமி அனந்தராமையராகவும்,  நாரணப்பய்யர் 

நத்தேனியலாகவும், சாமிநாதையர் சாமுவேலாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அன்று ஒன்றும் ஆகியிருக்காது.  ஆனால் இன்று ?.

————————————————————

Series Navigationவாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்